Search This Blog

23.1.09

மாலேகாவ் வழக்கின் கதி என்ன?
மகாராட்டிர மாநிலம் மாலேகாவ் என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் - அதனைத் தொடர்ந்து பெண் சாமியார், முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகள் தொடர்பு எல்லாம் வெளியான நேரத்தில் நாடே அதிர்ந்து போனது.

இராணுவ அதிகாரிகளே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களே - இன்னும் இதுபோன்ற அதிகாரிகள் இராணுவத்தில் எத்தனைப் பேர்கள் இருக்கிறார்களோ - இன்னும் எத்தனை மாலேகாவ்கள் நடக்குமோ என்ற திகில்கூட நாட்டு மக்கள் மத்தியில் இருந்தது
.

மகாராட்டிர தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக ஹேமந்த் கார்கரே நியமிக்கப்பட்டு, அந்தத் துறை தீவிரமான, சிறப்பான பணிகளில் ஈடுபட்டு, உண்மையான குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

இந்தக் காலகட்டத்தில் மும்பைக் கலவரத்தில், மகாராட்டிர தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கார்கரே மற்றும் இரு அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற செய்தி திடுக்கிடும்படியாகி விட்டது.

இது ஒரு திட்டமிட்ட சதி என்று மத்திய அமைச்சர் அந்துலே போன்றவர்களால் பிரச்சினை எழுப்பப்பட்டது.


இந்த வழக்கின் கதி என்னாகும் என்ற கேள்விகூட நாட்டு மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் எழுந்து நின்றன.

அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் ஹேமந்த் கார்கரேயின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள கே.பி. ரகுவன்ஷி என்பவர் ஆர்.எஸ்.எஸ். சார்பானவர் என்றும், குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பர் என்றும், அந்தப் பதவிக்கு அவரை நியமிக்கக் கூடாது என்றும், அய்க்கிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் ஷிவானந்த் திவாரி குரல் கொடுத்துள்ளார்.

ஹேமந்த் கார்கரே அந்தப் பதவிக்கு அமர்த்தப்படுவதற்கு முன் அந்தப் பதவியில் இதே கே.பி. ரகுவன்ஷிதான் இருந்துள்ளார் - அந்தக் காலகட்டத்தில் அவரின் செயல்முறை எப்படியிருந்தது?

அப்போது அவர் கையாண்ட தீவிரவாத வழக்குகளிலும், முசுலிம்களை மட்டும் பிரதானப்படுத்தி, வழக்குகளை அந்தத் திசையில் நடத்தியவர் என்ற உண்மைகளும் தெரிய வந்துள்ளன.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது போன்றதான நடவடிக்கை இதுவாகும்.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இதுபோன்ற திரைமறைவு வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பது தெரிந்த ஒன்றாகும்.

அதுவும், மாலேகாவ் குண்டுவெடிப்பின் சதிபற்றிய பின்னணிகள் அதிரும்படி ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

லெப்டினன்ட் கர்னல் புரோகித்தும், சில சதியாளர்களும் இசுரேலில் கூடித் திட்டம் தீட்டினர்; ஹிந்து அரசுக்கு இணையான ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்தனர்.

இசுரேலிலிருந்து ஆயுதங்களை வாங்கும் அளவுக்கு சதியின் ஆழம் சென்றுள்ளது. தாய்லாந்திலும்கூட தொடர்பு இருந்திருக்கிறது என்பது போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

இவ்வளவு அபாயகரமான சதிகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான வழக்கினை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரிகளின் கைகளில் அல்லவா ஒப்படைக்கவேண்டும்?

பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இப்பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் என்பதைக் கவனத்தில் கொண்டு, வேறு பொருத்தமான அதிகாரியை நியமித்து, உண்மைக் குற்றவாளிகள் அதற்குரிய தண்டனையைப் பெறும் அளவுக்கு மகாராட்டிர அரசின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பாபர் மசூதி இடிப்பு வழக்குபோல மாலேகாவ் வழக்கும் இழுத்துக் கொண்டே போவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம.

------------------நன்றி:"விடுதலை" 23-1-2009

1 comments:

Unknown said...

மக்கள் மறந்துவிட்டதை நினைவு படுத்தி இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க ஆலோசனைகள் சொல்கிறது இக்கட்டுரை.