Search This Blog

23.1.09

அய்யோ! சிங்கள இராணுவக் குண்டுவீச்சால் எங்கள் தமிழினம் பூண்டோடு அழிகின்றதே!
அய்யோ! சிங்கள இராணுவக் குண்டுவீச்சால்
எங்கள் தமிழினம் பூண்டோடு அழிகின்றதே!

உடனடியாக போர் நிறுத்தம் செய்ய ஆவன செய்க!
இதுவே எங்கள் இறுதி வேண்டுகோள்!!

தமிழக சட்டமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்தி
முதலமைச்சர் முன்மொழிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்


சிங்கள இராணுவத்தால் பூண்டோடு அழிக்கப்படும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட, அங்கு போரை நிறுத்தச் செய்ய இந்திய அரசு ஆவன செய்யவேண்டும் என்று கேட்டு தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் கலைஞர் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தார். விவரம் வருமாறு:

முதலமைச்சர் கலைஞர்:-

பேரவைத் தலைவர் அவர்களே, இலங் கையில் நடைபெறுகின்ற இன வெறிப் போராட்டம் நிறுத்தப் பட வேண்டும் என்பது குறித்து இந்த அவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நண்பர் ரவிக்குமார், இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நண்பர் கோவிந்தசாமி, ம.தி.மு.க. சார்பில் நண்பர் ராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நண்பர் ஜி.கே. மணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நண்பர் பீட்டர் அல்போன்ஸ், அ.இ.அ.தி.மு.க. - பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நண்பர் செங்கோட்டையன் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை எடுத்துக்கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தீர்மானம் அவசர அவசியமாக இன்றைக்கு இந்த மாமன்றத்திலே விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் விரும்பியதற்குக் காரணமே - கடந்த காலத்தில் பலமுறை சட்டப் பேரவையிலும், அனைத்துக் கட்சித்தலைவர் களின் கூட்டத்திலும் ஒவ்வொரு கட்சியினுடைய பொதுக் கூட்டங்களிலும், நிர்வாகக் குழு கூட்டங்களிலும் - எடுத்துரைத்த மிக முக்கியமான தீர்மானமாக இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்கின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை கடைசியாக ஒருமுறை இன்றைக்கு மத்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான். இதை ஏன் கடைசியாக ஒரு முறை என்று நான் குறிப்பிட்டேன் என்றால் - பலமுறை இந்த அவையில் இது போன்ற தீர்மானங்கள் கட்சி மாச்சரியங்களுக்கு இடம் இல்லாமல் இந்தத் தீர்மானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு இதுதான் நேரம் என்று ஒருவரையொருவர் மறை முகமாகவோ, ஜாடையாகவோ, நேரடியாகவோ தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், வாய்மையோடு வாதத்திலே ஈடுபட்டு, நம்முடைய கோரிக் கையை மத்திய அரசுக்கு எடுத்து வைத்திருக்கிறோம்.

இலங்கையில் நடைபெறுகின்ற போர் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கையினுடைய முக்கிய மான குறிக்கோள். அதை விட்டு எள்முனை அளவும் பிறழாமல், பேசவேண்டுமென்று நான் காலையிலே நம்முடைய நண்பர் களையெல்லாம் கூட வேண்டிக்கொண்டேன். சற்று அங்கு இங்கு அந்தத் தடம் மாறினாலுங்கூட - தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றவேண்டும், தமிழர்களை இலங்கைத் தீவிலே பாதுகாக்க வேண்டும், அவர்களைக் காத்திட வேண்டும் என்ற அந்த உணர்வு ஒரு மைய இழையாக ஓடிக்கொண்டிருந்த காரணத்தால் - நான் எதிர்பார்த்தவாறு அல்லது வேறு சிலர் எதிர்பார்த்தவாறு எந்த விதமான சங்கடங்களும் இல்லாமல் நாம் நம்முடைய கருத்தை இந்தத் தீர்மானத்தின் மூலமாக வலியுறுத்துகின்ற கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

1939-இல் நேரு கூறியது என்ன?

ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1939ஆம் ஆண்டு - ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். இண்டியன் இன் சவுத் ஏசியா என்ற நூலில் - அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக் கிறது. அதிலே இந்தியாவுக்கு வெளியே வாழுகின்ற இந்தியர் களைப் பற்றி - அப்போது நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரு அனுப்பிய செய்தி அது. அதிலே -

“It was in 1939 that Jawaharlal Nehru in a message to the Indian National Congress said that, “India is weak to day; and cannot do much for her children abroad. But she does not forget them and every insult to them is humiliation and sorrow for her. A day will come when her long arm protection and her strength will compel Justice for them.”

இது 1939ஆம் ஆண்டு நேரு அவர்கள் தேசிய காங்கிரஸ் கூட் டத்திற்கு அனுப்பிய செய்தியிலே உள்ள அழுத்தந்திருத்தமான உறுதிமிக்க வெளிநாட்டிலே வாழுகின்ற இந்தியர்களைப் பற்றி தமிழர்கள் உட்பட அனைவரையும் பற்றி அவர் கூறிய வாசகம்.

இந்தியா இன்று பலவீனமாக உள்ளது. அது வெளிநாட்டில் வாழும் தனது மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ளது. ஆனால் இந்தியா அவர்களையும், அவர் களுக்கு ஏற்படும் துயரத்தையும் இழிவையும் மறப்பதில்லை. ஒரு நாள் வரும் - அன்றைக்கு இந்தியாவின் பாதுகாப்பு கரம் நீளும் - அதன் வலிமையினால் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நேரு அவர்கள் 1939ஆம் ஆண்டு சொன்னதைத் தான் இப்போது நான் வலியுறுத்துகிறேன். நீதி கிடைப்பதற்கு ஜவகர்லால் நேரு அவர்கள் எந்த இந்தியாவிலே முதல் பிரதமராக பொறுப் பேற்றாரோ - அந்த இந்தியத் திருநாடு இப்போது முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்வதற்காகத் தான் நேருவின் அந்த வாசகத்தை நினைவுபடுத்தி - நான் என்னுடைய தீர்மானத்தை முன்மொழிய விரும்புகிறேன்.

பேரவைத் தலைவர் அவர்களே, இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. அய்.நா. மன்றம் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்ற கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.


அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத் தார்கள் என்ற செய்தியும்கூட அறவே அற்றுப் போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே - பூண்டோடு அழிகின்றனரே - மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங் கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் நாம் வாழு கிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற உரிமையோடு எதிர்பார்க் கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பைக் களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக் களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவுகொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும் உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக் களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும்போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டு தானே; இலங்கையில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கை யில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.


எனவே, அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன் றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மான மாக இதனை நான் முன்மொழிகிறேன்.

----------------நன்றி: "விடுதலை" 23-1-2009

1 comments:

Unknown said...

ஈழத்தில் அழுகையொலி கலைஞரின் சிரிப்பொலி


ஈழ்த்தின் எல்லா தமிழ்ர்களும் விரைவில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படும். இன்னும் சில வாரங்களுக்கு பிறகு ஈழ்த்தில் தமிழர் மீதான போர் முடிந்துவிடும் ஒருவரும் மீதம் இல்லாததால். நாம் எல்லோரும் கலைகரின் சிரிப்பொலி தொலைக்காட்சி கண்டு மகிழ்வோடு இருப்போம்.