Search This Blog

7.3.11

மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்இந்து மதத்தில் பசு மிகவும் மேன்மையாகப் பாவிக்கப்படுகிறதென்றும், முக்கியமான தெய்வமென்றும், அதை வதை செய்வதால் இந்து மதத்திற்கு பெரும் பங்கமேற்படுகிற தென்றும், இந்துக்கள் பெரும் தடை செய்கின்றார்கள். பூர்வீக காலத்திலிருந்த இந்து மதத்திலேயே பசுவதை செய்வதை ஹலாலாக்கி வைத்திருந்தது மட்டுமல்லாமல் முஸ்லீம்கள் அவ்விறைச்சியை எவ்வாறு புசிப்பது அவர்கள் மார்க்கத்தில் கூடுமானதாயிருக்கின்றதோ அதே போல் இந்துக்களும் அம்மாமிசத்தை புசித்து வந்தனர் என்ற விஷயம் இந்து மத ஆராய்ச்சி நிபுணர்களின் ஆராய்ச்சியில் மறைந்திருப்பதன்று. இவ்வாறு இந்து மதத்தில் பசு வதை செய்வது சரியென்றும், பலி செய்யப் பட்ட பசுவின் மாமிசத்தை புசிக்கலாம் என்றும், இந்து வல்லாத மத ஆராய்ச்சி நிபுணர்கள் எத்தனையோ வியாசங்களைப் பிரசுரித்திருக்கின்றார்களே யாயினும் இன்றைக்கு வங்காள பிரபல பூர்வீக மத ஆராய்ச்சியில் இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி., சி.ஐ.இ., அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகத்தில் "இந்து ஆரியன்" என்ற மகுடம் சூட்டப்பட்ட 6வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயத்தை நாம் கீழே குறிப்பிடுகின்றோம்:

அப்புத்தகத்தில் இந்துமதக் கோட்பாடுகள் எவ்வாறு போதிக்கப் பட்டு வந்திருக்கிறதென்பதை இதைப் படிக்கும் நண்பர்களுக்கு நன்கு புலனாகிவிடும். ஆனால் அவர் புத்தமதத்தைச் சார்ந்தவரோவென நீங்கள் நினைக்கக்கூடும். ராஜாசாகிப் அவர்கள் வங்காள வைஷ்ணவர். அவர் தம்முடைய மேலே கூறப்பட்ட புத்தகத்தில் பூர்வீக இந்துக்களின் மதக் கோட்பாடுகளை மிகவும் ஆராய்ச்சியுடன் வரைந்துள்ளார்.

அவர் கூறுவதாவது:

"இப்பிரச்சினையின் மகுடமே என் தேச நண்பர்களில் பெரும் பான்மையோர்களின் மனதில் பெரும் வெறுப்பை யுண்டு பண்ணும். இமாலய பர்வதத்தைக் கடந்து வரும் ஆரியர்களின் மதக் கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்வதில் நமக்குக் கிடைக்கும் அத்தாட்சிகளே இவ்விஷயத்தில் விவாதிப்பதற்கு போதிய அத்தாட்சியாகும்.

பசு மாமிசத்தை உணவாக புசிக்கலாம் என்று நினைத்தவுடனேயே இந்துக்களின் மனம் புண்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் தானென்ன? லட்சக்கணக்கான இந்துமதப் பற்றுடைய இந்துமத நிபுணர்களும் கூட பசு மாமிசம் என்ற பெயரையுங் கூட வாயால் சொல்ல அருவறுக் கிறார்கள். நம் நாட்டில் பசு வதை செய்யும் விஷயத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உயிர்ப் பிராணிகளை அறுப்பதால் சில ஆத்மாக்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு அறுக்கப்படுவது விருந்தினர்களுக்கெனக் கருதப்பட்டும் வந்தது. மேலும், இறந்து போன இந்துவுடன் ஓர் பசுவையும் சேர்த்து மயானக் கரையில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. இவ்வந்தரங்கமான விஷயத்தை வெளியிடுவதன் நிமித்தம் இந்துக்களின் தற்போதைய கிளர்ச்சிகளை யுணர்ந்த இந்தியர்களுள் பெரும் ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணும். இவ்விஷயங்களை நான் எந்த கிதாப் (புத்தகம்) பிலிருந்து எடுத்திருக்கின்றேனோ அக்கிரந்தங்களில் எத்தகைய சந்தேகமும் அதிருப்தியும் கொள்ள முடியாது.

புரொபசர் வில்சனின் ஆராய்ச்சி

என் தேச நண்பர்களில் யார் தக்க கல்வி கற்றிருக்கிறார்களோ அவர்கள் வேதங்களில் "கோமேதம்" "அஸ்வமேதம்" என்று பசுவையும் குதிரையையும் பலி கொடுக்கும் யாகங்கள் இருப்பதை நன்கு அறிவார்கள். அவ்யாகத்தின் தாத்பரியம் கால்நடை மிருகங்களை பலி செய்வதே. அவ்வாறு தக்க கல்வி கற்றவர்கள், பலி செய்ய வேண்டுமென்றிருப்பதை உதாரணமாக வரையப் பட்டிருக்கிறதெனக் கருதுகின்றார்கள். அவர்கள் அவ்வாறு மேற்பார்வையாகப் பார்த்து உதாரணமாகக் கூறப்பட்டிருக் கிறதெனக் கருதி விடுவதால் அதன் அந்தரங்கங்கள் மறைவாக இருந்து விடுகிறது. ஆதலின் அத்தகைய பலி அமுலில் கொண்டுவரப்பட்டதன்று என ஜனங்கள் கருதிக்கொள்ளுகிறார்கள். அதே போல் புரொபசர் வில்சன் அவர்கள் இவ்விஷயங்களை ஆராய்ச்சி செய்வதற்காக நாடி முதன் முதலாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பஞ் செய்தபோது அவருக்கும் இதன் அந்தரங்கங்கள் சரிவர விளங்காமல் அவரின் யோசனைக்கும் எட்ட வில்லையாயினும் அத்தகைய கல்வி நிபுணர்கள் போன்றவர்களின் பார்வைக்கும் அந்தரங்கங்கள் மறைந்திருப்பது முடியாத காரியமாகையால் அவர் மேகாவத் மொழி பெயர்ப்பின் ஓரிடத்தில் குறிப்பிடுவதாவது:

கோமேதம், அஸ்வமேதம் எனப்படும் யாகங்களில் பசு குதிரை இவைகளை பூர்வீக காலத்தில் இந்துக்கள் பொதுவாக பலி செய்து வந்தனர். இந்தப் பலியானது உண்மையான பலியல்லவென்றும், பலியின் பாவனையாகச் செய்யப்பட்டதென்றும் கூறப்படுகிறது. அதாவது:

பலியாக குறிப்பிடப்பட்ட ஒரு பசுவின் மீது ஏதாவது ஓர் அடையாளத்தைப் போட்டு அதை உயிரோடு விடப்பட்டு வந்தது. ஆனால் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாசகங்களும் இந்துக்கள் செய்யும் வேலைக்கு உதவியாகத் தெரியவில்லை. ஏனெனில், பசுவின் இரத்தம் கடலைப் போல ஆகவேண்டுமென்று கூறப்பட்டிருப்பதன் உண்மையான வியாக்கியானம் பசுவின் இரத்தத்தையே வெள்ளமாக ஓட்ட வேண்டு மென்பதேயன்றி பசு பலி யென்று வாயால் சொல்லி ஒரு குறியைப்போட்டு அப்பிராணிகளை வெளியில் ஓட்டி விடுவது பலியாகமாட்டாது. பசு பலி செய்ய வேண்டுமென எந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறதோ அப்புத்தகத்திலிருக்கும் வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு:

மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்

"பசு சந்ததிகளின் இரத்தம் ஆறாகக் கிளம்பி ஓடிற்று."

புரொபசர் அவர்கள் எவ்விஷயத்தில் அத்தாட்சிகள் காட்டுகின்றாரோ அவ்விஷயத்தில் ஜனங்கள் முன்னமே விவாதம் செய்திருக்கின்றார்களாயினும் பலி செய்ய வேண்டுமென வேதத்தில் கண்ட வாக்கியத்திற்கு இரத்தத்தை ஓட்டவேண்டுமென்றே பதில் கூறி இருக்கின்றார்கள். சிலர் அவ்வாக்கியத்திற்கு நேரான வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரிஷிகள் விருந்தில் பசு மாமிசம்

வஸிஷ்ட ரிஷியானவர் விஸ்வாமித்திரர், ஜனகர், சத்தியானந்தர், ஜமதக்கினி முதலிய ரிஷிகள், சிநேகிதர் ஆகியவர்களுக்கு விருந்தளித்தார். அவ்விருந்திற்காக ஓர் கொழுத்த பெண் பசுக்கன்றை அறுத்தார். ஜமதக்கினிக்கு விருந்துக்குச் சொல்ல போயிருந்த வசிஷ்ட ரிஷி சாப்பாட்டின் இன்பத்தையும் அதன் திவ்ய வாசனைகளையும் கூறுகையில் அவர் கூறியதாவது:

பசுக்கன்று அறுப்பேன், நெய் சாதம் சமைக்கப்படுகிறது. நீங்கள் ஓர் படித்த கல்விமான்; நானும் ஓர் படித்தவன்; ஆதலின் நீங்கள் என் விருந்துக்கு வந்து நாங்கள் சமைத்து வைத்திருக்கும் பசு மாமிசம், நெய் சாதம் இவைகளைச் சாப்பிட்டு எங்களுக்கு ஆசி கூறும்படியாக வேண்டுகிறேன்.

இவ்விஷயங்கள் பூராவும் ஓர் சரிதையிலிருந்து எடுக்கப்பட்டதில் எத்தகைய சந்தேகமும் கிடையாதாயினும், இத்தகைய விஷயங்களை ஓர் நிமிஷத்திற்காவது இட்டுக்கட்ட முடியாது என்பதும் திண்ணம். ஏனெனில் இவ்விஷயத்தைக் குறிப்பிட்டுள்ள சரிதையின் ஆசிரியருக்கு இதை படிக்கும் பொது ஜனங்களின் மனம் கொதிப்படையு மென்பது தெரிந் திருப்பதுடன், இல்லாததை இட்டுக்கட்டி இத்தகைய விஷயங்களை எழுதத் துணிய மாட்டார்.

விருந்தாளிக்கு மரியாதை

கோல்புரூக் என்ற ஒருவர் ஹிந்து மதக் கோட்பாடுகளை மட்டும் ஓர் புத்தகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்புத்தகத்தில் கூறுவதாவது:

பூர்வீக காலத்திலிருந்த ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு யாராவதொரு விருந்தாளி வந்தால் அவருக்காக ஓர் பசுவை அறுப்பது பொதுவான வழக்கமாக இருந்தது. ஆதலின் அவருக்குப் பசுவை அறுப்பவர் என்று கூறப்படுகிறது.

இந்துக்களின் விவாக காலத்தில் பசுவை அறுப்பதற்காகச் சொல்லப் படும் மந்திர சம்பந்தமான விஷயங்களை கூறுகையில் அவர் கூறுவதாவது:

நான் இவ்விஷயங்களை எந்தப் புத்தகத்திலிருந்து ஆராய்ச்சி செய்தேனோ அப்புத்தகத்தில் கூறுவதாவது, வரவேற்கத்தக்க விருந்தினர்களான கூர்த், புரோஹ்க், சன்யாசி, ராஜா, மாப்பிள்ளை, சினேகிதர், மற்றும் கௌரவிக்கத் தக்க விருந்தினர்கள் இவர்களுக்காக வேண்டி ஒரு பசுவைக் குறிபார்க்கப்பட்டு அறுப்பதற்காக வேண்டி கட்டிவிடுகின்றார்கள். ஆதலின் இவர்களுக்கு பசுவைக் கொல்லுகிறவர்களென்று கூறுகின்றார்கள்.

மனுஸ்மிருதியில் பசு மாமிசம்

எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும். மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது: யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 235)

ஆனால் மனுஸ்மிருதி பசு மாமிசத்தை ஓர் உணவாகக் கூறவில்லை யாயினும், மனிதன் சாப்பிடக்கூடிய உயிர்ப் பிராணிகளின் நாமங்களைக் கூறப்பட்டிருக்கும் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால் மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 185)

மேலே கூறப்பட்ட நிபந்தனைப்படி பசுவும் அதில் சேர்ந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பசுவுக்கு ஒரே பக்கத்தில்தான் பற்களுண்டு என்பது மனு ஸ்மிருதியில் மறைவானதன்று, மனு பசுவைச் சாப்பிடக் கூடாதென்று விலக்கியிருந்தால் ஒட்டகத்தோடு சேர்த்துப் பசுவையும் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாதென விலக்கியிருப்பார்கள். ஆனால் முன்பின் வாசகங்களைக் கவனிப்பது கொண்டு பசுவைச் சாப்பிடக் கூடாதென விலக்கவில்லை யென்று நாம் அர்த்தம் செய்து கொள்வது சரியான அத்தாட்சியாகமாட்டாது. ஆதலின் பிரமச்சாரியானவர் தம் வீட்டிற்கு திரும்பி வருவதற்காக குருவுக்கு சில காணிக்கைகள் கொடுக்கின்றார்கள். இவ் விஷயம் மனு ஸமிருதியில் தக்க ஆதாரமாக இருக்கிறது. அதில் எழுதியிருப்பதாவது:

பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6 3) அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது: இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது.

அஸ்வ மஹாபாரதம், ராமாயணம்

அஸ்வத் தமது அரச கட்டளையில் துவர்க்கமாகக் கூறுவதாவது:

ஆதி காலத்தில் அவனுடைய பொங்குமடத்தில் லக்ஷக்கணக்கான உயிர்ப் பிராணிகள் உணவுக்காக அறுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவைகள் இன்னின்ன பிராணிகளென விவரமாகக் கூறப்படவில்லை. அவைகளின் விவரங்கள் தெரியாவிடினும் அவ்வாறு மாமிசம் சாப்பிடும் காலத்தில் அவர் ஆடுகளை மட்டும் போதுமென வைத்திருக்க மாட்டாரென நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.

மஹாபாரதம், ராமாயணம் இவைகளிலும் கோமேத யாகத்தைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது. கோமேத யாகமென்பது உயிர்ப் பிராணிகளை (குர்பானி) கொலை செய்வது. ஆனால் அதில் விஷயங்கள் விரிவாகக் கூறப்படவில்லை. பசுவின் மாமிசத்தை உணவைப் போல் சாப்பிட்டு வந்ததா இல்லையாவென்ற விவரமும் கூறப்படவில்லை.

வைதீகத்தில் பசு மாமிசம்

ஈஸவி 500, 600 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சர்க் சந்தவென்ற வைதீகப் புத்தகத்தின் ஒர் அத்தியாயத்தில் இவ்விஷயத்தை விரிவுரையாக கூறப்பட்டிருக்கிறது. அதில் ஓர் அத்தியாயத்தில் உணவு விஷயமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஓர் இடத்தில் காணப்படுவதாவது: பசு, எருமை, பன்றி இவைகளின் மாமிசங்களை பிரதி தினந்தோறும் புசிக்கக் கூடாதென வரையப் பட்டிருக்கிறது.

மேலே கூறப்பட்ட விஷயங்களை நன்கு கவனிப்பது கொண்டு தெரிய வருவதாவது:

அக்காலத்தில் ஹிந்துக்கள் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தார்களென்பதில் சந்தேகமில்லை. ஆனால் பசு மாமிசம் தக்க பலமுடைய வஸ்துவானதால் பிரதி நாட்கள் தோறும் சாப்பிடலாமென அனுமதிக்கப்படவில்லை. மற்றுமோர் இடத்தில் அக்கிரந்த கர்த்தாவானவர் கூறுவதாவது: கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குப் பசு மாமிசம் கொடுக்கவேண்டுமென்றும், அது பிரசவ காலத்திற்கு வேண்டிய பலத்தைக் கொடுக்கிறதென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றும் சில வைதீகப் புத்தகங்களில் பல முறைகள் கூறப்பட்டிருக் கிறதாயினும் பசு மாமிசம் அறவே சாப்பிடக் கூடாதென எந்த வைதீகப் புத்தகத்திலும் காணப்படவில்லை. அஸ்மனா விஷபாவுடைய சில வைதீகப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது: ஒர் மனிதன் போதையாக இருந்து தெளிவு பெற்றபின் அவன் பசு இறைச்சி சாப்பிடுவதால் பெரும் அனுகூலங் களிருப்பதாக வரையப்பட்டிருக்கிறது.

பசு மாமிச உப்புக்கண்டம்

குர்ஹீயா சூத்திரத்தில் பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள். அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்! அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வந்த சம்பீதா ரிஷியானவர் அவ்வாறு நெருப்பில் போடப்படும் வஸ்துக்களில் பொது ஜனங்களுக்குப் பிரயோஜனம் தரக்கூடியதான தோலை நெருப்பில் போடுவதற்கு பதிலாக செருப்பாக தைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாமென பொதுவாக உத்தரவு செய்து விட்டார். அவ்வாறு ரூராவுக்கு பூஜை செய்ததன் பிறகு பிராமண பூசாரியானவர் இடது பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நேராக எழுந்து நின்று ஏதோ சில மந்திரங்களைப் படித்துக்கொண்டே அறுக்கப்பட்ட பசுவின் இரத்தத்தை அவ்விடங்களிலிருக்கும் சாப்பங்களுக்கு சேர்க்கை செய்து விடுகிறார். இவ்வெல்லாக் கிரியைகளும் செய்து முடித்த பிறகு கடைசியாக (சுவிஸ்த்தாக்கிர்த்) என்ற ஒரு பூஜையும் செய்யப்படுகிறது. பிறகு அப்பசுவுடைய நெஞ்சு மாமிசத்தினின்றும் சுடுவதற்காகக் கொஞ்சம் மாமிசத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதன் பிறகு மீதியாயிருக்கும் அப்பசுவின் மாமிசத்தைப் பொதுவாக எல்லோரும் சாப்பிடலாமென்று சில சூத்திரங்கள் கூறுகின்றன. சில சூத்திரங்கள் அப்பசுவை குர்பானி செய்தவர்கள் மட்டும் சாப்பிடலாமெனக் கூறுகின்றன.

இவ்வாறு ஒரு மனிதன் குர்பானி செய்து விட்டால் அவனுக்கு வயது அதிகமாகிறதென்றும், செல்வந்தனாவானென்றும், நல்ல நிலைமையிலே இருப்பானென்றும், தன் மதத்தில் கௌரவமுடையவனாக இருப்பானென்றும், சந்ததிகள் அதிகமாகுமென்றும், கால் நடை மிருகங்கள் அவனுக்கு அதிகமாகு மென்றும், அவ் வேதத்தில் ஆசை காண்பிக்கப்பட்டிருக்கிறது. சகல தனவந்தர் களும் அவர்கள் வயதில் ஓர் விடுத்தமாவது இவ்வாறு குர்பானி செய்ய வேண்டியது முக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசு மாமிசம் எவ்வாறு சமைக்கப்பட்டதென்ற விஷயம் விரிவாகக் கூறப்படாதது மிகவும் வருந்தத்தக்கதே. சமைக்கப்படும் முறை விவரமாக கூறப்படாவிடினும் அறுக்கப்பட்ட பசுவின் நெஞ்சு மாமிசத்திலிருந்து சுடுவதற்காக மாமிசம் எடுப்பதே அவர்கள் சமைக்கும் முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.

--------------- தந்தைபெரியார் - “பகுத்தறிவு” கட்டுரை மார்ச்சு 1936

0 comments: