Search This Blog
4.1.09
பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்
பா.ஜ.க.வில்-ஆர்.எஸ்.எஸின் ஆதிக்கமாம்!
வட மாநிலங்கள் சிலவற்றில் வெற்றி பெற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி - நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சில புதிய யுக்திகளைக் கையாளவிருக்கிறதாம். அதுதான் - ஆர்.எஸ்.எசுக்கு - அதன் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். தேர்தல் வியூகங்கள் வகுப்பது - பிரச்சாரம் செய்வது உள்பட ஆர்.எஸ்.எஸின் கை ஓங்கும் என்பது இதன் பொருள்.
சில மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்குக் காரணம் அந்த மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். முக்கியமாக இருந்து செயல்பட்டதுதானாம்! சில மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்ததற்குக் காரணம் அங்கெல்லாம் ஆர்.எஸ்.எசுக்கு உரிய முக்கியத்துவம் இல்லாததுதானாம்.
இதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? ஆங்காங்கே சிறுபான்மையினரைத் தூண்டி மதக் கலவரங்களை உருவாக்கி இந்து வாக்கு வங்கிகளை பா.ஜ.க.வின் பக்கம் கொண்டு வருவதுதான்.
ஆர்.எஸ்.எஸில் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்கள்தான் பா.ஜ.க.வின் பொதுச்செயலாளராக இருக்கவேண்டும் என்று கட்சியின் சட்ட திட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, நடைமுறையிலும் இருந்து வருகிறது. பா.ஜ.க. சார்பில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸின் பிரதிநிதிகள் இருக்கவேண்டும் என்றும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். அரசியலில் ஈடுபடுவதில்லை என்று வெளியில் சொல்லிக்கொண்டிருந்தாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர் களும், சங் பரிவாரைச் சேர்ந்த விசுவ இந்துபரிஷத்காரர்களும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பொழுது இந்தப் பிரச்சினையில் மேலும் ஆர்.எஸ்.எசுக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடும். இதன்மூலம் பா.ஜ.க.வின் இந்துராஷ்டிர கொள்கை, அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு உள்ள பிரத்யேகச் சலுகைகள் பறிப்பு என்பன போன்றவைகளை முன்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு வகையில் இந்த இந்துராஷ்டிரக் கூட்டம் வெளிப்படை யாக வெளியில் வருவதுகூட நல்லதுதான். அவர்கள்பற்றி உண்மைக்கு மாறாகப் புரிந்து கொண்டுள்ள பொதுமக்கள் அவர்களின் உண்மை உருவத்தை நிர்வாணமாகத் தெரிந்து கொள்ள அந்நிலை பயன்படக்கூடும்.
இந்த நாட்டில் வாழும் கோடானு கோடி சிறுபான்மை மக்கள் இந்தியாவில் வாழக்கூடாதா? குடிமக்கள் உரிமையின்றி வாழ வேண்டுமா? அவர்கள் பின்பற்றும் மதங்களை, கடவுள்களை இந்து மயம் ஆக்கவேண்டுமா? என்கிற சர்ச்சைகள் நாடு தழுவிய அளவில் நடக்கட்டுமே. அந்த நிலை வெளிப்படையாக வரும்பொழுதுதான் இந்த இந்துத்துவா கூட்டம் வெகுமக்களால் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு ஏற்பட முடியும்.
இந்நிலைக்கு மாறாக - பொதுவாக இந்தக் கூட்டம்தான் இந்து மதத்தைக் காப்பாற்றும்; ஆன்மிகம் இவர்களால்தான் காப்பாற்றப்படும் என்று மத நம்பிக்கையும், பக்தி எண்ணமும் உள்ளவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே - அவர்கள் இந்துத்துவா கூட்டத்தின் உள்ளக் கிடக்கையை அறிய வாய்ப்புக் கிடைக்கும்.
பாமர மக்களின் பக்தி நம்பிக்கையைப் பயன்படுத்தி பார்ப்பனியம் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தச் செய்யும் முயற்சியும் அம்பலத்திற்கு வரும்.
மதச்சார்பின்மைச் சக்திகள் மக்கள் மத்தியில் இந்துத்துவா சக்திகளை அடையாளங்காட்ட இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பா.ஜ.க.வின் அரசியல் கொள்கைகள் பொருளாதாரக் கொள்கைகள்பற்றிப் பேசிவிட்டு, அவர்களின் பார்ப்பனிய எண்ணங்கள்பற்றி விமர்சிக்காத நிலை சில கட்சிகளில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சங் பரிவார்க் கும்பல் வேர்ப் பிடிக்க முடியாததற்குக் காரணமே - தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையில் நின்று, அந்த சக்திகளின் மூலத்தைத் தோலுரித்துக் காட்டுவதுதான். இந்த அணுகுமுறையை வட மாநிலங்களிலும் பின்பற்ற மதச்சார்பற்ற சக்திகள் முன்வர வேண்டும். அப்பொழுதுதான் இந்துத்துவா சக்திகள் மக்கள் மன்றத்திலிருந்து துடைத்து எறியப்படக் கூடிய ஒரு நிலை ஏற்படும்.
பா.ஜ.க. எந்த யுக்தியைப் பயன்படுத்தி தேர்தல் களத்தில் நின்றாலும் அதனை வேரற்று வீழச் செய்வதன்மூலம்தான் எதிர் காலத்தை உருப்படியாக நிர்மாணிக்க முடியும் - எச்சரிக்கை!
---------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 3-1-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment