Search This Blog
16.1.09
"தமிழ்ப் புத்தாண்டை"க் கோலாகலமாகக் கொண்டாடுவோம்! ஏன்? எதற்கு?
கிருஷ்ணனுக்கும் - நாரதிக்கும் பிறந்த 60 குழந்தைகள் -
தமிழ் ஆண்டுகள் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
"தமிழ்ப் புத்தாண்டை"க் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!
முதல்வர் கலைஞரின் இன எழுச்சியுரை
தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுபற்றியும், இதுவரை இருந்துவந்த தமிழ்ப் புத்தாண்டுபற்றியும் முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்துரைத்தும், தைமுதல் நாள் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன எழுச்சியுரையாற்றினார்.
தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகின்ற இந்த நாளில் - நேற்றையதினம் புத்தாண்டு - ஏழையெளியவர்களுக்கு எல்லாம் - எல்லோருக்கும் சமத்துவப் பொங்கல் சாப்பிட இந்த அரசின் சார்பாக அவர்களுக்கெல்லாம் தேவையான பொருட்களை வழங்கிய அரசு - இந்த அரசு - இந்தப் புத்தாண்டை இதற்கு முன்பு நாம் கொண்டாடினோம். வருடப் பிறப்பு என்ற பெயரால் கொண்டாடினோம். அந்த வருடப் பிறப்பு எப்படி புத்தாண்டாக மாற நேரிட்டது என்றால் - தந்தை பெரியார் போன்றவர்கள், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள், புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் போன்றவர்கள், மறைமலை அடிகளார் போன்றவர்கள், திரு.வி.க. போன்றவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து - நம்முடைய தமிழனுக்கு ஒரு ஆண்டு வேண்டும், அந்தத் தமிழ் ஆண்டு, புத்தாண்டு தை முதல் நாளாகத் தான் இருக்க முடியும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அந்தச் சொல் வந்ததற்குக் காரணமே, தை பிறந்தால் தான் தமிழனுக்கு, ஏழைக்கு, விவசா யிக்கு, உழவனுக்கு, பாட்டாளிக்கு வாழ்வு பிறக்கின்றது. ஆகவே அந்த நாளை நாம் புத்தாண்டு என்று வைப்போம் என்று வைத்தார்கள். அதற்கு முன்பு இருந்த புத்தாண்டு, வருடப்பிறப்பு - அது வேறு, இது வேறு. அய்யோ, அதை ஒழித்து விட்டீர்களே என்று யாராவது சொன்னால், நீங்கள் கேளுங்கள். நீ எந்த வருடம் பிறந்தாய் என்று - என்னையே கேளுங்கள் -அவர்களுடைய கணக்குப்படி-நான் ரக்தாட்சி வருடம் பிறந்தேன். அப்படியென் றால் இப்போது எனக்கு என்ன வயது? ரக்தாட்சி வருடம் பிறந்த வனுக்கு அட்சய வருடத்தில் என்ன வயது என்று கேட்டால், ரக்தாட்சி, குரோதன, அட்சய - ஒரு வருடம் - ஏனென்றால் அறுபது ஆண்டுகள் - பெயர்கள் சுற்றிக் கொண்டே வரும். பிரபவ, விபவ, சுக்ல, பிரஜோபத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு என்று இப்படி அறுபது ஆண்டுகள் சுற்றிக் கொண்டே வரும். அப்படி சுற்றிக் கொண்டு வரும்போது இந்த அறுபதில், 1924ஆம் ஆண்டு பிறந்த நாள் - இந்த வருடத்தின் சுற்று முடியும் போது - யாராலும் சரியாக வயதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. 1924இல் பிறந்தவன் என்று சொல்கிற போது, இப்போது என்னுடைய வயது 85 என்று சொல்ல முடியும். எப்படி வந்தது இந்த வருஷம்.? ஒரு நாள் கிருஷ்ணனைப் பார்த்து நகர் வலம் வந்த நாரதர் - கிருஷ்ணா எனக்கொரு ஆசை என்றார். என்ன ஆசை நாரதா என்றார். நான் கதை சொல்லவில்லை. இது திரைக்கதை வசனம் அல்லவே அல்ல. இது திவ்யமான புராணம். அந்தப் புராணத் திலே நாரதர் வீணையோடு வந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணனிடம் எனக்கொரு ஆசை, அதை நீ நிறைவேற்ற வேண்டுமென்றார். ஒரு அழகான பெண்ணோடு நான் ஒரு நாளா வது வாழ வேண்டும் என்றார் நாரதர். கிருஷ்ணனுக்கு கோபம் வந்து விட்டது. இவர் யார், நாம் யார்? நம்மைப் பார்த்து இப்படி கேட்கிறாரே என்று, சரி உனக்கு நான் இந்த வரம் தருகிறேன், நீ இந்த ஊரில் எல்லா வீடுகளுக்கும் போ, எந்த வீட்டிலேயாவது அழகான ஒரு பெண் உனக்காக இருந்தால், நீ அவளை ஏற்றுக் கொள்ளத் தடை இல்லை, அவள் உன்னோடு வருவாள், போ என்று அனுப்பி வைத்தார். நாரதர் போனார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புருஷனோடு பெண் இருந்தாளே தவிர, தனியாக ஒரு பெண்கூட இல்லை. திரும்பி வந்தார் நாரதர். ஏன் என்று கிருஷ்ணர் கேட்டார். எல்லா வீடுகளிலும் பெண், ஆணோடு தான் இருக்கிறாள், அதனால் எனக்கேற்ற பெண் எங்கும் கிடைக்கவில்லை, என்னை விரும்புகிற பெண்ணையே காணவில்லை என்றார். சரி என்ன செய்யச் சொல்றே? நானே பெண்ணாக ஆகி விடுகிறேன், நீ ஆணாக இருந்து என்னை சந்தோஷப்படுத்து என்று நாரதர் கிருஷ்ணனைக் கேட்கிறார்.
ஒரே நாளில் 60 பிள்ளைகள்
சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும் என்று நாரதரைப் பெண்ணாக்கி, நாரதர், நாரதியாகி - கிருஷ்ணன் நாரதர் இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்து - அதைத் தான் படம் பார்த்திருப்பீர்கள் - பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படம் வந்தது - பாட்டிகளுக்கெல்லாம் தெரியும் - கிருஷ்ணன் நாரதி என்று படமே வந்தது. நான் பொய் சொல்லவில்லை. அவர்கள் இருவருக்கும் சேர்ந்து 60 பிள்ளைகள் பிறந்தன. கடவுளுடைய காதல் அல்லவா? அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் அறுபது பிள்ளைகள் பிறந்தன. அந்த அறுபது பிள்ளைகளுக்கும் வைத்த பெயர்கள் தான் பிரபவ, விபவ, சுக்ல என்று ஆரம்பித்து அட்சய வரையிலே உள்ள வருடங்களின் பெயர்கள். அந்த வருடங்கள் தான், அந்தக் கடவுளர்கள் தான், நமக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் வைக்கப்படுகிற வருடங்கள், ஆண்டுகள் என்றிருந்தால் தமிழன் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவன் தமிழனாக இருக்க முடியுமா? தமிழனாக இருப்பதற்கு அவனுக்கு எப்படி ஒரு கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகள் எல்லாம் வேண்டுமோ - பண்பாடு வேண்டும், அவனுக்கு வருடம் வேண்டாமா? அவனுக்கு ஒரு ஆண்டு வேண்டாமா? அவனுக்கு ஒரு திங்கள் வேண்டாமா? மாதம் வேண்டாமா? கிழமை வேண்டாமா? அதைத் தான் ஆய்ந்தாய்ந்து 500-க்கு மேற்பட்ட புலவர்கள் கூடி, 1921ஆம் ஆண்டு எடுத்த முடிவு தான், நேற்றையதினம் நாம் கொண்டாடிய நாள், தமிழர் புத்தாண்டு நாள் - இந்த ஆண்டு நாம் இதை ஓரளவு மகிழ்ச்சியோடுதான் கொண்டாடியிருக்கிறோம். ஏனென்றால் தமிழர்கள் வேறு ஒரு பக்கத்திலே சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் நம்மால் அவ்வளவு தான் கொண்டாட முடிந்தது. அந்தத் தமிழர்களுக் காக நாம் இங்கே அந்த விழாவினை ஓரளவு தான் கொண்டாடி னோம்.
அடுத்த ஆண்டுமுதல்....
அடுத்த ஆண்டிலேயிருந்து அமெரிக்க சுதந்திர தினம் எப்படிக் கொண்டாடப்படுகிறதோ - இங்கிலாந்திலே எப்படி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறதோ அதைப் போலவே தமிழர்களுடைய ஆண்டு தினம் - முதல்நாளைக் கொண்டாட வேண்டும். கடற்கரையிலே வாண வேடிக்கைகள் - ஒவ்வொரு மாவட்டத்தின் தலை நகரத்திலும் - குளக்கரையிலே, தெருக் களிலே, மைதானங்களிலே வான வேடிக்கைகள் நடைபெற வேண்டும். அப்படி கோலாகலமாக இந்த விழாவை நாம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விருது வழங்கப்பட்ட இந்த விழாவிலே இந்த விளக்கங்களைத் தருவதற்கு நேரம் கிடைத்த காரணத்தால் உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்த காரணத்தால் - என் நோய் பறந்தது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
--------------------- "விடுதலை" 16-1-2009
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment