Search This Blog
2.1.09
ஒரிசாவில் கிறிஸ்துவர்கள் மீது வன்முறை
ஒரிசா கலவரமும் - தகவல்களும்!
ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் 2008 செப்டம்பரில் திட்டமிட்டு ஏவிவிடப்பட்ட மதக்கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அரசு தரும் புள்ளி விவரம் 39 பேர் பலி என்று கூறப்பட்டாலும், உண்மையில் இதைவிட பன்மடங்கு அதிகம்தான். படுகாயமடைந்தோர் 16 ஆயிரம் பேர்கள் என்பதெல்லாம் குருதியை உறையச் செய்யக்கூடியதாகும்.
விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சாமியாரும், இரு சீடர்களும் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிறிஸ்துவர்கள்மீது இந்த வன்முறை ஏவப்பட்டது.
சாமியார் படுகொலைக்கு மாவோயிஸ்ட்டுகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டாலும், இல்லை, இல்லை - இதைச் செய்தது கிறிஸ்துவ அமைப்புகள்தான்! என்று வீண் பழி சுமத்தி, இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி, ஏற்கெனவே வாய்ப்புக் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கிடந்த கும்பல்போல கிறித்துவர்கள்மீது, அவர்களின் சர்ச்சுகள்மீது வன்முறைத் தாக்குதல்கள் என்ற வெறியாட்டம் போட்டனர்.
நீரோடையின் மேட்டுப்பகுதியிலே நீர் குடித்துக் கொண்டிருந்த ஓநாய், கீழ்ப் பகுதியில் தண்ணீர்க் குடித்துக் கொண்டிருந்த ஆடு, தண்ணீரைக் கலக்கியதாகக் குற்றஞ்சாட்டி, ஆட்டை அடித்துக் கொன்று ருசி பார்த்த ஓநாய்க் கதையாகத்தான் இதனைக் கருதவேண்டும்.
அம்மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தான் முதன்மையானது. அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டதுதான் பாரதீய ஜனதா கட்சி. ஆனாலும், இரண்டாவது இடத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வே முழு அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி, வன்முறைக் கும்பலைத் திரட்டி, முன்பு குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் நடைபெற்ற பாணியில் கிறித்துவர்களை, அவர்களின் அடையாளங்களைக் குறி வைத்துத் தாக்கினர்; துவம்சம் செய்தனர். பல வாரங்கள் தொடர்ந்து இந்த மதக்கலவரம் நடந்தாலும், அந்தத் தீயை அணைக்க மாநில அரசு முனையவில்லை. மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்க முன்வரவில்லை.
21 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா சஞ்சரிக்கிறதா என்ற கேள்விதான் எழுந்தது - எழுகிறது. குஜராத், ஒரிசா மதக் கலவரங்களை நேரில் அறிந்த பிறகு இந்தக் கலவரத்திற்குக் காரணமான சங் பரிவார்க் கும்பல், அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. - இவை இயக்கம் நடத்த, தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது மக்கள் தங்களுக்குத் தாங்களே வெடிகுண்டு வைத்துக்கொள்வதற்குச் சமமாகும்.
ஜனநாயகம் என்ற பெயரால் பலாத்காரத்துக்கு வெண் சாமரம் வீசுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை வெகுமக்களும் நிருவாகத் துறையும், நீதித்துறையும் எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளன.
ஒரிசா கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் என்றும், குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் 12 ஆயிரம் பேர் என்றும் ஒரிசா காவல்துறை கூறுகிறது. ஒரு லட்சம் பேர்களை எப்படி விசாரிப்பது, குற்றப்பத்திரிகை தயாரிப்பது, சிறையில் அடைப்பது என்று தெரியவில்லை என்று காவல்துறை கூறுவதுதான் வேடிக்கை.
ஒரிசாவின் காவல்துறை நினைத்திருந்தால் அந்தக் கலவரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். கலவரக் காட்சிகளை நேரில் பார்த்தபோதுகூட, அதனை ஒடுக்க முன்வராத காவல்துறை அது. காவல்துறையினரின் முன்னாலேயே ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதும், அந்தப் பெண் எவ்வளவோ மன்றாடிக் கேட்டுக்கொண்டும் காவல்துறையினர் உதவிக்கு வரவில்லை என்பதும், வெட்கித் தலைகுனியக் கூடிய ஒன்றாகும். கிறிஸ்துவப் பெண் என்று கருதி இந்துப் பெண்ணை சங் பரிவார் காலிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர் என்றால், மதவெறி எந்த அளவுக்கு மண்டைக்குள் திணிக்கப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
குஜராத்தில் முசுலிம்களுக்கு எதிராக வன்முறையை ஏவி ஆயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்து அவர்களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் அடித்து நொறுக்கி, தீயிட்டுப் பொசுக்கி நரவேட்டையாடினர். இதன்மூலம் இந்துக்கள், முசுலிம்கள் என்று பிரிவினை செய்து, பெரும்பாலான இந்துக் களுக்குப் பிரதிநிதிகள் பாரதீய ஜனதாவும், சங் பரிவார்களும்தான் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கி, அதனை வாக்கு வங்கியாக உருமாற்றி தேர்தலில் நரவேட்டை நாயகர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை அமைத்ததை முன்மாதிரியாகக் கொண்டுதான் ஒரிசாவில் மதக் கலவரத்துக்குக் கத்தித் தீட்டியுள்ளனர் என்பதுதான் உண்மை. இந்த நிலை அடுத்தடுத்த மாநிலங்களில் தொடரக்கூடும்.
எனவே, இதுகுறித்து சட்ட ரீதியாகவும், தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடும் செயல்படவேண்டியது 110 கோடி இந்திய மக்களின் அமைதியான - உத்தரவாதமுள்ள வாழ்வுக்கு அவசியம் - மிகமிக அவசியமாகும்.
------------------------நன்றி: "விடுதலை" 2-1-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அன்பரே காஷ்மீரில் இந்துக்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நடக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் எழதுங்கள். பெரியார் பக்தர்களே, நீங்கள் தான் மதம் என்பதும் இல்லை, கடவுள் என்பதும் இல்லவே இல்லை என்று கூறுகிறீர்களே, பிறகு ஏன் உங்களுக்கு கிறித்துவர்கள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் இவ்வளவு அக்கறை?
Post a Comment