Search This Blog

1.1.09

கவலையை ஒழிக்க கடவுளை ஒழி<



இன்று ஆங்கிலப் புத்தாண்டான 2009 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது.ஒவ்வொரு ஆண்டும் சவால்கள் நிறைந்த ஆண்டாகத்தான் வந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு காரணங்கள் பல இருந்தாலும் குறிப்பாக நாம் இல்லாததை இருப்பதாக நினைத்துக் கொண்டு கட்டி அழுது கொண்டிருக்கும் கடவுள் ஜாதி,மதம் போன்ற அத்தனையையும் மறந்து விட்டு மனிதநேயம் மலர நம்மாலான பங்களிப்பை அளித்து மகிழ்சியும் மனநிறைவும் அமையும் ஆண்டாக உருவாக்குவோம். மிக்க நன்றி.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

---------------------தமிழ் ஓவியா


---------------------------------------------------------------------------------------

"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

-------------------------------------------------------------------------------
கடவுள்

உலக மாறுதலை வளர்ச்சிக்கும் பயன் படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு, கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள் - கடவுள் சக்தி - கடவுள்செயல் என்பவவை போன்ற முட்டாள்தனமான கருத்துக்களும் நம்பிக்கையுமேயாகும்.


கடவுள் எண்ணமோ, மனித சக்திக்கு மேம்பட்ட தெய்வீக சக்தி என்கின்ற எண்ணமோ மனிதனுக்கு இல்லாமல் இருந்திருக்குமானால், இன்று மனிதன் குறைந்தது இந்த மூவாயிரம் - நாலாயிரம் ஆண்டுகளில் அவனது அறிவின் பயனாய், சிந்தனா சக்தியின் பயனாய் 500 ஆண்டுகளாவது உயிர் வாழத்தக்க தன்மையை அடைந்திருப்பான் இறக்கை இல்லாமலேயே ஆகாயத்தில் பறக்கும் சக்தியை அடைந்திருப்பான் என்பதோடு, கவலை இல்லாமலேயே வாழுந் தன்மையையும் அடைந்திருப்பான்.


சர்வ சக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது. எல்லாம் கடவுள்செயல் எனக்கருதும் மக்களில் யாருக்கு துக்கமும் ஏமாற்றமும், கவலையும் இல்லாமல் இருக்க முடிகிறது?

கவலையை ஒழிக்க கடவுளை ஒழி

எனவே, மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்கு துக்கமும் கவலையும் இல்லாமல் இரும்பதற்கும், “சர்வ சக்தி”க் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்தாக வேண்டும்.


கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதைவிட உலகில் ஜீவகாருண்யத் தன்மை வேறு இல்லை என்றே சொல்லுவேன்.

மோட்சம், என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், ‘ துக்கநாசம் சுக ப்ராப்தி’’ என்றுதான் சொல்லப்படுகிறது.

ஞானிக்கு கடவுள் இல்லை

இச்சொல்லுக்கு ஆதாரப் பூர்வமான பொருளும் இதுவாகத்தான் இருந்து வருகிறது. இந்நிலைக்கு அறிவுதான் காரணம். அதாவது, ஞானந்தான் என்றும் காணப்படுகிறது. இதனாலேயேதான்,”ஞானிக்குத் துக்கமில்லை-கவலையில்லை” என்று சொல்லப்படுவதோடு,

ஞானிக்குக் கடவுளும் இல்லை; கல்லெடுப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.


ஞானி என்றால் என்ன பொருள்? அவன் யார் என்று பார்த்தால் - ஞானமுடையவன் ஞானி; புத்தியுடையவன் புத்தன் - அறிவை உடையவன் அறிவன் என்பதாகும் இவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமல் போனதற்குக் காரணமென்ன?

கடவுள் காணாது போனதேன்?

அறிவையோ, புத்தியையோ, ஞானத்தையோ கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள்என்ற சொல்லே தென்படுவதற்கு இல்லாமல் போய் விடுகிறது. ஞானிக்குக் கடவுள் இல்லை என்பது மாத்திர மல்லாமல், “துறவிக்கு கடவுள் இல்லை” என்று சொல்லப் படுகிறதல்லவா? அதன் பொருள் என்ன? துறவி என்றால் ஆசை அற்றவன். பற்று அற்றவன் என்பதுதான் பொருள். துறவிக்கு ஆக வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. அவனுக்கு எதைம்பற்றியும் ஆசை இல்லை. ஆனதால், அவனுக்கு கடவுளைப் பற்றிய கவலை இல்லை என்பதோடு அவனுக்கு கடவும் தேவையும் இல்லை; இயற்கையோடு இயைந்து கொள்ளுகிறான்.


மனிதத் தன்மைக்கு.....


எனவே, இயற்கையை நல்ல வண்ணம் உணர்ந்து கொள்ளுவது, அதற்கேற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவுதான் முன் குறிப்பிட்ட ஞானமாகும் எனவே பகுத்தறிவு பெற்ற மனித சமுதாயம் “மனிதத்தன்மை” அடைவதற்கு பகுத்தறிவுவாதியாக, அதாவது,பஞ்சேந்திரியங்களுக்கு புலப்படாத, தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை அதை எவை ஆனாலும், சிந்திக்காமலும், அவற்றைப்பற்றிக் கவலைப்படாமலும் இருப்பதுதான் மனிதத் தன்மையாகும்.

-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 10-11

4 comments:

Unknown said...

எனக்கு பெரியாரின் கொள்கைகள் மீது அளவில்லா மதிப்பு உண்டு. ஆனால் என்னால் விரிவாக பெரியாரின் கொள்கைகளை அறிய முடியவில்லை. சில வேளை எனக்கு இப்போது தான் 19 வயது என்பதால் இனி தான் அறிய முடியுமோ தெரியவில்லை.
உங்களின் வலைப் பூவைப் படிக்கக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
நன்றி.
புதுவருட வாழ்த்துக்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

மிக்க நன்றி.

Unknown said...

உங்களின் வலைப் பக்கம் பெரியாரின் கருத்துக்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
வாழ்த்துக்கள் தமிழ் ஓவியா

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்