Search This Blog

17.1.09

ஜாதியாவது மண்ணாங் கட்டியாவது! அந்தப் பிள்ளைகள் யார் தெரியுமா?இந்த ஓர் இல்லம் தானே!சனவரி 11 மாலை 6 மணி திருச்சிராப்பள்ளி - ஜமால் மகம்மது கல்லூரி விளையாட்டு மைதானம் அந்தத் திடல் மக்கள் கடலாகக் காட்சி அளித்தது.

ஓர் ஒலி - ஒளிக்காட்சி அரங்கேறியது. எடுத்த எடுப்பிலேயே ஒரு மழலையின் அலறல்!

யார் பெற்ற பிள்ளையோ! அரவணைக்க ஆளில்லையோ! பாலூட்ட அன்னையில்லையோ, தூக்கிக் கொஞ்ச தோள் இல்லையோ - என்ற எண்ணம் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான நெஞ்சங்களிலும் ஏக்க அலை அடித்துத் துன்புறுத்தியது.

ஒரு மருத்துவமனை, செவிலியர் ஓடோடி வருகிறார், டாக்டர் டாக்டர் மருத்துவமனை குப்பைத் தொட்டியில் ஒரு குழந்தை! மருத்துவர் அதிர்ச்சி அடைகிறார்.

என்ன செய்வது! இந்தக் குழந்தையை யார் கையில் ஒப்படைப்பது? இப்பொழுது பிறந்த சிசுவாயிற்றே! மருத்துவர் மனம் அல்லாடுகிறது.

அந்தச் செவிலியர் அடுத்த கணமே தீர்வு கூறுகிறார்: பக்கத்தில்தான் பெரியார் மாளிகை இருக்கிறது. அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லம் இருக்கிறது. ஆம், அதுதான் சரியான இடம் - பாதுகாப்பான இடம் - எதிர்காலத்திற்கான நம்பிக்கையான இடம் என்று சொல்கிறார்.

அடுத்த காட்சி! பெண் குழந்தை - காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்யலாம்? கள்ளிப்பட்டி பண்ணையாரிடம் ஒப்படைத்து விடலாமா - பெற்ற அப்பனே யோசிக்கிறான்.

வேண்டாம் - வேண்டாம் - இது போன்ற பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடம் நாகம் மையார் இல்லம்தான்; அன்னை மணியம்மையாரிடம் ஒப்படைத்துவிடலாம் - கவலையை விடு!


மூன்றாவது காட்சி!

இசக்கிமுத்து குடிகாரன்! மனைவியையே கொலை செய்த ஆசாமி! இரண்டு பெண் குழந் தைகள் தவியாய்த் தவிக்கிறது! இதுகளை எப்படி கரை சேர்ப்பது? கேள்விக் குறியாய் நிற்கிறான்.

கடைசியில் அந்த இரு பெண் குழந்தைகளும் வந்து சேர்ந்த இடம் அன்னை மணியம் மையாரின் தோள்களில்தான்!

இதன் பின்னணியில் இல்லத்துப் பிள்ளைகளின் குழு நடனம் பொன் விழா காணும் இல்லம். இது நன்மைகள் புரிகிற இல்லம் தந்தை பெரியார் திறந்த இல்லம் தந்தையாய் தந்தை பெரியார் தாயாய் அன்னை மணியம்மையார் கண்ணெனக் காத்த இல்லம் எனும் பாடலுடன் அந்த இல்லத்துப் பிள்ளைகள் நடனமாடிய காட்சி கண்களை எல்லாம் குளமாக்கியது. யார் பெற்ற பிள்ளைகளோ! இந்த அம்மாவுக்கு என்ன வந்தது? ஏன் இப்படி தூக்கிச் சுமக்கிறார்கள்? என்ன பாடுபடுகிறார்கள் என்ற இரக்கவுணர்வு நெஞ்சைப் பிசைகிறது.

தாயில்லாப் பறவைக் கூட்டம் நாங்கள்

அன்னை மணியம்மையார்தானே

எங்கள் வேடந்தாங்கல்


என்ன அருமையான வரிகள்! இந்த வரிகளை அப்பிள்ளைகள் பாடி ஆடிய போது - நிசப்தம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது.

நடுநிசி கடந்தும் எமக்காய் விழிப்பார்!

அன்னை மணியம்மை அன்பின் எல்லை! அய்யா தந்த அதிசய முல்லை! என்று உருக்கமுடன் நடனமாடினர் அந்தப் பெண் முல்லைகள். அன்னையின் புன்னகையே உலகம்! எங்கள் நாகம்மையார் இல்லமே எங்கள் சரணா லயம்! என்ற அருமையான வரிகள் அமைந்த பாடலுக்கு நடனம்!

அடுத்த காட்சியில் கைக் குழந்தையுடன் ஒரு தாய் வருகிறார். அன்னைமணியம்மையிடம் ஒப்படைக் கிறார். கவலையை விடம்மா - இனி இது என் பிள்ளை என்று அந்தத் தாய் சொல் லுவதில்தான் எத்துணை பாச மழை!

இப்படிப்பட்ட ஓர் அன்னை அவர்களால் உருவாக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக இயங்கும் இந்த இல்லம் பற்றி நான்கு வரி களை எந்த ஏடுகளும் எழு தாது - காரணம் இது பெரியார் சம்பந்தப்பட்டதாயிற்றே!

நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லுகிற சங்கராச்சாரியார்களின் கூட்டம் எங்கே? அன்புக்கு முன் நாத்திகம் - ஆத்திகம் என்கிற சர்ச்சைக்கு இடம் இல்லை என்று கூறுகிற இந்த மனிதநேய இயக்கம் எங்கே?

அடுத்தடுத்து இந்த இல்லத்தில் வளர்ந்து படித்துப் பட்டம் பெற்று பெரு நிலைக்கு உயர்ந்துள்ள பிள் ளைகள் சிலர் அளிக்கும் பேட்டிகள்.

நான் இந்த இல்லத்தில் வளர்ந்து - படித்து - அதன் பின் பொறியியல் கல்லூரி யில் கல்வி கொடுக்கப்பட்டு, கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன் - என் துணைவர் சண்முகம் ஆடிட் டராக இருக்கிறார். எனது திரும ணத்தையும் இந்த இல்லம் தான் - வீரமணி அண்ணன் அவர்களும் மோகனா அக்காள் அவர்களும்தான் நடத்தி வைத் தனர் என்று நன்றியுணர்ச்சி பொங்கிட தழுதழுத்த குரலில் கூறிய பொழுது உணர்ச்சி வயப்படாதார் யார்?

ஈ.வி.ஆர்.எம். கலைமணி அந்தப் பொறியாளரின் பெயர்.

அடுத்து அறிவுமணி, நான்கு வயதில் இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்ட பெண்; நாகம்மையார் ஆசி ரியை பயிற்சிப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டு, இப் பொழுது ஆசிரியையாகக் கவுரவமாக வாழ்கிறார். அவரின் துணைவர் முருகேசன் அரசுப் பணியாளர்.

அந்த நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் காப்பாளராக இருக்கக் கூடிய அந்தத் தங்காத்தாள் - யார் தெரியுமா? சிறு வயதில் இந்த இல்லத்தில் வளர்க்கப் பட்டு, கல்வி அளிக்கப்பட்டு, பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் எழுத்தராகப் பணியாற்றியதுடன், அது வளர்ந்து அந்த இல்லத் திற்கே காப்பாளராக ஜொலிக்கிறார். விடுதியின் காப்பாளரும் அவரே! தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களே அந்த விழாவின் நிறைவு விழாவில் பெருமைப்பட பாராட் டினாரே - அது என்ன சாதாரணமா? எந்த அளவுக்கு அவரின் பணி மேம்பட்ட ஒன்றாக - பொறுப்பான தன் மையினதாக இருந்திருந் தால் அந்த மாபெரும் மக்கள் சமுத்திரத்தின் முன் - அதன் தலைவரால் பாராட்டு கிடைத்திருக்கும்!

ஒலி - ஒளி காட்சியில் காப்பாளர் தங்காத்தாள் தோன்றி நன்றி உணர்வுடன் கூறுகிறார்: ஒரு பெண் ணுக்குத் திருமணம் செய் வது என்றாலே எவ்வளவோ சிரமம். இந்த இல்லம் இது வரை 31 பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் - நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நண்பரிடம் கூறுகிறார்.

ஜாதிபார்க்க வேண்டாமா? மதத்தைப் பார்க்க வேண்டாமா? என்கிறார் அந்த நண்பர்.

ஜாதியாவது மண்ணாங் கட்டியாவது! அந்தப் பிள்ளைகள் யார் தெரியுமா? தந்தை பெரியாரின் பிள்ளைகள், அன்னை மணியம்மையாரின் பிள்ளைகள்! இதை விட எனக்கு என்ன பெருமை வேண்டும்? என்று கேட்கிறார், உண்மைதானே!

இந்த இல்லத்துப் பிள் ளைகள் பெயர்களின் முன்னெழுத்து என்பது ஈ.வெ. ரா.ம. - (ஈ.வெ. ராமசாமி - மணியம்மை என்பதாகும்)

தமிழர்கள் அனைவருமே தந்தை பெரியாரின் பிள்ளைகள்தான்! கட்சிகளுக்கு, ஜாதிகளுக்கு, மதங்களுக்கு அப்பாற்பட்டு அய்யாவை தந்தை பெரியார் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் பெயர்களுக்கான முன்னெழுத்து ஈ.வெ.ரா.ம. என்பது இல்லையே! அன்னை நாகம்மையார் இல் லத்துக் குழந்தைகளுக்குத் தானே இந்தப் பேறு கிடைத் திருக்கிறது!

நாட்டில் எத்தனையோ காப்பகங்கள் இருக்கலாம்; இல்லங்கள் இருக்கலாம்; ஆனால் இந்தத் தகுதியில், இந்தத் தன்மையில் ஒரே ஒரு இல்லமாக அன்னை நாகம்மையார் இல்லம்தானே இருக்கிறது!

நன்றியோடு நினைப்போம்!

வாழ்க பெரியார்

வாழ்க அன்னை நாகம்மையார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!

------------------- 17-1-2009 "விடுதலை" இதழில் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

பெரியாருக்கு பிள்ளைகள் இல்லை . ஆனால் பெற்று எடுக்காத பிள்ளைகள் ஏராளம் உண்டு. அந்தப் பிள்ளைகள் என்றும் சிறந்து விளங்கும்.