Search This Blog

31.1.09

ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா?
ஜெயலலலிதா யாரை ஏமாற்ற முயலுகிறார்?

“I have always been a staunch opponent of the L.T.T.E.”

(விடுதலைப்புலிகளின் கடுமையான எதிரியாகவே நான் எப்போதும் இருந்து வந்திருக்கிறேன்) என்று ஜெயலலிதா கூறி அனைத்து ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா?

அவர் எப்படிப்பட்ட புளுகர் என்பதைத் தெரிந்துகொள்ள, இதோ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு 4.10.1990 அன்று செல்வி ஜெயலலிதா சிறப்புப் பேட்டியொன்று அளித்துள்ளதைப் படித்துப் பாருங்கள்!

"சிங்கள ராணுவமும், காவல்துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவிற்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை. இப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது. இது ஓர் அதிதீரமான செயல். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்தவேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இலங்கைத் தமிழர்களின் கதிபற்றி பிரதமர் வி.பி. சிங் எந்தவிதக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கவேண்டும். மத்திய அரசு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி சமாதானத் தீர்வு ஒன்றைக் காணவேண்டும். அல்லது விடுதலைப்புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்கவேண்டும்.

செய்தியாளர்: விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்துவிட்டது. ஆனால், நீங்கள் இன்னமும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே?

ஜெயலலிதா: நம்முடைய முக்கிய நோக்கம் என்ன? தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடக்கூடாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப் படுகொலையிலிருந்தும் பூண்டோடு ஒழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படவேண்டும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தவறுகளைச் செய்துள்ளனர். ஆனால், நாம் விடுதலைப்புலிகளை ஆதரிக்காவிடில் அது இலங்கையில் தமிழ் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும். அதை நாம் அந்த நோக்கோடு பார்க்கவேண்டும்.

செய்தியாளர்: எம்.ஜி.ஆர். செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யவில்லையா?

ஜெயலலிதா: அதற்கான எந்தத் தடயத்தையும் நான் காணவில்லை.

***

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் மாத்திரமல்ல, 8.10.1990 தேதியிட்ட இந்து இதழிலே ஜெயலலிதா விடுதலைப்புலிகளைப்பற்றி ராஜீவ் காந்தி அவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குறிப்பிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு:-

இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாததற்காக ஜெயலலிதா மத்திய அரசையும், மாநில அரசையும் குற்றஞ்சாட்டினார். இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் அத்தீவில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிந்துவிடும் என்று ஜெயலலிதா எச்சரித்தார்.

இது மாத்திரமல்ல, 29.4.1991 தேதிய இந்து நாளேட்டுக்கு ஜெயலலிதா பேட்டியளித்தபோது, பங்களாதேஷ் பிரச்சினையில் இந்திரா காந்தி செய்ததைப்போல ராணுவ நடவடிக்கைபற்றி இந்தியா சிந்தித்தால், அதில் தவறு எதுவுமில்லையென்று நான் கருதுகிறேன் என்றும் கூறி அது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவிற்கு இன்று நெருங்கிய ஆதரவாளராக உள்ள சுப்பிரமணியம் சுவாமி 21.7.1995 அன்று ஜெயின் கமிஷன் விசாரணையிலே கூறியது என்ன தெரியுமா?

ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்பும், பின்பும் ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரச்சாரகராகவே விளங்கினார். ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாமென்று ஜெயலலிதாவிற்கு விடுதலைப்புலிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததால், அ.தி.மு.க.வும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி வைத்திருந்தபோதிலும், ராஜீவ் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, விமான நிலையத்திலே ராஜீவ் காந்தியை வரவேற்கவும் செல்லவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு இந்த அளவிற்கு ஆதரவாளராக இருந்தவர் தற்போது விடுதலைப்புலிகளுக்குத் தான் என்றைக்கும் எதிரியாக இருந்துள்ளதாக கடைந்தெடுத்த பொய்யைக் கூறி யாரை ஏமாற்ற முயலுகிறார்?

------------------நன்றி: "முரசொலி", 30.1.2009

4 comments:

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

தமிழ் ஓவியா said...

நன்றி

Unknown said...

ஜெயலலிதா பொய் பேசுவதில் வல்லவர் என்பது டான்சி வழக்கு, தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் உட்பட அவர் நடந்து கொண்ட விதம்தான் அனைவருக்கும் தெரியுமே!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்