Search This Blog

2.1.09

ஆர்.எஸ்.எஸ்.சின் சித்து வேலை




ஆறு மாநில சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்து முடிந்த தில் இரண்டில் பா.ஜ.க., வெற்றி பெற்றுவிட்டது. எனவே பா.ஜ. கட்சியின் விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் தான் காரணி என்றும் பா.ஜ. கட்சித் தொண்டர்களுடன் ஆர்.எஸ்.எஸ். ஆள்களும் இணைந்து பணியாற்றியதுதான் காரணி என்றும் சிலர் கருதுகிறார்கள். இரு மாநில முதல் அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் தாங்கள் தொடர்பு கொண்டிருப் பதைத்தான் முதன்மைப்படுத்தினரே தவிர, தங்களைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இந்த நிலை ராஜஸ்தானிலும், டில்லியிலும் காணப்படவில்லை.

இதனாலேயே, பா.ஜ. கட்சியின் அத்வானி, ராஜ்நாத்சிங், வெங்கய்ய நாயுடு ஆகியோர் வெள்ளிக்கிழமை (2.1.2009) ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத்தைச் சந்திக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். புள்ளிகளை பா.ஜ. கட்சிக்கு மேலும் கடனாக அளித்துப் பதவியில் அமர்த்த வேண்டும் என விரும்புகிறார்கள்.

சுதேசி ஜாக்ரான் மஞ்ச் அமைப்பின் முன்னாள் தலைவர் முரளிதர் ராவ் என்பவர் ராஜ்நாத் சிங்குக்குப் பலமாக உட்கார்த்தி வைத்துவிட்டால் ஆர்.எஸ்.எஸ். நேரடித் தொடர்பையே வைத்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறார்கள். முன்பு வாஜ்பேயி அரசில், தாராளமயமாக்கல் பற்றி மோதல் ஏற்பட்டதுபோல் மீண்டும் ஏற்படாமல் தடுக்க இந்த ஏற்பாடாம்.

பா.ஜ. கட்சியின் அமைப்புப் பணிகளைப் பார்க்கும் பொதுச் செயலாளர் உள்பட எல்லா மாநிலப் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது நினைவு கூரத்தக்கது இந்த முடிவுகளை எடுப்பதற்காகவே பா.ஜ. கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 6 முதல் 8 வரை என்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆக, அங்கிங்கெங்கணாதபடி எங்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நிறைந்த கட்சியாக பா.ஜ. கட்சி மாறிக் கொண்டிருக்கிறது.

------------------நன்றி: "விடுதலை" 2-1-2009

0 comments: