Search This Blog

6.3.11

மதவாதத்தை எதிர்ப்பதற்காகத்தான் காங்கிரசை ஆதரித்தோம் - கி.வீரமணி

6ஆவது முறையாக மானமிகு கலைஞர்முதல்அமைச்சர்! அஞ்சாநெஞ்சன் மண்ணிலே சூளுரை ஏற்போம்! பட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் தலைவர் முழக்கம்!

ஆறாவது முறையும் கலைஞரே முதல் அமைச்சர் என்ற சூளுரையை ஏற்போம் - பாடுபடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். பட்டுக்கோட்டையில் நேற்று (5.3.2011) நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:


தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சியல்ல; பதவிக்காகத் தொடங்கப்பட்ட கட்சியும் அல்ல. ஆட்சியில் சென்று நம் மக்களுக்குத் தேவையான உரிமைகளைப் பெறுவதற்காகப் பாடுபடும் கட்சியாகும்.

அரசியலில் இருக்கிற காரணத்தால் இனவுணர்வு அற்றுப் போய்விடும் என்று யாரும் கருதவேண்டாம்.

இராவணனும் - கும்பகர்ணனும்

குமுதம் பேட்டி ஒன்றில் அழகிரியும் - ஸ்டாலினும் எப்படி வாழ வேண்டும் என்றால் இராவணனும் - கும்பகர்ணனும் போல வாழவேண்டும் என்று சொன்னார்.

இராமனும் - சீதையும் போல வாழ வேண்டும் என்று சொல்லவில்லை. இப்படிச் சொல்லுகிற துணிச்சல் கலைஞரைத் தவிர வேறு யாருக்கு வரும்?

இதுதான் பார்ப்பனர்களுக்கு எரிச்சல். இதுதான் நமக்கு மகிழ்ச்சி - கலைஞரிடம் நாம் காணும் இனவுணர்வு - இதற்காகத்தான் - இனவுணர்வு அடிப்படையில் ஆளும் திறன் வாய்ந்தவர் என்பதற்காகத் தான் ஆறாம் முறையாகவும் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் ஆளவேண்டும் என்று விரும்புகிறோம்.

அஞ்சாநெஞ்சன் மண்ணிலே!

அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலையாக அதோ நிற்கிறாரே - அந்த வீரம் செறிந்த மண்ணிலே இந்த உறுதியை - சூளுரையை எடுப்போம்! (பலத்த கரஒலி!)

சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அனைவருக்கும் அனைத்தும் என்று இதற்குப் பொருள். சொன்னவர் தந்தை பெரியார்.

மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் தி.மு.க. ஆட்சியை இந்த அடிப்படையில்தான் நடத்தி வருகிறார்.

கருவறை முதல் கல்லறை வரை

நாம் சவால் விட்டுக் கேட்க முடியும். கலைஞர் ஆட்சியினால் பயன் பெறாத ஒருவராவது உண்டா? ஒரு குடும்பமாவது உண்டா என்று நெஞ்சை நிமிர்த்திக் கேட்க முடியும் நம்மால்!


கருவறைமுதல் கல்லறை வரை கலைஞரின் உதவி நீள்கிறது.

கருவறை என்கிறபோது - கர்ப்பிணிப் பெண்களுக்கும் நிதி உதவி. கல்லறை எனும்போது, அங்கு பணியாற்றும் பணியாளரை வெட்டியான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அவர்களின் வாழ்வு நிலை என்ன?

நாலு பிணம் வந்தால் நாலு காசு கிடைக்கும் என்ற மனப்பான்மையில்தான் அவர்கள் நாட்களைக் கடத்தி வந்தனர்.

கலைஞர் ஆட்சி என்ன செய்தது? மயானத்தில் பணியாற்றும் அந்தத் தோழர்களையும் அரசு ஊழியர்களாக்கி, அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கும் படி செய்தார்.

கருவறைமுதல் கல்லறைவரை கலைஞர் ஆட்சி உதவுகிறது என்பது இதுதான்.

108 என்றால் . . .

108 என்றால் 108 சஹஸ்ரநாம அர்ச்சனை என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த 108 என்பது உயிர் காக்கும் அவசர ஊர்தி - ஆம்புலன்ஸ் என்று ஆக்கி மக் களுக்காக அன்றாடம் பயன்படச் செய்த சாதனையைச் செய்தார் நமது முதல்வர் கலைஞர்!

சிதம்பரம் நடராசர் கோயில்

சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருந்தது. 150 ஆண்டுகளாக வழக்கும் நடந்து கொண்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர். முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.

கலைஞர் ஆட்சியில் தீட்சதர் கையில் இருந்த சிதம்பரம் கோயில் அரசின் இந்து அற நிலையத் துறைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டதே. தீட்சதர்ப் பார்ப்பனர்களுக்குச் சென்று கொண்டிருந்த வருவாய் இப்பொழுது அரசாங்க கஜானாவுக்கு அல்லவா வந்து கொண்டிருக்கிறது!

இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியும்.

முதல் கூட்டம் பட்டுக்கோட்டையிலே

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பின் முதல் கூட்டமாக இந்தப் பட்டுக்கோட்டையில்தான் பேசுகிறேன். முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை அஞ்சாநெஞ்சன் மண்ணிலிருந்தே துவக்குகிறோம். இந்த மாநாட்டுக்கு வரும் பொழுது புதிய புதிய நல்ல தகவல்கள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. 63 இடங்கள் வேண்டும், அதுவும் நாங்கள் கேட்கும் இடங்கள் எல்லாம் எங்களுக்குத் தரப்பட வேண்டும் என்று நிபந்தனை வைத்தால் அதனை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? அதுவும் சுயமரியாதைக்காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

பார்த்தார் மானமிகு கலைஞர். நம்முடைய சுய மரியாதைக்குச் சவால் என்கிறபோது மத்திய அரசிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டாரே! (பலத்த கரஒலி!)

மிக்க மகிழ்ச்சி - இந்த நிலைப்பாட்டை வரவேற்கி றோம்.

சாதனைகளை ஏந்தி மக்களிடம் செல்லுவோம். வெற்றி பெறுவோமா, பெறமாட்டோமா? ( வெற்றி பெறுவோம்! வெற்றி பெறுவோம்!! என்று மக்கள் குரல் வெடித்துக் கிளம்பியது).
திண்ணைப் பிரச்சாரம் முதல் தெருமுனைப் பிரச்சாரம் வரை நடக்கட்டும். தோழர்களே!

வெற்றி நமதே!என்று கூறி முடித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.


கை உம்முடையது பை எங்களுடையது!

மதவாதத்தை எதிர்ப்பதற்காகத்தான் நாம் காங்கிரசை ஆதரித்து வந்தோம் - திராவிடர் கழகமும் சரி, தி.மு.க.வும் சரி, இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் காங்கிரசை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த அடிப்படையில் காங்கிரசை ஆதரித்தோம் என்பதற்காக எங்கள் தோளில் சவாரி செய்யலாம் என்று காங்கிரஸ் ஆசைப்படலாமா?

நண்பனாயிற்றே என்று தோளில் கையைப் போட ஆரம்பித்தோம். அதற்கு அடுத்த கட்டமாக அந்தக் கை எங்கள் சட்டைப் பையில் கையை விட்டால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா?

நண்பனே! நண்பனே! கை உன்னுடையது, பை என்னுடையது என்று எச்சரிக்கை செய்யமாட்டோமா? (பலத்த கைதட்டல்)
அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

-----------------------(தமிழர் தலைவர் உரையிலிருந்து - பட்டுக்கோட்டை (5.3.2011) ----------" விடுதலை” 6-3-2011

2 comments:

தமிழ் ஓவியா said...

பட்டுக்கோட்டை தீர்மானங்கள்

பட்டுக்கோட்டையில் கடந்த சனியன்று நடைபெற்ற தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக ஊடகங்கள் நடந்து கொண்டு வரும் போக்குப்பற்றி தீர்மானம் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட இந்த மின்னணு ஊடகங்களால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதுபற்றி தீர்மானம் பேசுகிறது.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டிய இந்த விஞ்ஞான சாதனங்கள் அதற்கு நேர்மாறாக மக்களிடத்திலே மூடநம்பிக்கைகளை வலிமையாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியிலே வக்கிர உணர்ச்சிகளை ஊட்டுகின்றன. இதனால் ஏற்படக் கூடிய ஆபத்து சாதாரணமானதன்று.

