Search This Blog

20.1.09

பார்ப்பனர் - மதுவிலக்கு - பெரியார்


பெரியார் வழிபற்றி பிரசங்கிக்கும் ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பான்கள்




மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர்கள் யாராவது உண்டா? குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட குடிமக்கள் தவிர - மற்ற எல்லோரும் மதுக்கடைகளை மூடவேண்டும்- பரிபூரண மதுவிலக்கை அமல்பபடுத்த வேண்டும் என்று முழுமனதோடு ஆதரிக்கவே செய்வார்கள்! எனினும் குஜராத் தவிர இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் மது வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறதே - எந்த மாநிலமும் காங்கிரஸ் - பா.ஜ.க. - இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் ஆளுகைக்குட்பட்ட மாநிலங்கள் எதிலும் மதுவிலக்கு இல்லையே; ஏன்?

எல்லா மாநிலங்களிலும் மதுக்கடைகள் இருக்கின்றன; ஆனால் தமிழகத்திலே மட்டும் சில கட்சிகள் “மதுக்கடைகளை மூடு” என்று முழக்கமிடுகின்றனவே! ‘பரிபூரண மதுவிலக்கை அமல் நடத்து’ என்று வலியுறுத்துகின்றனவே; ஏன்?

தமிழகத்தில் மட்டும் மதுக்கடைகளை மூடினால் - பக்கத்திலே உள்ள புதுவை மாநிலத்தில் மது வியாபாரம் இன்றிருப்பதைவிட - ஓகோ என்று உயர்ந்து கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விடுமே! ஆந்திராவிலிருந்து மதுப்புட்டிகள் - திருட்டுத்தனமாகத் தமிழகத்தில் புகுந்துவிடுமே; கர்நாடகா - கேரளாவிலிருந்தும் மது - வெள்ளமாய்த் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுமே! அஃதன்னியில் கள்ளச்சாராய வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுமே என்று கேட்டால் இந்த மதுவிலக்கு ஆதரவுக்கட்சிகள் - பதிலளிப்பதில்லை!

பா.ம.க.வினர் கோவில்பட்டியில் நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில், ஒரு ரூபாய் அரிசி வேண்டாம், குடியை ஒழித்தால் கிலோ அரிசி 22 ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிடுவோம் - என மாதர்குலத் திலகங்கள் ஆவேசமாகப் பேசினார்களாம். இதன்மூலம் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஏழை எளிய மக்கள் வாங்கும் அரிசியின் விலை கிலோ 22 ரூபாயாக உயர்ந்துவிடும் என்பதை முன்கூட்டியே - தொலைநோக்குடன் கணித்து, ஆவேசத்துக்கிடையிலும் அந்தத் தாய்க்குலம் அறிவித்திருக்கிறது! அது ஒருபுறமிருக்க மதுவிலக்கு என்பது இந்தியா முழுவதிலும் அமல்படுத்தப்பட்டாலன்றி அது ஒருபோதும் வெற்றிபெறாது.

நல்ல மதுவுக்குப் பதிலாகக் கள்ளச்சாராயம், விஷச்சாரயம் குடிக்கவே உதவி செய்யும். விஷச்சாராய சாவுகள் அதிகரிக்கவே அது காரணமாகிவிடும். - என்பதை டாக்டர் ராமதாஸ் உணராவிட்டாலும் அவரது புதல்வர் - மத்திய அமைச்சர் அன்புமணி அறிந்து வைத்திருக்கிறார் என்பதைச் சென்னையில் மது ஒழிப்புக் கொள்கை குறித்த கருத்தரங்கத்தில் அவர் பேசிய பேச்சு அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
“இளைஞர்கள் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதைத் தடுப்பதற்கு தேசிய அளவிலான புதிய கொள்கை உருவாக்கப்படும் அதனடிப்படையில் விவாதங்கள் நடத்தப்பட்டுச் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பாகப் பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது” என்று அறிவித்திருக்கிறார் டாக்டர் அன்புமணி. அவரது அறிவிப்பை எல்லோரும் வரவேற்பார்கள்; பாராட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அது மட்டுமல்ல; அகில இந்திய அளவில் மதுவிலக்கை அமல் நடத்தி அதில் அவர் பரிபூரண வெற்றியடைய மகிழ்ச்சியும் வாழ்த்தும் கூறுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. டாக்டர் அன்புமணி பாராட்டத்தக்க அறிவிப்பை வெளியிட்ட அதே மேடையில் - தினமணி ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸ். வெறியருமான கே.வைத்தியநாத அய்யரும் மதுவிலக்குப் பற்றி வாய்கிழியப் பேசி இருக்கிறார். தி.மு.க.வினருக்கு - திராவிடர் இயக்கத்தினருக்கு இந்த அய்யர் பெரியார் வழி அண்ணா வழி என்றால் என்ன என்பது பற்றிப் பூணூலை உருவிக்கொண்டு புத்திமதி கூற முன்வந்திருக்கிறார்.

“பெரியார் கள்ளுக்கடைகள் ஒழிய வேண்டும் என்பதற்காகத் தனது சொந்தத் தோப்பில் இருந்த அனைத்துத் தென்னை மரங்களையும் வெட்டி எறிந்தவர் என்பதை ஊரும் உலகமும் அறியும். பெரியார் வழிவந்தேன் என்று கூறும் இவர்கள் கள்ளு, சாராயக்கடைகளுக்கும் மதுவிற்பனைக்கும் துணை போகிறார்களே; இதுதான் பெரியார் காட்டிய வழியா?” என்று கேள்விக்கணை தொடுத்திருக்கிறார். அது மட்டுமா? “சமுதாயத்தின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவே அரசின் வருமானம் பயன்பட வேண்டும். ஆனால் தெருக்கள் தோறும் மதுக்கடைகளைத் திறந்து வைத்து, நாளைய சமுதாயத்தையே அழித்தபின், சாலைகள் போட்டு என்ன பயன்? மேம்பாலங்கள் கட்டி என்ன பயன்?” - என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார்.

பெரியார், அண்ணல் காந்தியடிகளின் மது விலக்குக் கொள்கையை ஆதரித்தார், கள்ளுக்கடை மறியல்களில் தமது மனைவி நாகம்மையாரையும் சகோதரி கண்ணம்மாளையும் ஈடுபடுத்தினார்; தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் என்பது எவ்வளவு உண்மையோ - அதுபோலவே - ராஜாஜி சென்னை மாகாணப் பிரதமர் (முதல்வர்) ஆகி - இந்தியாவிலேயே முதன் முறையாக மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்தியபோது “அது முட்டாள்தனமானது” என்று கூறிக் கடுமையாக எதிர்த்தார் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை.

பெரியாரின் கொள்கைகள் பற்றி விடுதலை ஆசிரியர் வீரமணி, சிந்தனையாளன் ஆசிரியர் வே.ஆணைமுத்து, முனைவர் மா.நன்னன் போன்றவர்கள் ஆய்வாளர்களுக்கு உதவும்படியாக பல்வேறு நூல்களை எழுதியிருக்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளைத் தனித்தனித் தலைப்புகளில் தொகுத்தும் வழங்கியிருக்கிறார்கள். ‘இவர்தாம் பெரியார்’ என்ற தலைப்பில் டாக்டர் மா.நன்னன் எழுதிய நூலில் மதுவிலக்குக்கு எதிர்ப்பு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அத்தியாயத்தில் கீழ்க்கண்ட தகவலை தொகுத்துத் தந்திருக்கிறார்.

பெரியார் பிற்காலத்தில் மதுவிலக்குக் கொள்கையில் தாம் கொண்டிருந்த தீவிரப்பிடியைத் தளர்த்தினார். அதற்குக் காரணம் நாட்டில் பெரும்பான்மையினரான பார்ப்பனரல்லாதாருக்கு மதுவிலக்குத் திட்டத்தின் காரணமாகக் கல்வியிலும், பொருள்நிலையிலும் பெருங்கேடு ஏற்படும் என்று அவர் அஞ்சியதேயாகும். இராசாசி அவர்கள் 1937இல் சென்னை மாகாணப் பிரதமரான பிறகு, அவர் கொண்டுவந்த மதுவிலக்குத் திட்டத்தைப் பெரியார் தீவிரமாக எதிர்த்தார். திரு.இராசாசியின் அரசாங்கம் மதுவிலக்குத் திட்டத்தின் முதல் கட்டமாக 1937ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியது.

‘சேலம் மாவட்டத்திலுள்ள குடிப்பழக்க முள்ளவர்கள் வேறு மாவட்டங்களுக்கோ அல்லது மாவட்ட எல்லைக்கோ குடியேறிவிடுவார்கள். இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் மது கிடைக்கும் இடங்களுக்கு அடிக்கடி சென்று பொருளாதாரத்தில் நசித்துப் போவார்கள். ஆதலால் அரசின் இத்திட்டமானது முட்டாள்தனமானது’ என்றார் பெரியார். - என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் அவர். மதுவிலக்கைத் தமிழகத்தில் அமல்படுத்திய ராஜாஜி - கேரள மக்களிடம் பேசும்பேது மதுவிலக்கை அமல்நடத்தினால், - அரசுக்குப் பெருமளவு நட்டம் ஏற்படும். நட்டத்தை ஈடுசெய்யப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படும். சாலைகள் - பாலாறுகள் செப்பனிடப்படுவது நிறுத்தப்படும் என்று மதுவிலக்கினால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட்டார் என்பதையும் நினைவு கூர்ந்திருக்கிறார் நன்னன்.

அது வருமாறு, இராசாசி அவர்கள் மலையாள நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும்போது, மலையாளத்திலும் மதுவிலக்குத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரியபோது, மதுவிலக்குத் திட்டத்தினால் அரசாங்கத்திற்குப் பெருமளவு நட்டம் ஏற்படும் என்றும் அந்நட்டத்தை ஈடுசெய்யக் கல்லூரிகள், பள்ளிகள் மூடப்படவும் சாலைகள், பாலங்கள் செப்பனிடுவது நிறுத்தப்படவும் நேரிடும் என்றும் பேசியதாக ‘மெயில்’ பத்திரிகையில் வெளிவந்த செய்தி பெரியாருக்கு இராசாசி அவர்கள் தமிழ்நாட்டில் கொண்டு வந்துள்ள மதுவிலக்குத் திட்டத்தின் மீது சந்தேகத்தை உண்டாக்கியது.

பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடுவதற்குக் காரணங்காட்டவே இராசாசி சூழ்ச்சியாக மதுவிலக்குத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகக் கருதினார். “பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டால் மற்ற சமூகத்தில் படித்தவர்கள் என்பவர்களே இல்லாமல் போய்விடுவார்கள். பிறகு படித்தவர்கள் என்றால் பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் என்றால் படித்தவர்கள் என்று அகராதியிலேயே வியாக்கியானம் வந்துவிடப் போவது உறுதி” எனக் குடியரசில் தலையங்கம் எழுதி இராசாசியின் மதுவிலக்குத் திட்டத்தால் பார்ப்பனரல்லாதாருக்கு நேரப்போகும் அபாயத்தை உணர்த்தினார் பெரியார்.

மதுவிலக்குக்காக மாகாணம் முழுவதும் உள்ள எக்சைசு டிபார்ட்மெண்டில் 3 ஆண்டுகளுக்குக் கீழாகப் பணி செய்த ஊழியர்களை வேலையிலிருந்து விலக்கிவிட அரசாங்கம் திட்டமிட்டது. “மூன்று ஆண்டுகளுக்குள்ளாகத் தான் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவுப்படி (கம்யூனல் ஜி.ஓ. படி) 100க்கு 86 வீதம் அந்த இலாக்காவில் உத்தியோகத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாதார் அனைவரும் வேலையிழக்க நேரிடும். பார்ப்பனர்களோ பணக்காரர்களுடைய பிள்ளைகளுக்குச் சொந்த ஆசிரியர்களாக (பிரைவேட் டீச்சர்) ஆகிவிடுவார்கள். படிப்பு, உத்தியோக விசயத்தில் பார்ப்பனரல்லாதாருடைய கதி என்னாவது?” என்று மனம் வெதும்பினார் பெரியார்.

1939இல் சென்னை மாகாண அரசாங்கம் மதுவிலக்கைக் காரணங்காட்டிப் புதிய வரிகளைப் போட்டு மக்களுக்கு வரிச் சுமையை அதிகப்படுத்தியது. பெரியார் அதனைக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தார். மதுவிலக்கினால் ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்ய அரசாங்கம் முன்கூட்டியே புதிய வழிகளை ஏற்படுத்திக் கொண்டு அதற்குப் பின்னரே மதுவிலக்கை அமல்படுத்தியிருக்க வேண்டுமென்றும், மதுவிலக்கைக் காரணங்காட்டிப் புதுப்புது வரிகளைப் போட்டு ஏழை மக்களைத் துன்பப்படுத்துவது மகா பாவமென்றும், பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் விடுதலையில் வெளிவந்தது. என்று விளக்கமளித்திருக்கிறார் டாக்டர் நன்னன்.


இந்திய அரசியலில் மதுவிலக்குக் கொள்கையை அறிவிப்புச் செய்த அண்ணல் காந்தியடிகள், “நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுது வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கு நானே கடைக்குப்போய் சாராய வகைகளை வாங்கி வந்து பிரியமாய்க் கொடுத்திருக்கிறேன். மிருகங்களைப் போல வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு மது பானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது” என்று 12.6.1931இல் பரோடா சமத்தானத்திற்குச் சென்றிருந்தபோது தெரிவித்த தகவலையும் பெரியார் சுட்டிக்காட்டினார் என்பதையும் நன்னன் குறிப்பிட்டிருக்கிறார். குடிஅரசில், விடுதலையில் மதுவிலக்கை எதிர்த்து தந்தை பெரியார் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமா?

தி.மு.க. அரசு 1971ஆம் ஆண்டு மது விலக்கை தற்காலிகமாக ரத்து செய்தது. அதற்கு முன்பும், பின்பும் அது பற்றிப் பெரியார் நிறைவேற்றிய தீர்மானம், விடுத்த அறிக்கை என்ன என்பதையும் டாக்டர் மா.நன்னன் சுட்டிக் காட்டியிருக்கிறார். திருவாரூரில் நடைபெற்ற தஞ்சை மாவட்டத் திராவிடர் கழக மாநாட்டில் தமிழ்நாடு அரசாங்கத்தை மது விலக்கை ரத்து செய்யுமாறு கோரித் தீர்மானம் கொண்டுவரச் செய்தார். “நாட்டு மக்கள் மத்தியில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒழுக்கக்கேடான நிலையினை மாற்றி மக்களிடத்திலும் காவல் துறையினரிடத்திலும் ஒழுங்கு நிலைபெற உடனடியாக நம் தமிழக அரசு மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது” என்பதே அத்தீர்மானம்.

மத்திய அரசு மதுவிலக்குத் திட்டத்தை ஒரு தேசியக் கொள்கையாக அறிவித்து அதனை நாடு முழுவதும் அமல்படுத்தும் வரை சிறிது காலத்திற்கு மது விலக்கினைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென்று தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி 1971 ஆகஸ்டு 30 முதல் தமிழ்நாட்டில் மது விலக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்பதாக அரசு அறிவித்தது. தி.மு.க அரசின் இத்துணிகரச் செயலைப் பாராட்டி 22.6.1971 அன்று விடுதலையில் பெரியார் அவர்கள் தலையங்கம் தீட்டியிருந்தார். “மது விலக்குக் காரணமாகப் பெருமளவுக்கு மக்கள் ஒழுக்கமும், நாணயமும், அறிவும், பணமும், உடல் நலமும், வாழ்வின் வளர்ச்சியும், உடல் வலிவும் இழந்து அல்லல்பட்டுக் கிடந்த நிலை மாறும்படியான ஒரு நிலையை மிக்க அறிவாற்றலுடன் சிந்தித்துத் துணிந்து மாற்றிய பெருமையை நமது தமிழக ஆட்சி அடைந்தது குறித்து நான் பாராட்டுகிறேன்” என்பது பெரியாரின் பாராட்டுச் செய்தியாகும் என்று விளக்கமளித்திருக்கிறார் நன்னன்.


அதனால் என்ன? பெரியார் வழி எது என்று திராவிடர் இயக்கத்தினருக்கு புத்திமதி சொல்ல முன் வந்திருக்கும் அய்யர்வாள்களின் அதிகப்பிரசங்கித்தனம் நின்றுவிடுமா? நிறுத்திக்கொண்டு விடுவார்களா? அது அவர்களின் சாதிப்புத்தி ஆயிற்றே; நாய்வாலை யாராவது நிமிர்த்திவிட முடியுமா?


-------------------------நன்றி : முரசொலி 13.10.2008 நாளிதழில் சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய கட்டுரை

3 comments:

Unknown said...

மதுவிலக்கின் மூலம் கிடைத்த அனுபங்களை இக்கட்டுரை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது. குடிகாரர்களே குடிக்காமல் இருப்பதுதான் சரியான வழி.

தமிழ் ஓவியா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்

tamilan said...

கருணாநிதி தெலுங்கே தான். அதான் தமிழ்நாட்டு OBC இடஒதுக்கீடு பட்டியலில் ஒரே இந்தி தெலுங்கு பேசும் சாதிகள். 'பாப்பான்' தமிழ் இல்லை...இவன் தமிழ் இல்லை...அவன் தமிழ் இல்லை என அடிக்கடி பேச்சு அளிப்பவர்...அவரே தமிழ் இல்லை என்பது நிசப்தமான உண்மை. அர்ஜுன் சிங், வி பி சிங், இந்த சிங், அந்த சிங் போன்ற இந்தி தலைவர்களை தலையில் தூக்கி புகழ்ந்து பாடும் பாங்கில் போய்ட்டார் மு க.