Search This Blog

2.3.11

மகா சிவராத்திரியாம்! மகா ஒழுக்கக்கேடு!!

மகாசிவராத்திரி கொண்டாடும் பக்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்!


மகா சிவராத்திரியாம்!
மகா ஒழுக்கக்கேடு!!

சிவராத்திரிக்காக ஆரியர்கள் புனைந்த கதைகள் மிக அற்பமான கருத்தை உடையவையே ஆகும். இதிலிருந்தே அக்கால ஆரியர்களின் புத்தியின் போக்குத் திறத்தை ஒருவாறு அறியலாம்.

சிவராத்திரி கதை, ஆரியர்களின் புராணங்களில் உள்ளபடியும், பண்டிகை, உற்சவம், விரதங்களுக்காக என்று பார்ப்பனர்கள் தொகுத்த ஓர் ஆதாரமான புத்தகத்திலிருந்தும் இது தொகுக்கப்படுவதாகும்

அதாவது, ஒரு பார்ப்பன வாலிபன் பஞ்சமா பாதக அக்கிரமங்கள் பல செய்து கொண்டிருந்தான். அதனால் அவன் நாட்டை விட்டு விரட்டப்பட்டான். இந்த நிலையில் ஒரு நாள் அவன் பட்டினியோடு காலை முதல் இரவுவரை அலைந்து திரிந்து கொண்டிருந்தான். இரவு அவன் ஒரு சிவன் கோயிலை அடைந்து கர்ப்ப கிரகத்திற்குள் சென்று பார்த்தான். அப்போது கோயில் பூசாரி சிவன் சிலைக்குமுன் பிரசாத வகைகளை வைத்துவிட்டு எங்கோ சென்றிருந்தான். பிரசாதங்களைக் கண்டதும் அந்த வாலிபன் அவற்றைக் கவர்ந்து சென்று உண்ண எண்ணினான். அப்போது அந்தச் சிலைக்குப் பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கு மங்கலாக இருந்ததால் பூசைக்கு வைக்கப்பட்டிருந்த பலகாரங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. எனவே அவன் விளக்கைச் சிறிது தூண்டிவிட்டு அதிக வெளிச்சம் ஏற்படும்படிச் செய்தான். அப்போது அங்கு வந்த பூசாரி இந்த வாலிபன் பிரசாதங்களைத் திருடுவது கண்டு சீற்றமடைந்து அந்த வாலிபனை வெட்டிக் கொன்றுவிட்டான்.

அன்றைய நாள் சிவனுக்கு இரவு நாளாகும். அன்று பகல் முழுவதும் அந்த வாலிபன் பட்டினியாக இருந்தது சிவராத்திரி விரதம் இருந்தது போலாகிறதாலும், மற்றும் சிலையின் முன் வைத்திருந்த விளக்கைத் தூண்டிவிட்டு, அதிக ஒளியுடன் பிரகாசிக்கச் செய்தது போலாகிறதாலும், அந்த வாலிபனுக்குச் சிவன் மோட்சத்தை அருளினான். ஆதலால் அந்த வாலிபனைப் போல், பகலில் பட்டினி கிடந்து இரவில் கண்விழித்து அதிகாலையில் உணவு கொண்டால் எவ்வளவு அயோக்கியனுக்கும் மோட்சமளிக்கும் என்பதாக சிவராத்திரி விரத நாள் கொண்டாடப்படுகிறதாம்.

(பாரததேவி 8.2.1953)

இதுதான் மகா சிவராத்திரியாம்.


இந்தக் கதையை நம்பினால், இதை நம்பி மகாசிவராத்திரியைக் கொண்டாடினால் மனிதனுக்கு ஒழுக்கம் வளருமா?

பஞ்சமாபாதகம் செய்தவனாம். அவனும் சிவனுக்குத் திட்டமிட்ட வகையில பக்தியின் அடிப்படையில்கூட பூஜை செய்யவில்லை. அத்தகைய கயவனுக்கு மோட்சமாம்!

அந்தப் பாதகன் சிவனுக்குத்தான் இவ்வளவும் செய்தான் என்று இட்டுக் கட்டி திணிக்கப்பட்டுள்ளது. எப்படியாக இருந்தாலும் சிவனைப் பூஜை செய்ய வேண்டும் என்ற வறட்டுத் தனம்தான் இதில் தொக்கி நிற்கிறது.

மகாசிவராத்திரி கொண்டாடும் பக்தர்களே, நீங்கள் எந்த பஞ்சமா பாதகத்தைத் செய்துள்ளீர்கள்? ஒரு கணம் சிந்திப்பீர்!

-------------------நன்றி:- “விடுதலை” 9-2-2010

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

அன்பின் மாலை வணக்கங்கள் தோழர்! நாகர்கோவிலில் திரையரங்குகளில் நள்ளிரவு பன்னிரண்டு மணி காட்சிகளுக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன... எஸ் செம் ஆர் வி பள்ளி விளையாட்டரங்கில் இரா முழுக்க சத்குரு சிஷ்யர்கள் கூட்டம்போடுகின்றார்கள் ... எப்படித்தான் அனுமதிக்கின்றார்களோ ?!... பள்ளி நிறுவனங்கள் மதச் சார்பற்றவையாக இருக்க வேண்டுமென்பது ஏட்டளவில் தானா?!

sathyaa suresh said...

எப்படி கிறிஸ்தவ பள்ளிகள் மத பிரசாரத்தை அனுமதிக்கிறதோ மன்னிக்கவும் திணிக்கிறதோ அப்படித்தானே.