Search This Blog

1.4.11

ராவணன் எப்படி அரைக்கோடி வருஷம் அரசாண்டு இருக்கமுடியும்?


விதண்டா வாதம்

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தது. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது. குசேலர் பெண்சாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளை யாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்கு மானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள்? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப்போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காகவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சைபோட்ட கிருஷ்ண பகவானுக்காவது "என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பையல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா?" என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

* * *

கேள்வி: என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்துவிட்டதா?

பதில்: அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே! அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும் தெரியாததையும் நான் ஒப்புக்கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தப்பு?

* * *

கேள்வி: கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்: கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?

* * *

ராமாயணம் நடந்தது திரேதாயுகத்தில். அதில் ராவணன் அரைக்கோடி வருஷம் (50லக்ஷம் வருஷம்) அரசாண்டான் என்று காணப்படுகிறது.

அந்த யுகத்திற்கு மொத்த வருஷமே 12 லக்ஷத்து 96 ஆயிரம் வருஷங்களாகும். நாலு யுகமும் சேர்ந்தாலுமே 43 லக்ஷத்து 20 ஆயிரம் வருஷந்தான் ஆகிறது.

ஆகவே ராவணன் எப்படி அரைக்கோடி வருஷம் அரசாண்டு இருக்கமுடியும்?

---------------- தந்தை பெரியார் - “ பகுத்தறிவு” ஜூலை 1935

0 comments: