"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க".
என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட
தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------
7. கடவுள் பக்தி
உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய மற்ற ஜீவராசிகளுக்கு புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன.
இதில் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை.
பிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்களின் சிறு மாறுதல்களின் அடிப்படையில் பேதங்களின் அடிப்படையிலும் பேதங்களைக் காண்பதற்கில்லை.
ஜீவ நூல் - ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது, உலகம் தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருக ஜீவப்பிராணிகளும் ஒன்றுபோலவேதான் நடந்து வந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர்.
மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால் மனிதனுக்கு ஆசைப்பெருக்கெடுத்து - வாழ்க்கையின் பெருங்கவலைக்கு ஆளாகி, அதனால் துக்க சுகத்திற்கும் ஆளாகி உழலுகிறான். ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்கு கடவுள் கற்பிக்கப்பட்டு - புகுத்தப்பட்டு அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும் துக்க சுகத்திற்கும் ஆளாகி அழிகிறான்.
கடவுள் புகுத்தப்படாமலிருந்தால்....?
மனித சமுதாயத்தில் கடவும் கற்பனை புகுத்தப்படாமலிருந்தால் மனிதர் நிலைமை இன்று வேறாக இருந்திருக்கும்.
அதாவது கவலையற்ற, துக்கமற்ற, வாழ்வு வாழும்படியான நிலைமையை மனிதன் எய்தியிருப்பான்.
இன்று கவலையும் துக்கமும் இல்லாத மனிதனைக் காண்பதே அரிதாக இருக்கிறது. எந்த உயர்நிலையில் இருப்பவனுக்கும் கவலையும் துக்கமும் குடிகொண்டிருக்கிறது. கடவுள் எண்ணத்தை ஒழித்தவர்களுக்குக் கடவுள் இல்லை. எல்லாம் இயற்கை என எண்ணியிருப்பவர்களுக்கு துக்கம் கவலை இல்லாமலிருக்கலாம். அப்படிப்பட்டவர்களைத்தான் ஞானிகள் முற்றுந்துறந்த மெய்ஞ் ஞானிகள் என்று சொல்லுவார்கள். அந்த நிலையை மனிதன் எய்துவது எளிதல்ல.
மோட்சமும் முக்தியும்
மோட்சம் என்ற சொல்லுக்கும், முக்தி என்ற சொல்லுக்கும் உண்மையான கருத்து (பொருள்) கவலையற்ற தன்மை; துக்கமற்ற தன்மை என்றுதான் பொருள். மோட்சம் (அல்லது முக்தி) - துக்க நாசம்; இந்த நிலை கடவுள் (ஒருவர் அல்லது பலர்) இருக்கிறார் எனும் எண்ணமுடையவனுக்கு என்றுமே தோன்றாது.
கடவுளும் - கவலையும்
எவ்வளக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் பதிகிறதோ - உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தம் துக்கமும் கவலையுங் கொண்டவனாகத்தான் இருப்பான்; பேராசைக்காரனாய்த் தான் இருப்பான்.
பொதுவாகவே இன்றும் பார்ப்போமானால், கடவுள் பக்தன்- கடவுளை வணங்குகிறவன் அவன் முட்டாளானாலும் அறிவாளி ஆனாலும் எதற்காக வணங்குகிறான்? ஒரு வேண்டுகோளின் மீது -அல்லது எதையாகிலும் எதிர்பார்த்துத்தானே!
ஏதாவது ஒன்றைவேண்டித்தானே! பக்தி, வணக்கம், பூசை, தொழுகை, பிரார்த்தனை எல்லாம் இதன் அடிப்படைதானே!
மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஆசை காரணம்தானே ஒழிய, மனிதனை ஒழுக்க முடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்கு பயன்படும்படிச் செய்யவோ அல்ல.
-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 17-18
Search This Blog
27.1.09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஆசை காரணம்தானே ஒழிய, மனிதனை ஒழுக்க முடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்கு பயன்படும்படிச் செய்யவோ அல்ல.//
உண்மை! உண்மை!.
கடவுளாலும்,மதத்தாலுந்தான் ஒழுக்கம் வருகிறது என்பது முழுப்பொய்.உலகில் எங்கு பார்த்தாலும் மதத்தாலும்,கடவுள்களாலுந்தான் சண்டை,சச்சரவுகள்.மதத் தலைவர்கள் செய்து வரும் அயோக்கியத் தனங்கள் அளவுக்கடங்காமல் உள்ளன.
மதவாதிகள் வெறும் கதைகளைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கின்றனர்.
கடவுளும் மதமும் இல்லாதவன் பயமில்லாமல்,மனித நேயத்துடன் மகிழ்ச்சியாக அடுத்தவருக்கு உதவி வாழ முடிகிறது.மதம் வந்தால் மதமும்,சுய நலமும் தலை தூக்கி மனித நேயத்தையே அழித்து விடுகிறதே.
மண்டைச் சுரப்பை உலகு தொழும் நாட்கள் வந்து கொண்டுதான் உள்ளன.கடவுளாக இல்லை.மனித நேயப் பகுத்தறிவு வாதியாக.
Post a Comment