Search This Blog

12.1.09

அக்கிரஹாரமும் பஞ்சமர்களும்...
காங்கேயம்

அய்யா - இவ்வூர்ப் பிராமணர்கள் நமது பஞ்சம சகோதரர்களுக்குச் செய்யுங் கொடுமை நாம் அளவிட்டுக் கூற முடியாததாயிருக்கிறது. பஞ்சமர்கள் அக்கிரஹாரத்துக்குள் செல்லக் கூடாதென்று அநேக ஆண்டுகளாய் இவர்கள் கட்டுப்பாடு செய்து கொண்டிருப்பதாய் தெரிய வருகிறது. ஆயினும் பிரதி வருஷத்திலும் புரட்டாசி மாதத்தில் இவ்விடம் நடைபெறும் ரதோற்சவ தினத்தன்று மாத்திரம் பஞ்மசர்கள் தங்கள் தெருவின் வழியாய்ச் செல்லலாமென்று ஓர் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்தோ இவர்களின் மதியிருந்தவாறு என்னே!

அத்திருவிழா தினத்தன்று மாத்திரம் எல்லோரும் ஒருவர்க்மேலொருவர் முட்டிக் கொள்ளலாம். தங்கள் வீட்டு வாசல்களின் மேல் நடக்கலாம். அன்று மாத்திரம் அவர்களிடத்திலிருக்கும் தீட்டு இவர்களைத் தொந்திரவு செய்வதில்லையாம்.


படைத்தற்றொழிலையுடைய பிரம்மா மனிதர்களைப் படைக்கும்போதே ஜாதி வித்தியாசத்தை உண்டு பண்ணிப் படைக்கின்றாரா! அப்படியாயின் பிரம்மா தனது முகத்திலிருந்த உற்பவித்ததாகச் சொல்லும் பிராமணரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அவர் பஞ்சமர்களைப் படைக்காது விட்டு விடுவதுதானே, அல்லது பஞ்சமர்களை படைக்க வேறொரு பிரம்மா இருக்கின்றரா என்ற சந்தேகம் எனக்கு உற்பவிக்கின்றது. (இந்த பிராம்மணர்கள்) கடவுள் எம்மதஸ்தினருக்கும் பொதுவானவர்; அவர் எல்லோரையும் பாரபக்ஷமின்றி நடத்துபவர் என்னும் விஷயத்தை அறிந்து கொள்வதற்காகவே தோற்சவ தினத்தன்று நமது பஞ்சம சகோதரர்களையும் சகல தெருக்களிலும் அழைத்துச் செல்லுகின்றார். இதை இன்னும் பிராமணர்கள் தெரிந்து பஞ்சமர்களிடமிருக்கும் துவேஷத்தை நீக்காமலிருப்பது மிகுந்த ஆச்சரியமே,

தவிர சென்ற ஒரு மாதத்திற்குமுன் புதூர்பட்டக்காரர் அவர்கள் விவாகம் முடிந்தபின் காங்கேயத்தில் ஊர்வலம் வர உத்தேசித்து, அநேக பஞ்சமர்களுடன் அக்கிரஹாரத்தின் வழியாய்ப் போகும்போது பிராமணர்கள் ஒன்றுமே பேசவில்லை.

இம்மாதிரி பெரிய மனுஷகளுடன் போனால் அவர்களைக் கேட்பவர் ஒருவருமில்லை. இது விஷயத்திலேயே இவர்களுடைய கட்டுப்பாடு மிகுதியும் பிரபலித்திருப்பதை நேயர்கள் அறிவார்களாக. தவிர கூலி ஜீவனம் செய்யக் கூடியவர்களும் விறகு முதலானவை வெட்டி ஜீவனம் செய்யக் கூடியவர்களுமாகிய பஞ்சமர்கள் அக்கிரஹாரத்தின் வழியாய் போனால் இரண்டு காசு சேர்ந்து வரும் என்று எண்ணிச் செல்ல இடமில்லை. இது போன்ற இன்னும் அநேக இடைஞ்சல்களையும் பார்ப்பனரால் அடையும் நமது பஞ்சம சகோதரர்கள் சமத்துவம் அடைய வேண்டிய காலம் கிட்டி விட்டதென நான் உறுதியாய்ச் சொல்லுவேன்

பிராமணரல்லாதாராகிய நமக்குள் ஜாதி வேற்றுமை அகல வேண்டுமென்றும் எல்லோரும் எம்மதமும் சம்மதம் என்று கருத வேண்டுமென்றும் நமக்கு நற்புத்தி புகட்ட முன் வந்திருக்கும் கனம் டி.எம். நாயர் அவர்களுக்கும் மிஸ்டர் ராவ் பஹதூர் பி. தியாகராய செட்டியாரவர்களுக்கும் நான் எனது ஹிருதய பூர்வமான நன்றியறிதலை மிகுந்த குதூகலத்துடன் செலுத்துகின்றேன். என்பது மறுக்க முடியாததோர் விஷயமாகும். தவிர ஆங்கிலேய அரசாட்சியிலேயே பிராமணர்களின் கொள்கை இவ்வாறிருக்க சுய ஆட்சி அடைந்தபின் பஞ்சமர் எங்கிருந்து அக்கிராஹாரத்திற்குள் செல்ல முடியும்? என்பதை கொஞ்சமும் கவனிக்காத நமது திராவிடர்கள் சிலர் காங்கேயம் சுய ஆட்சி சங்கத்தில் சேர்ந்திருப்பது எனக்கு மிகுதியும் வியசனத்தை உணர பண்ணுகிறது. காங்கேயம் திராவிடச் சகோதரர்களே! இனியாவது நீங்கள் ஒற்றுமை பாராட்டி நமது முன்னேற்றத்திற்கு வேண்டிய காரணங்களையும் நீங்காத இராஜ பக்தியையும் கைக் கொள்ளுங்கள். ஹோமரூல் புலிகளுக்கு இரையாகாதீர்கள். எச்சரிக்கை! எச்சரிக்கை!


ஓர் திராவிடன்

------------------------------"திராவிடன்" 10.10.191

0 comments: