Search This Blog

31.1.09

தந்தைபெரியாரின் ஆசிரியர் யார்?





தந்தை பெரியார் என்றால் சிந்தனை: சிந்தனை என்றால் தந்தை பெரியார் எனலாம். எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும். சிந்தனை இருந்தால்தான் உண்மையை விளக்க முடியும் என்கிறார் பெரியார். சாக்ரடீஸ் உண்மை அறிவது ஒன்றே என் விருப்பம் என்கிறார். பள்ளியில் படித்து தெளிவு பெறுகிறவர்களின் அறிவைவிட சிந்தனையில் ஈடுபட்டு தெளிவு பெறுகிறவர்களின் அறிவு சிறந்து விளங்குகின்றது. முன்னது சுருக்கமானது; பின்னது எல்லையற்றது என்று மௌலானா ரூமி குறிப்பிட்டுள்ளார். அறிஞர் வ.ரா.வோ யோசிப்பது குரு இல்லா வித்தை என்கிறார்.

பெரியார் நாளும் சிந்தனை வயப்பட்டவராகவே இருப்பார் என்பதை அவரது முகபாவங்களே காட்டி நிற்கும். பெரியார் கூட்டத்தில் பேசும்போதும் மற்றவர்களுடன் உரையாடும் பொழுதும் விவாதிக்கும்போதும் அந்தத் தாமரை முகத்தில்தான் எத்தனை பாவங்கள்; எத்தனை நளினங்கள்.

பெரியாருக்கு அழகான உருண்டை முகம். ஒரு தனியான முகவெட்டு, என்னவோ ஒரு விதமான கவர்ச்சி என்கிறார் பேராசிரியர் சாமி. சிதம்பரனார்.

முகத்தின் தோற்றம் பேச்சைவிட வன்மை மிக்கது என்றும், ஒளியும், பொலிவும் பெற்ற முகமே ஒரு நற்செய்த என்கிறார் பாரசீகப் பெருங்கவிஞர் சஅதி.

பெரியாரின் வாழ்க்கையே பயணத்தில் தொடங்கி, பயணத்திலேயே முடிவடைந்தது. அதனால்தான் முதல்வர் டாக்டர் கலைஞர், பெரியார் தம் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார் என்று தம் இரங்கல் உரையில் மிக சுருக்கமாகக் குறிப்பிட்டார்.

பெரியார் பயணங்கள் பலவும் தொலைதூர நெடும் பயணமாகவே அமைந்துவிடும். ஒரு சிலவே குறுகிய பயணங்களாக இருக்கும். அப்பயண காலங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வருவார்.

அச்சிந்தனை பகலில் கரு, உரு கொண்டு பின் இரவுக்குப்பின் கிழக்கே வெள்ளி முளைக்கும் நேரத்தில் பிரசவிப்பார்; கட்டுத்தாள் பெரிய பேனாவால் கரகரவென எழுதிக் குவித்து விடுவார். எழுதும் தாள்களில் எண்மட்டும் குறித்திருக்க மாட்டார். அது அவரது உதவியாளர்களுக்கே பரிச்சயமாகும்.

அவர் எழுதிய அறிக்கைகளோ அல்லது ஆய்வுக் கட்டுரைகளோ ஒரு கட்டுக்கோப்பை பெற்றிருக்கும் இப்படி உயிரோட்டமாகவும், நடைமுறையாகவும் எழுதுபவர்கள் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை எனலாம்.


எதையும் பெரியார் நிர்வாணக் கண்களால் நிர்வாணமாகப் பார்த்துப் பச்சை மொழியில் பேசி எழுதுகிற பழக்கமுடையவன் என்கிறார். இதை அவரது பேச்சிலும், எழுத்-திலும் கண்டு வியக்கலாம்.

இவ்வாறெல்லாம் பேசியும், எழுதியும் மறுமலர்ச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய பெரியாருக்கு குரு, ஆசிரியர் இருந்திருக்க வேண்டாமா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பெரியாரே, என் பகுத்தறிவே என் குரு, என் வழிகாட்டி, என் செல்வம் என்கிறார்.


---------------------- சு.ஒளிச்செங்கோ அவர்கள் "உண்மை" ஜனவரி 1-15 2009 இதழில் எழுதியது.

0 comments: