Search This Blog

26.1.09

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தது யார் ?
விடுதலைப்புலிகள் சாவைத் தலையில் வைத்துக்கொண்டு

ஜீவமரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றவர்கள்

தமிழர் தலைவர் உணர்ச்சிகரப் பேச்சு
மயிலாடுதுறையில் 3-1-2009 அன்று நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய (23.1.2009 அன்று விடுதலையில் வெளிவந்த) உரையின் தொடர்ச்சி வருமாறு:

இரண்டாம் உலகப் போர் வரலாறு

இரண்டாம் உலகப்போர் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். இலண்டன்மீது இட்லர் குண்டு போட்டான். அப்பொழுது சர்ச்சில் சொன்னார் - துணிவோடு londan will take it என்று. அதுபோல புலிகளை நாங்கள் அழித்து விட்டோம் என்று நீங்கள் நினைக்க முடியாது. அதனுடைய எதிரொலி கொழும்பில் உடனே கேட்டிருக்கிறது.

புலிகள் நடத்துவது கொரில்லா யுத்தம்

விடுதலைப்புலிகள் நடத்துவது கொரில்லா யுத்தம். கொரில்லா யுத்தத்திற்கு உலகத்தில் இந்த காலகட்டத்திலே முடிவெடுத்து விட்டோம் என்று சொல்லக்கூடிய நிலை இல்லை. எதற்காக இதைச் சொல்லுகின்றோம். என்னுடைய ரத்தம் 30 கல் தொலைவிலே இருந்தாலும் என்னுடைய தொப்புள் கொடி உறவு இருக்கிறதே.

நாங்கள் ஆடாவிட்டாலும்

நாங்கள் ஆடாவிட்டாலும் எங்கள் தசை ஆடும். நாங்கள் தமிழர்கள். எங்கள் உடலிலே ஓடுவது - தமிழ் இரத்தம் (கைதட்டல்). அந்த உணர்வினாலே நாங்கள் சொல்லுகின்றோம். இதற்காக நாங்கள் விலை கொடுக்க வேண்டும் என்று சொன்னால், இலவசமாகப் பெறாத நாங்கள் எதற்கும் விலை கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். அவ்வளவுதானே தவிர வேறொன்று மில்லை. நீண்ட காலத்திற்கு முன்னாலே படித்த பாடம்.

பத்துத் தடவை பாடை வராது

பத்துத் தடவை பாடை வராது

செத்து மடிவது ஒருமுறைதான்

செருக்களம் வாடா தமிழா


என்ற உணர்வோடு அங்கே போராடிக் கொண்டிருக்கின்றான். சிங்களவனே விடுதலைப் புலிகளிடம் இருந்து நீ எதைப் பிடித்தாய்? எந்த ஆயுதத்தை நீ பறித்திருக்கின்றாய்? அதே நேரத்தில் சிங்கள இராணுவத்திற்கு உலகத்தில் இருந்து வாங்கிய அத்துணை ஆயுதங்களையும், அவர்களிடமிருந்து பறித்த அத்துணைக் கருவிகளையும் வரிசையாகப் போட்டு, படம் எடுத்து வெளி உலகத்திற்குக் காட்டியிருக்கின்றானே

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதத்தை யார் கொடுத்தது?

இன்றைக்கு விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்களே, அந்த ஆயுதத்தை யார் கொடுத்தது? சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு விட்டுவிட்டுப்போன ஆயுதம்.

அவ்வளவு ஆற்றல்மிக்க ஒரு தலைமை அங்கேயிருக்கிறது. நம்மாட்களுக்கு விபரம் தெரியாதே. விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை அரசு தடை செய்யவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? குற்றம் சொல்லுகிறவர்களுக்காக இதைச் சொல்லுகின்றோம். கலைஞர் அவர்கள் ஒரு அனுதாபம் சொன்னார் மனிதநேய அடிப்படையிலே. அப்படியே துள்ளிக் குதிக்கிறான். கலைஞர் அவர்களுக்கென்ன பதவியிலே இருந்தாக வேண்டும் என்று அவசியமா? அவர் அய்ந்தாவது முறையாக முதலமைச்சராக ஆகியிருக்கின்றார். இங்கே பேசிய சகோதரர் கல்யாணம் அவர்கள் சொன்னார்களே.

கலைஞரைப்பற்றி ஒரு வரியிலே சொன்னாரே

ஒரு வரியிலே உங்களை விமர்சனம் செய்துகொள்ளுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபொழுது, மானமிகு சுயமரியாதைக்காரன் என்று கலைஞர் அவர்கள் சொன்ன வார்த் தையில் எல்லாமே அடங்கிப்போய் விட்டது.

நாங்கள் ஏன் இந்த உணர்வைப் பெற்றிருக்கின்றோம்? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றார்களே. இன ஒடுக்கல், இன அழிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

இங்கே இருக்கின்ற ஒரு அம்மையார் சில ஓட்டுக்கள் தேர்தல் நேரத்திலே தங்களுக்கு வரும் என்ற காரணத்தால் சிறுபான்மையினர் தங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அல்லது வேறு காரணத்திற்காக நினைக்கலாம்.

பாலஸ்தீனத்திற்கு அறிக்கை

பாலஸ்தீன நாட்டிலே இஸ்ரேல்காரன் குண்டு போட்டான் என்பதைக் கண்டித்து துணிச்சலுடன் அறிக்கைவிடக் கூடியவர்களுக்கு இன்றைக்கு நடந்திருக்கின்ற பிரச்சினைக்கு காலம் காலமாக நடந்திருக்கிறதே.

இவர்களைப்பற்றி பேசுவதற்கு ஏன் மனம் வரவில்லை?

எம்.ஜி.ஆர். உட்பட பலபேர் உதவிகளைப் பெற்ற ஓர் நிலையிலே ஏன் இவர்களைப்பற்றிப் பேசுவதற்கு மனம் வரவில்லை? நீங்கள் எங்கள் இனமில்லை. ஆகவே உங்களுக்கு மனமில்லை (கைதட்டல்). இதைத்தவிர வேறு என்ன? அற்பப் பதவிகளுக்காக கூட்டணிகள் உருவாக்கலாம். தமிழா நீ யாருடன் கூட்டு சேரவேண்டும் என்பதை மட்டும் முடிவு செய்.

பதவிக்காக அல்ல. இலட்சியத்திற்காக உன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக. உன்னுடைய சுயமரியாதையைப் புதுப்பித்துக் கொள்வதற்க. உன்னுடைய எழுச்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக நீ சிந்திக்கவேண்டாமா?

2500 கோடி ரூபாய் திட்டம்

தமிழ்நாட்டினுடைய 2500 கோடி ரூபாய் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். வாராது வந்த மாமணிபோல வந்த ஆட்சியினாலே நமக்குக் கிட்டிய திட்டம். கலைஞர் வகுத்த வியூகத்தினாலே. இதுவரை கனவுத் திட்டமாக இருந்தது.

இன்றைக்கு செயல் திட்டமாக மலருகிற காரணத்தால் இருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு, இல்லாத ராமன் பாலத்தை இடிக்காதே என்று சொல்லி இன்றைக்கு போய் சில கட்சிக்காரர்கள் நிற்கிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சிக்காரன் கூட

பாரதீய ஜனதா கட்சிக்காரன் கூட வேறு வழியை உண்டாக்கு என்று அவர்கள் கொஞ்சம் ஜகா வாங்கிக் கொண்டு சொல்லுகிறார்கள். ஆனால் அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டு அதே நேரத்தில் இந்த நாட்டு மக்களை நம்பிக் கொண்டு, நாங்கள் வழிகாட்டுவோம் என்று சொல்லக்கூடிய ஒரு பார்ப்பன அம்மையார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையிலே இரண்டுமுறை சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படவேண்டும், செயல்பட வேண்டும் என்று சொல்லி விட்டு, இன்றைக்கு அந்தத் திட்டம் செயல்படுகின்ற நேரத்திலே சேது சமுத்திர கால்வாய்த் திட்டமே கைவிடப்படவேண்டும் என்று சொல்லி மாற்று வழிகூட அல்ல, சேது சமுத்திரத் திட்டமே கைவிடப்பட வேண்டும் என்று சொல்லி நீதிமன்றம் வரையிலே சென்று வழக்கு போட்டு இன்றைக்கு அந்தத் திட்டத்தையே தாமதமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் தமிழர்களே - உங்களுடைய சிந்தனைக்கு இந்தக் கேள்வியை வைக்கின்றோம். எப்படிப்பட்டவர்கள் வரவேண்டும்?

தி.மு.க. பதவியில் இருந்தாலும்


இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பதவியிலே இருந்தாலும், பதவியிலே இல்லாவிட்டாலும் அது இன உணர்வுக்காக பாடுபடுகின்ற கழகம். ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை எண்ணிப் பாருங்கள் - உங்களுடைய எதிர்காலச் சந்ததியினரை எண்ணிப் பாருங்கள்..

இளைஞர்கள் எல்லாம் தீவிரவாதியாக ஏன் ஆகிறார்கள்? வேலை வாய்ப்பு இல்லை. அவனுக்கு சரியாக திசை காட்டக் கூடிய நிலை இருந்தால் அந்த இளைஞன் திசை திரும்புவானா? திசை திரும்பக் கூடிய இளைஞனுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டாமா?

வேலூர் வரை தொழிற்சாலைகள்

அதற்குத் தொழிற்சாலைகள் வேண்டாமா? இந்த ஆட்சியிலே நாளும் தொழிற்சாலைகள் - ஒரு பக்கம் ஒப்பந்தம் - காலையிலே. மாலையிலே - இன்னொரு தொழிற்சாலையை முதல்வர் கலைஞர் திறந்து வைக்கிறார் என்று சொன்னால் சென்னையிலிருந்து நீங்கள் வேலூர்வரை சென்று பாருங்கள்.

வழி நெடுக ஒப்பந்தங்களினாலே உருவான தொழிற்சாலைகள். அதேபோல் கடல்சார் பல்கலைக் கழகம். முதல்வர் ஒரு வேண்டுகோளை வைக்கின்றார். 2006-லே போட்ட தீர்மானம். சென்னை மக்களுக்கு குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம். மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்கிட வேண்டும் என்று கலைஞர் கேட்டார்.

மதிக்கிறார்கள்


அடுத்து இன்னும் நிதி வரவில்லையே என்று கேட்கின்றார். அடுத்தநாள் அமைச்சரவையிலே ரூ. 900 கோடி ஒதுக்கி அங்கிருந்து செய்தி வருகிறதென்று சொன்னால் என்ன நிலை?

தமிழகத்திலே இருக்கிறவர்களை டெல்லியிலே இருக்கிறவர்கள் மதிக்கிறார்கள். அங்கே இருக்கிறவர்களும் இங்கே இருக்கிறவர்களை மதிக்கிறார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட வர்கள் என்று சொல்லக்கூடிய நல்லுறவு இருக்கிறது.

கலைஞர் அவர்களுக்குத் தெரியும்

உரிமைக்குக் குரல் கொடுக்கின்றார். கலைஞரைப் பொறுத்த வரையிலே உரிமைக்குக் குரல் கொடுக்கவும் தெரியும், உறவுக்குக் கை கொடுக்கவும் தெரியும். ஆகவேதான் இரண்டும் சரியானபடி நடந்துகொண்டிருக்கின்ற காரணத்தால் எதை எப்பொழுது செய்வது? என்பதை அறிந்து அந்தப் பணியைச் செய்து கொண் டிருக்கின்றார்.

ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இங்குள்ள தமிழர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, எதிலும் நிதானமாக அவர்கள் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து, அதன்மூலம் ஒரு நிரந்தரப் பயன்பெற வேண்டும் என்று நினைக்கின்றார்.

விளம்பரத்திற்காக அல்ல

விளம்பரத்திற்காக வேகமாகப் பேசி அதி தீவிரமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது வேறு. ஆனால், காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? என்று சாதாரணமாகக் கிராமத்தில் கூடச் சொல்லுவார்கள். எனவேதான் ஏதோ கிளிநொச்சியைப் பிடித்து விட்டோம், எல்லாம் முடித்துவிட்டோம் என்று சொன்னால் பிறகு அவர்களுடைய பிரச்சினை தீர்ந்துவிட்டதா?

காலியான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள்

காலியாக இருக்கிற இடத்தைத்தான் பிடித்திருக்கின்றார்கள். ஆள் இல்லாத இடத்தைத்தான் பிடித்திருக்கின்றார்கள். இனி மேலும் பிரச்சினைகள் உண்டு என்று சொல்லக்கூடிய நிலையிலே யாரும் அதற்காக சங்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை.

மூன்று லட்சம் தமிழர்கள் காடுகளில்

ஆனால் தமிழன் என்றால் நாதியில்லாதவனா? மூன்று லட்சம் தமிழர்கள் காடுகளிலே - வனாந்தரங்களிலே வாழுகிறார்கள். அவர்களைப் பற்றி அல்லவா நாம் அதிகம் கவலைப்படு கின்றோம்.

புலிகளைப் பொறுத்தவரையிலே - அதன் தலைவரைப் பொறுத்த வரையிலே - தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்கள் வாழ்வோம் என்று களத்திற்கு வரவில்லை. சாவைத் தலையில் வைத்துக் கொண்டு ஜீவ மரணப் போராட்டத்தை அவர்கள் நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

இலட்சக் கணக்கிலே காடுகளிலே உணவின்றி பால் இன்றி, குழந்தைகள், தாய்மார்கள் வாடுகிறார்களே. அவர்களுடைய நிலை என்ன?

அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அந்த மண்ணுக்கு உரியவர்கள் அல்லவா? சிங்களவர்கள் அந்த நாட்டில் குடியேறிய வர்கள் அல்லவா? இந்த வரலாறே தெரியாமல் நம்மவர்கள் பேசுகிறார்கள்.

தமிழ் ஈழம் மக்களாலே கேட்கப்பட்டது

அதுமட்டுமல்ல, தமிழ் ஈழம் என்று பேசினாலே ஆகா, புலிகளை ஆதரிக்கிறவர்கள் என்று சிலர் சொல்லுகின்றீர்களே. தமிழ் ஈழம் என்பது புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. அதற்கு முன்னாலேயே தேர்தல் பிரச்சினையிலேயே தந்தை பெரியார் அவர்களாலே அங்குள்ள மக்களாலே கேட்கப்பட்டது. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வேறு வழி யில்லை. கோழியும் தன் குஞ்சுகளை கொல்லவரும் வான் பருந்தை வீழ்த்துதற்கு அஞ்சாது தொல் புவியில் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சொன்னார்கள்.

தாய்க்கோழி தனது குஞ்சுகளுடன் செல்லுகிறது. மேலே பறந்துகொண்டிருக்கின்ற பருந்து, குஞ்சுகளை தூக்கிச் செல்ல முயலும்பொழுது, தாய்க் கோழி ஓடிவந்து தனது குஞ்சுகளைப் பாதுகாத்து, பருந்தை விரட்டும்.

அதுபோல குஞ்சுகளைப் பாதுகாக்கின்ற தாய்க்கோழிகள் போல விடுதலைப்புலிகள் வந்து நிற்கிறார்கள் என்று சொன்னால் (பலத்த கைதட்டல்) பருந்தை எதிர்த்து தாய்க்கோழி போராடிக் கொண்டிருக்கிறது.

குரல் கொடுப்பது குற்றமா?

ஆனால், அந்தக் கோழிக் குஞ்சுகளுக்காக நாம் குரல் கொடுப்பது கூட குற்றம் என்று சொன்னால், அந்தக் குற்றத்தை செய்வதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருப்போம் (கைதட்டல்). தயாராக இருப்பது மட்டுமல்ல, அதற்குரிய தண்டனையிலிருந்து நாங்கள் தப்பிவிட வேண்டும் என்று நினைக்கமாட்டோம். தண்டனையையும் அனுபவிப்போம். அதற்காக நிலம் கேட்டு மனு போடமாட்டோம். தியாகத்தை விலை பேசிப் பழக்கமில்லை எங்களுக்கு. எனவேதான் தமிழர்களே! இன உணர்வுள்ளவர்களாக மாறுங்கள்.

மனிதத் தன்மை நிலைக்கவேண்டும்


அது எங்களுக்காக அல்ல. உங்களுக்காக. தமிழா இன உணர்வு கொள். தமிழா தமிழனாக இரு. குறைந்த பட்சம் மனிதனாக இரு. தமிழனாக இருக்க மனமில்லாதவன், மனிதனாக இருக்கட்டும்.

மனிதத் தன்மை நிலைத்தால்தான் உலகத்தில் மிருகத்திற்கும், நமக்கும் வேறுபாடு இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள முடியும். ஒரு குருவி தனக்கு மட்டும் தான் கூடு கட்டும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு வீடு கட்டுகிறானே அவன்தான் சமுதாயப் பிராணி.

எனவேதான் அந்த மனித சமுதாயத்திலே நாம் வாழுகிறோம் என்று காட்டுவதற்காக தமிழனாக இருங்கள் - தமிழனாக உயருங்கள். மருந்து நாம் சாப்பிடுகிறோம். யாருக்காக டாக்டர் எழுதிக் கொடுத்து விட்டார் என்பதற்காகவா? இல்லை மருந்துக் கடைகளிலே வியாபாரம் நடக்கவேண்டும் என்ற ஜீவகாரண்யத் திற்காக - பரந்த மனப்பான்மைக்காகவா? அல்ல - நம்முடைய நோய்க்காக.

எனவே தமிழர்களே, உங்களைப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக உங்கள் அறிவை சுதந்திர அறிவாக விட்டு, உங்களிலே விஞ்ஞானிகள் வருவதற்கு, உங்களிலே மிகப் பெரிய வரலாற்று ஆசிரியர்கள் உருவாவதற்கு உங்களுடைய எதிர்காலத்திலே சிறந்த அறிஞர், மாமேதைகள் உருவாவதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு முதுகெலும்போடு நிற்கக்கூடிய அளவிற்கு, ஆற்றல் வருவதற்கு இந்த இயக்கம் தேவை. எனவே தமிழர்களே, தமிழர்களே, தமிழனாக இருங்கள். தமிழா இன உணர்வு கொள் என்பதை எங்கும் முழங்குங்கள்.

இது கட்சிப் பிரச்சினை அல்ல

இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல. இது ஒரு கட்சியினுடைய ஒலி முழக்கம் அல்ல. ஒரு இனத்தின் உரமைக் குரல் - மறந்துவிடாதீர்கள் என்று சொல்லி உங்களுக்கு நன்றி கூறி எனது உரையை முடிக்கின்றேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

------------------- நன்றி:- "விடுதலை" 26-1-2009

3 comments:

Unknown said...

//விடுதலைப்புலிகளுக்கு ஆயுதத்தை யார் கொடுத்தது?

இன்றைக்கு விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்களே, அந்த ஆயுதத்தை யார் கொடுத்தது? சிங்கள இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு விட்டுவிட்டுப்போன ஆயுதம்.//

திரு. வீரமணி அவர்களின் சொற்பொழிவைப் படிக்கும் போது பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

Senthilkumar said...

கருனா = கருனா (தி.மு.க தலைவர்).
வரும்காலத்தில் இந்தியா எங்கே இருக்கிறது என்றால் ஈழ நாட்டுக்கு பக்கத்தில் என்று சொல்லும் காலம் நிச்சயம் வரும்.ஈழம் வெல்லும் இதை நாளை உலகம் சொல்லும்

தமிழ் ஓவியா said...

நன்றி தமிழ்,

நன்றி செந்தில்குமார்