Search This Blog

13.1.09

நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா


பொன்விழா

திருச்சியில் 1959 இல் 13 குழந்தைகளுடன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரால் அன்னை நாகம்மையார் பெயரால் தொடங்கப்பட்ட இல்லம் அதன் 50 ஆம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், பொன்விழா திருச்சி மாநகரில் இத்திங்கள் 9, 10, 11 ஆகிய நாள்களில் வெகுநேர்த்தியாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

ஊடகங்கள் பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள் கைகளிலும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலும் கெட்டியாக இருக்கின்ற காரணத்தால், இந்தப் பெரியார் நிறுவனம் இருட்டடிப்புக்கு ஆளாகி இருந்தது என்பதுதான் உண்மை.


விளம்பர வெளிச்சம் பெறவேண்டும், அதன்மூலம் ஆதாயம் பெறவேண்டும் என்ற எண்ணத்திற்குச் சிறிதும் இடமில்லாமல், தொண்டறத்துடன் தொடங்கப்பட்டு, வெகு சிறப்பாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளையால் இயக்கப்படும் தொண்டு நிறுவனம் இது.

இதுவரை அந்த இல்லத்தைப் பற்றியும், அதன் சாதனைகள், வெற்றிகள் குறித்தும் அறிந்திராதவர்களுக்கு, நடைபெற்ற மூன்று நாள் விழாக்கள்மூலம் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

13 என்று சொன்னாலே மூட நம்பிக்கையாளர்களுக்கு அபசகுணம் - அச்சம்! அதேநேரத்தில் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இல்லம் 13 எண்ணிக்கையில்தான் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தால் இதுவரை பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1583 என்பதும், இந்த இல்லத்தில் தங்கிப் படித்த 31 பெண்களுக்கு இந்த இல்லத்தின் வழி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த இல்லத்தில் படித்தவர்களில் பலர் பொறியாளராக, செவிலியராக ஆசிரியர்களாக, அரசுத் துறை நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் அலுவலர்களாகப் பணி புரிந்து வருகின்றனர் என்பதும் மூட நம்பிக்கையாளர்களின் தலைகளில் விழுந்த ஆழமான குட்டாகும்.

நாதியற்றுப் போன தமிழர்களுக்கே தந்தையாக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ஓர் இல்லம் தமது நேரிடைப் பொறுப்பில் தொடங் கப்பட வேண்டும் என்று உதித்த எண்ணம் - அதனைச் செயல்படுத்த தன்னையே ஒப்படைத்த அன்னை மணியம்மையார் அவர்களின் உள்ளம் ஆகியவை உன்னதமானவை - பின்பற்றப்படத் தக்கவையாகும்.

பகுத்தறிவுச் சிந்தனையாளரான நியூயார்க்கைச் சேர்ந்த பால்கர்ட்ஸ் (Paul Kertz) அவர்கள் சென்னையில், கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் ஒரு கருத்தை முக்கியமாகக் குறிப்பிட்டார்.

ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்பது எவ்வளவு முக்கியமோ, அதற்குக் காரணமானவர்கள் போற்றப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ - அதைவிட அந்த நிறுவனத்தை, தோற்றுவித்தவர்கள் மறைவிற்குப் பிறகு கொண்டு செலுத்துவது, சிறப்பாக நடத்துவது என்பது மேலானதாகும் என்று குறிப்பிட்டார்.

நாட்டில் பல நிறுவனம், அமைப்புகள், அவற்றைத் தோற்றுவித்த தலைவர்களின் மறைவிற்குப் பிறகு மரணமடைந்து விடுவதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

ஆனால், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர்களால் உண்டாக்கப்பட்ட இயக்கமும் சரி, நிறுவனங்களும் சரி, அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்திலும் சரி, அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் காலத்திலும் சரி, மேன்மேலும் செழித்து வளர்ந்தோங்கியுள்ளதை எதிரிகள் கூட ஒப்புக்கொள்வர் - மாசு மருவற்ற எல்லா உள்ளங்களும் உண்மையை ஒப்புக்கொண்டு பாராட்டவே செய்யும்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவுக்குத் தலைமையேற்ற - நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், ஏதோ விழாக்கோலம் - கூடிக் கலைந்தோம் என்று நினைக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அறிவிப்புகள் கொடுத்துள்ளார்; அன்னை மணியம்மையார் பெயரில் விளையாட்டரங்கம் (ஸ்டேடியம்) என்று தெரிவித்துள்ளார்.

நமது நிறுவனங்களின் கட்டமைப்புகள் நாளும் வளர்ந்து வருவதற்கு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு தலைமையேற்று திட்டமிட்ட வகை யில் நடைபெற்று வருவதற்கு தமிழர் தலைவர் அவர்கள் முக்கிய காரணம் - அவருக்கு ஒத்துழைக்கும் கூட்டுத் தோழர்களும், துணையும் துணைக்காரணமாகும்!

அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லப் பொன்விழா ஆண்டில், நமது நிறுவனங்கள் செழிப்பாக கட்டுப்பாடாக வளர்ந்து வருவதற்குக் காரணமாக இருந்த, இருந்துவருகிற அத்துணைப் பெருமக்களுக்கும் இந்த நேரத்தில் நமது நன்றி கலந்த பாராட்டு தல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், இதனைத் தொடர்ந்து நாம் பயணம் செய்யும் அனைத்துத் தளங்களிலும் வெற்றியையும், சாதனைகளையும் குவித்து, தந்தை பெரியார் அவர்களின் செயல்பாடு நிறுவனங்களாக ஆக்கப்பட்டு, காலாகாலத்திற்கும் நிலைத்து நின்று செயல்பட நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட உறுதி கொள்வோம்!

மூன்று நாள் விழாவை வரலாற்றுச் சிறப்புடன், புதுமை நோக்கில் அரங்கேற்றி சாதனை படைத்த அனைவருக்கும் நன்றியும், பாராட்டுகளும் உரித்தாகுக!

------------------- "விடுதலை" தலையங்கம் 12-1-2009

2 comments:

Thamizhan said...

கடவுளை மற்!மனிதனை நினை!
பெரியார் வெறும் பேச்சாளர் மட்டுமல்ல.அவருடைய பெண்கள் முன்னேற்றத்தின் அடிக்கற்களில் ஒன்றாக நாகம்மையார் குழந்தைகள் இல்லம் பெண் குழந்தைகளின் சாதனை இல்லமாக அமைந்து பொன்விழா கண்டுள்ளது.
அங்கே அன்னை மணியம்மையாரின் பாசத்தில் வளர்ந்த மானமிகு.தங்காத்தாள் மிக்க கவணத்துடன் வளர்த்து வரும் குழந்தைகள் இன்று பல துறைகளில் உள்ளனர்.முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு மணவாழ்வு அமைந்து வெளி நாடுகளிலும் வாழ்கின்றனர்.
தன்னம்பிக்கை,தன் முனைப்பு,கல்வி,டிக் வாண்டோ,பாட்டு,நாடகம் என்று அனைத்திலும் சிறந்து விளங்குவதை மூன்று நாள் நிகழ்ச்சியாகப் பார்த்த பொது மக்கள் மகிழ்வுடனும்,பெருமையுடனும் பேசுவது சிறப்பு.
பத்திரிக்கைகள் விளம்பரமில்லா விட்டாலும் வந்தவர் மனதில் நிறைந்த விழாவாக் அமைந்ததாகச் சொன்னார்கள்.
வளரட்டும் பெரியார் தொண்டு.
அனைத்து அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி தமிழன் அய்யா