Search This Blog

24.4.11

ஹசாரேயின் பட்டினிப்போராட்டமும் அரசின் செயல்பாடும்


ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள் யார்? எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (22.4.2011) சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் மானமிகு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் உரையாற்றினார்கள்.


திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் எடுத்து வைத்த குற்றச்சாற்றுகள் - கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

இந்தியா - ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி அமைப்பு இங்குண்டு. சட்டங்கள் இயற்றுதல் - செயல்படுத்துதல் என்பதற்கான அமைச்சரவை உருவாக்கப்படுகிறது. நாடாளுமன்றம் - நீதிமன்றம் - நிருவாக அமைப்பு ஆகிய இம்மூன்று சக்கரங்களால் இது பயணிக்கிறது.

மக்கள் மன்றம் என்பது சட்டங்களை எதிர்க்கலாம் - ஆதரிக்கலாம் - போராடலாம் - கருத்துகளையும் எடுத்துரைக்கலாம்.

இத்தகு சூழலில் டில்லியில் அன்னா ஹசாரே என்பவர் ஒரு பட்டினிப் போராட்டத்தை அரங்கேற்றினார். இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்தப் பட்டினிப் போராட்டமாம்.

சில மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் ஒரு கால கட்டத்தில் இந்தப் போராட்டம் அறிவிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பட்டினிப் போராட்டத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

பல வெளிநாடுகளில் ஆட்சி அதிபர்களை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தோடு இதனை ஒப்பிட்டு எழுத ஆரம்பித்தன.

இந்த நிலையில் மத்திய அரசு பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்ட அன்னா ஹசாரேயைச் சந்தித்து அவர் கோரியதை ஏற்பதாகக் கூறி, பட்டினிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.

நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் லோக்பால் சட்டத்தில் எவற்றை எல்லாம் சேர்க்க வேண்டும் என்பதை வரையறை செய்ய குழு ஒன்று அமைக்கப்படும்; அதில் அன்னா ஹசாரே கூறும் 5 பேர்கள் இடம் பெறுவர் என்றும், மத்திய அரசின் சார்பில் 5 பேர் இடம் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஒரு வினாவை எழுப்பினார்.

தனி நபர் ஒருவர் பட்டினிப் போராட்டம் நடத்தினார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைப் புறந்தள்ளலாமா?

அரசமைப்புச் சட்டத்தின் எந்த சரத்தின்கீழ் இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது?

ஒரு பட்டினிப் போராட்டத்துக்காக மத்திய அரசு வளைந்து கொடுத்துள்ள இந்த முன்னுதாரணம் பிற்காலத்தில் வேறு சில தனி நபர்களால் மேற் கொள்ளப்படும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வழி செய்து கொடுத்து விடாதா?

அரசமைப்புச் சட்டத்தைத் தாண்டி தனி மனிதர்கள் உருவாக்கப்படலாமா?

ஊழலை ஒழிப்பதற்காக உள்ள சட்டங்கள், அவற்றை அமல்படுத்தும் காவல்துறை, தீர்ப்பு வழங்கும் நீதித்துறை இவையெல்லாம் இந்தியாவில் இருப்பதற்கான அர்த்தம்தான் என்ன?

இப்பொழுது அமைக்கப்படும் குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதைக்கூட தனி நபர் ஒருவர் முடிவு செய்ய இடம் கொடுக்கலாமா? தனி நபரா - நாடாளு மன்றமா - அரசா என்கிற கேள்விகள் எழவில்லையா?

உண்ணாவிரதம் என்பது சண்டித்தனம் என்றார் தந்தை பெரியார். காந்தியார் இருந்த உண்ணா விரதத்தையே தந்தை பெரியார் ஏற்கவில்லையே - அப்பொழுதே கண்டித்துள்ளார்.

நான் பட்டினி கிடக்கிறேன்; சாகப் போகிறேன்; நான் சொல்லுவதை செய்கிறாயா - இல்லையா? என்பது ஒரு வகையான அச்சுறுத்தல் அல்லவா? அல்லது பரிதாப உணர்வைத் தூண்டிக் காரியம் சாதிக்கும் யுக்தியல்லவா?

பட்டினி கிடந்த ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அதைக் காரணம் காட்டி நாட்டில் கலவரத்தை உண்டாக்கும் முயற்சி இதன் பின்னணியில் இல்லையா?

வேறு சில இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பட்டபோது அது தற்கொலை முயற்சி என்று கைது செய்து, வழக்குத் தொடர்ந்த அரசு, அன்னா ஹசாரே விடயத்தில் வேறு மாதிரியாக நடந்து கொண்டது ஏன்? தனி நபருக்கேற்ப சட்டம் வளைந்து கொடுக்கப்படலாமா? பொது மக்கள் சிந்திப்பார்களாக!

-------------- ”விடுதலை” தலையங்கம் 23-4-2011

*************************************************

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி


ஹசாரே குழு அமைக்கப்பட்டதால் நீதிமன்றங்களைக் கலைத்து விடுங்களேன்!

அய்ந்து நாள்களுக்குள் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட ஹசாரேவுக்காக மத்திய அரசு பணிவதா? ஹசாரே குழு இருக்கும்பொழுது நீதிமன் றத்தை கலைத்து விடுவதுதானே என சுப. வீரபாண்டியன் கேள்வி எழுப்பினார். ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள் யார்? என்ற தலைப்பில் நேற்று (22.4.2011) சென்னை பெரியார் திடலில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது உரையில் கூறியதாவது:

மூன்று நாள்களுக்குள் மிகப்பெரிய விளம்பரம்

அன்னா ஹசாரே என்பவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். மூன்று நாள்களில் பார்த்தால் அவர்களுக்கு மிகப்பெரிய விளம்பரம் வந்தது. அடுத்து அய்ந்தாவது நாளில் ஒவ்வொரு ஊழலாக அது உடையத் தொடங்கியிருக்கிறது.

லோக் பால், ஜன் லோக்பால் என்று கூறுகிறார்கள். இந்த 5 நாள்களில் அரசாங்கமே அன்னா ஹசாரே சொல்வதை ஏற்றுக் கொண் டதைப் போன்ற ஒரு நிகழ்ச்சி இவ்வளவு விரைவாக இது வரை நடந்ததே இல்லை.

எத்தனையோ பேர் இறந்தனர்

சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார்; இறந்தார். பொட்டி சிறிராமுலு உண்ணாவிரதம் இருந்தார்; இறந்தார். திலீபன் உண்ணாவிரதம் இருந்தார்; இறந்தார். அவர்களை எல்லாம் இந்த நாடு கண்டு கொள்ளவில்லை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் ஏன் மத்திய அரசு இப்படித் தலைவணங்குகிறது? ஊழல் ஒழிப்பு என்பது சட்டப் பிரச்சினை அல்ல; சமூகத்தை ஒட்டிய பிரச்சினை.

ஊழலை ஒழிக்க அதனை வேரோடு பிடுங்க வேண்டும். லோக்பாலுக்கு ஒரு வரைவுக் குழுவை அமைக்க ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இந்தக் குழுவில் 10 பேரை நியமித்திருக்கிறார்கள். 5 பேர் அரசு சார்ந்தவர்கள்; மீதி 5 பேர் பொது சமூக ஆர்வலர்கள்.

எல்லாம் ஹசாரேயா?

அதையும் தீர்மானித்தது யார்? இந்த ஹசாரேதான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன், அவரது மகன் பிரசாந்த் பூஷன்தான் இந்தக் குழுவில் இருக்க வேண்டுமா? ஊழல் குற்றச்சாற்று சாந்தி பூஷன் மீது வந்த பொழுது இவர் பதவி விலகியிருக்க வேண்டாமா? ராஜா ஊழல் செய்தார் - ரூ.1,76,000 கோடி என்று சொன்னார்கள். ஆனால் நீதிமன்றத்திலோ வெறும் 22 ஆயிரம் கோடி என்று சொன்னார்கள். அப்படியானால் மீதி 1 லட்சத்து 54 ஆயிரம் கோடியை எடுத்துக் கொண்டு சென்றது யார்? ஆதிக்கவாதிகள், இந்து மத மனப் பான்மையினர், அவாள் கூட்டத்தினர் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள். நீதிமன்றம் செய்கின்ற வேலையை ஹசாரே குழு செய்வதா? அப்படியானால் எதற்கு நீதி மன்றங்கள்? கலைத்துவிடலாமே!

ரஜினிகாந்துக்குத் தெரியாதா?

ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கின்ற நடிகர் ரஜினிகாந்த் வரை அவர்களிடம் இரண்டு கணக்கு இல்லையா? ஊழலை அவ்வளவு சுலபத்தில் ஒழிக்க முடியாது. சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். இவ்வாறு பேசினார். --”விடுதலை” 23-4-2011

*****************************************************

எந்தச் சட்டப்பிரிவின்கீழ் ஹசாரே குழு அமைத்தீர்கள்?


அன்னா ஹசாரேயின் எண்ணம் இந்துத்துவா நாட்டை ஆள வேண்டும் என்பதே!
லோக்பால் குழு உடனடியாக கலைக்கப்பட வேண்டும்
மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் எச்சரிக்கையும்-வேண்டுகோளும்!

ஊழலை ஒழிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு அரசியல் சட்டத்தில் எந்த சட்டவிதியின் கீழ் அமைக்கப்பட்டது. இது சட்டத்திற்கே புறம்பானது - அப்பாற்பட்டது. சட்ட விரோதமான இந்தக் குழு கலைக்கப்பட வேண்டும். ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் மதச்சார் பின்மையை ஒழித்து இந்த நாட்டை இந்துத்துவா கொள்கை ஆள வேண்டும் என்பதற்காக நடத்தப் பட்ட ஒத்திகை என்பதை மத்திய அரசு எச்சரிக்கை யாக இருந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி கூறினார்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்கள் யார்? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் 22.4.2011 அன்று இரவு 7 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார்.

சுப.வீரபாண்டியன்

அடுத்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டி யன் சிறப்பாக உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி வருமாறு:

பொதுவாக ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. இதிலே யாருக்கும் மறுப்பு கிடையாது. எந்த வித கருத்து மாறுபாடும் கிடையாது.

நம்மைப் பற்றி ஒரு தவறான பிரச்சாரம்

ஊழலை ஒழிக்க முன்வருகிறவர்களை இவர்கள் எதிர்க்கிறார்களே என்று நம்மைப் பற்றி ஒரு தவறான பிரச்சாரத்தை சிலர் செய்யக் கூடும்.

யுத்த காலங்களில் எப்படி உண்மைகள் களபலியாகின்றனவோ அது போல அமைதியான இந்தக் காலகட்டத்தில் உண்மைகள் களபலியா கின்றன.

ஊழலை ஒழிப்பதற்கென்றே சில பேர் புது அவதாரங்களை எடுத்ததைப் போல சமீபத்தில் திடீரென்று அவதாரங்கள் எடுத்திருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவுக்கு விளம்பரம்

இதற்கு ஊடகங்கள் அபாரமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது; புரட்சி பூபாளத்தை நாட்டில் ஏற்படுத்த அன்னா ஹசாரே வந்திருக்கிறார் என்று எப்பொழுதும் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு - மிகப் பெரிய அளவுக்கு வெளிச்சம் போட்டு தங்களது பிரச்சார சக்தியின் மூலம் காட்டியிருக் கின்றார்கள்.

ஹசாரே உண்ணாவிரதம் இருந்த இடத்தில் காவித் துணியையும் பாரதமாதா படத்தையும் முன்வைத்துக் காட்டியிருக்கின்றார்கள்.
ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பெரியாரின் சிந்தனையாளர்களும், பகுத்தறிவு வாதிகளும், மனித நேயம் உள்ளவர்களும் மற்ற எவருக்கும் பின்தங்கியவர்கள் அல்லர்.

நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும்

இதில் நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய வாதம்.
பத்திரிகையாளர்களைக் கேட்கிறோம்; ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்துக் கேட் கிறோம். திக் விஜய் சிங் ஒரு கேள்வி கேட்டாரே!

ரூ. 50 லட்சம் எப்படி வந்தது?

ஊழலை ஒழிப்பதற்காக ஹாசரே நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆன செலவு 50 லட்ச ரூபாய். இந்தப் பணம் எப்படி வந்தது? யார் செலவு செய்தது? இதன் பின்னணி என்ன? இதற்கே 50 லட்ச ரூபாய் செலவு செய்தவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள் என்றுகேள்வி கேட்டாரே!

நாட்டிலே அரசியல் சட்டப்படி நாடாளுமன்றம் இருக்கிறது; நிருவாகத்துறை இருக்கிறது; நீதித் துறை இருக்கிறது.

எந்தப் பிரிவின் கீழ் குழுவை அமைத்தீர்கள்?

அரசியல் சட்டத்தில் எந்தப் பிரிவின் கீழ் இவர்கள் நடந்து கொண்டார்கள்? ஊழலை ஒழிப்பதற்கு எந்த அரசியல் சட்டத்தின் கீழ் குழுவை அமைத்தார்கள்? அரசியல் சட்டத்திற்கே அப்பாற்பட்டவர் களாக இவர்கள் நடந்திருக்கிறார்கள். இவர்களுடைய ஆதிக்க சக்தியை இதன் மூலம் நிலைநாட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

ஹசாரேயும் - தேர்தல் ஆணையமும்!

தேர்தல் ஆணையம் என்ற குழு கூடத்தான் இருக்கிறது. அம்மையார் அதே அறிக்கையை கொடுக்கிறார். தேர்தல் ஆணையமும் கொடுக்கிறது.

தேர்தல் ஆணையம் இப்படி ஓர் அறிவிப்பு வெளியிடுவதாக வைத்துக் கொள்வோம். இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் அடுத்த முதல்வர் கலைஞர் இல்லை; இந்த அம்மா தான் அடுத்த முதல்வர் என்று தன்னிச்சையாக சொன்னால் யாராவது இதை ஏற்றுக் கொள்வார்களா? அப்படித்தானே அன்னா ஹசாரே தலைமையில் அமைக்கப்பட்ட குழு நடந்திருக்கிறது.

டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஹேமந்த் பாபுராவ் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்திலே ஒரு வழக்கைத் தொடுத்திருக்கிறார். அன்னா ஹசாரே மீது 2.5 லட்சம் ரூபாய் ஊழல் புரிந்துள்ளார் என்று வழக்குத் தொடுத்திருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதி சாவந்த் என்பவரே ஹசாரேயைக் கண்டித்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். டில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருக்கிறதே!

ஹசாரே தலைமையில் உள்ள குழுவினர்களே ஊழல் வாதிகள். சாந்தோஷ் ஹெக்டே என்பவர் மட்டுமே வேண்டுமானால் இந்தக் குற்றச் சாற்றிலிருந்து மிஞ்சலாம், அவ்வளவுதான்.

அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், மற்றும் அவரது மகன் பிரசாந்த் பூஷன் போன்றவர்களை வைத்து கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது?

ஹசாரே மிரட்டினால் மத்திய அரசு பணிவதா?

அன்னா ஹசாரே குழுவினர் மிரட்டினால் மத்திய அரசு பணிவதா?
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் முடிக்க இன்னும் 12 கி.மீ. தான் பாக்கி. இராமனைக் காட்டி அந்தத் திட்டத்தை உச்சநீதிமன்றத்தின் மூலம் முடக்கி வைத்திருக்கிறார்களே!

சட்டத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் மக்களைத் திரட்டி சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளலாமா?

அதேபோல ஈழத் தமிழர் பிரச்சினைக்காக மக்களை நாங்கள் ஒன்று திரட்டினால் இவர்கள் ஒப்புக்கொள்வார்களா? மத்திய அரசு சும்மா இருந்துவிடுமா? எதற்கும் ஒரு வரைமுறை வேண்டாமா? அன்னா ஹசாரே குழு அரசியல் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

சட்டரீதியான அங்கீகாரம் உண்டா?

இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் உண்டா? இது டில்லியில் நடத்தப்பட்ட கட்டப் பஞ்சாயத்து.

மத்திய அரசாலே அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டப் பஞ்சாயத்து.

முதல்வர் அமைத்த குழு

ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். முதலமைச்சர் கலைஞர் ஒரு குழு அமைத்தார். 28 பேர் கொண்ட குழு அது. ஒருவர் திடீரென்று உண்ணாவிரதம் இருக்கிறார் என்று செய்தி வந்தது. உடனே முதலமைச்சர் கார் அங்கு சென்றது. என்ன இங்கே கூட்டம் என்று கேட்டார்.

உண்ணாவிரதம் இருக்கிறவர் வந்தார் எங்களுடைய ஜாதியினருக்கு உரிய பிரதி நிதித்துவம் இல்லை. எனவே உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொன்னார்.

உடனே முதல்வர் சொன்னார். சரி உங்களுடைய ஜாதியினருக்கு நீங்களே பிரதிநிதி. இந்தக் குழுவில் 29 பேராக நீங்களும் இருங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார். முதல்வர் அதிகாரம் உள்ளவர். அவர் அமைத்த குழுவில் உண்ணா விரதம் இருந்தவரை நியமித்தார். இது சட்டப்படி சரியான ஒரு செயல். சரியான உதாரணம் இது.

அரசியல் சட்டப்படியான குழு அல்ல

அதுபோல அன்னா ஹசாரே தலைமையில் அமைக்கப்பட்ட குழு சட்ட சம்பந்தப்பட்ட அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு அல்ல என்பதுதான் எங்களுடைய வாதம். காந்தியார் உண்ணாவிரதம் இருந்ததையே பெரியார் கண்டித்தார்.

பிரபாகரன் உண்ணா விரதம் இருந்தபொழுது

பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அவர்களுடைய கருவிகளை எல்லாம் போலிசார் பறித்துக் கொண்டு சென்று விட்டார்கள் என்பதற்காக நாங்கள் தான் சென்றோம். பிரபாகரன் அவர்களிடத்திலே சொன்னோம். ஒரு போர் வீரன் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லி உண்ணாவிரதத்தையே முடித்து வைத்தவர்கள் நாங்கள்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் அச்சுறுத்தல். இது சமூகத்திற்கு பொது ஒழுக்கக் கேட்டைத்தான் உருவாக்கும். மத்திய அரசாங்கத்தை அச்சுறுத்தி காரியம் சாதிக்கலாம் என்று நினைத்தால் இது எங்கே போய் முடியும்? இந்த ஹசாரே குழு அமைக்கப்பட்டதே போலித் தனமானது.

ஒரு முக்கிய நபருக்காக வழக்கிற்காக சாந்தி பூசனை அமர்சிங் சந்தித்திருக்கின்றார். நான் சந்திக்கவே இல்லை என்று அன்னா ஹசாரே குழுவில் உள்ள சாந்தி பூஷன் சொல்லுகிறார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற கதை அல்லவா?

குறுந்தகட்டில் சாந்தி பூஷன் குரல்தான்!

சாந்திபூஷன் பேசிய குறுந்தகடு போலியானது என்று சாந்திபூஷன் சொன்னார். உடனே அரசாங்கத்தினுடைய தடயவியல் துறைக்கு அந்த குறுந்தகடு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இது சாந்திபூஷனுடைய குரல்தான் என்று அரசாங்கத்தினுடைய தடயவியல் துறையே ஆதாரப் பூர்வமாக சொல்லிவிட்டதே.

சாந்தி பூஷன் மீது வழக்கு பாய்ந்திருக்க வேண்டாமா?

இதற்காக இந்நேரம் சாந்திபூஷன் மீது மத்திய அரசின் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? இல்லையே...

ஒவ்வொருவரும் ஊழல் பேர்வழிகள்

அன்னா ஹசாரே குழுவில் உள்ளவர்களில் ஒவ்வொருவருடைய ஊழலும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் உள்ள ஊழல் பேர்வழிகள் ஒவ்வொருவரும் இப்பொழுது வரிசையாக நிற்கிறார்கள். இவர்களா ஊழலை ஒழிக்கப் போகிறவர்கள்?

நீதிபதிக்கு ரூ. 4 கோடி

நீதிபதிக்கு ரூ. 4 கோடி கொடுத்தால் அவரை சரிப்படுத்தி விடலாம் என்று சாந்தி பூஷன் சொன்னது ஆதாரப் பூர்வமாக வெளிவந்துவிட்டது. இப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிக்கு விலையே உச்சகட்டமாக 4 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்துவிட்டார்கள். அந்த அளவுக்கு ஊழல் பேர்வழிகள் இவர்கள்.

அது மட்டுமல்ல - மாயாவதி அவர்களுக்காக சாந்தி பூஷன் ஒரு வழக்கில் ஆஜரானார். அதற்காக சாந்திபூஷனுக்கு பண்ணை வீடு வழங்கப்பட் டிருக்கிறது. சாந்திபூஷன் மகனுக்கு ஒரு பண்ணை வீடு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகின்ற உத்தமர்களா?

சாந்திபூஷன் பதவி விலகியிருக்க வேண்டாமா?

சாந்தி பூஷன் போன்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எப்பொழுது என்மீது இப்படி ஒரு குற்றச்சாற்று வந்ததோ இனி நான் அந்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று சொல்லி அல்லவா விலகியிருக்க வேண்டும்?அதுதானே சான்றாண் மைக்கு அழகு?

ஆகவே ஒன்றைச் சொல்லுகிறோம். இந்த விசயத்தில் மத்திய அரசு பலகீனமாக நடந்து கொள்ளக் கூடாது.

இந்துத்துவா ஆட்சிக்கு ஒத்திகை

மத்திய அரசு மதச்சார்பற்ற அரசு என்று இருக்கக்கூடாது. அடுத்து மத்தியில் இந்துத்துவா ஆட்சிதான் வரவேண்டும் என்பதற்குப் பார்க்கப்பட்ட ஒத்திகைதான் இந்த அன்னா ஹசாரே குழு நாடகம். ஊழலை ஒழிப்போம் என்று பேசுவது இப்பொழுது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. நாட்டில் எல்லாவற்றிலும் போலி.

எல்லாமே போலி!

மருந்தா-அது காலாவதியான மருந்து; மருந்தில் போலி. அதே போல தண்ணீரில் கலப்படம்-போலி. உணவா அதிலும் கலப்படம், போலி. சாமியார் என்றாலே போலி. அதையும் தாண்டி போலி சாமியார்கள். போலி சர்டிபிகேட். சரி, விமானம் ஓட்டுவதிலும் போலி சர்டிபிகேட் கொடுத்து விமானத்தை ஓட்டியிருக்கின்றான்.
ஊழலை ஒழிக்கவேண்டுமானால் அதன் அடித்தளத்திற்குப் போக வேண்டும். லஞ்சமே கடவுளிடமிருந்துதான்!

ஏன் இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியவில்லை? பூஜை அறையிலிருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது. கடவுளுக்கு முதலில் லஞ்சத்தைக் கொடுத்துவிட்டுத்தான் நம்மாள்கள் எதையும் தொடங்குகிறார்கள்.

திருப்பதி வெங்கடாஜலபதி அறிவிக்கட்டுமே- இனிமேல் எனது உண்டியலில் பணம் போடுகிற வர்கள் செக்காகவோ, அல்லது டிராப்டாகவோ முகவரியோடு போட வேண்டும்; கறுப்புப்பணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஹசாரேவுக்கு ஒரு படி மேலே போய் திருப்பதி வெங்கடாஜலபதி அறிவிப்பாரா?

நிறைய கறுப்புப்பணம் அதில்தானே விழுகிறது? எனவே அடிப்படையில் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். எனவே ஊழல் ஒழிப்பு என்பது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினை. சிங்கப்பூரில் லஞ்சம் இல்லையே-ஏன்?

சிங்கப்பூரில் லஞ்சம் என்பதே கிடையாதே. அங்கு எல்லாம் முறையாக, தானாக நடக்கிறதே. லஞ்சம் என்பதற்கு வேலையே இல்லையே! எனவே முறையில் மாற்றம் வேண்டும். எனவே போலித்தனம், இரட்டைவேடங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தில் குற்றம்சாற்றப்பட்டவரும் சரி, வழக்கு தொடுத்தவரும் சரி-இருவரும் கடவுள் பெயரால்தானே நீதிமன்ற கூண்டிலேறி உறுதிமொழி எடுக்கிறார்கள்? யாராவது ஒருவர்தானே குற்றவாளியாக இருக்க முடியும்? குற்றவாளியை மட்டும் கடவுள் தண்டித்தாரா?

ஒவ்வொரு வழக்கும் வெள்ளி விழா

காஞ்சிபுரம் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று வழக்கு. வடகலை நாமமா? தென்கலை நாமமா? என்று. கோவில் யானைகள் பல செத்துப் போயின. நீதிபதிகள் நான்கு பேர் செத்துப் போனார்கள். வழக்குரைஞர் 5 பேர் செத்துப் போனார்கள். நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வழக்கு இன்னமும் முடியவில்லை.

ஒவ்வொரு வழக்கும் வெள்ளிவிழா, பொன்விழா, முத்துவிழா, வைரவிழா, நூற்றாண்டு விழா காணுகிறது. பல வழக்குகளில் கட்டே காணாமல் போய்விடுகிறது.

அரசியல் சட்டப்படி நடக்கிறார்களா?

அரசியல் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு சம்பளம் ரூபாய் பத்தாயிரம் என்று இருக்கிறது. ரூபாய் பத்தாயிரம்தான் வாங்குகிறாரா? நமது நாடாளுமன்ற உறுப்பினர்களே-எங்களுக்கு சம்பளம் ஒரு லட்சம் கொடுங்கள் என்று கேட்டு இன்றைக்கு ரூ.80 ஆயிரம் வாங்குகிறார்கள்.

மக்களுடைய வரிப்பணம் எந்தெந்த வகையில் செலவிடப்படுகிறது? யார் செலவு செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

ஹசாரே குழு கலைக்கப்படவேண்டும்

ஆகவே ஊழலை ஒழிக்க வேண்டுமனால் முதலில் அதன் ஊற்றுக்கண் ஒழிக்கப்பட வேண்டும். அதை ஒழித்தால் ஒழிய இதற்கு வேறு வழி கிடையாது. ஹாசாரே குழு முதலில் கலைக்கப்பட வேண்டும் என்று இந்தக்கூட்டத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம்.

ஊழை ஒழிப்பது சட்டத்தால் முடியாது

ஊழலை ஒழிப்பது சட்டத்தினால் மட்டும் முடியாது. இதை சமுதாய மாறுதலால்தான் ஒழிக்க முடியும். அதற்குத் தேவையான அளவுக்கு அடித்தளத்தையே மாற்றி அமைக்க வேண்டும்.

-இவ்வாறு பேசிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மேலும் பல கருத்துகளை விளக்கமாகக் கூறினார்.

------------------ “விடுதலை” 23-4-2011

0 comments: