Search This Blog
20.1.09
பார்ப்பனர்கள் வைக்கும் கண்ணி வெடியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் நொந்த உள்ளத்தை
வேதனைப்படுத்துகிறது மத்திய அரசின் போக்குகள்
கலைஞர் ஆட்சி இருப்பதால்தான் குறைந்தபட்சம்
தமிழர்கள் உரிமைக் குரலைக் கொடுக்க முடிகிறது
தமிழர்க்கான ஆட்சியைக் கவிழ்க்க
முயற்சிப்போருக்குத் துணை போகும் வகையில்
தோழமைக் கட்சிகளின் செயல்கள் அமைந்துவிடக் கூடாது
எதற்கு எவ்வளவு முன்னுரிமை என்பது முக்கியம்;
முன்யோசனையுடன் நடந்துகொள்வது தமிழர் கடன்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும், போராடும் உரிமை, தமிழர் ஆட்சியான கலைஞர் ஆட்சியில்தான் கிடைக்கிறது என்பதை மறந்துவிட்டு, தமிழர்க்கான ஆட்சியைக் கவிழ்க்கத் துடிக்கும் சக்திகளுக்குத் துணை போகும் வகையில் தோழமைக் கட்சிகளின் செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:
கொழுந்து விட்டெரியும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதுபற்றி தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும் - ஒரே ஒரு கட்சியைத் தவிர - கூறுகின்றனர்!
அந்த ஒரே கட்சி, அண்ணா பெயரை வைத்துக்கொண்டு அவரது லட்சியங்கள், கொள்கைகளுக்கு நேர் எதிராகச் செயல்படும் ஜெயலலிதாவின் கட்சியாகும்.
இல்லாவிட்டால் சிங்கள இராஜபக்சேகூட கூறத் துணியா வகையில், ஆணவத்தின் உச்சிக்குச் சென்று, அவ்வம்மையார், இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டும் என்று சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல என்று அங்கே கொல்லப்படும் தமிழர்களைப்பற்றி அவ்வளவு அலட்சியமாகப் பதில் சொல்வாரா? வெட்கம்! மகாவெட்கம்!!
பரம்பரை யுத்தத்தின் புதிய கட்டமா?
அதைப்பற்றிக் கவலைப்படாமல், அதற்கும் வாய் திறக்காமல், கைகட்டி அத்தகையவருக்குப் பின் செல்ல சில பல தமிழர்கள் கிடைத்துள்ளார்கள் என்ற நிலை இருப்பதால், சிங்கள இனம் தனது மூதாதையர்கள் இனம் என்று உணர்ந்தோ, இல்லையோ அவர்களது தமிழர் இனப் படுகொலையை, நியாயப்படுத்துவது - தான் அறிவித்த பரம்பரை யுத்தத்தின் புதிய கட்டம் என்று இந்த அம்மையார் கருதுகிறார் போலும்!
அதேநேரத்தில், சாதனைகளை நாளும் குவித்து, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, பகுத்தறிவு வழியில் பீடுநடைபோடும் கலைஞர் அரசை எப்படியாவது ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமைப் பிரச்சினையையே வைத்து, கவிழ்த்துவிட வேண்டும் என்றும் திட்டமிட்டு தினந்தினம் ஒரு அறிக்கை - போராட்டம் என்று செய்து கொண்டிருக்கிறார்.
திருமங்கலத்தைப் பெரிதாக எண்ணினார்; அம்மக்கள் அம்மா கட்சியை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேயே வைத்து, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்!
சோக்களின் துணை
தோல்வி ஜன்னியில் ஏதேதோ உளறுகிறார். இவரது துணைக்கு சோக்கள் நின்று அடியெடுத்துக் கொடுப்பதை இவர் படியெடுத்து அறிக்கை, பேட்டிகளாக்கி அற்ப ஆறுதலை வரவழைத்துக் கொள்கிறார். புதிய கூட்டுகளுக்கும் சேர்த்து திருமங்கலம் தொகுதி மக்கள் பூட்டுப் போட்டுவிட்டனர்!
எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை என்று தெரிந்துவிட்டது.
இந்நிலையில், சோர்வடைந்து தளர்ந்துவிட்ட அம்மையாரின் கட்சித் தொண்டர்களை மீண்டும் எழச்செய்ய, சூ, மந்திரக்காளி போல எதையோ கூறியிருக்கிறார்!
வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றியைப் பெற்றுவிட்டால் அதனை அடுத்து தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பதவி நீக்கம் செய்யவேண்டும்; அந்த லட்சியத்தை அடையும்வரை நாம் ஓயக் கூடாது என்று கூறி, வேப்பிலை அடித்து நிறுத்த முயற்சிக் கின்றார்.
ஓர் ஆட்சியைக் கவிழ்க்கவா
தேர்தலைச் சந்திப்பது?
ஒரு கட்சி நாடாளுமன்றத்தேர்தலில் ஈடுபடுவது எதற்காக? மக்களுக்கு நன்மை செய்ய அல்ல; நலத் திட்டங்களை நிறைவேற்ற அல்ல; மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில (தி.மு.க.) நல்லாட்சியைக் கலைக்கவேண்டும் என்ற வெறித்தனத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கா தேர்தலைச் சந்திப்பது?
பதவிச் சுகத்தை இழந்துவிட்டதால், பாவம் நிலை தடுமாறி நிற்கிறார், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர்!
தி.மு.க. ஆட்சியின் காலம் - மக்கள் தந்த தீர்ப்புப்படி - 2011 வரை உள்ளது! அதாவது மேலும் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கவேண்டியுள்ளது.
ஆட்சியை அந்த அம்மையார் எப்பாடுபட்டேனும், எவருடன் கூட்டுச்சேர்ந்தாவது கவிழ்த்துவிட, அவர் எல்லையற்ற ஆசையை, வெறியைத் தன்னுள் வளர்த்துக்கொண்டு, புதிய கூட்டணிக்கு மேலும் சிலர் வரமாட்டார்களா என்று கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டுள்ளார்!
மத்தியில் மதவெறி ஆட்சி வரவேண்டுமா?
இந்நிலையில், மத்தியில் ஒரு மதவெறி ஆட்சி மீண்டும் வந்து விடக் கூடாது.
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் உள்ள தனித்தமிழராட்சியும் தொடரவேண்டும் - எந்த எதிர்ப்பையும் முறியடிப்பது - என்பதுதான் இன உணர்வும், சமூக நீதிப் பார்வையும் உள்ள அனைத்துத் தரப்பினரது தெளிவான நிலையாக இருக்கவேண்டும்.
நொந்த உள்ளத்தை
மேலும் நோகடிக்கும் மத்திய ஆட்சி!
ஈழப் பிரச்சினையில் நமது சட்டமன்றத் தீர்மானம், மனிதச் சங்கிலி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்தித்து அவரிடம் ஒரு மனுவை அளித்து, பிரதமர் அவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி, போர் நிறுத்தம்பற்றி பேசச் சொல்வதாக அளித்த வாக்குறுதி செயல்படவில்லையே என்ற வேதனை (அதற்கு இங்குள்ள தமிழ்நாடு காங்கிரசும் உடன்பட்ட நிலையில்) அதுபற்றி இந்நாள் வரை எவ்வித விளக்கமோ, பதிலோ முதல்வருக்குக்கூட மத்திய அரசு அளிக்காமலிருப்பது, தமிழர்களின் நொந்த உள் ளத்தை மேலும் நோகடிக்கச் செய்வதாக உள்ளது!
இதை நேற்றுக்கூட நமது முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட ஒரு முக்கிய அறிக்கையில் தமது ஆதங்கமாக வெளியிட்டுள்ளார்கள்!
வேண்டாத விளைவுகளை
ஏற்படுத்தும் நடவடிக்கைகள்
அவ்வறிக்கையில், முதல்வர் அவர்கள் மிகவும் வேதனைப்பட்டு ஒத்தக் கருத்துள்ளவர்களாகிய நாமும், தன்னிச்சையாக, அவரவர் தனித்தனியே போராட்டங்களை அறிவிப்பது, அப்போராட்டங்களில் வன்முறை வெடிப்பது, அதனையும் எதிர்க்கட்சி அம்மையார் வழக்கம் போல் திசை திருப்பி, அறிக்கை விடுவது ஒருபுறம் இருப்பினும், ஆட்சிக்கு எதிராக சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப்பி அதனால் ஆட்சியை அகற்றிட கிளர்ச்சிகளை கட்டவிழ்க்க முயற் சிப்பது என்கிற விரும்பத்தகாத, வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் நிலைக்குச் செல்லலாமா? ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும், தமிழர்களின் கருத்துரிமைப் பிரச்சினையாக இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியின் கடந்தகால நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள் அறியாதவை அல்லவே!
உண்ணாவிரத மேடையிலேயே விளக்கினேன்!
கடந்த (ஜனவரி) 12 ஆம் தேதி நமது முதல்வரைப் பார்த்து மனு கொடுத்து, தாங்களே இதுபற்றி அடுத்த நடவடிக்கைக்கான வியூகத்தை வகுக்கவேண்டும்; நித்தம் நித்தம் செத்துக்கொண்டுள்ளது அங்கே தமிழர் இனம் என்பதைக் கூறினோம் - நாங்கள் மூவரும். (கி. வீரமணி, மருத்துவர் ச. இராமதாசு, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும்).
பிறகு உரிய அவகாசத்திற்குமுன், ஆர்வ மிகுதியால், சகோதரர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் (கால வரையறையற்றது) என்று தொடங்கியபோதே, இது நீடித்தால் அதன் விளைவாக நம் நோக்கத்தைத் தோற்கடித்து, திசை திருப்பிடும் ஆபத்து உள்ளது என்பதை, உண்ணாவிரத மேடையிலேயே சகோதரர் திருமாவளவன் அவர்களிடம் தெளிவுபடுத்தினேன்.
அதுமட்டுமல்ல, சிலர் உணர்ச்சியைக் காட்டுவதுபோல கூறிய கருத்துகளைத் தொடர்ந்து அம்மேடையிலேயே, இவ்வாட்சி (கலைஞர் ஆட்சி) நடப்பதால்தான் இந்த அளவுக்காவது குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தும் நிலை உள்ளது; எனவே, இதற்குத் தொல்லையாக நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்பதையும் விளக்கினேன்!
இன உணர்வும், மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட எவரும் தெளிவாக இருக்கவேண்டும்.
கலைஞர் ஆட்சியைக் கவிழ்க்க எண்ணுவோருக்குத்
துணை போகக்கூடாது
தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில் உள்ள ஆட்சியை, தெரிந்தோ தெரியாமலோ கவிழ்க்க முயற்சிப்போருக்கோ, எண்ணு வோருக்கோ அல்லது தமது சொந்த விருப்பு வெறுப்பு இவைகளால் தற்போது சுமுகமாக உள்ள தி.மு.க. - காங்கிரஸ் உறவிற்கு மாற்று தேட, அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக இருப்போம் என்று கூட்டணிக்குள்ளே குழப்பம் விளைவிக்க எண்ணுவோரின் எண்ணம் ஈடேறுவதற்கோ - நமது போராட்டங்களும், முயற்சிகளும் துணையாகிவிடக்கூடாது!
உண்மையான கூட்டணியின் கடமை
தி.மு.க.வைப் பொறுத்தவரை முதல்வர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளதுபோல, ஆட்சிக்காகவே வந்த இயக்கம் அல்ல; இரண்டு முறை ஈழப் பிரச்சினைக்காக ஆட்சியை - எவ்வித நியாயமும் இன்றி இழந்த வரலாற்றை உடைய கட்சிதான்; ஆனால், இன எதிரிகள் - பார்ப்பனர்கள் வைக்கும் கண்ணி வெடியில் சிக்கிக்கொண்டு, பார்ப்பன ஜாதி வெறி, மதவெறிக் கட்சிகளுக்கு நடை பாவாடை விரிக்கும் செயல்களில் ஆதரவு காட்டுவோர் ஈடுபடக்கூடாது!
பார்ப்பன ஊடகங்களின் வேலை
இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் சிலரை விளம்பரப்படுத்தியே உசுப்பிவிட்டு, அவர்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முயன்றால், அது ஒருபோதும் முடியாது என்பதைக் காட்டவேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு மட்டுமல்ல, உண்மையான தோழமையும், நல்லெண்ணமும் கொண்ட தோழமைக் கட்சிக் கூட்டணியினருக்கும் உண்டு!
கலைஞர் தலைமையில் உள்ள இவ்வாட்சி வெறும் ஆட்சிக்காக மட்டுமே உள்ள ஆட்சி அல்ல; இனத்தின் மீட்சிக்காகவும் உள்ள மக்கள் ஆட்சியாகும்!
தேவை - முன்யோசனை!
தமிழர் தம் வரலாற்றில் வாராது வந்த மாமணியாக செயற்கரிய செய்யும் ஆட்சி என்பதை நினைத்து, எதற்கு எவ்வளவு முன்னுரிமை என்பதையும் யோசித்து முன் யோசனையுடன் நடந்துகொள்வது தமிழர் கடன் ஆகும்.
கசப்பான கடமையாகவும் அது அமையலாம்.
----------------- "விடுதலை" -20.1.2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment