மே 1 : தமிழர்களின் பண்டிகை நாள்
மே தினம் என்பது தொழிலாளர் தினம். சர்வதேசத்திலுமுள்ள தொழிலாளர்கள் மே தினத்தைத் தங்களுடைய பண்டிகையாகக் கொண்டாடி வருகிறார்கள். மே மாதம் 1-ஆம் தேதி மே தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில், உலகிலுள்ள, எல்லா நாடுகளிலும், முதலாளிகள் தொழிலாளர்களைத் தினசரி 12 அல்லது 14 மணி நேரம் வரையில் வேலை செய்யும்படி வற்புறுத்தி வேலை வாங்கி வந்தார்கள். (இப்பொழுதும் இந்நாட்டில் பல நகரங்களில் நெசவுச் சாலை முதலிய தொழிற்சாலைகளின் முதலாளிகள் தினந்தோறும் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்று தொழிலாளர்களை நிர்பந்தப்படுத்துவதைப் பார்க்கிறோமல்லவா?)
அமெரிக்கா தேசத்துத் தொழிலாளிகள் அக்காலத்தில் வேலை நேரத்தை 8 மணி நேரத்துக்குக் குறைக்கும் படி கிளர்ச்சி செய்தார்கள். அவர்கள் இந்த ஞாயமான உரிமைக்காக போராடியபோது, தொழிலாளிகள் கட்டுக் கொல்லப்பட்டார்கள். அன்று உலகிலுள்ள தொழிலாளர்களின் பொருட்டு இந்த உத்தமர்கள் போராடியதால்தான், உலகில் இப்போது பெரும்பாலும் தொழிலாளர்கள் தினம் 8 மணி நேரம் வரையில் வேலை செய்ய இடமேற்பட்டிருக்கிறது. ஆகவே இந்த உத்தமர்களைப் புகழும் பொருட்டும், தொழிலாளர்களின் ஞாயமான உரிமைக்காக நேர்மையான முறையில் தக்க கிளர்ச்சி செய்யும் பொருட்டும் தொழிலாளர் களும், தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபடும் சமதர்மிகளும் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் முதலிய முதலாளி தேசங்களில் ஒவ்வொரு தொழிலாள சங்கத்தாரும் மே மாதம் முதல் தேதியன்று உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றும் தொழிலாளர்களுக்குச் சாதகமாகப் பலவாறாகவும் எழுதப்பட்ட அட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்காக பேர்கள் ஊர்வலம் வருகிறார்கள். பொது இடங்களில் கூட்டங்கள் கூடி தங்களைப் பிடித்து ஆட்டி அலைக்கும் கொடிய வறுமை நோய் நீங்கி தாங்கள் தக்க உணவு அருந்தி தக்க ஆடை அணிந்து, தக்க வீட்டில் வசித்து, பல சௌகரியங்களும் சம்பத்துக்களும் பெற்று சந்தோஷமாக வாழ வழி உண்டாவதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமென் பதைப்பற்றிப் பேசுகிறார்கள்.
ஜெர்மனியில்கூட!
சென்ற வருஷத்தில் நாஸிஸம் - நவீன முதலாளித்துவம் - சர்வாதிகாரம் செய்யும் ஜெர்மனியில்கூட, தொழிலாளர் எழுச்சியை சுயமாகத் தடுக்கும் உத்தேசத்தோடு, சர்க்காரே மே தினத்தைக் கொண்டாடிற்று, உலகத் தில் எங்கும் கூடாத, 20 லட்சம் தொழி லாளர்களைக்கூட்டி வைத்து ஹெர் ஹிட்லர் பிரசங்கம் செய்ததாகப் படித்தோம்.
உல்லாசமாக...
தொழிலாளர் ஆட்சி செய்யும் ரஷ்யா விலோ, அரசாங்கத்தாரே இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். அங்கு மே தினம் அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் விடுமுறை நாளாகும். அன்று நாடு முழுவதிலும் ஜனங்கள் அபரிமிதமான உல்லாசத் துடனும் இருப்பார்கள். இந்த வைபவத்தைப் பார்க்க மற்ற தேசத்திலுள்ள தொழிலாளர் களின் பிரதிநிதிகள் அழைக்கப்படுகிறார்கள். அங்கு தொழிலாளர்களின் தலைவர்கள், தொழிலாளர்கள் நிமித்தமாக அரசாங்கத் தார் என்னென்ன செய்திருக்கிறார்களென் றும், என்னென்ன செய்யப் போகிறார் களென்றும், உலகத் தொழிலாளர்கள் சுபிட்சமடைய மார்க்கம் என்னவென்றும் தொழிலாளர்களுக்கு விளக்கமாகப் போதிப்பார்கள். அன்று மாஸ்கோவில் 25 லட்சம் தொழிலாளர்கள் போர் வீரர்கள் போல் அணி வகுத்துச் செல்லும் காட்சி, கண் கொள்ளாக் காட்சியாகும்.
மற்ற நாடுகளில் முதலாளிகள் செய்வது போல் நம் நாட்டில் முதலாளிகளால், தொழிலாளிகளுக்குப் பல வகையில் அசவுகரியங்கள் இருந்து வருகின்றது. முதலாளிகளால் அநேக தொழிலாளர் களை வேலையிலிருந்து விலக்கப்பட்டார். கள் அநேக தொழிலாளர்களுக்குக் கூலி குறைக்கப்பட்டது. அதனால் தொழிலாளர் கள் வறுமைக்கிரையாகி அல்லற்பட நேரிட்டது. இந்த நிலைமை மறையும்படி நமது அரசாங்கமும் போதியதொன்றும் செய்துவிடவில்லை. ஆகவே, நம் நாட்டிலுள்ள தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, ஞாயரீதியான கிளர்ச்சி செய்யத் தலைப் பட்டாலொழிய, தொழிலாளர்களுக்கு விமோசனமில்லை.
தமிழ்நாட்டில் ஊக்கங் காட்டவில்லையே!
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்தியாவிலும் தொழிலாளர் சங்கங்கள், மே தினக் கொண்டாட்டத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலுள்ள, தொழிலாளர் சங்கங்கள் இவ்விஷயத்தில் போதிய ஊக்கங்காட்டவில்லையென்றே வருத்தத்துடன் கூற வேண்டியதிருக்கிறது. ஒற்றுமை வலிமை என்பதைத் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியத் திலும் அவசியமாகும். ஆகவே உலகத் தொழிலாளர் தினமாகிய மே தினத்தைக் கொண்டாடி, தொழி லாளர்களை ஒன்றுபடச் செய்ய வேண்டியது, தொழிலாளர்களின் உண்மையான தலைவர்களுடையவும் அனுதாபிகளுடையவும் பொறுப்பு என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.
கொண்டாடும்படி...
ஆலைத் தொழிலாளர்கள்தான் மே தினத்தைக் கொண்டாட வேண்டுமென்ற நிலைமை மாற வேண்டும். உழவுத் தொழிலாளர், அன்றாடக் கூலித் தொழிலாளர் பாத்திரத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் க்ஷவரத் தொழிலாளர், வண்டியோட்டும் தொழிலாளர், (ஜட்கா ரிக்ஷா, மோட்டார், ரயில்வே) முதலான சகல தொழிலாளர்களும் இவ்வைபவத்தைக் கொண்டாடும் படியான நிலைமையை உண்டு பண்ண வேண்டியது அவசியமாகும். இதைவிட்டு, ஒரு சில சோம்பேறி களும் (வேறு வேலையற்றோர்) சிறு பணக்காரர்களும் படித்த கூட்டத் தாரும் மாத்திரம் இவ்விழாவைக் கொண்டாடுவது, என்பது தொழிலாளர்களை ஏய்ப்பதற்கு வேண்டுமானால் பயன்படுமேயொழிய தொழிலாளர் முன்னேற்றத்திற்குப் பயன்படாது.
-------------------(காம்ரேட்) - "குடிஅரசு" 28.4.1935
மே தினம் - சமதர்மப் பெருநாள்!
உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட வர்களுக்கும், இந்நாள் வொன்றே உவந்த தினமாகும். இந்நாளில் கோடானு கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. இவ் வருஷம் மே தினமாகிய சென்ற திங்களில் (1933, மே, 1) ஆங்கில நாட்டிலும் (England), பிரான்சிலும் ((France), ருஷ்யாவிலும் (Russia), ஜெர்மனி (Gernmany) இட்டலி (Italy), அமெரிக்காவிலும் (America), இந்தியாவிலும் (India) ஜப்பானிலும் (Japan) மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில் கோடானு கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர். இந்த வருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளே தொழிலாளர் விடுமுறை நாளாகக் கொண்டாடியது. சமதர்ம நாடாகிய சோவியத் ருஷியாவில் 16 கோடி ஆண், பெண், குழந்தைகள் அடங்கலாக யாவரும், ருஷியா தேச முழுமையும், இத்தினத்தைக் கொண்டாடினார் கள். சமதர்மிகளாகிய நாமும் இத்தினத்தைக் கவனிக்காமலிருப்பது பெரும் குறைவேயாகும். இம்மாதம் முதல் நாள் கடந்துவிட்ட போதிலும், வருகிற ஞாயிற்றுக் கிழமை மே மாதம் 21 தேதி சுயமரியாதை சமதர்ம சபைகள் யாவும், சமதர்ம கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங்கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும் அந்தந்தக் கிராமங்களிலும், பட்டணங்களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம். ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்மம் இன்னதென்றும், தொழிலாளருக்கும் விவாசயிகளுக்கும், விளக்க முறச்செய்யலாம், துர்ப்பழக்க வொழுக்கங்களை வொழிக்குமாறு பல தீர்மானங்களைச் செய்ய லாம். இவ்விதமாக ஒழுங்காகவும், நியாய முறைப் படி கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத் திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.
-------------------- ஈ.வெ.ராமசாமி --- ”குடிஅரசு” 14.5.1933
-------------------------------------------------------------------------------------------------
சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும் மே மாதம் 1ம் தேதியை "தொழிலாளர் தின"மாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள்.
பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைப்பாடுகளை பகிரங்கப் படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீக்ஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (Ergotacracy) அதாவது தொழிலாளர் குடிஅர (Proletarian democracy) சாலுமே சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது.
சு.ம. வீரர்களே! சம தர்மிகளே! தொழிலாளர்களே! தொழிலாளிகளின் தோழர்களே! இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன்.
தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
------------- ஈ.வெ. ராமசாமி- “குடி அரசு” 28.04.1935
-----------------------------------------------------------------------------------------------
அனைவரும் பங்காளி என்ற நிலை வர வேண்டும்!
அனைவரும் பங்காளி என்ற பெயரில் வாழ்வதே உண்மையான உரிமை என்று தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள். மே நாளையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
நாளை (மே - முதல் நாள்) மேதினியெங்கும் மே நாள் என்று தொழிலாளர் உரிமை முழக்கம் வென்ற நாளாக உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே, மே நாள் புரட்சியைக் கொண்டாடும்படி பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் கொண்டாடும்படி தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
முதலீடு போன்றதே உழைப்பு என்ற தத்துவம் ஒப்புக் கொள்ளப்பட்டால், தொழிலில் முதலாளி - தொழிலாளி என்ற பெயரால் அவ்விருவரும் அழைக்கப்படாமல் பங்காளி என்ற பெயரிலேயே வாழ்வதுதானே உண்மை உரிமை என்ற தந்தை பெரியாரின் கருத்து செயலாகும் காலம் விரைந்து வருவதே உண்மை வெற்றியாகும்.
அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
0 comments:
Post a Comment