Search This Blog

13.1.09

முதல் அமைச்சரை சந்தித்து தமிழர் தலைவர் கி. வீரமணி,மருத்துவர் ச. ராமதாசு, தொல். திருமாவளவன் கடிதம்




சண்டையை நிறுத்தச் செய்தால்தான் அமைதிப் பேச்சுவார்த்தை
நடத்தமுடியும்! அதற்கு ஆவன செய்யவேண்டும்

முதல் அமைச்சரை சந்தித்து தமிழர் தலைவர் கி. வீரமணி,
மருத்துவர் ச. ராமதாசு, தொல். திருமாவளவன் கடிதம்


இலங்கையில் சண்டையை நிறுத்தச் செய்தால்தான் அமைதி பேச்சு வார்த்தை தொடர முடியும். அதற்கு ஆவன செய்யவேண்டு மென்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திரு மாவளவன் ஆகியோர் தமிழக முதல் அமைச்சர் அவர்களி டம் அளித்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

இன்று காலை 9.30 மணி யளவில் இம்மூன்று தலைவர் களும் முதலமைச்சரை சந்தித்து அளித்த கடிதத்தில் குறிப் பிட்டிருப்பதாவது:

மாண்புமிகு முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு...

அன்பு வணக்கம்.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கான அமைதி பேச்சுவார்த்தை நடை பெறுவதற்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆதரவாகச் செயல்படும் என்று 2004-ஆம் ஆண்டில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரசு, தி.மு.க. பா.ம.க. உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட குறைந்த பட்ச செயல்திட்டத்தில் இந்த வாக்குறுதி இடம் பெற்றிருக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டுமானால், அங்கே உடனடியாகச் சண்டை நிறுத்தப்பட வேண்டும். சண்டை நிறுத்தம் வந்தால்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற முடியும். ஆனால், இன்றைக்குப் போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கிற போராளிகளை முழுவதுமாக அழித்துவிட்டு அல்லது அவர்களை முற்றிலுமாக வெற்றிகண்டுவிட்டு, அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை என்ற வெறியுடன் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சண்டையை நிறுத்தி விட்டுப் பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. சண்டையினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும், பிரச்சினை தீராது என்றும் நேற்று போப்பாண்டவர் கூட அறி வித்திருக்கிறார். இந்தியாவும் சண்டையினால் தீர்வு காண முடியாது என்று பேச்சளவில் சொன்னாலும் சண்டையை நிறுத்துங்கள் என்று இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வில்லை.

இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற சந்தேகம்

சண்டை நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகமே ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் இந்தக் கோரிக்கையை ஏற்று சண்டையை நிறுத்தும்படி இந்திய அரசு இதுவரை கூற வில்லை. இதிலிருந்து இலங்கையில் சண்டையை நடத்திக் கொண்டிருப்பது இலங்கை போர்ப்படையினர் என்றாலும், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்ற சந் தேகம் வலுப்படுகிறது. இத்தகைய சந்தேகம் முதலமைச்சராகிய உங்களுக்கும் எழுந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது இந்திய அரசின் கடமை யாகும். அதற்காவது சண் டையை நிறுத்துங்கள் என்று கடைசி நேரத்திலாவது இந்திய அரசு குரல் கொடுக்கவேண்டும்.

அங்கே சண்டை நீடித்து ஒருவேளை இலங்கை அதிபர் சாதிக்க விரும்புகிறபடி வடக்கு மாகாணத்தையும் கைப்பற்றுவதால், அதனால் இந்தியா சாதிக்கப் போவது என்ன? தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைக்காமல் அலட்சியப்படுத்தி விட்டு இலங்கை அரசு விரும்புகிறபடி சண்டையில் அவர்கள் வெற்றி பெறுவதால் இந்தியாவிற்குக் கிடைக்கப் போவது என்ன? இந்தியா சாதிக்கப் போவது என்ன? இதனை மத்திய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும். அதை விட தமிழகம் விரும்புகின்றபடி இந்தியா எச்சரிக்கை செய்து அங்கே சண்டை நிறுத்தப்பட்டால் இங்குள்ள தமிழர்களின் ஆதரவு மட்டுமின்றி உலகத் தமிழர்கள் ஆதரவும் இந்திய அரசுக்குக் கிடைக்கும் என்பதை வலியுறுத்திக் கூறவேண்டும்.

இந்தியாவே முன்னின்று பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும்

சண்டை நின்றால்தான் குறைந்தபட்சச் செயல் திட்டத்தில் நாம் அறிவித்துள்ள படி, நாம் விரும்புகின்றபடி இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறை வேற பேச்சுவார்த்தைகளைத் தொடங்கமுடியும். அப்படி பேச்சுவார்த்தைத் தொடங்கப் பட்டாலும் கடந்த காலங்களைப்போல பெரும் கண் துடைப்பாக இல்லாமல் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் காணும் வகையில் உளப்பூர்வமாக நடைபெற வேண்டும். ஈழத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், மொழி உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளுக்கும் எத்தகைய தீர்வை வைத்திருக்கிறது என்பதை இந்தியா கோரி பெறவேண்டும். நார்வே போன்ற நாடுகள் வரட்டும் என்று காத்திருக்காமல் இந்தியாவே முன்னின்று அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இதனை மத்திய அரசுக்கு நாம் மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூற வேண்டும். அதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

----------------------------நன்றி: "விடுதலை" 12-1-2009

0 comments: