Search This Blog

8.1.09

ஜெயலலிதாவும் -கம்யூனிஸ்டுகளும்
பழைய ஞாபகம்; இல்லையோ!

தற்போது திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு கேட்கும்போது - தி.மு.க. மீது கடுமையாக பாய்ச்சல் நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. பற்றியும், அதன் தலைவி ஜெயலலிதா பற்றியும் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களும், அதே காலக் கட்டத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி உதிர்த்த சில கருத்துக்களும் - இங்கே தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் படித்துப் பார்த்தால் நம் எண்ணத்தில் தோன்றுவது யாருக்கும் ஞாபகமில்லையோ! என்பதுதான்.

***

மதுரைமேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 19-6-2007)

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் இந்தியாவின் - தமிழகத்தின் அரசியல் அதிகாரம் எந்தத் திசை வழியில் செல்ல வேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என வாக்குறுதி தந்த போது அதை ஜெயலலிதா கேலி பேசினார். தி.மு.க. வாக்குகள் பெறுவதற்காக இப்படி வாக்குறுதி தருவதாக கூறினார். பின் அவரே சில நாட்களில் 20 கிலோ அரிசி தருவதாக அந்தர் பல்டி அடித்தார். ஆனாலும் அவர் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். அப்படிப்பட்ட அ.தி.மு.க.தான் மேற்குத் தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீலகிரியில் 800 ஏக்கர் சொகுசு பங்களாவில் தங்கியிருந்ததாக தொடர்ந்து செய்தி வருகிறதே, அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டாமா? நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் 50 ஏக்கர் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற நிலையில் ஜெயலலிதா எப்படி 800 ஏக்கர் நிலத்தில் பங்களா கட்டினார்? என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.


கடந்த 12 மாதங்களாக மைனாரிட்டி தி.மு.க. அரசை தொலைத்தே தீருவேன் என ஜெயலலிதா பேசி வருகிறார். ஒரு கட்சியை அழிக்கவா தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்காகவா கட்சி கொள்கை வைத்துள்ளது?

17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என அ.தி.மு.க. கூக்குரல் இடுகிறது. மத வெறிக்கு சாதகமாக துணை நின்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டேன் என அச்சக்திகளுக்கு ஜெயலலிதா துணை நிற்கிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவர் வற்புறுத்தியதால் தான் வாஜ்பாய் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்ததாக மேடைக்கு மேடை பேசி வந்தார். தற்போது அதற்கு எதிராக ஜெயலலிதா மதவெறியைக் கிளப்பும் வகையில் பேசி வருவதை எதிர்த்துப் பேச முடியாமல் வைகோ சிக்கித் தவிக்கிறார்.

மதவெறிக்கு பின்னால் நின்று பக்க மேளம் வாசிப்பது தான் அ.தி.மு.க. வின் இன்றைய நிலை.

தமிழகத்தின் தி.மு.க. அரசு நீடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

கடந்த ஆட்சியின் போது நானும் சி.பி.அய். மாநிலச் செயலாளர் தா. பாண்டியனும் ஜெயலலிதாவைச் சந்தித்து 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தருவது சரியல்ல என்றும், அதை நிலம் இல்லாத கூலி விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

அதற்கு ஜெயலலிதா, முதலில் நிலம் கேட்பீர்கள், பிறகு அதை உழுவதற்கு பணம் கேட்பீர்கள் என்று கேலி பேசினார். அப்படிப் பட்டவர் எந்த முகத்தோடு ஓட்டு கேட்க வருகிறார்?

*************************************************

மதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 25-6-2007)

இந்தியாவின் பெரிய பதவியான ஜனாதிபதி தேர்தலுக்கு மாதர் குலப் பிரதிநிதியாக பிரதிபா பாட்டீலை அறிவித்தபோது நாடே மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அதை எதிர்த்து தமிழ் நாட்டில் இருந்து ஒரு அவலக் குரல் - பிரதிபா பாட்டீல் தேர்வு அரசியல் ஜோக் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா கூட்டத்தின் இந்த அகம்பாவத்திற்கு மேற்குத் தொகுதி மக்கள் சரியான அடி கொடுக்க வேண்டும்.

