Search This Blog

26.3.11

விநாயகன் திருமணம் ஆனதா? அல்லது பிரம்மசாரியா?





முருகன், விநாயகன் இவர்களில் யாருக்குத் திருமணம் செய்வது என்பது குறித்தான போட்டியை சிவன் செய்ததாம். யார் உலகை முதலில் சுற்றி வருகிறதோ அதற்கே திருமணம் என்கிற போட்டியாம். மயிலில் ஏறி உலகைச் சுற்றிய முருகன் வந்து சேர்வதற்குள் கணபதி அம்மாவையும் அப்பாவையும் சுற்றி வந்து வெற்றி பெற்றதாம். இதனால் கோபமடைந்த முருகன் மலை மேல் ஏறிக் கொண்டதாகவும் ஒரு புராணக் கதை உண்டு.

தன் அம்மாவைப் போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று கணபதி விரும்பியதாகவும் பொருத்தமானப் பெண் தேடி குளத்தங் கரையில் குந்தியிருப்பதாகவும் ஒரு கதை உண்டு. பெண் கிடைக்க வில்லையாம். திருமணமும் ஆகவில்லையாம்.

ஆனால், நாரத புராணம் வேறு கதை கூறுகிறது. விநாயகன் பிரமனின் முன் தோன்றி பிரமனுக்கு இரண்டு வரங்களைத் தந்ததாம். கிரியா சக்தியையும் ஞானசக்தியையும் தந்ததாம். புராணம் கூறுகிறது:
இரு சக்திகளும் சித்தி, புத்தி என்ற பெயரில் பிரமனது இரண்டு பெண்களாக வளர்ந்தனர். அவர்கள் திருமணப் பருவம் அடைய, அவர்களை அவர்களின் விருப்பப்படி கணநாதனுக்கே திருமணம் செய்து வைக்க பிரமன் உளங்கொண்டார்.

ஒருநாள் நாரதர் தந்தையைக் காண வந்தவர் சித்தி, புத்திகளைக் கண்டு செய்தி அறிந்து அவர்கள் கோரியபடி திருமண ஏற்பாட்டிற்காக கைலாயம் சென்று விநாயகரை வணங்கி சித்தி புத்திகளுடைய கோரிக்கையையும், பிரம்மனின் விருப்பத்தையும் கூறி, அவர்களை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு பிரமன் வேண்டியதாகக் கூறினார். விநாயகரும் தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி ஒப்புதல் தந்தார்.

நாரதர் சத்தியலோகம் சென்று தந்தையிடமும், சித்தி, புத்தியிடமும் விநாயகர் சம்மத்தைக் கூற, பிரமதேவன் பெரு மகிழ்ச்சியுற்று, கைலாயம் சென்று சிவபெருமான், பார்வதியிடம் தன் புத்திரிகளான சித்தி, புத்திகளைக் கணபதிக்குத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டிட அம்மையும் அப்பனும் அதனை ஏற்றனர்.

விசுவகர்மா திருமண மண்டபம் அமைத்திட, கற்பகத் தருவும், காமதேனுவும் வாரி வழங்கினர். அம்மையப்பருடன் கணநாதர் வந்து சேர்ந்தார். அவர்களை அரியும், அயனும் எதிர்கொண்டு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். பிரமன், சித்தி, புத்தி இருவரையும் விநாயகருக்குக் கன்யாதானம் செய்து கொடுத்தார். திருமணம் இனிதே நடந்தது. அரி, அயன், அலை மகள், கலைமகள் மற்றும் இந்திராதி தேவர்கள் வாழ்த்திட அது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

---------------சு. அறிவுக்கரசு அவர்கள் "விடுதலை" 19.05.2007 இல் எழுதிய கட்டுரை

0 comments: