Search This Blog

31.3.11

சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும் ஏன்?


ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?

1. அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது.

2. அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.


3. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.


4. அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது.

5. அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர் களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுப விக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.


6, அது ஒன்றேதான் ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத் தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகிய வைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.

-----------------------தந்தைபெரியார் -”புரட்சி” - பெட்டிச் செய்தி - 17.12.1933

0 comments: