Search This Blog

7.1.09

பெரியார் - காந்தியார் " ஒற்றுமை- வேற்றுமை" -ஒரு ஒப்பீடுஇவர்தான் பெரியார் _ எளிய வாழ்வு என்று சொல்லிக்கொள்ளாமல்...

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், ஈ.வெ.ரா. சிறைசென்று காங்கிரசு கவர்ண்மென்டின் காருண்யத்தினால் பெல்லாரி ஜெயிலில் வதியும்பொழுது, கடற்கரையில் தீவிரமாய் நடக்கும் கூட்டங்களொன்றில் நான் பேசுகையில், வடநாட்டுத் தலைவரை மகாத்மா வென்று அழைப்பதுபோல், தென்னாட்டுத் தலைவரை அதற்கீடான பெரியார் என்றே அழைக்கவேண்டும்; அச்சொல் அவருக்கே தனிச்சொல்லாக வழங்கவேண்டுமென்று சொன்னது, இப்பொழுது ஞாபகம் வருகிறது. அச்சொல் நிலைத்ததுபற்றி மகிழ்ச்சி, அச்சொல்லைத் தலையாகக் கொண்ட நூல் வருவது, மேலும் மகிழ்ச்சி. இவ்விருவர்களுக்குமுள்ள பொருத்தங்களில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

மகாத்மா, தம் தொழிலையும், பதவிகளையும் விட்டுப் பொது நல ஊழியத்தில் ஈடுபட்டார்; அப்படியே, பெரியாரும், தம் லாபகரமான வியாபாரத்தையும், பல பொது ஸ்தாபனங்களில் தலைவர், அங்கத்தினர் என்ற பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினார். அந்நிய ஆங்கிலேய ஆட்சியை ஒழிக்க, இருவரும் பலமுறை சிறை சென்றுள்ளார்கள். மகாத்மாவின் மனைவி ஸ்ரீமதி கஸ்தூரியம்மையாரும், மகாத்மாவைப் பின்பற்றிச் சிறை சென்றார். பெரியாரின் மனைவி ஸ்ரீமதி நாகம்மையாரும் அவ்வாறே. காந்தியார் கதர் நூல் நூற்றார். பெரியார் நூலும் நூற்றார். மூட்டை தலையில் தாங்கிக் கதரும் விற்றார். மகாத்மா அகிம்சா தர்மத்தையும், சாத்வீகத்தையும் கையாண்டார். பெரியாரும் அக்கொள்கைகளை யேற்று அவ்விதமே நடக்க அறிவுரை செய்கிறார்.

இவர்களுக்குள்ள மாறுபாடுகளையும் சில சொல்கின்றேன். மகாத்மா எளிய வாழ்வென்று சொல்லிக்கொண்டு மன்னரும் மகிழக்கூடிய சுகவாழ்வு வாழ்ந்தார். குறிப்பிட்ட நேரத்தில், நிமிஷம் தவறாமல் ஸ்நானம், உணவு, பானம், படை, வேலை, உறக்கம் முதலியன. ஆட்டுப்பால் என்றால், ஆடே உடன் பிரயாணம் செய்ய வேண்டும். பழங்கள், பருப்புகள் முறைப்படி தவறாமல் எக்காலத்திலுமுண்டு. பணிவிடையாட்கள் பல பேர். டாக்டர் எப்பொழுதும் கூடவே. பிரயாணமென்றால் தகுந்த முன்னேற்பாடு, பரிவாரங்கள், வேலையாட்கள், காரியதரிசிகள் உட்பட எவரும். 3-வது வகுப்பு வண்டி பிரயாணமென்றால் வண்டி முழுமையும்; 3-வது வகுப்பு வண்டி பிரயாணமென்றால் வண்டி முழுமையும்; சில சமயங்களில் தனி ரயில்கள்கூட. சென்ற விடங்களிலெல்லாம் அரண்மனையையொத்த விடுதிகள். பங்கீ காலனியானாலும், முன்னதாகவே லட்ச ரூபாய் செலவில் வசதிகள் செய்த பிறகு. நடக்கும்பொழுது கைலாகு கொடுத்துத் தாங்கி நடப்பவர்கள் பலர். எட்டியிருந்து பார்ப்பவர் சொல்வது இது. கிட்டவிருந்து பழகுபவர்கள் சொல்வ பலவிருக்கலாம்.

பெரியார் கதையென்ன? எளிய வாழ்வு என்று சொல்லிக்கொள்ளாமல், வறியவனும் வெறுக்கக்கூடிய பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்-காவிட்டால் பட்டினியுமே. ஸ்நானம் நான்கு, அய்ந்து நாட்களுக்கு இல்லாமலே போனாலுமே போய் விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போகவேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் பேசவேண்டியது. தொண்டை காய்ந்து, கால் கடுக்கும் வரையில். 3-வது வகுப்புப் பிரயாணம்தான்; ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காது கூட்டம். தப்பிப் தவறி மேல்வகுப்புக்குப் போனால், அங்கும் அப்பொழுது அதே அவஸ்தைதான் பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ளவேண்டும். தளர்ச்சி அதிகரிக்க, துணையாகச் சகா ஒருவர், இருவர் இவ்வளவுதான். சென்ற விடங்களில் அநேகமாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ, அல்லது போகும் வண்டிதானோ எங்காவது ஜாகை சவுகரியமிருந்தால், அங்கும் 20 பேர் கூட்டம் உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல். டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுதுதான் தன்னுடம்பும், தசை நரம்புகளாலானதுதான் என்ற எண்ணமுண்டாகின்றது.


----------------------எஸ்.முத்தையா (முதலியார்) பெரியார் இராமசாமி என்ற நூலுக்கு வழங்கிய கருத்துரையில்

---(ஆய்வுத் தகவல்: பேரா. முனைவர் ந.க.மங்களமுருகேசன்)

8 comments:

Unknown said...

எளிமையாக வாழ்ந்த காரணத்தினால் மக்கள் நெஞ்சில் இன்னும் பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெரியாருக்கு ஈடு இணை பெரியார்தான்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்

Thamizhan said...

காந்தியார் பத்திரிக்கையாளர்களை அமெரிக்கவிலிருந்து வரவழைத்து விள்ம்பரம் தேடிக்கொண்டார்.பத்திரிக்கைகளை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார்.
பெரியார் பத்திரிக்கைகளின் பொய்களை எதிர்த்தார்,அவர்களால் வேண்டுமென்றே இருட்டடிக்கப் பட்டார்.தவறானத் தகவல்களால் வெறுப்படையும் படி காண்பிக்கப் பட்டார்.
காந்தியார் நடிகர்,
பெரியார் நாயகன்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

உலகன் said...

இருவருக்கும் இன்னுமொரு முக்கியமான ஒற்றுமை இருக்கிறது. இருவருமே இந்தியா விடுதலை அடைந்தபோது, 'இது நான் எதிர்பார்க்கும் முழுமையான சுதந்திரமல்ல' என்பதாக சுதந்திர கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உலகன்

கரிகாலன் said...

காந்தியடிகள் வாழும்போது பலமுறை தந்தை பெரியாரால் பலமுறை விமர்சிக்கப்பட்டார். அவரின் செயல்களும் அப்படித்தான் இருந்தன.

ஆனால், பார்ப்பன மதவெறியர்களால் காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டபோது அதை கண்டித்தவர் தந்தை பெரியார். அதுமட்டுமின்றி இந்த நாடு காந்தி தேசமாக மாறவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கரிகாலன்