Search This Blog

13.1.09

அமெரிக்காவில் நடந்த பெரியார் நினைவு நாள்,பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள்


அமெரிக்காவில் நடந்த பெரியார் நினைவு நாள்,
பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் சவுத் ஆம்ப்டன் நகரில் சனவரி 10 ஆம் நாள் பெரியார் நினைவு நாள் மற்றும் பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டது.

பல அமெரிக்கர்களும், தமிழ்நாட்டு, வட இந்திய மாநிலங்களில் இருந்தும் அமெரிக்காவில் வாழும் பலரும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் மாரிலேண்ட், வாசிங்டன் டி.சி., ரோடு அய்லண்ட், நியூஜெர்சி, பென்சில்வேனியா, கன்னெக்டிகட் என்ற மாநிலங்களிலிருந்து குடும்பங்களாக வந்து கலந்து கொண்டனர்.

பெரியார் பன்னாட்டமைப்பு, ஆம்ணி வளர்ச்சி நிறுவனம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

திருச்சி பெரியார் மணியம்மை மருந்தியல் கல்லூரியில் படித்த கயல்விழி பொன்னுசாமி அனைவரையும் வரவேற்று இனிப்பான பொங்கல் விருந்து உண்ட உங்களுக்கு இப்போது மனிதர்களின் முக்கியத் தேவையான மனித நேயம் பற்றி மூளைக்கு விருந்தளிக்கப் போகிறோம் என்று வரவேற்றார்.

அடுத்து மருத்துவர் சரோஜா இளங்கோவன் வந்திருந்த அமெரிக்கர்களுக்கும் இங்கு வளரும் குழந்தைகளுக்கும் பொங்கல்பற்றிப் பவர்பாயிண்ட் எனும் கணினிப் படங்களுடன் தெருக்களில் இடும் கோலம் முதல், அறுவடை செய்யும் நெல் பொங்கலாவதும், நன்றி விழாவாக மாடுகளுக்குச் செய்யும் சிறப்பு,ஏறு தழுவுதல் வரை விவரித்தார்.அவர் கையால் படைத்த பொங்கலை உண்டவர்கள் அவரது கருத்துப் பொங்கலையும் ஆவலுடன் கேட்டு மகிழ்ந்தனர். அடுத்து மருத்துவர் சோம.இளங்கோவன், தந்தை பெரியாரைப் பற்றி அவர் சிறு வயதில் திண்ணைப் பள்ளி ஆசிரியர் வீட்டிலே தண்ணீரைத் தூக்கிக் குடித்துப் புறையேறியது மற்றும் அந்த வீட்டுப்பெண் அந்த டம்ளரைத் தண்ணீர் தெளித்து எடுப்பதை, ஒரு சிறுவன் செய்வதைப் படங்களாகக் காட்டி, எப்படிப் பெரியாராக மாற அடிக்கல் நாட்டின என்பதை விளக்கினார். பெரியாரின் வரலாறு, போராட்டங்கள் மனிதநேயத்தின் எதிர்ப்பின் அடிப்படையான கடவுள், சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றி எடுத்துரைத்தார்.அவரது வாழ்நாளிலேயே அவர் கண்ட வெற்றிகள் அவருக்குப் பிரியா விடை கொடுத்து அனுப்பிய காட்சிகளைக் காண்பித்தார்.அவருக்குப் பின் வீரமணி அவர்களின் அர்ப்பணிப்பு, அருந்தொண்டு, கல்வி நிறுவனங்கள், பொன்விழா கொண்டாடும் நாகம்மை குழந்தைகள் இல்லம் இவற்றைப் படங்களுடன் காண்பித்தார்.

தமிழ்நாட்டில் பிறந்து, மும்பையில் வளர்ந்து அங்கு ஒரு மகாராஷ்டிரத் தாழ்த்தப்பட்டவரை வாழ்விணையராகக் கொண்டு இங்கு அமெரிக்கப் பென்சில்வேனியாவில் வெற்றி நடை போடுபவர் மைக்கேல் தேவர்.ஆம்ணி வளர்ப்பு மையத்தின் மூலம் ஆண்டுதோறும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை இங்கு அமெரிக்கா அழைத்து வந்து பயிற்சிகள் கொடுத்து வேலையில் அமர்த்தும் தொண்டைச் செய்து வருகிறார்.

இங்கே பென்சில்வேனிய மாநில மக்கள் மன்றத்தில் இந்தியா சாதி ஒழிப்பிற்கு உண்மையாகப் பாடுபட்டு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வைத்தவர். அமெரிக்கப் பாராளுமன்றத்திலும் இந்த தீர்மானம் நிறைவேற உழைத்து வருகிறார்.அவரும், ஆம்ணி நிறுவனமும் பாராட்டப் பட்டனர்.