இளைஞர்கள் கலாச்சாரச் சீரழிவின் பக்கம் திசை திருப்பப்படுகின்றனர். எதிர்கால சமுதாயம் இதன் காரணமாகப் பெரிய பாதிப்புக்கு ஆளாகும் என்பதில் அய்யமில்லை.

கல்லூரி ஆசிரியைகளை மாணவர்கள் கேலி செய்வது, சாலையில் போகும் பெண்களைச் சீண்டுவது என்பது போன்றவை - இளைஞர்கள் மத்தியில் அத்தகு உணர்வுகள் பெருகுவதற்குத்தான் தூண்டுதலேயாகும்.

பெண்களை வில்லியாக உருவாக்குவது, பெண்கள் எப்பொழுது பார்த்தாலும் புலம்புவது, கண்ணீர் வழிவது என்பது போன்றவை பெண்களைக் கோழைகளாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் சித்திரிக்கும் கேவலமான போக்குகளாகும்.

இதில் என்ன கொடுமையென்றால் - இதுபோன்ற தொடர்களைப் பெண்களே ரசித்துப் பார்க்கும் ஒரு மனநிலைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதுதான்.

பெண்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் அமைப்புகள்கூட இதுபற்றியெல்லாம் சிந்திப்பவர்களாகவோ, விமர்சிப்பவர்களாகவோ இல்லை.

லண்டன் தொலைக்காட்சியின் விளம்பரத்தில் இடம் பெற்ற ருத்திராட்சம் குறித்த மூடநம்பிக்கைக் காட்சி உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. அறிவியல் ஊடகத்தில் அதற்கு எதிர்மாறான காட்சிகள் இடம் பெறக் கூடாது என்று அந்நாடு கருதுவதுதான்.

ஊடகங்களில் இந்தப் போக்குக் குறித்து திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணியினர் மக்கள் மத்தியிலே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் திட்டமிட்ட வகையில் இந்தத் திசையில் கழகம் தன் பணிகளைத் தொடங்கும்.

சின்னத் திரைகளை ஒரு ஒழுங்குக் கட்டுப்பாட்டுக்கும் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.

பட்டுக்கோட்டை மாநாட்டில், ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள் அவசியம் என்றும், ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொண்டவர்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமாகும்.

21ஆம் நூற்றாண்டில் ஜாதி உணர்வு இருப்பது வெட்கப்படத்தக்கதாகும். எந்த விலை கொடுத்தாவது ஜாதியை ஒழித்தாக வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் மிக முக்கியமான கொள்கை ஜாதி ஒழிப்பேயாகும். ஜாதியின் காரணமாகத்தான் ஏற்றத் தாழ்வுகள், பேத உணர்ச்சிகள், மனிதனை மனிதன் வெறுக்கும் கேவலங்கள், இவற்றின் காரணமாக கலவரங்கள் ஏற்பட ஏதுவாக உள்ளன. மனிதவளம் இந்த ஜாதியத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது -திசை திருப்பி விடப்படுகிறது.

இடஒதுக்கீடுகூட ஜாதி ஒழிப்பின் மிக முக்கியமான கூறுதான். இடஒதுக்கீடு காரணமாக கல்வி, வேலை வாய்ப்புகள் பெருகும்போது சிந்தனையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நமது பாடத் திட்டத்திலும்கூட, ஜாதி, தீண்டாமை ஒழிப்புத் தொடர்பான பாடங்கள் இடம் பெற்றாக வேண்டும். மாணவர்கள் மத்தியில் இது தொடர்பான எழுச்சியை, உணர்வை ஊட்டும் சொற்பொழிவு, கட்டுரைப் போட்டிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

கல்வியில் இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது, அந்தக் கல்வி மாணவர்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனைகளை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட சமத்துவ சமதர்மச் சிந்தனைகளை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டாமா?

இளைஞரணி மாநாட்டில் ஜாதி ஒழிப்புத் தொடர்பான இத்தகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்களும் மாணவர்கள் மத்தியில் (கல்வி நிறு வனங்கள், விடுதிகள்) ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - அதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ”விடுதலை” தலையங்கம் 7-3-2011

Gokul said...

//அதுவும் சுயமரியாதைக்காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

பார்த்தார் மானமிகு கலைஞர். நம்முடைய சுய மரியாதைக்குச் சவால் என்கிறபோது மத்திய அரசிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டாரே! //

:-))