தேச நலன் கருதி, எடுத்த சிறந்த முடிவை அரசியல் ஜோக் என்பது அகம்பாவம். உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யச் சென்ற ஜெயலலிதா பா.ஜ.க. பற்றி வாயே திறக்க வில்லை. நாளை மதவெறிக் கூட்டத்தோடு இணைக்க ஜெயலலிதா எடுக்கும் முயற்சி தான் இது. இதை வாக்காளப் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்காலத்தில் வதந்திகளைப் பரப்புவது தேசத் துரோகம் என்று கூறப்பட்டது. தற்போது ஜெயலலிதா வதந்திகளைப் பரப்பி வருகிறார். தமிழகத்தில் குடிசைகளுக்கு பட்டா வழங்கப்படுவது குறித்து குறை சொல்ல ஜெயலலிதாவிற்கு அருகதை உள்ளதா?

************************************************************
திண்டுக்கல் கூட்டத்தில் என். வரதராசன் பேச்சு. (தீக்கதிர் - 15.6.2006)

ரூபாய் இரண்டுக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அ.தி.மு.க. வின் அராஜக ஆட்சியால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் நெசவுத் தொழில் சீரழிக்கப் பட்டது. தீப்பெட்டித் தொழில் நசிந்து போனது. சேலம் மாவட்டத்தில் கொலுசு தயாரிக்கும் தொழிலாளிகள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக என்னிடம் மனு கொடுத்தார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழகம் முழுவதும் உள்ள சிறு தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாயின. சட்டமன்றத்தில் உள்ளவர்களை காட்டு மிராண்டிகள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அத்தகைய ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு நமது கடமை முடிந்து விடவில்லை. அவர்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். மதுரை தொகுதி சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் பேசியது (தீக்கதிர், 16-7-2006)

முதல்வர் கருணாநிதி உறுதியாக தொழிலாளி பக்கம் நின்று போராட்டத்தை வெற்றி அடையச் செய்ததை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. நெய்வேலி போராட்டத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார். ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, இல்லை என்றால் ஒரு நிலை என அவர் பம்மாத்து செய்கிறார். ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களை பழிவாங்கியவர்தானே ஜெயலலிதா. ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கருணாநிதி, என். வரதராசன், நல்லகண்ணு போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடுத்தவர்தானே ஜெயலலிதா? அரசு சிறப்பாக நடைபெற தொழிலாளர்கள் சில நேரங்களில் கசப்பு மருந்தைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்று சொன்னவர்தானே ஜெயலலிதா.

**************************************************************

விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் டி.கே. ரெங்கராஜன் (தீக்கதிர் 4-8-2006)

ஜெயலலிதா சட்டமன்றத்தில் 2 மணி நேரம் பேசியிருக்கிறார். ஆனால் அவ்வளவு நேரம் பேசியதில் எவ்வித உருப்படியான ஆலோசனையும் இல்லை. தி.மு.க. வை தோழமைக் கட்சிகள் தவறாக வழிகாட்டுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். கடந்தமுறை ஜெயலலி தாவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோமே, அப்போதும் இப்படித்தான் நடந்து கொண்டோமா? வண்ணத் தொலைக்காட்சி கொடுக்கவே முடியாது எனக் கூறியவர் - இப்போது அதன் அளவு பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு கால்ஷீட் கொடுப்பது போல சட்டமன்றக் கூட்டத்திற்கு வந்து போகிறார்.

**************************************************************************

சென்னை கூட்டத்தில் என். வரதராஜன் பேச்சு. (தீக்கதிர் - 13-8-2006)

தி.மு.க. அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்களுக்கான பல சிறந்த திட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் தேவையின்றி எதிர்க்கிற கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கவும் லாயக்கற்றதாக அக்கட்சி மாறியிருக்கிறது.

சிறுதாவூரில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தங்குவதற்காக கட்டப்பட்ட பங்களா யாருக்குச் சொந்தமானது என்பதைக்கூட சொல்ல முடியாமல் தட்டுத் தடுமாறுகிறார்.

சட்டமன்றத்தில் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போடுவதாக கூசாமல் பேசுகிறார்கள். யார் ஜால்ரா போடுவது? உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்கும் ஜால்ரா போட்டது அ.தி.மு.க. ஆட்சிதான் என்பதை மக்கள் அறிவார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் ரேஷன் கடைகளில் இருந்து நல்ல அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறோம்.
கல்விக் கொள்ளைக்குத்தான் கடந்த கால ஜெயலலிதா அரசு உடந்தையாக இருந்தது.

****************************************************************


மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேச்சுக்களிலிருந்து சில பகுதிகள்.


வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைப்பது குறித்து அரசின் அறிவிப்பைக் கண்டித்து ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது மிகவும் ஆரோக்கியமற்ற முறையிலும், முதலமைச்சர் கருணாநிதி மீது தனி நபர் வெறுப்பைக் காட்டுகிற முறையிலும் வெளி வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

துணை நகரம் சம்பந்தமான விஷயங்களை விட்டு விட்டு, இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினரையும், சொந்தபந்தங்களையும் குறி வைத்து வன்மத்துடன் செய்யப்பட்ட தனி நபர் தாக்குதல் நடவடிக்கையாகும்.

ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறை, காழ்ப்புணர்ச்சியாகவும், அருவருக்கத் தக்க வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தக் கூடிய விவாதமாகவும் மாறி சட்ட மன்றம் முடக்கப் படுவதில் சென்று முடிவடைகிறது.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை குலைப்பதிலும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை திசைதிருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இது சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி உள்ளது. 2006 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அவர்களின் அராஜக மக்கள் விரோதப் போக்கிற்கு மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் புகட்டிய பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. (தீக்கதிர்- 4-9-2006)

அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு பல்லாயிரக்கணக்கானோர் மனு செய்தனர். ஆனால் அவற்றை அந்த ஆட்சி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. (என். வரதராசன் பேச்சு - தீக்கதிர் - 9-10-2006)


************************************************************

கம்யூனிஸ்ட்கள் குறித்து பேரவையில் ஜெயலலிதாவின் பாராட்டுகள்.

கம்யூனிஸ்டுகளால் எந்தக் காலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அதனால்தான் எங்களுடன் கூட்டணி சேர்ந்து இடங்களை வென்று விட்டு, எங்களையே சதா சர்வ காலமும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள் (ஜெயலலிதா - 27-3-2003)

நாங்கள் கம்யூனிஸ்ட் பக்கம் கையைக் காட்டினால்தான் அவர்கள் இந்த அவைக்கே வந்து தங்கள் கருத்துகளைக் கூற முடியும் (ஜெயலலிதா - 27-3-2003)

மார்க்சின் சித்தாந்தத்தினைப் பற்றி அந்தக் கட்சியின் உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இதனால்தான் இந்தக் கம்யூனிஸ்ட் இயக்கங்களே மக்களுக்குப் பயன்படாமல் போய்விட்டன. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இரண்டே காரியங்களைத்தான் செய்கின்றன. ஒன்று எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம்; போராட்டம், போராட்டம்; இல்லையென்றால் பொலிட் பீரோ, செயற்குழு என்று ஒரு கூட்டம் போட்டு 3 நாட்கள், 5 நாட்கள், 7 நாட்கள் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். இதைத் தவிர வேறு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை (ஜெயலலிதா - 8-4-2003)

மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதன் இரகசியம் - தேர்தலின் போது சுபைபபே செய்கிறார்கள். (ஜெயலலிதா - 8-4-2003)

மாண்புமிகு உறுப்பினர் தங்களுடைய கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகின்ற மேற்கு வங்காளத்தைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். இங்கே ஒரு ஆதாரத்தை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவருக்கு நான் கொடுக்க விரும்புகிறேன். இதில் மேற்கு வங்காளத்தில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, சட்டசபை முன்பு போராட்டம் நடந்தது. அப்போது மறியல் செய்த ஒருவரை போலீஸ்காரர் துப்பாக்கியால் அடித்து விரட்டும் காட்சி என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கோவை - மாலைமலர் பத்திரிகையிலே வெளிவந்தது. அதற்கு தலைப்பே தர்ம அடி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது (ஜெயலலிதா - 8-4-2003)

பசியைப் போக்குவது தான் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்கிறார். ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் சத்துணவுத்திட்டமோ, அன்னதானத்திட்டமோ இல்லை (ஜெயலலிதா - 28-4-2003)

கம்யூனிஸ்ட்கள் வெத்து வேட்டுப் போராட்டங்களை நடத்துவார்கள்; மேடையிலே முழங்குவார்கள்; ஆங்காங்கே கொடி பிடித்துக்கொண்டு நிற்பார்கள் (ஜெயலலிதா - 10-32005).

------------------- நன்றி :"முரசொலி", 4.1.2009

9 comments:

ராஜரத்தினம் said...

ஐயா,
அதிபுத்திசாலியே, இந்த கருணாநிதி செய்யாத விமர்சனமா? அப்ப காங்கிரஸும், மற்றவர்களை பற்றி என்ன சொல்வது?

தமிழ் ஓவியா said...

அதிபுத்திசாலிக்கு அண்ணாச்சி ராஜா அவர்களே. இது ஜெயலலிதாவும் கம்யூனிஸ்டுகளும் விமர்சித்துக் கொண்டவைகள். இவர்களின் விமர்சனங்கள் எப்படிப்பட்டவை என்பதை உணர்த்தவே பதிவு செய்யப்பட்டன. இந்த பதிவுக்கே அதிபுத்திசாலி பட்டமா?

நிற்க.

இந்த பதிவு குறித்து மீண்டும் 7-1-2007 முரசொலி எழுதியதை தங்களின் பார்வைக்கு....


"முரசொலி வெளியிட்ட முகப்புக் கட்டுரையும் பதில் சொல்ல முடியாத வரதராசனின் ‘வசைமாரி’யும்!
அராஜக அரசி ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் என். வரதராஜன் - அராஜகியுடன் கூட்டுச் சேர்ந்ததை நியாயப்படுத்த முடியாமல் - தி.மு.க. மீது சேறு வாரி இறைக்கும் வகையில்

பழைய ஞாபகங்களும்

புதிய நிலைமைகளும்

என்ற தலைப்பில் தீக்கதிரில் ஒரு சப்பைக் கட்டுக் கட்டுரையை எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் அஸ்திவாரம் போன்றவர்கள் யார்?

தொழிலாளர்களும்

விவசாயிகளுமே

இடதுசாரிகளின் அசைக்க முடியாத அஸ்திவாரங்கள்!

2001 சட்டமன்றத் தேர்தலில் - மார்க் சிஸ்ட்கள் ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்ந்து - அவரை மீண்டும் கோட்டையில் குடியேற்றி னார்கள்.

அப்போது - அவர்கள் திருவல்லிக் கேணியில் தேரடிக்கு அருகே - தங்களது தொழிற் சங்கத்திற்கென புதியதோர் கட்டிடத்தை உருவாக்கியிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தைத் திறந்து வைக்க யார் பொருத்தமானவர்கள் என்று யோசித்து - அராஜகி ஜெயலலிதாதான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து அவரையே அழைத்தார் கள்.

சிவப்புக் கம்பள வரவேற்பளித்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க ஊழியர்கள் ஜெயலலிதா வந்ததும் - அனைவரும் எழுந்து நின்று "முதல்வரே, முதல்வரே! தொடரட்டும், தொடரட்டும் - உங்கள் பணி தொடரட்டும். மக்கள் பணி தொடரட்டும்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்! அரசு ஊழியர்களின் வாழ்த்துக் கள்! ஆதரவு உண்டு; எங்கள் ஆதரவு உண்டு. அரசு ஊழியர்களின் ஆதரவு உண்டு" என்று விண்ணதிர வாழ்த்து முழக்கமிட்டார்கள்!

கட்டிடத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா கம்யூனிஸ்ட்களின் தலையில் - குறிப்பாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போல - சம்மட்டியால் அடித்து அறுவாளால் கழுத்தை அறுப்பதைப்போல - தொழிலாளர்கள் மத்தியில் பேசக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே.

"அரசுக்கு கிடைக்கின்ற மொத்த வரி வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கும், 24 சதவிகிதம் பென்ஷனுக் கும் செலவிடப்படுகிறது.

ஆகமொத்தம் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே போய்விடுகிறது.

வெறும் 6 சதவிகிதம்தான் - மக்கள் நல் வாழ்விற்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக மிஞ்சுகிறது"

- என்று பேசி - கம்யூனிஸ்ட்களின் முகத்தில் - அரசு ஊழியர்களின் முகத்தில் கரி பூசினார்!

இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி பீடம் ஏறிய ஜெயலலிதா வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல - ஐந்தே மாதங்களுக்குள் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் (30.10.2002ல்) போனஸ் - அகவிலைப்படி கேட்ட இடது சாரி களின் முகத்திலடித்தாற்போல - கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் - அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளையே கேலி செய்து தனது தொழிலாளர் விரோதப் போக்கினை கம்யூனிஸ்ட்களுக்குத் தெளிவாக உணர்த்தினார்.

அது வருமாறு:-

"போனஸைப் பற்றி திரும்ப திரும்ப பேசுகிறார்கள். போனஸ் என்பது என்ன? முதன் முதலாக போனஸ் என்பது எப்படி வந்தது? ஒரு நிறுவனம் நல்ல முறையில் இயங்கி லாபம் சம்பாதித்தால் அந்த லாபம் முழுவதுமே உரிமையாளர்களுக்கு போவது நியாயம் அல்ல என்ற கருத்து இருந்தது. அந்த நிறுவனத்திற்கு அந்த லாபத்தை ஈட்டித் தருபவர்கள் யார்? அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.

ஆகவே, போனஸ் என்பது ஒரு ‘நல்லெண்ணத்தின் அடையாளமாக’ அந்த நிறு வனத்தின் உரிமையாளர்களுக்கு, அவ்வளவு லாபத்தை ஈட்டித் தந்த ஊழியர்களுக்கு, அந்த லாபத்தில் பங்கு தருவதுதான் போனஸ். போனஸ் என்பதே ஒரு நல்லெண்ணத்தின் அடையாளம்.

ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி னாலும் பரவாயில்லை, எங்களுக்கு தந்தே ஆகவேண்டும் என்று கேட்டால் அது எப்படி நியாயம் ஆகும்? அப்படித்தான் இன்றைக்கு அரசின் நிலையும் இருக்கிறது.

ஒட்டு மொத்தமாக வெளிச் சந்தையில் விலைவாசி உயரும்போது, அந்த விலைவாசி உயர்விலிருந்து ஒரு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு தொகையைத் தருகிறோம். அதுதான் அகவிலைப்படி.

ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் அளவுக்கு மட்டும் இருக்கின்ற அரசு ஊழியர்கள் விலை உயர்விலிருந்து பாதுகாப்புத் தரவேண்டுமென்று எதிர்பார்க் கிறார்கள். மாநிலத்திலுள்ள மீதி 98 சதவிகிதம் பேருக்கு என்ன பாதுகாப்பு? விலைவாசி உயர்வு அவர்களையும் பாதிப்பது இல்லையா?

மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப் பணத்தை என்ன செய்கிறோம்? மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துகிறோமா? இல்லை. அரசு ஊழியர்களுக்கு டி.ஏ.வாக செலுத்துகிறோம். அவர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கிறோம். அவர்களுக்கு அகவிலைப் படியாகக் கொடுக்கிறோம். பென்ஷனாக கொடுக்கிறோம். இதில் என்ன நியாயம்?

இப்போது எப்படி இருக்கிறது என்று சொன்னால், அரசு என்பது, மக்களுக்காகவே இல்லை. பணியாளர்களைப் பராமரிக்க மட்டுமே அரசு இருக்கிறது. அந்தப் பணமெல்லாம் அரசு ஊழியர்களுக்குப் போகிறது என்று சொன்னால், பின்னர் எதற்கு இந்த அரசு?"

- என்று இறுமாப்பு பொங்கிட - அரசு ஊழியர் களின் தலையில் தணலை அள்ளிக் கொட்டினார்.

ஜெயலலிதா ஆட்சியில் - தமிழக வரலாறு அதுவரையில் கண்டிராத அளவுக்கு டெல்டா பகுதி விவசாயிகள் - தஞ்சை மாவட்ட விவசாயிகள் பசி - பட்டினியால் வாடும் நிலை உருவானது.

சட்டமன்றத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் - தஞ்சை மாவட்ட விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் அவலநிலை உருவாகி யிருக்கிறது. இதற்கு ஜெயலலிதா அரசின் அலட்சியமே காரணம் என்று பேசினார்.

அன்றிரவு - அவரது சொந்த ஊரில் வீடு புகுந்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார் கள்.

இப்படி - கம்யூனிஸ்ட்களின் அஸ்தி வாரத்தையே அடித்து நொறுக்கும் வகையில் - 2001 - 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அராஜகம் - அட்டூழியம் - அக்கிரமம் செய்து ஆட்டம் போட்ட ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறீர்களே - என்று சுட்டிக் காட்டினால் -

தி.மு.க. தலைமை

மார்க்சிஸ்ட்களுக்கு

எதிராக

வசைமாரி

பொழிகிறது

என்கிறார் வரதராஜன்!

5.1.2009 திங்களன்று முரசொலி ஏட்டின் முதல் பக்கத்தில் ‘பழைய ஞாபகம் இல்லையோ?’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரையை - வசைமாரி என்கிறார் வரதராஜன். அந்தக் கட்டுரையின் எந்த இடத்திலும் - மார்க்சிஸ்ட்கள் பற்றிய தி.மு.க.வின் விமர்சனமோ - கலைஞரின் கருத்துக்களோ இல்லை; இல்லவே இல்லை.

அதிலே வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள், பேச்சுக்கள் யாருடையவை?

முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடந்த காலத்தில் - ஜெயலலிதா பற்றியும் அவரது நடவடிக்கைகள் பற்றியும் பேசிய பேச்சுக்கள் மட்டுமே - தேதி வாரியாக தொகுத்து வெளியிடப்பட்டிருக்கின்றனவே தவிர-

அந்த முழுப் பக்கக்

கட்டுரையில்

தி.மு.க. கருத்தோ

கலைஞரின் விமர்சனமோ

ஒருவரிகூட இல்லை.

19.6.2007 தீக்கதிர் வெளியிட்ட - மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராசன் பேசிய பேச்சு.
25.6.2007ல் - மதுரை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் என்.வரதராசன் பேசியது.
திண்டுக்கல் கூட்டத்தில் என்.வரதராசன் பேசியது (தீக்கதிர் 15.6.2006)
மதுரை தொகுதி சி.பி.எம்.நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் பேசியது (தீக்கதிர் 16.7.2006)
விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் டி.கே.ரெங்கராஜன் பேசியது (தீக்கதிர் 4.8.2006)
சென்னை கூட்டத்தில் என்.வரதராஜன் பேச்சு (தீக்கதிர் 13.8.2006)
என். வரதராசன் பேச்சு (தீக்கதிர் 4.9.2006)
வரதராசன் பேச்சு (தீக்கதிர் 9.10.2006)
இவைகள் எல்லாம்தான்

முரசொலி முகப்புக் கட்டுரையில்

வெளிவந்தவை!

இவற்றைத்தான் ‘வசைமாரி’ என்கிறார் வரதராசன்!

கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் ஜெயலலிதாவை விமர்சித்தார்களா?

ஜெயலலிதாவும் கம்யூனிஸ்ட்கள் மீது வரதராசன் பாஷையில் சொல்வதானால் ‘வசைமாரி’ பொழிந்திருக்கிறார்.

27.3.2003, 8.4.2003, 28.4.2003, 10.3.2005 ஆகிய தேதிகளில் கம்யூனிஸ்ட்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைப் பற்றி ஜெயலலிதா பொழிந்த வசைமாரிகளையும் முரசொலியின் முகப்புக் கட்டுரையில் தொகுத்து வழங்கப் பட்டிருக்கிறது!

இப்படியெல்லாம் பேசினீர்களே -

"பாட்டுக்குப் பாட்டெடுப்பேன், பாட்டனாரைத் தோற்கடிப்பேன்; ஏட்டிக்குப் போட்டியாக ஏறுமாறாய் பேசினால் ஏணி வைத்துப் பல்லுடைப்பேன் பாடு" என்று ஒருவரைப் பற்றி ஒருவர் - குறைகூறி, குற்றம்சாட்டி - கேலி செய்து போட்டி போட்டுக் கொண்டு பேசினீர்களே.

பழைய ஞாபகம்

இல்லையோ

என்றுதான் முரசொலி கேள்வியெழுப்பியதே தவிர, கம்யூனிஸ்ட்கள் பற்றியோ - ஜெயலலிதா பற்றியோ எந்தவிதக் கருத்தையும் - விமர்சனத்தையும் அந்த முழுப்பக்க முகப்புக் கட்டுரையில் ஒரு வார்த்தைகூடக் குறிப்பிட வில்லை! அவர்கள் பேசிய பேச்சையே அவர்களுக்கு ஞாபகப்படுத்தினால் - "அய்யோ எங்கள் மீது வசைமாரி பொழிவதா?" என்று அங்கலாய்க்கிறார் வரதராசன்.

முரசொலிக்கு அல்ல; அல்ல - முரசொலியில் வெளியிடப்பட்ட தனது பேச்சுக்களுக்கே பதில் சொல்ல முடியாத வரதராசன்

பழைய ஞாபகங்களும்,

புதிய நிலைமைகளும்

என்று ஒரு நொண்டிச் சமாதானத்தை - சப்பைக்கட்டை கட்டுரையாக்கித் தந்திருக் கிறார்.

நீங்கள் (தி.மு.க.)

பா.ஜ.க.வுடன்

சேரவில்லையா?

என்று கேட்டு - தங்களது அரசியல் சந்தர்ப்ப வாதத்துக்கு திரைபோட்டு மூடிவிட முயலுகிறார் வரதராசன்.

பா.ஜ.க.வோடு தி.மு.க. கூட்டு சேர்ந்தபோது - இப்போது வரதராஜன் பக்கத்திலே அமர்ந்து

அம்மா சகஸ்ரநாமம் - ஸ்தோத்திரம் பாடிக்கொண்டிருக்கிறாரே வைகோ;

அவரது ம.தி.மு.க.வும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த கட்சிதான்!

நீங்கள் (ம.தி.மு.க.)

பா.ஜ.க.வுடன்

கூட்டு சேர்ந்த

கட்சிதானே

என்று அவரிடம் கேட்டுப்பார்க்கலாமே!

"நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்த போது- பா.ஜ.க.வின் உயிர்க்கொள்கையான இந்துத்துவா சார்ந்த

ராமர்கோவிலை

பாபர்மசூதி

இடிக்கப்பட்ட இடத்தில்

கட்ட எந்தவித

நடவடிக்கையிலும்

ஈடுபடமாட்டோம்.

எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்ற முயலமாட்டோம் - என்பன போன்ற நிபந்தனைகள் அடங்கிய ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து - அதனை பா.ஜ.க.வினர் ஏற்றுக்கொண்ட பிறகே - பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்தோம் - என்று வைகோ உங்களுக்கு பதில் சொல்வார்!

அதுபோல

இன்று அராஜகி ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நீங்கள் "2001 -2006 அராஜக ஆட்சியில் நடத்தியது போன்ற விவசாயிகள் விரோத - தொழிலாளர் விரோத - மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் 2011 தேர்தலில் ஜெயித்தால்" - என்று ஜெயலலிதாவிடம் வாக்குறுதி பெற்றீர்களா?

அட; அது 2011 தேர்தல் தொடர்பான

வாக்குறுதிதானே; அதற்கு இப்போது

என்ன அவசரம்?

என்று நீங்கள் பதில் சொல்ல முன்வரலாம்.

நாடாளுமன்றத்

தேர்தல் முடிந்த பிறகு

மத்தியில் பா.ஜ.க.

ஆட்சி அமைக்க

பா.ஜ.க.வுடன் கூட்டு

சேரமாட்டோம்

என்றாவது ஒரு நிபந்தனையை - ஜெய லலிதாவிடம் முன் வைத்து - அவர் அதனை ஒப்புக்கொண்டு உறுதிமொழி கொடுத்த பின்னரே - ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தோம்

- என்றாவது விளக்கமளிக்க உங்களால் முடியுமா? வரதராசன் பதிலளிப்பார் என்று நம்பலாம்!

*****************************

எதையும் எடுத்தென் கவிழ்த்தேன் என்று பார்க்காமல் ஆராய்ந்து விமர்சிக்கவும் ராஜா.

நன்றி.

ராஜரத்தினம் said...

ஐயோ,
எதற்கு இத்தனை பெரிய விளக்கம். நான் சொல்வது உன்னுடைய கருணாநிதியும் இப்படித்தான் பண்டரங்கள் என்றார். பின்பு அவர்களுடனே கூடி கும்மியடிக்கவில்லையா? உனக்கு இது புரியாது.

வின்னர் said...

அரசியலில் எல்ல கழுத்தையும் ஒன்னு போலதான் . சமூக நீதி காத வீராங்கனை ஜெயலலிதா என்று பட்டம் கொடுத்தார் கீ . வீரமணி. தமிழனுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்து கொண்டிருக்கிற கலைஞருக்கு என்ன தகுதி இருக்கிறது கம்யுனிஸ்டுகளை விமர்சிக்க .

Adriean said...

புலிகளையும் ஈழ பிரிவினையையும் அங்கீகரித்தால் பாஜகவை தேர்தலில் ஆதரிக்க போவதாக பல பகுத்தறிவாளர்கள் கூறியுள்ளனர் தங்கள் நிலை என்ன?

தமிழ் ஓவியா said...

//. நான் சொல்வது உன்னுடைய கருணாநிதியும் இப்படித்தான் பண்டரங்கள் என்றார். பின்பு அவர்களுடனே கூடி கும்மியடிக்கவில்லையா? உனக்கு இது புரியாது.//

யாருங்க இல்லையின்னு சொன்னா? அரசியல்வாதிகள் குறந்தபட்சம் நாகரிகமாக விமர்சிக்கவேண்டும் என்ற அடிப்படை உணர்வே இல்லாமல் கண்டபடி விமர்சித்து, பின்பு கூட்டணி என்று சொல்லிக் கொண்டு நிற்கும் போது அதெல்லாம் தெரியாதா? என்ற ஆதங்கத்தில் போட்ட பதிவு என்பதை முன்பு சுட்டிக் காட்டிய பின்னூட்டத்திலேயே தெரிவித்துள்ளேன்.

அதோடு நிதானமாக ஆராய்ந்து விமர்சிக்கவும் என்றுசொல்லியிருந்தேன். எதையும் பொருட் படுத்தாமல் அந்த அரசியல்வாதிகளையே தோற்கடிக்குது உங்கள் விமர்சனம்.

விமர்சிக்கும் போது நிதானமாகவும் உண்மைத்தன்மையுடனும் விமர்சிக்க வேண்டுகிறேன்.

தமிழ் ஓவியா said...

//Chandran கூறியது...

புலிகளையும் ஈழ பிரிவினையையும் அங்கீகரித்தால் பாஜகவை தேர்தலில் ஆதரிக்க போவதாக பல பகுத்தறிவாளர்கள் கூறியுள்ளனர் தங்கள் நிலை என்ன?//

பார்ப்பனர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள் என்பதே எனது நிலை. வேண்டுகோள்.

ராஜரத்தினம் said...

அந்த குறைந்தபட்ச நாகரீகம் என்பது பற்றி உங்கள் அளவுகோள் நிச்சயம் கருணாநிதி விமர்சனம் செய்ததை நியாயப்படுத்தும் அளவுக்கு தானே?

அன்பு said...

// Raja கூறியது...

அந்த குறைந்தபட்ச நாகரீகம் என்பது பற்றி உங்கள் அளவுகோள் நிச்சயம் கருணாநிதி விமர்சனம் செய்ததை நியாயப்படுத்தும் அளவுக்கு தானே?//

அவரை விடுங்கள் நீங்களாவது அந்த அளவுகோலை சொல்லுங்களேன்