Search This Blog

25.1.09

ஆரியப் பார்ப்பனர் கொழுக்க, சொல்லி வைக்கப் பட்டவைதான் யாகங்கள்!


குத யாகமாம்!



யாகங்கள் - பார்ப்பனர்கள் தங்களுக்கு வரும்படி வருமாறு வகுத்துக் கொண்ட வகைகளில் ஒன்று என நாம் அறிவோம். ஆனாலும், அதனைச் செய்வதால் பலன் ஏற்படும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தப் பல்வேறு கட்டுக்கதைகளைக் கட்டி வைத்துள்ளனர்.

இராவண - ராமப் போரில் வெற்றி வரவேண்டும் என்பதற்காக நிகும்பலா யாகம் செய்தான். இந்திரஜித் எனவும் யாகம் வெற்றி பெற்றுவிட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்கிற சேதியைக் கடவுள் அவதாரமான ராமனுக்கும் அவன்தம்பி லட்சுமணனுக்கும் எடுத்துச் சொல்லி யாகத்தை அழிக்குமாறு ஆலோசனை சொன்னவன் விபீடணன். அதன்படியே யாகத்தை ராமலட்சுமணன் அழித்து விட்டதால் இந்திரஜித் போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான் எனும் கதையையும் கட்டி வைத்து, யாகத்திற்கு மவுசு ஏற்படுத்தி விட்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.

இதையெல்லாம் நம்பி, மூடர்கள் பலரும் இன்றைக்கும் யாகம் நடத்திக் கொண் டிருக்கிறார்கள். அரசியலில் வெற்றி பெறுவதற்காக ஒரு கட்சித் தலைவர் யாகங்கள் நிறைய நடத்தினார் என்பதும் அண்மைக்காலச் சேதிதான். ஆனாலும் அக்கட்சி தோற்றுப் போனதும் வரலாறுதான். சீரிய பகுத்தறிவாளரான அண்ணா பெயரில் அவர்கள் கட்சி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அவலம்! சத்ரு சங்கார யாகம் 1924-இல் தந்தை பெரியாருக்கு எதிர்ப்பாக நடத்தப்பட்டதும் அதனையெல்லாம் வென்று 50 ஆண்டுக்காலம் கழித்து 1973-இல் தான் இயற்கையெய்தினார் என்பதும் வரலாறு. ஆனாலும் நம்புபவர்கள் - பித்தலாட்டம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

7000 கோடி ரூபாய் அளவுக்கு பொய்க் கணக்கு எழுதி மோசடி செய்தார் என்று கைது செய்யப்பட்டிருக்கும் பெரு முதலாளி ஒருவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்கிற அற்பக் காரணத்துக்காகக் கூட யாகம் நடத்தப்பட்டிருக்கிறது, அய்தராபாதில்! அரிய அறிவியல் கண்டுபிடிப்பான கணினித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நபர்களே இந்த யாகத்தைச் செய்தார்கள் என்று படிக்கும்போதுதான், தந்தை பெரியார் சொன்ன படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது. அறிவியல் மனப்பான்மையைப் பாமர மக்களிடம் பரப்புவதற்கு மேலாகப் படித்த முட்டாள்களிடம் பரப்புவது அவசரம், அவசியம் என்பது புரி கிறது.

ஒவ்வொரு குடும்பத்திலுமே, அய்ந்து வகையான யாகங்கள் செய்யப்படவேண்டும் என்கிற நிபந்தனையை மனுநூல் விதித்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் மிருக வதைகள் நடந்து கொண்டே இருக்கின்றனவாம். அடுப்படி, திருமணம், துடைப்பான், அம்மியும் குழவியும், நீர்ப் பானை வைக்குமிடம் ஆகிய அய்ந்து இடங்களிலும் உயிர்கள் வதைப்படும் வாய்ப்புகள் இருக்கின்றனவாம். அதனால் குடும்பத்தவரை பாவங்கள் பீடிக்குமாம், பாவ விமோ சனத்திற்காக 5 யாகங்கள் செய்யவேண்டுமாம்.

யாகங்களில் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைக் கொன்று, பொசுக்கிச் சாப்பிடும் முறையை எழுதிவைத்து விட்டு, ஈ, எறும்பு போன்ற சிறிய உயிர்கள்மீது காதலாகிக் கசிந்து உருகிக் கண்ணீர் மல்க - யாகங்கள் செய்யப்பட வேண்டும் என்னும் விசித்திரம் முரண்பாடுகளே செயல்பாடு களாக உள்ள இந்து மதத்தில்தான் நடக்கும்.

அய்ந்து யாகங்களுக்கும் பெயர்கள் வைத்துள்ளனர். அகுதம், குதம், பிரகுதம், பிரம்ம குதம், பிரசிதம் என அய்ந்து பெயர்கள் (என்னடா, எல்லாமே குதமாக இருக்கிறதே, குதம் என்றால் மனித உடலிலிருந்து மலம் வெளியேறும் வழி எனப் பொருள் - எனக் கவலைப்பட வேண் டாம்).

அகுதம் என்றால் வேத மந்த்ரங்களைச் சொல்வதாம். குதம் என்றால் தேவர்களுக்கு உணவு படைப்பதாம். பிரகுதம் என்றால் விலங்குகளுக்கு உணவு தருவதாம். பிரம்ம குதம் என்றால் விருந்தினரான பார்ப்பனர்களுக்கு விருந்து அளிப்பதாம். பிரசிதம் என்றால் செத்துப்போனவர்களுக்குத் தரும் சிரார்த்தமாம். இவை அய்ந்தும் நாள்தோறும் நடத்தப்பட வேண்டுமாம். நாள்தோறும் பார்ப்பனர்க்கு வடித்துக் கொட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்கிறது மனுதர்ம நூல்!

சோமயாகம் என்ற ஒன்றை மனுநூல் கூறுகிறது. இந்த யாகத்தைச் செய்பவர்கள் சோமயாஜிகள். இந்த ஜாதிப் பெயருடன் ஆந்திரா - கருநாடகாவில் பார்ப்பனப் பிரிவுகள் உண்டு. இந்த யாகம் செய்து முடித்த பின்புதான் சோமபானம் குடிக்க வேண்டுமாம். இதைச் செய்வதற்கும் சோம பானத்தைக் குடிப்பதற்கும் தகுதிகளையும் வரையறுத்துள்ளார்கள். தன் குடும்பத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான பல சரக்குச் சாமான்களை வாங்கி வைத்தும், தம் வேலையாட்களுக்கான மூன்றாண்டுச் சம்பளத் தொகையை வைத் திருப்பவர்கள் மட்டுமே யாகம் செய்யவேண்டுமாம்.

எந்தப் பார்ப்பனருக்கோ, சத்திரியருக்கோ இந்த வசதி இல்லாமல் போய் இருந்தால், யாகம் கண்டிப்பாகச் செய்யப் பட வேண்டுமே - அதற்காக ஓர் ஏற்பாடு எழுதி வைக்கப் பட்டுள்ளது! எந்த வைசியன் வீட்டில் பணம் இருக்கிறதோ, அவன் வீட்டிலிருந்து பணத்தை வலுக்கட்டாய மாகப் பறித்துக் கொள்ளலாம் என்றும் கொள்ளை அடிக்க வழியும் சொல்லியிருக்கிறது மனுநூல்! எப்படியானாலும் - யாகம் கட்டாயம் - பார்ப்பனர் கொழுக்கவேண்டும் என்பது தான் குறிக்கோள்!

பணக்காரச் செட்டியார் கிடைக்கவில்லையென்றால், பணம் படைத்த சூத்ரன் வீட்டிலிருந்தே கொள்ளை அடித்து சோமயாகம் செய்யப்பட வேண்டும் என நிர்ப்பந்திருக்கிறது மனு (அ) தர்மம்!

ஆரியப் பார்ப்பனர் கொழுக்க, சொல்லி வைக்கப் பட்டவைதான் யாகங்கள் என்பதை அறியாமலே, அவற்றைச் செய்யும் அல்லாதாரை என்ன நினைப்பது? என்ன செய்வது? இவர்களையெல்லாம் வெருட்டுவது பகுத்தறிவே - இல்லையாயின் விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்.

-------------------- சார்வாகன் அவர்கள் 24-1-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

2 comments:

சிந்திக்க உண்மைகள். said...

தலைப்பு பிரமாதம். வாழ்க. வளர்க.

அன்புடன்.

தமிழ் ஓவியா said...

நன்றி அய்யா.