Search This Blog

9.1.09

பா.ஜ.க.வில் குழப்பமும் இடதுசாரிகளின் போக்கும்




பாரதீய ஜனதா அரசியலில் தார்மீக நெறியைப் பின்பற்றக் கூடியது என்றும் பதவி ஆசையற்றது என்றும், நேர்மை அவர்களின் குருதி ஓட்டம் என்றும், அவர்களுக்கென்று உறுதியாக இருக்கக் கூடிய பார்ப்பன ஏடுகள் சதா முழங்கிக் கொண்டு இருக்கின்றன.

திடீரென்று அவர்களின் கட்சி அலுவலகத்திலிருந்து பல கோடி ரூபாய்கள் காணாமல் போய் விடுகின்றன. தெரிந்தவர்கள்தான் அதனைத் திருடியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது அக்கட்சியின் ஒழுக்கத்தைப் பறைசாற்றக் கூடியதாகும்.

அதேபோல எதையும் திட்டமிட்டு செயல்படக் கூடிய கட்சி என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடிய கட்சியும் அதுவே. அத்வானி தான் பா.ஜ.க.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தனர். எவ்வளவு முன்கூட்டியே திட்டமிடுகின்றனர் பார்த்தீர்களா என்று பிரச்சாரம் ஒரு பக்கம்...

இப்பொழுது நிலைமையென்னவென்றால் அவ்வாறு அறிவித்ததுதான் வடமாநிலங்களில் அக்கட்சி தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்று பேச ஆரம்பித்து விட்டனர். வாஜ்பேயியை முன்னிறுத்தியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டனர். வாஜ்பேயி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தால் தோல்வி தவிர்க்கப்பட்டு இருக்கும் என்று இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சர் சாந்தகுமார் கூறியுள்ளார்.

அத்வானியின் சீடரான விஜயகுமார் மல்கோத்ரா டில்லி சட்டப் பேரவை முதல் அமைச்சருக்கான வேட்பாளர் என்று அறிவித்தது தான் டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., தோல்வி அடைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புகள் கிளம்பிவிட்டன. முழங்கால் மூட்டுவலியைக் காரணம் சொல்லி அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார் என்று கூறப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பேயி பற்றி மீண்டும் வெளிச்சமாகப் பேசப்படுகிறது. அவர் அரசியலுக்கு வரவேண்டும், பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கட்சிக்குள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனராம்.

வாஜ்பேயி மட்டுமல்ல; முன்னாள் குடியரசுத்துணைத் தலைவரும் - குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவருமான ஷெகாவத்துப் பிரதமருக்கான வேட்பாளராகக் களம் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

முரளிமனோகர் ஜோஷிக்கும் அந்த ஆசை உண்டு. இப்படியாக பா.ஜ.க.வுக்குள் பிரதமருக்கான தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டு நிற்கின்றனர்.

அண்மையில் வடமாநிலங்களில் பா.ஜ.க. தோற்றிருக்கும் நிலையில், அதற்கான காரணத்தை ஒப்புக்கொள்ளாமல், யார் பிரதமர் என்பதிலே முண்டா தட்டி நிற்கின்றனர் என்றால் அக்கட்சியின் கட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

நடந்து முடிந்த தேர்தலுக்குப் பின் கருத்துத் தெரிவித்த எல்.கே. அத்வானி - கட்சியின் கோஷ்டி மோதல்கள்தான் தோல்விக்குக் காரணம் என்றும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

17 கட்சிகளின் கூட்டணியோடு பிரதமராக இருந்து பதவி விலகியபோதே வாஜ்பேயி மக்களவையில் வெளிப்படையாக ஒப்புக் கொண்ட தகவல் ஒன்று உண்டு (27.3.1998), பலரும் அதனை மறந்திருக்கலாம். இதுதான் நான் போட்டியிடும் கடைசிப் பொதுத் தேர்தல் என்றாரே - அந்த வாக்குச் சுத்தம் என்னவாயிற்று? அதன் பின் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்ட வண்ணமாகத்தானே உள்ளார். இவ்வளவு குழப்பம் கட்சியில் நிலவும் சூழ்நிலையிலும், தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவோ அல்லது விலகி நிற்கப் போவதாகவோ பகிரங்கமாக அறிவிக்க அவர் தயங்குவது ஏன்? இன்னும் மனதுக்குள் பதவி ஆசை என்ற அலை அடித்துக் கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்?

மூன்றாவது அணி உருவாக்கப்பட்டு, அது ஒரு வகையில் தங்களுக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கக்கூடும் என்ற சபலமும் காவிக் கூட்டத்துக்கு இருக்கிறது. இந்த நிலையை இடதுசாரிகளே உருவாக்குகிறார்கள் என்கிறபோது அவர்கள் பால் பாயாசம் சாப்பிட்டது போன்ற உணர்வைப் பெற்றுள்ளனர்.


அணு ஆயுத ஒப்பந்தம், மதச்சார்பின்மை இந்த இரண்டிலுமே பா.ஜ.க., எந்தத் தன்மையில் உள்ள கட்சி என்று இடதுசாரிகளுக்குத் தெரியாதா?

இந்தச் சூழலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் இடதுசாரிகளுக்கு ஏற்படாமல் போனால், வருங்காலத்தில் அவர்கள் பெரிதும் வருந்தும்படியிருக்கும். குதிரை காணாமல் போன பிறகு லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்? இடதுசாரிகளும், மதச்சார்பின்மைமீது அக்கறை கொள்ளும் சக்திகளும் இதனை சீர் தூக்கிப் பார்க்க வேண்டாமா?

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருமேயானால், கடந்த முறையைவிட, இந்த முறை அதன் நடப்புச் செயல் முறைகள் மிகக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும் - எச்சரிக்கை!

-------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 9-1-2009

0 comments: