Search This Blog

23.1.09

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற பிரிவினை யாரிடமிருந்து உண்டாயிற்று?


சுயமரியாதைச் சங்க ஸ்தாபனம்

சகோதரர்களே!

இந்த எனது சுற்றுப் பிரயாணத்தின் நோக்கம் இன்னது என்பதை 'குடி அரசு' பத்திரிகையின் மூலம் ஏறக்குறைய ஒரு வருஷ காலமாக தெரியப்படுத்திக்கொண்டு வந்திருக்கிறேன். சென்ற வருஷம் காஞ்சீபுரத்தில் நடந்த தமிழ்நாடு அரசியல் மகாநாட்டிலிருந்தே நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நமக்கு ஒரு தனி இயக்கம் வேண்டும் என்பதாக பலமுறை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். அவற்றை நீங்கள் எல்லோரும் ஏகமனதாய் ஒப்புக் கொண்டதாலும் வரவேற்பதாய் தெரிவித்துக் கொண்டதாலும் என்னுடைய அபிப்பிராயம் முன்னிலும் அதிகமாகப் பலப்பட்டது. அதை உத்தேசித்தேதான் உங்கள் விருப்பத்திற்கிணங்கி வந்திருக்கிறேன். இச்சங்கத்தின் நோக்கங் களையும், கொள்கைகளையும் இதற்கு முன் இரண்டொரு சமயங்களில் இவ்விடம் எக்காலத்திலும் சுருக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றேன்.

இந்த தேசத்தில் 22 கோடி மக்களுக்கு மேலாக நாம் வெகு சொற்பமான எண்ணிக்கையுள்ளவர்களால் நாம் எவ்வித பொறுப்பாளிகளல்லாத பிறவி காரணமாய் எவ்வளவு இழிவாயும், தாழ்மையாயும் கருதப்பட்டு விலங்கு, பூச்சி, புழுக்களிலும் கேவலமாய் நடத்தப்படுகிறோம் என்பதை ஒவ்வொருவரும் அறிந்தே இருக்கிறோம். இதைப் போக்கிக் கொள்வதற்காக நமது முன்னோர்கள் ஆயிரக்கணக் கான வருஷங்களாக எவ்வளவோ முயற்சித்து வந்திருக்கிறார்கள்.

நமது இழிவையும் தாழ்வையும் நீக்கி நமக்கு சுயமரியாதையும் சமத்துவமும் அளிப்பதற்கென்றே கபிலர் ,புத்தர் , ராமானுஜர் போன்ற எவ்வளவோ பெரியார்கள் அவதாரமும் செய்து இதற்காகவே உயிரையும் விட்டார்கள். எவ்வளவு செய்தும் நமது இழிவினாலும் தாழ்மையினாலும் சுயமரியாதையில் லட்சியமின்மையினாலும் வாழ வேண்டிய இயற்கை நிலை படைத்த நமது எதிரிகள் (பார்ப்பனர்கள்) அவ்வப்போது அதற்குத் தகுந்த சூழ்ச்சிகள் செய்து நம்மில் சிலரையே தங்கள் ஆயுதமாகக் கொண்டு அம்முயற்சிகளையெல்லாம் அழித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். எவ்வளவு அழித்தாலும் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் எவ்வளவு தோல்வி ஏற்பட்டாலும் மேலும்மேலும் இவ்விழிந்த தன்மைகளாலான கொடுமையிலிருந்து நீங்க வேண்டும் என்கிற அவா மாத்திரம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே வந்ததே அல்லாமல் குறையவே இல்லை. ஆகவே, பொது ஜன அபிப்பிராயமும் ஒழுங்காகவே இருந்து வருகிறது. ஆதலால் இவ்விழிவுகளை நீக்கி நமது சுயமரியாதையைப் பெறுவதற்கும் காப்பதற்கும் இதுவே தக்க சமயம். இது விஷயத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் கூடி ஒரே அபிப்பிராயமாக இருந்து தீவிர முயற்சி எடுத்து உழைக்க வேண்டும்.


நமது முயற்சிக்கும் உழைப்புக்கும் பலவித எதிர்ப்புகளும் பழிப்புகளும், பொய் கற்பனைகளும், பழிகளும் நமது சுயமரியாதையின் எதிரிகளால் (பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும்) ஏற்படும். அதாவது நம்மிலேயே பலர் அவர்களோடு சேர்ந்துக் கொண்டு தங்களது வாழ்விற்கும் வயிற்றுப் பிழைப்புக்குமாக தேசாபிமானம் என்னும் போர்வையைப் போர்த்திக்கொண்டு நமது இயக்கத்திற்கு கேடு சூழ எதிரிகளுக்கு அநுகூலமாயிருப்பார்கள். இவைகளையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது.

நாம் யாருக்காவது கெடுதி செய்ய நினைக்கிறோமா? யாருடைய கிரமமான உரிமைகளையாவது பறிக்கிறோமா? நமது சுயமரியாதைக்கு பாடுபடுகிறோமேயல்லாமல் மற்றவர்கள் சுயமரியாதைக்கு நாம் விரோதியாயிருக்கிறோமா? நமது வீட்டுப் பொருள் கொள்ளைப் போகாமல் நமது வீட்டுக் கதவை தாழிட்டு பந்தோபஸ்து செய்தால் நமது பொருளைக் கொண்டே பிழைக்கக் காத்திருக்கும் திருடர்களுக்கு நாம் கெடுதி செய்தவர்களாவோமா? அவர்களைப் பட்டினி போட்டப் பாவத்திற்காளாவோமா? இதனால் மற்றொருவரை மோசம் செய்து உயிர் வாழ்வது வாழ்வல்லவென்றும் திருடிப் பிழைப்பது ஒரு பிழைப்பல்ல வென்றும் திருடனுக்கு தோன்றும்படி செய்து அவனைக் கண்ணியமான தனது உழைப்பினால் வாழும்படி தூண்டுவதாகாதா? இதற்காகத் திருடன் நம் பேரில் கோபித்துக் கொண்டால் அதற்கு நாம் என்ன செய்வது? நாம் சுயமரியாதை அடைய வேண்டுமா? வேண்டாமா? நமது இழிவுகளும் தாழ்வுகளும் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்பவைகளைத்தான் நாம் கவனிக்க வேண்டுமே ஒழிய அவர் என்ன சொல்லுகிறார் இவர் என்ன சொல்லுகிறார் என்பதைப் பற்றி நாம் அதிக கவனம் செலுத்தக் கூடாது.


இப்போது சர்க்கார் சட்ட மெம்பராயிருப்பவரும் தனது சரீரத்தில் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு மூச்சும், பார்ப்பனமயமாயிருப்பவருமான சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்கிற ஒரு பார்ப்பனரே சென்ற é நாடார் மகாநாட்டில் அக்கிராசனம் வகித்துப் பேசுகையில் குறிப்பிட்டிருப்பதாவது:-

"ராஜரீகத்திலும் வியாபார விவகாரங்களிலும் ஐரோப்பியர்கள் நமக்கு மேலானவர்கள் போல் நடக்கவிடக் கூடாது என்றும் சமத்துவமாகவே நடக்கச் செய்ய வேண்டும் என்றும் இந்தியர்களாகிய நாம் கூறி வருகின்றோம். காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஆரம்ப முதற்கொண்டே இந்த லட்சியத்தை பலவழிகளிலும் எடுத்துரைத்து அமுலுக்குக் கொண்டு வர முயற்சிக்கின்றன. அப்படி இருக்கும்பொழுது அது போலவே தற்செயலாகவோ துர் அதிர்ஷ்டவசமாகவோ நம்மில் தாழ்த்தப்பட்டவர்களாக நம்மால் கருதப்பட்டவர்கள் உயர்ந்த வகுப்பாருடன் போராடித் தாங்களும் அவர்களுக்குச் சமமானவர்கள் என்பதை நிலை நாட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். இந்தப் போராட்டம் கட்டாயம் நடக்க வேண்டியதுதான். இது மிகவும் அவசிய மானதாகும். ஆரம்ப திசையில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மீது குரோதம் கொண்டு அதனைத் தாக்கவும் வேண்டிவரும். வழக்கம் என்னும் பெயரால் இருந்து வரும் இம்மாதிரி அநுஷ்டானங்களை மாற்றி தங்கள் தங்கள் உரிமைகளை ஸ்தாபித்துக் கொள்ள முயலும்போது ஒருவருக் கொருவர் மனஸ்தாபங்களும் சச்சரவுகளும் ஏற்படுவது சகஜமே. சமூக சமத்துவங்களுக்கு இந்நிலை இன்றியமையாயது என்பதைத் தீர்க்கதிருஷ்டி உள்ளவர்கள் உணர்ந்தே தீருவார்கள்" என்று பேசியிருக்கிறார்.

அல்லாமலும் உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாரும் ஒவ்வொரு மதத்தாரும் ஒவ்வொரு சமூகத்தாரும் ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ளவும் முன்னேற்றமடையவும் தங்கள் தங்கள் தேசத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, சமூகத்தின் பெயராலோ, வகுப்பின் பெயராலோ ஒவ்வொரு இயக்கங்களை ஏற்பாடு செய்து கொண்டும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ முன்னேறி ஆதிக்கம் பெற முயற்சித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

உதாரணமாக ஆசியா, ஐரோப்பா,அமெரிக்கா, ஜப்பான் முதலிய தேசத்தார் தங்கள் தங்கள் நாட்டின் பேரால் பல இயக்கங்களும் மகம்மது, கிறிஸ்து, புத்தர் முதலிய மதஸ்தர்கள் தங்கள் தங்கள் மதத்தின் பேராலும் அதாவது முஸ்லீம்கள் 'முஸ்லீம் லீக்', 'மஜிலிஸ் உலாமா', 'ஜெமேயதுல் உலாமா' முதலிய சங்கங்களும் எல்லா இந்திய கிறிஸ்தவ சங்கம், புரட்டெஸ்டெண்ட் லீக் முதலிய சங்கங்களும் இருப்பதைப் பார்த்து வருகிறோம்.

அதுபோலவே நமது நாட்டில் அரசாங்கத்தாரால் மகம்மதியரல்லாதார் என்றழைக்கப்படும் வகுப்பாராகிய பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொள்ளும் வகுப்பார்களுக்குள்ளும் பொதுவில் என இந்து மகாசபை என்றும், பார்ப்பனர்களால் பிராமண மகாசபை என்றும், ஆரிய தர்ம பரிபாலன சபை என்றும், வர்ணாசிரம தர்ம பரிபாலன சபை என்றும் பல ஸ்தாபனங்களும் ஸ்தாபித்து மகாநாடுகளும் நடத்தப்பட்டு வருவதையும் அதில் தங்களது உயர்வுகளையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த கொள்கைகளையும் திட்டங்களையும் தீர்மானித்து 'பிராமணன்' முதலிய பல பத்திரிகைகள் மூலம் பிரசாரத்துடன் அமுலில் நடத்தி வருவதையும் பார்த்து வருகிறோம். அவர்களுக்குள் உள் வகுப்பில் ஸ்மார்த்த பிராமணர், வைணவப் பிராமணர், மாத்துவப் பிராமணர், மகாராஷ்டிரப் பிராமணர், செளராஷ்டிர பிராமணர், விஸ்வ பிராமணர் என சங்கங்களும் ஏற்படுத்தி பிரசாரங்கள் செய்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

அதுபோலவே பார்ப்பனரல்லாதார் (திராவிடர், தமிழர்) தங்களுக்குள் பொதுவில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், பார்ப்பனரல்லாத சங்கம் என்னும் ஸ்தாபனங்களை ஸ்தாபித்து மகாநாடுகள் கூட்டி அதற்கேற்ற கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து பிரசங்கங்கள் மூலமாகவும் 'ஜஸ்டிஸ்', 'திராவிடன்' முதலிய பத்திரிகைகள் மூலமாகவும் பிரசாரங்கள் செய்து வருவதையும் சைவ சமய சங்கம், வைணவ சமய சங்கம் என்றும் மற்றும் உள் வகுப்புகள் பேரால் ஆதி திராவிட சங்கமென்றும், சோழிய வேளாள சங்கமென்றும், தொண்டை மண்டல வேளாளர் சங்கமென்றும், கொங்கு வேளாளர் சங்கமென்றும், வன்னிய குல ஷத்திரிய சங்கமென்றும், பலிஜவாரு சங்கமென்றும், கம்மவாரு சங்கமென்றும், பார்க்கவகுல சங்கமென்றும், முத்திரிய சங்கமென்றும், சேனைத்தலைவர் சங்கமென்றும், அருந்ததியர் சங்கமென்றும், மருத்துவர் சங்கமென்றும், குலாலர் சங்கமென்றும், இந்திர குலாதிபர் சங்கமென்றும், ரசபுத்திரர் சங்கமென்றும், தனவைசிய சங்கமென்றும், ஆரிய வைசிய சங்கமென்றும், காசுக்கார செட்டியார்கள் சங்கமென்றும், பன்னிரண்டாம் செட்டியார்கள் சங்கமென்றும், ஐந்நூற்றான் செட்டியார் சங்கமென்றும், அறுபத்திநாலு செட்டியார் சங்கமென்றும், இருபத்திநாலு குலச் செட்டியார் சங்கமென்றும், விஸ்வகர்ம சங்க மென்றும், சிவாச்சார்கள் சங்கமென்றும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ வகுப்பார் சங்கங்களை ஸ்தாபித்துக் கொண்டு தங்களது குறைகளைப் போக்கிக் கொள்ளவும் அன்னியர்களால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து தப்பிக் கொள்ளவும், தங்களது சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும் தடையாயிருக்கும் சாதனங்களை விலக்கவும் முயற்சித்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

இப்படிச் செய்து வருவதை சில சமயங்களில் மற்றொரு சமூகத்தாருக்கு அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாக விருந்தாலும் இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் மேல் குற்றம் சொல்வதில் பொருள் இல்லை. உதாரணமாக ஆரியர்களாகிய பார்ப்பனர் ஆரியதர்ம பரிபாலன சபை மூலமாயும் வருணாசிரம தர்ம பரிபாலன முறை மூலமாயும் என்ன கோருவார்கள்? வருணாசிரம தர்மம் நிலைக்க வேண்டுமென்றும், தாங்கள் உயர்ந்த ஜாதியார்கள் என்றும், மற்றவர்கள் சூத்திரர்கள் (தங்களது வைப்பாட்டி, வேசி மக்கள்) என்றும், பஞ்சமர்கள் (சண்டாளர்கள்) என்றும் உள்ள தர்மம் நிலைத்திருக்க வேண்டுமென்றும், இச் சூத்திரர்களும் பஞ்சமர்களும் வருணாசிரம தர்மத்திற்கு விரோதமாய் சுயமரியாதை அடைய விரும்புவதும் சமத்துவமும் சுதந்திரமும் அடைய விரும்புவதும் தங்களது ஆரிய தர்மத்துக்கு கெடுதி என்றும், வருணாசிரம தர்மமும் ஆரிய தர்மமும் காப்பாற்றப்பட வேண்டுமென்றும், சூத்திரத் தன்மையையும் பஞ்சமத் தன்மையையும் மறைய விடக் கூடாது என்றும், அதை மறைக்கச் செய்ய ஏற்படுத்தப்படும் இயக்கங்களுக்கும் முயற்சிகளுக்கும் விரோதமாயிருந்து பலவித சூழ்ச்சிகளாலும் தந்திரங்களாலும் அவ்வியக்கங்களையும் முயற்சிகளையும் அழிக்க வேண்டும் என்றும் பேசி அதற்கு வேண்டிய தீர்மானங்கள் செய்வார்களே ஒழிய தங்களது வருணாசிரம தர்மங்கள் கெட ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள். அதுபோலவே மற்ற வகுப்பார்களும் முன்னேறி தங்களது பிறப்புரிமைகளான சுயமரியாதையையும் சமத்துவத்தையும் வேண்டுமானால் அதற்கெதிராயுள்ள ஆரியதர்மமும் வருணாசிரம தர்மமும் தங்கள் தோலில் ஏறாமலும் அதனால் தங்களுக்கு கெடுதி ஏற்படாமலும் எவ்வளவு தூரம் தடுக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் தடுக்க வேண்டியதுதான். ஆரிய தர்மக் கொள்கைகளும் வருணாசிரம தர்மக் கொள்கைகளும் நமது சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும் எவ்வளவு தூரம் கொடுமை இழைக்கின்றன என்பதை வெளியிலெடுத்துச் சொல்ல வேண்டியதுதான். இதனால் ஒருவரையொருவர் துவேஷமென்றோ துரோகமென்றோ சொல்லிக்கொள்வது கொஞ்சமும் பொருந்தாது. ஆனால் செல்வாக்கில்லாதவர்களின் சுயமரியாதைக் கொள்கை செல்வாக்குள்ளவர்களின் சுயநலக் கொள்கைக்கு விரோத மாயிருக்குமானால் அச் செல்வாக்கின் மூலம் செல்வாக்கில்லாத வர்களுக்குப் பல கெடுதிகளும் இடையூறுகளும் ஏற்படுவது சகஜம்தான். உண்மையாக சுயமரியாதைக்கும் சமத்துவத்திற்கும் உழைப்பவர்கள் இவைகளுக்குப் பின்வாங்கக் கூடாது. வருவது வரட்டும் என்று தைரியமாய் தலை கொடுக்க வேண்டும்.


உதாரணமாக, நமது சுயமரியாதைக்கும், சமத்துவத்திற்கும் என்று கவலை எடுத்து அதில் உள்ள கஷ்டங்களை நாம் வெளியிலெடுத்துச் சொல்ல ஆரம்பித்த உடன் பார்ப்பனர்களால் பிராமணத் துவேஷகர்கள் என்றும் வகுப்பு வாதக்காரர்கள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் நாஸ்தீகர்கள் என்றும் குற்றம் சொல்லப்பட்டு விட்டோம். இதையும் நமது பாமர ஜனங்கள் நம்பும்படியாகவும் ஆகிவிடுகிறது. காரணம் என்ன வென்றால் தற்கால அரசியலிலும் வைதீகத்திலும் பார்ப்பனர்களுக்கு செல்வாக்கும் ஆதிக்கமும் இருப்பதுதானே ஒழிய வேறில்லை.

அச் செல்வாக்கும் ஆதிக்கமுமே நமக்கு இவ்வளவு கொடுமைகள் இழைக்க இடம் கொடுக்கிறது. முதலாவது, வகுப்பு வாதமும் வகுப்புத் துவேஷமும் நம்மிடம் எங்கே இருக்கிறது? பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற பிரிவினை யாரிடமிருந்து உண்டாயிற்று? கோவில்களிலும், தீர்த்தங்களிலும், நதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், வாசம் செய்யும் தெருக்களிலும், ஓட்டல்களிலும், காப்பிக் கடைகளிலும் பிராமணர், சூத்திரர் என்கின்ற பிரிவும் முறையே உயர்வு தாழ்வு என்கிற பாகுபாடுகளும் பார்ப்பனரல்லாதாராகிய நம்மால் ஏற்பட்டதா? அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டதா? என்று யோசித்தால் நம்மை யாராவது வகுப்புத் துவேஷி என்று சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் தங்கள் உயர்வையும் ஆதிக்கத்தையும் உண்டாக்கிக் கொள்வதும் நம்மைத் தாழ்ந்த நிலையிலும் இழி தன்மையிலும் இருக்கும்படி செய்வதும் கொஞ்சமாவது குற்றம் என்று அவர்கள் நினைப்பதில்லை. ஆனால் நாம் அவர்களால் தாழ்மையாயும் இழிவாயும் கருதப்படாமல் சமத்துவமாக சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென்று நினைப்பது மாத்திரம் குற்றமாய் விடுகிறது. எப்படியெனில்

1.ஆரிய தர்ம பரிபாலனம் வர்ணாசிரம பரிபாலனம். இதனால் தீண்டாமை சூத்திரன் இவைகள் நிலைத்திருப்பது தெய்வீக இயக்கம், ஆஸ்தீக இயக்கம் என்கிறார்கள். சூத்திரன், தீண்டாமை ஆகியவை ஒழிக்கும் இயக்கம் நாஸ்தீக இயக்கம் பிராமணத் துவேஷ இயக்கம் என்று சொல்லுகிறார்கள் .

2. நம்முடன் அவர்கள் பேசுவதும் நம்மை அவர்கள் பார்ப்பதும் அவர்களுக்குப் பாவம், தோஷம் என்கிறார்கள். ஆனால் நாம் அவர்கள் காலில் விழுவதும் சுவாமி என்று கும்பிடுவதும் நமக்கு புண்ணியம் என்கிறார்கள்.

3. நாம் தொட்டதையோ பார்த்ததையோ நமக்குக் கொடுத்த பிறகு அவர்களுக்குக் கொடுப்பதையோ தோஷம் என்கிறார்கள். அவர்கள் எச்சிலையோ கால் கழுவின தண்ணீரையோ நாம் சாப்பிடுவது மோட்சம் என்கிறார்கள்.

4. நம்மோடு அவர்கள் பேசும் போது அவர்களது பூணூலை காதில் சுற்றிக் கொள்வார்கள். (ஏனென்றால் பார்ப்பனர்கள் மல,ஜலம் கழிக்கும் போது அவர்களது சரீரம் அசுத்தமாய் விடுகிறபடியால் அசுத்தப்பட்ட சரீரத்தில் பூணூல் தரித்திருப்பது தோஷம். ஆதலால் காதில் சுற்றிக் கொண்டு இருந்து தேகம் பரிசுத்தமான பின்பு தோளில் போட்டுக் கொள்வார்கள். அது போலவே சூத்திரனாகிய நம்முடன் பேசும்போதும் அவர்களது திரேகம் அசுத்தப்பட்டு போகிறதாம்.)

5. நாம் அவர்களுடன் பேசும் போது வாய் பொத்திக் கொள்ள வேண்டும்( ஏனென்றால் வாயிலிருந்து வரும் காற்று அவர்கள் மீது பட்டு விடுமாம்.)


இம்மாதிரி ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் காணலாம்.

இந்நிலையில் நமது முன்னேற்றத்தின் எதிரிகள் நம்மை வகுப்புத் துவேஷக்காரர்கள் என்றோ நாஸ்தீகர்கள் என்றோ சொல்லுவார்களே என பயந்து நமது ஜீவாதாரமான உரிமைகளை அறியச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து கொஞ்சமும் பின் வாங்கிக் கொள்ளக் கூடாது. அரசியல் விஷயங்களில் நமது தற்கால யோக்கியதை என்ன என்பதைக் கவனித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் உத்தியோகம் சம்பாதிப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட இயக்கத்தை அவர்கள் தேசீய இயக்கம் என்பதாக பெயரை வைத்துக் கொண்டு நம் பேராலே நமது நாட்டிற்கும் நமது வகுப்பிற்கும் கேடான காரியங்களைச் செய்து அரசாங்கத்தாருக்கு அநுகூலம் செய்து கொடுத்து 1000,2000,5000,7000 ரூபாய்கள் சம்பளமுள்ள உத்தியோகங்களையும் சம்பாதித்துக் கொண்டும் கோர்ட்டுகள் என்றும் பள்ளிக்கூடங்கள் என்றும் அரசாங்கத்திற்கும் தங்களுக்கும் அநுகூலமான ஸ்தானங்களையும் அரசாங்கத்திற்குள் உளவாயிருந்து ஏற்பாடு செய்து கொண்டு அதின் மூலமாய் பிழைத்து வருகிறார்கள். நாம் ஏதாவது இதுகளில் ஆசைப்பட்டால் நமக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். யோக்கியதை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று பிரயத்தனப்பட்டால் நம்மைத் துரோகி, வகுப்புத் துவேஷி என்று சொல்லி விடுகிறார்கள். ஆதலால் இவ்வித கஷ்டங்களில் இருந்து வரும் நமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சுயமரியாதையும் விடுதலையும் ஏற்படவும் நமக்கென்று ஒரு தனி இயக்கம் இருந்துதான் ஆக வேண்டும். அவ்வியக்கத்தில் நாம் எல்லோரும் ஈடுபட்டு ஒற்றுமையாய் உழைக்க வேண்டும்.

------------------------ தந்தைபெரியார் -"குடி அரசு" 19.12.26

2 comments:

தமிழ் ஓவியா said...

நன்றி நிலாப் பிரியன்

Unknown said...

//ஆரிய தர்ம பரிபாலனம் வர்ணாசிரம பரிபாலனம். இதனால் தீண்டாமை சூத்திரன் இவைகள் நிலைத்திருப்பது தெய்வீக இயக்கம், ஆஸ்தீக இயக்கம் என்கிறார்கள். சூத்திரன், தீண்டாமை ஆகியவை ஒழிக்கும் இயக்கம் நாஸ்தீக இயக்கம் பிராமணத் துவேஷ இயக்கம் என்று சொல்லுகிறார்கள் .

2. நம்முடன் அவர்கள் பேசுவதும் நம்மை அவர்கள் பார்ப்பதும் அவர்களுக்குப் பாவம், தோஷம் என்கிறார்கள். ஆனால் நாம் அவர்கள் காலில் விழுவதும் சுவாமி என்று கும்பிடுவதும் நமக்கு புண்ணியம் என்கிறார்கள்.

3. நாம் தொட்டதையோ பார்த்ததையோ நமக்குக் கொடுத்த பிறகு அவர்களுக்குக் கொடுப்பதையோ தோஷம் என்கிறார்கள். அவர்கள் எச்சிலையோ கால் கழுவின தண்ணீரையோ நாம் சாப்பிடுவது மோட்சம் என்கிறார்கள்.

4. நம்மோடு அவர்கள் பேசும் போது அவர்களது பூணூலை காதில் சுற்றிக் கொள்வார்கள். (ஏனென்றால் பார்ப்பனர்கள் மல,ஜலம் கழிக்கும் போது அவர்களது சரீரம் அசுத்தமாய் விடுகிறபடியால் அசுத்தப்பட்ட சரீரத்தில் பூணூல் தரித்திருப்பது தோஷம். ஆதலால் காதில் சுற்றிக் கொண்டு இருந்து தேகம் பரிசுத்தமான பின்பு தோளில் போட்டுக் கொள்வார்கள். அது போலவே சூத்திரனாகிய நம்முடன் பேசும்போதும் அவர்களது திரேகம் அசுத்தப்பட்டு போகிறதாம்.)

5. நாம் அவர்களுடன் பேசும் போது வாய் பொத்திக் கொள்ள வேண்டும்( ஏனென்றால் வாயிலிருந்து வரும் காற்று அவர்கள் மீது பட்டு விடுமாம்.)

இம்மாதிரி ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் காணலாம்.//

பார்ப்பனர்கள் பார்ப்பரல்லாதாரை இப்படியெல்லாம் இழிவு படுத்தியதைப் படிக்கும் போது ரத்தம் கொதிக்கிறது.

மானமுள்ள தமிழர்களே இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இல்லாமல் இல்லை.

இப்போது சிந்தித்துப் பார்த்தால் பெரியாரின் பெரும் பணி இல்லாமல் இருந்திருந்தால் நமது நிலை என்ன?