Search This Blog

5.1.09

ஆரியப் பார்ப்பனர்களின் ஊடுருவலைத் தடுக்கும் தடுப்பரண் திராவிடர் என்பதுதான்!


திராவிடர் உணர்வைப் பெறுவோம்!

3.1.2009 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாடு பல வகைகளிலும் முத்திரையைப் பொறித்தது; பொதுமக்கள் மத்தியிலே சிந்தனை விதைகளை விதைத்தது. மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

திராவிடர் எழுச்சி மாநாடு - இந்தக் காலத்திற்கு மிகவும் தேவையானது. திராவிடர் என்பதைப் பார்ப்பனர்களும், சங்பரிவார்களும், சங்கராச்சாரியார்களும் கொச்சைப்படுத்துகின்றனர் என்றால், ஆரியராவது, திராவிடராவது என்று விதண்டாவாதம் பேசுகின்றனர் என்றால், பார்ப்பனர் அல்லாதாராக உள்ள சில தமிழர்களும் திராவிட என்பதைக் கொச்சைப்படுத்துகின்றனர். இதன் தன்மையைக் கருத்தில் கொண்டுதான் ஒரு முக்கிய தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

அண்மைக்காலமாக திராவிடம் என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றும், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் திட்டமிட்ட வகையில் ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இது ஒரு வகையில் பார்ப்பனர்களை நமது சமூக அமைப்பில் ஊடுருவச் செய்வதில்தான் முடியும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.

திராவிட இயக்கத்தின் பார்ப்பன எதிர்ப்பும், பிரச்சாரமும், போரட்டங்களும், தொண்டுகளும்தான் தமிழர்களுக்கு பொதுவான உரிமைகளையும், கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இடத்தையும் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல், ஆரியப் பார்ப்பனர்களின் பண்பாட்டுப் படையெடுப்பையும் முறியடித்திருக்கிறது என்கிற வரலாற்று உண்மையை இம்மாநாடு திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறது. தமிழ்மொழி வளர்ச்சிக்கும், திராவிட இயக்கம்தான் அளப்பரிய தொண்டினைச் செய்திருக்கிறது என்பதையும் இத்திராவிடர் எழுச்சி மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானத்தில் மிகச் சரியாகக் குறிப்பிட்டபடி திராவிடர் என்ற வரலாற்று ரீதியான இனப்பெயரை நீக்கினால் அது பார்ப்பனர்களுக்கு மிகவும் வசதி செய்து கொடுக்கவே பயன்படும்.

வரலாற்றில் ஆரியர் - திராவிடர் என்பது நிலைபெற்ற ஒன்றாகும். ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பது வரலாற்று நெடுக நடந்த - நடந்துகொண்டிருக்கின்ற ஒன்றுதான்.

சமுதாயப் பிரச்சினைகளில் மட்டுமல்ல - அரசியலிலும் அந்த நிலை உண்டு. தேர்தல்கள் அந்த அடிப்படையில் நடந்தும் வருகின்றன.

இந்து மதம் என்ற அடிப்படையில் ஆரியப் பார்ப்பனர்கள் பிறப்பின் அடிப்படையிலேயே உயர்ந்த நிலையினர் என்றும், திராவிடர்களாகிய நாம் சூத்திரர்கள் என்றும் ஒரு நிலையை அடித்தளத்தில் வைத்து ஒரு சமூக அமைப்பு உருவாகி ஒரு நிலையை மிக வஞ்சகமாக இந்து மதத்தின் பெயரால் உருவாக்கி வைத்துள்ளனர்.

நான்காம் பிரிவினரான சூத்திரர்களாக நம்மை ஆக்கியதோடு சூத்திரர் களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கலாகாது என்பதையும் கண்டிப்பாக வகுத்து வைத்துச் செயல்படுத்தும்படிச் செய்துவிட்டனர்.

திராவிட அரசர்களேகூட, பார்ப்பனர்களை மதியுரைஞர்களாக தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் வகுத்த - ஒரு குலத்துக்கொரு ஒரு நீதி கூறும் மனு நீதியை ஆட்சியின் சட்டமாகவே அமலும் படுத்தினர்.

இந்த நிலையை நிர்மூலமாக்க உற்பத்தி செய்யப்பட்டதுதான் திராவிட இயக்கம். ஆரிய மதத்தை அதன் சாத்திரங்களை, இதிகாசங்களை, புராணக் குப்பைகளை, கடவுள்களை பகுத்றிவுச் சபையில் நிறுத்தி அம்பலமாக்கி, திராவிட இன மக்கள் மத்தியில் தன்மான உணர்வையும், பகுத்தறிவு எழுச்சியையும் ஏற்படுத்தியிருப்பதை யார்தான் மறுக்க முடியும்?

தமிழ்மொழியில் ஊடுருவிய ஆரிய சமஸ்கிருத ஆபத்தை விலாவாரியாக எடுத்துரைத்த இயக்கமும் திராவிட இயக்கமே!

சமஸ்கிருத மயமாகிக் கிடந்த தமிழை விடுவித்து, தமிழில் உரையாடல், தமிழில் தமிழர் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள், தமிழில் மறுமலர்ச்சி இலக்கியங்கள் - அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்ததே திராவிட இயக்கம்தானே!

இந்த நிலையில், திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதும், திராவிடம் என்பது கூடாது என்றும் மனம்போன போக்கில் பேசும், எழுதும் சக்திகளை அடையாளம் காட்டும் தீர்மானம் அது. மாநாட்டின் பெயரே திராவிடர் எழுச்சி மாநாடு என்பது மேலும் பொருள் பொதிந்ததாகும்.

பார்ப்பான் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளக்கூடத் தயாராக இருப்பான்; அதேநேரத்தில், கிறுக்குப் பிடித்த பார்ப்பான்கூட தன்னை திராவிடன் என்று கூற முன்வரமாட்டான்.

ஆரியப் பார்ப்பனர்களின் ஊடுருவலைத் தடுக்கும் சரியான தடுப்பரண் என்பது வரலாற்று ரீதியான உண்மை திராவிடர் என்பதுதான்! நாம் வைக்கும் பெயரிலே தூசுகூட உள்ளே நுழையாமல் இருப்பதற்கான வசதியிருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் மிகவும் கறாராகவே கூறியிருக்கிறார்.

வரலாற்றில் ஆரியப் பார்ப்பனர்களால் நம் மக்கள் அனுபவித்த கொடுமைகள் போதும், போதும்! இவ்வளவு போராடியும் இன்னும்கூடப் பலதுறைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது.

கோயில்களுக்குள் தமிழர்கள், தமிழ் உள்ளே அதிகாரப்பூர்வமாக நுழைந்தாலும், இன்னும் முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்! இவர்களைப் பிரித்து அடையாளம் காட்டாதவரை நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்றும் நம் மக்கள் உணர்ந்துகொள்ள, அதன் அடிப்படையில் சரியான பாதைகளைத் தேர்வு செய்ய, வரலாற்று ரீதியான எதிரிகளான பார்ப்பனர்களை அடையாளம் காட்ட, நமது அடையாளம் திராவிடர் என்பதாக இருக்கவேண்டும்.

திராவிட என்ற இனச்சொல் எல்லா வகையிலும் அந்நிய ஆதிக்கத்தை - ஊடுருவலை எதிர்க்கும் குறியீடாகும். வரலாற்றில் ஆரிய ஊடுருவலால் பவுத்த மார்க்கமே இந்தியாவிலிருந்து துடைத்து எறியப்பட்டு விட்டது என்கிற உண்மையை உணர்ந்தவர்களால்தான் திராவிடத்தின் அருமையைப் புரிந்துகொள்ள முடியும்.

மயிலாடுதுறை மாநாடு அந்த வகையில் தமிழர்களுக்கு உணர்வூட்டும், கருத்தூட்டும் ஓர் அருமையான கடமையைச் செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.


--------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 5-1-2009

2 comments:

Unknown said...

//பார்ப்பான் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளக்கூடத் தயாராக இருப்பான்; அதேநேரத்தில், கிறுக்குப் பிடித்த பார்ப்பான்கூட தன்னை திராவிடன் என்று கூற முன்வரமாட்டான்.

ஆரியப் பார்ப்பனர்களின் ஊடுருவலைத் தடுக்கும் சரியான தடுப்பரண் என்பது வரலாற்று ரீதியான உண்மை திராவிடர் என்பதுதான்! நாம் வைக்கும் பெயரிலே தூசுகூட உள்ளே நுழையாமல் இருப்பதற்கான வசதியிருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் மிகவும் கறாராகவே கூறியிருக்கிறார்.//

மிகச்சரியாகவே கூறியிருக்கிரார்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்