Search This Blog
6.1.09
கதர் கட்டாதவன் - தேசத் துரோகியா?
சுதேசி
மக்களுக்கு ஓர் எழுச்சியையோ, உற்சாகத்தையோ, ஆத்திரத்தையோ உண்டாக்கி விட்டுவிட்டு, அவர்களுக்குத் தகுந்த வேலை கொடுத்துக் கொண்டிருக்காவிட்டால் அது தாறுமாறாகக் கண்ட கண்ட பக்கங்களில் எல்லாம் போய் முட்டச் செய்யும் என்பது இயற்கையேயாகும். நம்மைப் பொறுத்தவரை - சுயமரியாதை இயக்கத்திற்கும் அரசியல் சம்பந்தமான கிளர்ச்சிக்கும் மத்தியில் சரியான தடைச் சுவர் இருக்க வேண்டும் என்பது நம் முடிவான அபிப்பிராயமாகும்.
நாம் இப்படிச் சொல்லுவதாலேயே இன்றைய அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொண்டு அதனிடம் வாலாட்டிக் கொண்டு அடிமையாய் இருக்க வேண்டுமென்று நாம் சொல்ல வரவில்லை. நம்மைப் பொறுத்தவரை, திரு.எஸ். இராமநாதன் - அவர்களை வைத்துக் கொண்டே நாம் திரு. காந்தியவர்களிடம் 1927-ஆம் ஆண்டிலேயே - இந்தியா விடுதலையடைய வேண்டுமானால், சுயமரியாதை அடைய வேண்டுமானால் - இந்து மதமும் காங்கிரசும் ஒழிந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தவர்களாவோம்.
அந்த நிமிடமே 20 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த திரு.ராஜ-கோபாலாச்சாரியாரிடமும் சொல்லிவிட்டே வாசல் கடந்தோம்; அது முதலே அந்தப் பிரச்சாரமும் செய்தோம். இந்த அபிப்பிராயம் 1920-இல் நடந்த கிளர்ச்சி அனுபவத்திலேயே ஏற்பட்டதாகும். இந்து மதம் என்பது அழிய வேண்டும் என்கின்ற அபிப்பிராயமும் நமக்குச் சுமார் 25, 30 வருஷத்திற்கு முன்னாலேயே ஏற்பட்டதாகும். 5,6 வருஷ காலமாகவே அரசியல் கிளர்ச்சியும், தியாகத்தின் பயனும் பாமர மக்களை -ஏழைகளை தொழிலாளிகளை - கூலிகளை நசுக்கிப் பிழியவே உபயோகிக்கப்படப் போகின்றன என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகம் இருந்ததில்லை.
இது போலவே சுதேசிப் பொருள், பரதேசிப் பொருள் என்பதிலும் உள்ள புரட்டுகளை நாம் அறிவதில்லை. சுதேசிப் பொருளை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது என்று பார்ப்போமானால், சுதேசிப் பொருளை ஆதரித்தால் தொழிலாளிக்குத் தொழில் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. அந்தப் பேச்சில் சிறிதுகூட நாணயம் இல்லவே இல்லை. ஏனெனில், இந்த நாட்டில் தொழிலாளிக்கு ஒருவிதப் பாதுகாப்பும் கிடையாது. பணக்காரர்கள் அடையும் இலாபத்திற்கோ அளவு கிடையாது. எவ்வளவு இலாபமடைந்தாலும் அது அவனது யோகமாய், அதிர்ஷ்டமாய்ப் போய் விடுகிறது. இன்ன இலாபத்திற்கு மேல் முதலாளி இலாபமடையக் கூடாது என்ற நிபந்தனையே கிடையாது. ஆனால், தொழிலாளி வயிற்றுக்குப் போதவில்லை என்று வேலை நிறுத்தம் செய்தால், கூலி போதாது என்று கேட்டால் அவனை சர்க்காரிடம் சொல்லித் துப்பாக்கியால் சுடச் செய்ய வேண்டியது, 10, 10 வருஷம் தண்டிக்க வேண்டியது; அவர்கள் வீடுகளில் நெருப்பு வைத்துக் கொளுத்த வேண்டியது ஆகிய காரியங்களே தொழிலாளிகளின் நிலை. இதற்குச் சமாதானம் அவர்களது தலை எழுத்து என்பதைத் தவிர வேறில்லை.
இந்த நிலையில் எதற்காகச் சுதேசிப் பொருளை ஆதரிப்பது, எதற்காக கள்ளுக் கடைமறியல் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் ஏழை மக்களுக்கு எது சுலபமோ அதை வாங்கிக் கொள்ள அனுமதி கொடுக்க வேண்டியதுதான் சமதர்மமாகும் என்பது நமது சொந்த அபிப்பிராயம்.
முதலாளி, தொழிலாளி நிலையை வரையறுத்த பிறகுதான், சுதேசிப் பொருள் பேச்சும் பிரச்சாரமும் பயன்படுமே தவிர இந்த நிலையில் ஒன்றும் பயன்படாது. முதலாளிகள் கொள்ளை அடிக்கத்தான் சுதேசிப் பிரச்சாரம் உதவும்.
இன்னும் உதாரணம் வேண்டுமானால் கதரை எடுத்துக் கொள்ளுவோம். கதர்ப் பிரச்சாரம் நாமே செய்தோம். கதர் கட்டாதவன் - தேசத் துரோகி; நரகத்துக்குப் போவான் என்றெல்லாம் சொன்னோம்; கதர்சாலை ஏற்படுத்தினோம்; ஏழைகளையும் பிச்சை எடுத்தாவது வயிற்றை வாயைக் கட்டியாவது கதர்கட்டும் படி பிரச்சாரம் செய்தோம். கதர் சம்பந்தமான அநேக காரியங்களுக்கு நாம் பொறுப்பாளி என்று சொல்லிக் கொள்ள நமக்குப் பல உரிமைகள் உண்டு. கடைசியாக என்ன பலன் ஏற்பட்டது? கோயம்புத்தூர் மால்மில்லின் நாலரை முழம் வேட்டி 4-க்கு ரூ.1-12-0-க்கு திரு. செங்கோட்டையா விற்கிறார்; ஆனால் நாலரை முழம் கதர்வேஷ்டி 2-க்கு 1-12-0-க்கு கொடுத்து சுதேசி கைத்தொழிலை ஆதரிக்க வாங்குகிறோம்.
அதாவது, 7 அணா வேட்டிக்கு, 14 அணா கொடுத்து வாங்குகின்றோம். இப்படிப்பட்ட இந்தநிலையை ஆதரிப்பதுதான் நம் சுதேசி கைத்தொழில் ஆதரிப்பு என்றால், கண்டிப்பாய் இந்த மாதிரி ஆதரிப்பு ஒழிந்துதான் ஆக வேண்டும். இந்தப்படிக்கு ஆதரிக்காவிட்டால், ஏழைகளுக்கு ஜீவனத்திற்கு மார்க்கமில்லை என்று சொல்வார்களேயானால், அப்படி வேலையில்லாமல் இருக்கும் ஆட்கள் பட்டினி கிடந்து, வேதனைப்பட்டு, பணக்காரர்கள்மீது பாய்ந்து - அவர்களது பணத்தை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு வேண்டுமானாலும் போய் உட்கார்ந்துகொண்டு, அங்கு ஏதோ தன்னாலான வேலையைச் செய்துவிட்டு ஜெயில் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருப்பது மெத்த நாணயமும் பொதுநல முயற்சியும் கொண்ட யோக்கியமான வேலையுமாகும்.
அந்தப்படிக்கு இல்லாமல் பம்பாய், ஆமதாபாத் மில் சொந்தக்காரர்கள் சுதேசிப் பிரச்சாரமும்; மாதம் 100, 200 வாங்கும் கதர் இலாக்காக்காரர்கள் கதர்ப் பிரச்சாரமும் செய்வதென்றால் இதில் என்ன நாணயம் இருக்கிறது? பெரிய பெரிய மிராசுதரர்கள் ஆயிரக்கணக்கில் ஏக்ரா பூமியை வைத்துக் கொண்டு, உழுகிறவனுக்கு உணவு கிடைக்காமல்படி நசுக்கிப் பிழிந்து 2-8-0 ரூபாய்க்கு ஒரு ஜதை கதர் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு, கனவான்களே! கதர் கட்டுங்கள், ஏழைகள் பிழைப்பார்கள் என்றால் அவர் பெரிய தோசபிமானிகளா, ஏழைப் பங்காளிகளா என்கிறோம்.
----------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" தலையங்கம் 7.12.1930
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment