Search This Blog

19.1.09

ஈழப்பிரச்சினையில் தமிழர்கள், தலைவர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்க முடியும்?


இந்த நேரத்தில் எது முக்கியம்?

ஈழத் தமிழர்ப் பிரச்சினை இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது? இப்பொழுது அங்குள்ள தமிழர்களுக்குச் செய்யப்பட வேண்டியது என்ன? தமிழ்நாடு அரசு என்ன செய்யவேண்டும்? இந்திய அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை என்ன?

தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கை எதுவாக இருக்க வேண்டும்? தமிழ்நாட்டுத் தலைவர்களின், கட்சிகளின் உணர்வுகள் - செயல்பாடுகள் எந்தத் திசையில் இருக்கவேண்டும் என்ற வினாக்கள் இந்தக் காலகட்டத்தில் மிகமிக முக்கியமானவையாகும்.

ஈழத்தில் விடுதலைப்புலிகளான போராளிகளின் பலம் எப்பொழுதோ நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிங்கள இராணுவம் தனித்து நின்று எத்தனைக் காலம், எவ்வளவு சக்தியைப் பயன்படுத்தினாலும், புறமுதுகு காட்டி ஓடும் நிலைதான்.

ஓர் அரசு இராணுவத்தை முப்படை கொண்டு எதிர்த்துத் தண்ணீர் காட்டினார்கள் விடுதலைப் போராளிகள் என்ற வீரியம் உலகுக்கு நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த நிலையில் உலகில் பல நாடுகளின் இராணுவ உதவியைப் பெற்று (இந்தியா உள்பட) வியூகங்களை வகுத்து விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாக எண்ணி, விடுதலைப்புலிகள் கைப்பற்றிய பல இடங்களை சிங்கள இராணுவம் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து இருக்கிறது என்பது உண்மையே!

கொரில்லாப் போர் முறை என்பதில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.

விடுதலைப்புலிகளை ஒடுக்குவது என்ற பேரில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பது - அங்கு தமிழன் என்ற இனம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவது என்பதுதான் இலங்கை ஆளவந்தார்களின் கடந்தகால - நிகழ்கால - எதிர்காலத் திட்டம் என்பதும் வெளிப்படையாகும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டுத் தலைவர்களும், தமிழ்நாடு அரசும், இலங்கையில் ஈழத் தமிழர்களை முற்றிலும் படுகொலை செய்ய (Genocide) எத்தனிக்கும் இராணுவ நடவடிக்கையை - போரை - உடனடியாக நிறுத்தவேண்டும் - அதற்கு இந்திய அரசு தனது செல்வாக்கை, அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை பல வடிவங்களில் முன்வைத்தது - வைத்துக் கொண்டும் இருக்கிறது.

இந்திய அரசோ இதுவரை இந்த வகையில், தான் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றவில்லை என்பது வருந்தத்தக்கது - கண்டிக்கத்தக்கது - நம்பகத்தன்மை யற்றதாகும்.

மிகவும் கடுமையான முறையில் தமிழ்நாடு கொந்தளித்து எழுந்துள்ள நிலையில், இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கரமேனன் என்பவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரும் இலங்கை அதிகாரிகளையும், அமைச்சரையும், அதிபரையும் சந்தித்துப் பேசியும் இருக்கிறார்.

அது தொடர்பாக எத்தகைய செய்திகள் வெளிவந்துள்ளன? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு உள்பட அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவது குறித்து பேசப்பட்டுள்ள னவே தவிர, தப்பித் தவறிக்கூட தமிழ்க்குடிமக்களின்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் மூர்க்கத்தனமான போரை நிறுத்துவது குறித்த முக்கியமான கோரிக்கைபற்றி ஓர் எள் மூக்கு முனை அளவுக்குக்கூட மூச்சுவிடப்படவில்லை என்பது எவ்வளவு பெரிய அநியாயம் - அக்கிரமம் - அநீதி - அட்டூழியம்!

எதை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், உலக மனிதநேய மாண்பாளர்களும் முக்கியமாக வலியுறுத்துகிறார்களோ, அது அவமதிக்கப்படுகிறது என்றால், ஒட்டுமொத்தமாக உலகம் பூராவும் உள்ள தமிழர்களும், மனித உரிமை, மனிதநேய உணர்வுகளும் அவமதிக்கப்படுகிறது, இழிவுபடுத்தப்படுகிறது என்றுதானே பொருள்?

இந்த நிலையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள், தலைவர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்க முடியும்?

கட்சிகளைத் தூக்கி எறிந்து இந்தப் பிரச்சினையில் ஒன்றாகவே இருக்கிறோம் என்று சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தன்மையில் காட்டிக்கொள்ளும், நடந்துகொள்ளும் நிலைமை உறுதிப்படுத்தப் படவேண்டும்.

உண்மையான ஈழப் போராளிகளுக்கு எதிராகவும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு எதிராகவும் கருத்துக் கூறும், செயல்படும் அமைப்புகளும், தலைவர்களும், தமிழின விரோதிகளே என்று பிரகடனப்படுத்த முன்வரவேண்டிய தருணம் இதைவிட வேறு எப்பொழுதும் இல்லை. அரசியல் உறவுகள் கூட இந்த வகையில் தான் இருக்கவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த நிலையில் - விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் கூறியுள்ள கருத்து மிகவும் சரியானது - கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இந்தக் கருத்தினை திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறது என்பதும் இந்த இடத்தில் முக்கியமாக நினைவு படுத்தப்படவேண்டிய ஒன்றாகும்.


-------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 19-1-2009

2 comments:

Thamizhan said...

இன்றைய மிகவும் முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் ஒன்றுபட்டு ஈழ்த்தமிழர் படு கொலையைத் தடுக்க வேண்டும்.
இதிலே இந்திய அரசின் பொய்,புரட்டு,நடிப்பு இவற்றின் அடிப்படைக் காரணம் சோனியா அம்மையாரின் பழி வாங்கும் எண்ணமா?
அதற்குத் தான் இத்தனை பொய்களும்,புரட்டுகளுமா?
இதை மொத்தத் தமிழினமும் ஒற்றுமையாக எதிர்க்க என்ன செய்ய வேண்டும்.அவரவர் போராட்டம்,அறிக்கை இதெல்லாம் எடுபடாத நிலையில் மத்திய அரசையுங் காங்கிரசையும் எதிர்த்துத்தான் ஒன்றிணைந்த போராட்டங்கள் நடை பெற வேண்டும்.
1.தமிழகக் குழு ஐ.நா,தென் ஆப்பிரிக்கா,அமெரிக்கா,இங்கிலாந்திற்
குச் செல்ல வேண்டும்.
2.மத்திய மந்திரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அலுவலகங்களைப் புறக்கணிக்க வேண்டும்.மத்திய அரசு நிருவனங்கள் தமிழகத்தில் நடக்காமல் மூடப் பட வேண்டும்.
3.பாராளுமன்றக் கூட்டத்தை அவர்களும்,மற்ற ஒத்தக் கருத்துள்ளவர்களையும் புறக்கணிக்க
வைக்க வேண்டும்.
5.உச்ச நீதி மன்றத்தில் மன்மோகனின்
பொய்களுக்கு வழக்குப் போட வேண்டும்.
6.மற்ற மாநிலங்களின் தலைவர்களுடன் சேர்ந்து காங்கிரசின்,மன்மோகனின் பொய்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சொல்ல வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா.