Search This Blog

8.1.09

இலங்கை இனப்படுகொலைக்கு என்றுதான் முடிவு? 33 நாள்கள் ஓடியும் பிரதமர் கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று?


தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து குவியும் தமிழர்களின் கண்ணீர்ப் பேட்டி
இனப்படுகொலைக்கு என்றுதான் முடிவு?
33 நாள்கள் ஓடியும் பிரதமர் கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று?
தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்ற நினைப்பா?
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள இரத்தக் கண்ணீர் சிந்தும் அறிக்கை


ஈழத்தில் மூன்று லட்சம் தமிழர்கள் இன்னும் காடுகளில் பாம்புக் கடிகளுக்கும் இயற்கைத் தொல்லைகளுக்கும் ஆளாகி அவதிப் படும் நிலையில், இனப்படுகொலையை அங்கு தொடர்ந்து ராஜபக்சேயின் சிங்கள வெறி அரசு நடத்திக் கொண்டிருக்கையில், 33 நாள்களுக்கு முன் பிரதமர் மன்மோகன்சிங் கொடுத்த வாக்கினை - உறுதிமொழியை இதுவரை காப்பாற்றவில்லையே - ஏன்? தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்ற நினைப்பா? என்ற வினாவைத் தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம் என்றும் அவ்வறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

நேற்று (7.1.2009) இரவு 7 மணி செய்தியை கலைஞர் தொலைக் காட்சியில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நெஞ்சம் வடிக்கும் இரத்தக் கண்ணீர்!

ஈழத் தமிழர்கள், புலம் பெயர்ந்து அகதிகளாக தனுஷ்கோடி பகுதிக்கு படகுகளில் தப்பிவந்த தமிழ்க் குடும்பத்துச் சகோதர சகோதரிகளிடம் நேர்காணல் நடத்திய செய்தியை - கடற்கரையில் காவல்துறையிடம் பதிவு செய்து கொண்டு - அவர்கள் கண்ணீரும் கம்பலையுமாகச் சொன்ன செய்தியைக் கேட்டு உள்ளம் வெடித்து விடுவது போல் இருந்தது; இதயத்தின் அழுகையால் கசிந்தது இரத்தக்கண்ணீர். கிளிநொச்சியிலிருந்து தப்பி, முல்லைத் தீவின் காடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்திய அரசு காப்பாற்றும் என்ற எதிர்ப்பார்ப்பில்...

அவர்களில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உட்பட பலரும் அடிக்கடி பாம்புக்கடிக்கு ஆளாகி மரணமடைகிறார்கள்; அதிலிருந்து காப்பாற்ற எந்த விஷக்கடி மருந்தும் இல்லை; வானம் தான் இயற்கை அருளிய அவர்களது கூரைகள். எப்படியாவது இந்தப் போரை நிறுத்தி, அழிந்து வரும் எம் தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசு முன்வரும் என்ற எதிர்பார்ப்போடுதான் இருக்கிறோம் என்று வழியும் கண்ணீருடன் சொன்னதைக் கேட்டு எம்மினம் நித்தம் நித்தம் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறதே என்று வேதனைப்படுகிறோம்.

எத்தனை எத்தனை நடவடிக்கைகள்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு கலைஞரும், மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவாவதற்கு முழு முதற் காரணமான 40 இடங்களைப் பெற்றுத் தந்தவரும், மூத்த அரசியல் ஞானியுமான முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தீர்மானம்; கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி; சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் உட்பட ஏகமனதாக நிறைவேற்றிய ஒருமனதான தீர்மானம்; தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரில் சந்தித்து போர் நிறுத்த வற்புறுத்தல் (டிசம்பர் 2).

முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் நேரில் மனு, விளக்கம் முறையிடல், வேண்டுகோள் விண்ணப்பம் (டிசம்பர் 3).
அதை ஏற்று வெளி உறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி, போர் நிறுத்தம் பற்றி அதிபர் இராஜபக்சேயிடம் வற்புறுத்த பிரதமரின் ஒப்புதல் என்று தொடர் நிகழ்வுகள் நடந்துள்ளன.

இனப்படுகொலை தொடர்ந்து நடக்கிறதே!

மேலும், ஒரு கப்பலில் அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள், மருந்துகள் ஓரளவுக்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டன என்ற சிறு நிம்மதி ஒருபுறமிருந்தாலும்,
தீவிரவாதிகளான புலிகளை அழிக்கிறோம் என்ற சாக்கில் குண்டு மழையை சிவிலியன் தமிழர்கள் மீது போட்டு, சிங்கள அரசு தொடர்ந்து நடத்தும் தங்கு தடையற்ற தமிழர் இனப் படுகொலை, இடையில் இங்குள்ள சில சிங்கள முகவர் ஏடுகளின் மனித நேயப் பாசாங்கு நாடகம் இவைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன!

தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதைக்குச் சவால்!

தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விடப்படும் சவாலா? தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள்; அவர்களைப் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற மத்திய அரசின் அலட்சியமா?

அடையாளம் தெரியாதவர்களுக்கு வழியில் ஆபத்து ஏற்பட்டால் கூட, உடனே ஓடி உதவிடும் அந்த மனிதநேய உணர்வுகூட மத்திய அரசுக்கு தமிழர்களின் வாக்குகளால் சிம்மாசனங்களில் உள்ளவர்களுக்கு இல்லையே! வேதனை, வேதனை!

இதுபற்றி எவர் பழிக்கும் அஞ்சாமல் நமது உணர்வுகளை அணை உடைந்த வெள்ளமாய் உணர்த்திட வேண்டாமா?

முன்பு ஜாதி மதங்களால் இன எதிரிகள் நம்மைப் பிரித்தாண்டார்கள்.

இது புலிகளின் பிரச்சினையல்ல!

இப்போது கட்சி, அரசியல் அணிகளால் அதையே செய்து மகிழ்கிறார்கள்.
இது ஏதோ புலிகள் பிரச்சினை அல்ல. அவர்களுக்கான வேண்டு கோளும் அல்ல. உலகின் பல நாடுகளிலும் அகதிகளாகி விட்ட பிறகு, எஞ்சிய ஈழத்தமிழர் சொந்த மண்ணில் வாழ்வுரிமைக்குப் போராடு கிறார்களே, அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சினை!

33 நாள்கள் ஓடியும் பிரதமரின் உறுதிமொழி எங்கே?

ஈவு இரக்கமே இல்லையே! எத்தனை நாள்கள் ஓடிவிட்டன? உறுதிமொழி தந்து 33 நாள்கள் ஓடிவிட்டனவே, பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்து விட்டதா? கடும் விலையைப் பெறுவது காலத்தின் கட்டாயமாக ஆகிவிடக் கூடாது என்பதுதான் - மத்திய அரசினை ஆதரிப்பதில் உறுதிகாட்டி மதவாதச் சக்திகளுக்கு எதிராக நிற்கும் எம்மைப் போன்றவர்களின் கேள்வியாகும்.

விடை கிடைக்குமா? விடிவு வருமா? அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா அம்மையாருக்கு எமது வேண்டுகோள்.

ஒத்த கருத்துள்ளவர்கள் ஓரணியில் திரண்டு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்க ஒன்றுபடுவோம். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும்

-------------------"விடுதலை" 8-1-2009

0 comments: