Search This Blog

25.1.09

திராவிடரின் மஹாநாட்டில் வஞ்சக ஆரியரின் கொடுமை!
திராவிட நண்பர்களே! சுயகாரியப் புலிகளாகிய பிராமணர்களின் வஞ்சகத்தை அறிய நாம் வெளியே போய்த் தேடவேண்டிய அவசியமில்லை. இச்சென்னை மாநகரின் கண் ஆங்காங்கு பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காப்பி கிளப்புகளில் கிறிஸ்தவர்கள், மகமதியர், பஞ்சமர்கள் பெருவியாதிக்காரர்கள் உள்ளே வரக்கூடாது என்று எழுதி நோட்டீஸ் போர்டு வெளியில் தொங்குவதைத் திராவிட நண்பர்கள் யாவரும் கண்டிருக்கலாம். நண்பர்களே! இவர்கள் கடைசியில் குறிப்பிட்டிருக்கும் பெருவியாதிக்காரர்களோடு மற்ற மூன்று மதஸ்தர்களையும் சேர்த்து எழுதியிருப்பதைப் பார்க்கும் தோறும் என் உள்ளம் அனலில் காட்டிய மெழுகு போல் உருகுகிறது. அந்தோ என்ன பரிதாபம். எல்லாம் வல்ல கடவுளின் சிருஷ்டியால் சிருஷ்டிக்கப்பட்ட மனித ஜன்மங்களில் இம்மூன்று மதஸ்தரை அருவருப்பது பார்ப்பனரின் கொடுமையிலும் கொடுமை அல்லவா. இது கடவுளுக்குத்தான் சம்மதமாகுமா? கடவுள், காகம், ஆடு, மாடு, மச்சம் இவைகளை வெவ்வேறு நிறமுடையதாகவும் அவைகளின் உருவங்களும் ஒன்றுக்கொன்று மாறுபாடாகவும் சிருஷ்டித்திருக்கிறார்? அப்படி மானிடர்கள் உண்டாக்கப்படவில்லையே? பிராமணன் முதல் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லுகிறவர்கள் வரை தேக உறுப்புகளில் ஒன்றாவது குறைந்தவனாய்க் காணப்படவில்லையே. எல்லாம் வல்ல கடவுள் பிராமணனை ஒரு மாதிரியாயும், க்ஷத்திரியரை ஒருமாதிரியாயும், அதற்குக் கீழ்ப்பட்ட ஒவ்வொரு வகுப்பாரையும் வேறு மாறுதலாகவும் உண்டாக்கவில்லையே. அப்படியிருக்க, மேற்காட்டிய மூன்று வகுப்பாரைக் கேவலம் குஷ்டரோகிகளோடு ஒதுக்கி வைத்திருப்பது யாது காரணத்தாலோ அறியேன். அறியவும் ஆவலாயிருக்கிறேன்.

ஓம் ரூலுக்கு லாயக்குள்ள பிராமண சிகாமணிகள் யாராவது, திராவிடன் பத்திரிகையின் மூலமாய்த் தெரியப்படுத்தும்படி கோருகின்றேன். பெரும் வியாதிக்காரர்கள் உள்ளே வரக்கூடாது என்பது யாவராலும் ஒப்புக்கொள்ளப்படத்தக்க நியாயம், ஓ! திராவிட சகோதரர்களே! இந்த அற்ப காப்பி கிளப்பில் இப்போது மூன்று குலத்தினர்களை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு சுய ராஜ்ஜியம் வந்து விட்டால் இன்னும் அத்தனை குலத்தினர்களை ஒதுக்கி வைப்பார்களோ? என்னதான் பார்ப்பாருக்கு ஆங்கிலேய ராஜாங்த்தால் வாழ்வு வந்தாலும் அதை அடக்கியாள வேண்டாமா?

நண்பர்களே! காப்பி கிளப் வைக்கத் தெரிந்துகொண்ட இப்பார்ப்பாருக்கு காப்பி முதலிய பானங்கள் எவ்விதமாய்த் தயாரிப்பதென்று தெரியுமா? ஒருக்காலும் தெரியாது. இவர்கள் காப்பி சாப்பிட துவக்கி சிலது காலமே ஆயிற்று. இவைகளும் ஆங்கிலேயர்களிடமிருந்து படித்துக்கொண்டது தான். ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருகிறதற்கு முன் காப்பி பானம் அருந்துவது இந்தியாவில் கிடையவே கிடையாது. மேலும் இவர்கள் தொழில் வியாபாரம் பூர்வீகமா யுண்டானதோ? இல்லையே, சொற்ப காலத்திற்கு முந்திதானே திராவிடர்களைப் பார்த்து படித்துக் கொண்டார்கள். எந்தக் காரியமும் நம்மவர்களைக் கொண்டு படித்துக் கொண்டு கடைசியில் நமக்கே வேர் புழுவாய் வந்து விட்டார்கள்.

ஓம் ரூலுக்கும் லாயக்குள்ளவர்களாய் விட்டோம் என்று கூக்குரலிடுகிறார்கள். பரிதாபம்! பரிதாபம்! நோட்டீஸ் போர்டுகளில் எழுதப்படாது விட்டிருக்கும் தோட்டி, சக்கிலி இன்னும் முதலிய வகுப்பார்களுக்கு மாத்திரம் இந்த காப்பி கிளப் இடம் கொடுக்குமா? சுத்தமும் நாகரிகமும் ஆண் சிங்கங்களைப் போல் திடகாத்திரமுமுள்ள இம்மூன்று வகுப்பார் தாமோ இவர்களின் பார்வைக்கு அற்பர்களாய்ப் போய்விட்டார்கள்?

பேதைமை என்பது மாதர்க்கணிகலம் என்னும் வாக்கியத்தை பேதைமை என்பது பிராமணர்க்கணிகலம் என்று சொல்லும் காலம் வந்துவிட்டது. ஏனென்றால் இவர்கள்தம் குலதெய்வமாகிய அனிபெஸண்டாகிய லோகமாதாவின் அடியார்களல்லவா? பெண்புத்தியைப் படித்துத்தானே ஓம் ரூல் நாடகம் நடிக்கிறார்கள். இவர்களுடைய பிரதிநிதியோ பெண்சிங்கம், நம்முடைய பிரதிநிதிகளாகிய ஸ்ரீமான் ராவ்பகதூர் பி.தியாகராஜ செட்டியார் அவர்களும் ஸ்ரீமான் டாக்டர் டி.எம். நாயர் அவர்களும் ஆண் சிங்கங்களல்லவோ? பிராமணர்களைப் பார்க்கிலும் நாமே சிறந்தவர்கள்

திராவிட குலாபிமானிகளே! பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காப்பி கிளப்புகளுக்குப் போகாமலும், மிட்டாய்க் கடை, இன்னும் முதலிய கடைகளுக்கும் போகாமலும், திராவிடர்களால் ஏற்படுத்தியிருக்கும் கடைகளுக்குப் போய் நம்மவர்களை சிறப்புப் படுத்துங்கள்.

கனவான்களே, ஒற்றுமையில்லாக் குடி ஒருமிக்கக் கெடும் என்னும் பழமொழி நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆதலால் நாம் எடுத்த காரியத்தைக் கைகூட்டி முடிக்க வேண்டுமானால் ஒற்றுமை அவசியம். ஜாதி வித்தியாசம் என்னும் உடையை கழற்றிப் போட்டு சுத்த வஸ்திரமாகிய ஒற்றுமை என்னும் பட்டு வஸ்திரத்தைத் தரித்துக் கொள்ளுங்கள். இந்த அற்புத வஸ்திரமே நமக்கு அய்யம் தரும். நமது பிரதிநிதிகள் எடுத்துக்கொண்ட முயற்சியில் ஜெயம் பெற கடவுளைப் பிரார்த்தித்து வருவது நமது கடமை. கனவான்களே, சுய ஆட்சி பிராமணர் ஆட்சியாம்! என்பதை மறந்து போகாமல் நாமும் நமது தேசமும் முன்னுக்கு வர நமது பிரதிநிதிகளோடு ஒத்துழைக்க முன் வருவது நம் ஒவ்வொருவர் கடமை.----------------------- "திராவிடன்", 12.11.1917

1 comments:

Unknown said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்