மருத்துவர் ராகுல் காய்பேஜ பூனாவிலிருந்து வந்தவர். அவர் சென்னையில் பெரியார் திடலில் ஆசிரியர் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பெரியாரும், பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொன்னது பசு மரத்தாணி போல் என் உள்ளத்தில் பதிந்து விட்டது என்று அந்தத் தலைப்பிலேயே பேசினார். புத்தர் பற்றியும், பெரியார், அம்பேத்கர் பார்வையில் புத்தர்,அம்பேத்கர் பெரியார் அவர்களின் சாதனைகள் பற்றியும் நன்றியுடன் விளக்கிப் பேசினார்.

அவர்கள் குழுவினர் இன எழுச்சிப் பாடலை இந்தியில் பாடினர்.

மேரிலேண்டில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தில் பொறி யியல் வல்லுநராகப் பணியாற்றும் பிரபாகரன் தமிழாய்வுக் குழுவில் இரண்டாண்டுகள் திருக்குறள் பற்றிப் பலர் எழுதியுள்ள உரைகளை ஆராய்ந்தவர்.

திருக்குறள் மாநாடு நடத்தியவர். அவர் திருவள்ளூவரும் பெரியாரும் என்ற அருமையான கருத்தாழம் மிக்க உரையாற்றினார். பகுத்தறிவு, சமுதாயம், சான்றோர் என்ற தலைப்புகளில் ஆராய்ந்து எப்படி ஒத்தகருத்துகளைத் துணிவுடனும், நேர்மையுடனும் கூறியுள்ளனர் என்பதை எடுத்துக் காட்டினார்.

திருவள்ளுவரின் யார் சான்றோர் என்ற கோட்பாட்டின் படி எப்படிப் பெரியார் சான்றோராகிறார், பெரியார் பெரியார் தான் என்பதை நிலைநாட்டினார்.உண்மைகளை, ஆராய்ந்து, யார் ஏற்றுக் கொள்கிறார் எதிர்க்கிறார்கள் என்ற கவலையில்லாமல் சமுதாயத்தின் நன்மைக்காக எடுத்துச் சொல்லியது மட்டுமன்றி, துணிந்து காலநேரங் கருதாமல் செயலிலும் செய்து காட்டியவர் பெரியார் என்று சுட்டினார்.

தலைநகர் வாசிங்டன் அருகே தமிழ்ப்பணி, தமிழ்க் கணினிப் பணி ஆற்றி வரும் சங்கரபாண்டி

மாண்புமிகு வி.பி.சிங் அவர்களின் படத்தைக் காண்பித்து அவரது தன்னலமற்ற தொண்டைப் பாராட்டினார். அவருடைய மறைவுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

குடந்தையிலே பெரிய சிவனடியார் குடும்பத்திலே பிறந்து ,வளர்ந்து ஆசிரியர் அவர்களுடன் பழகிப் பேசி, இரா.செழியன் மூலமாகப் பெரியார், அறிஞர் அண்ணா அவர்களை அறிந்து மனித நேய மாண்பாளராக வாழ்பவர் மருத்துவர். திருஞான சம்பந்தம். மற்ற மருத்துவர்களால் ரோடு அய்லண்ட் மாநிலத் திலேயே தலை சிறந்த புற்றுநோய் மருத்துவராகக் கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருபவர். அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரவுன் பல்கலைக்கழகத்தின் ரோடு அய்லண்ட் மருத்துவமனையின் தலைசிறந்த மருத்துவராக மற்ற மருத்துவர்களால் ரகசிய ஓட்டெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது 60 வது ஆண்டு விழாவிலே ஆசிரியர் அவர்களை அழைத்து அங்குள்ள மகளிர் ஆசிரியர் அவர்களிடம் அளவாளவித் தெளிவுரை பெற வைத்தவர்.

அவர் பெரியார் நம்முள்ளே என்ற சிறப்பான தன்னாய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார். பெரியார் நம்முள்ளே வாழ்கிறார். நாம் நமது பெயர்களிலே உள்ள சாதிகளை நீக்கி விட்டோம், ஆனால் நம் மனதிலே மாற்றி வாழ்கிறோமா என்ற போராட் டத்தை நம் மனதிலே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் பெரியார். மனிதநேயத்தைப் பேசும் நாம் அதைக் கடைப்பிடித்து வாழ, அதை வளர்க்க என்ன செய்கிறோம் என்ற போராட்டத்தை நம்முள்ளே நடத்திக் கொண்டிருக்கிறார் பெரியார். பெரியார் ஒரு பெயரோ, ஒரு தலைவரோ மட்டுமில்லை அது ஒரு வாழ்வின் தத்துவம், உயர்ந்த தத்துவம். அது மனிதன் முன்னேற வேண்டும் என்ற வாழ்க்கைப் போராட்டம்.அந்தப் போராட்டம் நமது எண்ணங்களிலே நிகழ்ந்து அதற்கு நல்ல வழி முறைகள், வாழ்க்கை முறைகள் அமையும் வரை தொடர்ந்த போராட்டமாகவே நமது உள்ளங்களில் நிகழும். இந்த மாதிரிப் போராட்டங்களை வெகு சிலரால் தான் உண்டாக்க முடியும்.அதில் தான் பெரியார் வாழ்கிறார், வெற்றியடைகிறார்.

என்னைப் போன்று மதவாதச் சூழ்நிலையிலேயே வளர்ந்த வர்கள் மீது அவரது எண்ணங்களைத் தாக்கி அவர் வழியில் திருப்பியுள்ளார் என்றால் அதுதான் பெரியார் அவர்களின் உண்மையான உழைப்பின் வெற்றி என்றார்.

அதை நாம் எவ்வளவு தூரம் உண்மையாகக் கடைப்பிடித்து வாழ்கின்றோமோ அது தான் பெரியாரின் வெற்றி என்றார்.


சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் அய்வி லீக் எனப்படும் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான பென்சில்வேனியாப் பல்கலைக்கழகச் சமூகவியல் பேராசிரியர் அலெக்சாண்டர் லெமுஸ் கலந்துரையாடலாக வகுப்பெடுத்தார். இவர் அமெரிக்காவின் ஒதுக்கப்பட்ட,பின் தங்கிய மக்களுக்காகப் பொருளா தார, சமுதாய வளர்ச்சியில் நேரடியாக உழைத்து வெற்றி கண்டவர். அவர்களுடைய குடியிருப்பு, தொழில் வளர்ச்சி இவற்றிற்குப் பெருந்தொகை சேர்த்து முன்னேற வழி வகுத்து, நிறைவேற்றி விருதுகள் பெற்றவர்.அமெரிக்க மனிதநேயப் பண்பாளர் பால் கர்ட்சு,பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் முதல் முனைவர் பட்டம் பெற்றவர், அவருடன் நெருக்கமானவர்.

சாக்ரடீசு,தந்தை பெரியார் அவரது மேற்கோள்களைப் பதிவிட்டு அனைவர்க்கும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

பின்னர் அருகே அமர்ந்திருப்பவர்களுடன் அதுபற்றி உரையாடச் சொன்னார். மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று அவரவர் கருத்துகளை உரையாடிய சலசலப்பு அவர்களது,முக்கியமாக இளைய தலை முறையினரின் ஆர்வத்தைக் காட்டியது. பின்னர் சில கருத்துகளைப் படித்து அவை பற்றி கலந்துரையாடல் நடத்தினார்.

பசு மாட்டை, அதன் சாணியை, மூத்திரத்தைக் கோவிலுக்குள்ளே புனிதமாக்குகிறார்கள். ஆனால் மனிதனைக் கோவிலி னுள்ளே அனுமதித்தால் அது அசிங்கமாகி விடும், தூய்மைப் படுத்தவேண்டும் என்கிறார்கள்.இவர்களுக்கு அறிவு இருக்கிறதா? என்பதைப் போன்ற 30-க்கும் மேலான மேற்கோள்களைக் காட்டினார்.

கிறித்துவ மதம் எப்படி அமெரிக்காவின் ஆரம்ப நாட்களிலே மக்களைப் பிரித்துப் பிளவுபடுத்தியிருந்தது என்பதை எடுத்துக் காட்டினார். மனிதன் அடிமைப்படுத்தப்படுவதும் அதிலிருந்து வெளியேறி வருவதும் போராட்டங்களாக நிகழ்ந்து கொண்டே உள்ளன. அடிப்படையான கல்வி, தன்னம்பிக்கை, தன் முன் னேற்றம் இவற்றை உண்டாக்க உழைக்கும் உழைப்பும், கடைப்பிடிக்கும் வழிகளுமே முக்கியமாக அமைகின்றன என்பதை தெரிவித்தார்.

அதற்கான வழி முறைகள் காலத்திற்கேற்ப ஆங்காங்கே நிகழ்கின்றன. அதில் தலைசிறந்து தன்னலமின்றி உழைப்பவர்கள் உள்ளனர். அதுதான் எதிர்கால மனித நேய வாழ்விற்கு அடி கோலும் என்றார். என்னால் முடிந்த அளவிற்குப் பெரியார் சிந்தனைகளைப் பரப்பிட உழைப்பேன், முடிந்த உதவிகளைச் செய்கிறேன் என்றார்.

தமிழீழ இனப் படுகொலையை எதிர்த்து அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே எடுத்துச் சொல்லி, 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கண்டனத்தை நிறைவேற்றிய ஈழத்து மனித நேயப் பண்பாளர் ராம் ரஞ்சன் அனைவருக்கும் நன்றி கூறி,ஈழத்து இனப்படுகொலையைத் தடுக்க அனைவரையும் வேண்டினார்.

தொண்டு செய்து பழுத்த பழத்தின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் நாட்கள் மலர்கின்றன என மனம் மகிழ்ந்து விடை பெற்று, பெய்யும் பனி மழையை எதிர்கொள்ளச் சென்றனர் அனைவரும்.

வாழ்க பெரியார்!வளர்க பகுத்தறிவு!

-------------- சோம.இளங்கோவன் - "விடுதலை" 13-1-2009

0 comments: