Search This Blog

27.3.11

தீண்டாமையும் இஸ்லாமும்




இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத் திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நாம் எங்கும் நிரூபிக்கமுடியும்.

இந்த நிலைமையில் தீண்டாதார் என்று இழிவாய் கருதப்படும் மக்கள் ஜாதிபேதத்தையும் தீண்டாமையையும் முக்கியத்துவமாய்க் கொண்ட இந்து மதத்தைவிட்டு அதில்லாத மதத்துக்குப் போவதால் என்ன கெடுதியென்று கேட்கின்றோம்.

முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா? என்று ஒரு தலைவர் கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் இருந்தால் மாத்திரம் இவர் தன் பெண்ணைக் கொடுக்கக்கூடுமா என்று நாம் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாய்விடும் என்று அஞ்சுகிறோம்.

பெண்கொடுப்பது வாங்குவது கர்னாடகக் காலம் ஆகப்போகிறது. புதிய உலகில் அவனவனுக்குப் பிடித்தது தானாகவே ஜோடி சேரப்போகிறது. அப்படியே சில இடங்களில் சேர்ந்தும் வருகிறது.

ஆனால் ஒரு தீண்டாதவன் முஸ்லீமானாலும் ஒரு கூட்ட தீண்டாதவர்கள் முஸ்லீம்களானாலும் அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமை அந்த நிமிடமே ஒழிந்துவிடுகிறது மாத்திரம் நேரில் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம்.

இஸ்லாம் மதத்தில் பெண்கள் மூடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அது மத சம்பிரதாயமல்ல. ஏனெனில் இந்து சமூகத்திலும் சிறிது பணமோ வலிமையோ சந்தேகமோ இருந்தால், பெண்கள் மூடித்தான் வைக்கப்படுகிறார்கள். இது பெண் அடிமையைப் பொறுத்ததாகும். தீண்டாமை, அதாவது ஆண் அடிமை தீர்ந்த உடன் பெண் அடிமை தீரப்போகிறது. அதற்காகப் போர் நடக்கப் போகிறது. அந்தக் காலம் வெகுதூரத்தில்இல்லை. ஆதலால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் வைப்பது தகுந்த நியாயம் சொல்ல முடியாத பயங்காளித்தனமே ஆகும்.

ஆதலால் இதுவரை தீண்டாமை விலக்குக்காக சமூக சீர்திருத்தக்காரர் களும், அரசியல் கிளர்ச்சிக்காரரும் செய்த சகலவித முயற்சிகளிலும் கிளர்ச்சிகளிலும் தோல்வியே அடைந்துவிட்டார்கள்.

அம்பேத்கார் உபதேசமே இப்போது தீண்டாமை ஒழிவதற்கு உண்மையான சாதனமாய் இருக்கிறது. சுமார் 6,7 கோடி பேர்கள் ஏற்கனவே அனுபவித்துப் பார்த்துவிட்டார்கள்.

தீண்டாதவர்கள் இஸ்லாமாகி முஸ்லீமாகி மனிதர்களாவதுதான் யோக்கியமான மார்க்கம் என்று கூறுகிறோம்.

இதை ஆட்சேபிப்பவர்கள் தங்களால் இதுவரை இது விஷயத்தில் செய்யப்பட்ட காரியம் இன்னது, அதனால் ஏற்பட்ட பயன் இன்னது, அல்லது காந்தியார் ஈறான மற்ற சீர்திருத்தக்காரர்களால் ஏற்பட்ட காரியம் இன்னது என்று அனுபவரீதியாய் எடுத்துக்காட்டி ஆட்சேபிக்கத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.

-------------------தந்தைபெரியார் - ”குடி அரசு” துணைத் தலையங்கம் 09.08.1936

0 comments: