Search This Blog

10.1.09

சிங்கள வெறியர்களும் ஆர்.எஸ்.எசும்பாசிஸ்டுகள் சிங்கள வெறியர்களாகவும் இருப்பார்கள்; ஆர்.எஸ்.எசாகவும் இருப்பார்கள் என்பதற்கு இரண்டு நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகளாக அமைந்துள்ளன.

சிங்கள அரசு வெறியரான மகிந்த ராஜபக்சேயையும் அவரது அரசையும் விமர்சனம் செய்து எழுதியதற்காக தி சண்டே லீடர் வார இதழின் ஆசிரியரான வசந்த விக்ரமசிங்க இலங்கையின் தலைநகரமான கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார் (8.1.2009)

அனுபவமும், துணிவும் உள்ள பத்திரிகையாளரான வசந்த விக்ரமசிங்க ராஜபக்சே செய்த ஓர் ஏற்பாட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

விடுதலைப்புலிகள் தாக்கினால், அதிலிருந்து தப்பித்து உயிர் பிழைக்க 50 கோடி ரூபாய் செலவில் தமது மாளிகைக்குள் பதுங்கு குழி ஒன்றை அமைத்துள்ளார் என்ற செய்தியை வெளியில் கொண்டு வந்த பத்திரிகை ஆசிரியர் இவர்.

பொய் வழக்குப் போட முயற்சிக்கப்பட்டது; கடும் எதிர்ப்பின் விளைவாக அது கைவிடப்பட்டது. 2008 நவம்பர் 21-ஆம் நாளன்று இந்த இதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே யிருந்தன. அவைபற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல், துணிவுடன் தன் பணியை கடமை உணர்வுடன் செய்து வந்தார். 8-ஆம் தேதி காலை - காரில் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்தபோது வழிமறித்துச் சுடப்பட்டார் என்ற செய்தி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

அதுபோலவே, சிங்கள வெறியரான ராஜபக்சே ஆட்சியைக் கடுமையாக விமர்சித்து வந்த தனியார் நிறுவனமான மகாராஜா தொலைக்காட்சி நிலையத்தை அதற்கு இரு நாள்களுக்கு முன் சூறையாடித் தீர்த்தனர்.

ராஜபக்சேக்காக வெண் சாமரசம் வீசும் இந்து ஏட்டின் ஆசிரியர் என். ராமும் துக்ளக்கின் ஆசிரியர் சோ. இராமசாமியும் இதற்கு என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டதற்கும், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடித்து நொறுக்கப்பட்டதற்கும், இந்த இரு பத்திரிகை ஆசிரியர்களும் கண்டித்து எழுத வேண்டும்; ஆனாலும் எழுத மாட்டார்கள் என்பதை அவர்கள் நடந்து கொண்டு வருகிற முறைகளைப் பார்த்தாலே விளங்கும்.

அடுத்துவரும் தேர்தலை மனதிற்கொண்டுதான் ராஜபக்சே விடுதலைப்புலிகள் ஒழிப்பு என்ற பெயரில் ஈழத் தமிழர்களைக் கொன்று தீர்த்துக் கொண்டுள்ளார் என்று இந்த ஊடகங்கள் தெரிவித்தன என்கிற ஆத்திரமும் ராஜபக்சேயை இவ்வாறு செயல்பட வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இலங்கையில் இது ஒன்றும் புதிதல்ல; இதற்கு முன்புகூட வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கூடத் தீர்த்துக் கட்டப்பட்டுள்ளனர் என்பது நினைவூட்டத் தக்கதாகும்.

இலங்கையில் இந்த நிலை என்றால் பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

கருநாடக மாநிலத்தில் கரவலி அலே என்ற நாளிதழின் தலைமை ஆசிரியர் பி.வி.சீதாராம் இருந்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரத்தின் முகத்திரையைக் கிழித்து கட்டுரைகளைத் தீட்டி வந்தார் என்பதற்காக இவர்மீது இரு ஆண்டுகளுக்கு முன்பாக அவதூறு வழக்குத் தொடரப்பட்டது; இரண்டாண்டுகளுக்குப் பிறகு அந்தப் பத்திரிகை ஆசிரியரை கைது செய்ததுடன், கை விலங்கு போட்டு சாலைகளில் இழுத்து வந்தனராம்! நீதிமன்றத்திலும் கை விலங்கோடு நிறுத்தப்பட்டுள்ளார் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

கைதிகளுக்குக் கைவிலங்கு போடக் கூடாது என்ற உத்தரவு இருந்தும் ஒரு பத்திரிகை ஆசிரியரைக் கை விலங்கு போட்டு சாலைகளில் இழுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் நீதிமன்றத் திலேயே நிறுத்தப்பட்டுள்ளாரே - அதனை நீதிமன்றம் எப்படி அனுமதித்தது? என்று தெரியவில்லை. நீதிமன்றம் உட்பட காவி களின் தாக்கம் உள்ளது போலும்!

பா.ஜ.க., சங்பரிவாரை பொறுத்தும் இந்த நிகழ்வுகள் வியப்பைத் தராது. பத்திரிகையாளர்களை - கேலிப் படம் தீட்டும் ஓவியர் களையெல்லாம் கொன்று தீர்த்த கும்பல் தான் இந்தப் பரிவார்.


சிங்கள வெறியர்களாகவிருந்தாலும் சரி. சங்பரிவார்கள் கும்பலாகவிருந்தாலும் சரி - அவை இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். அடிப்படையில் ஆதிக்க இன வெறியர்கள் தாம்.

வெட்கம் கெட்ட பார்ப்பன ஊடகங்கள் கொஞ்சம்கூட வெட்கமின்றி இவர்களைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன என்றால், அவற்றின் தன்மைகளைப் பொது மக்கள் எடை போட்டு அறிய வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

--------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 10-1-2009

0 comments: