Search This Blog

28.4.11

மகரஜோதி மோசடியை மறைக்க இன்னொரு மோசடியா?


மோசடியைத் தடை செய்!

கேரள மாநிலம் திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளர் ஆர். அனிதா கொச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இரு வழக்குகள் தொடர்பாக பதில் மனுக்கள் இரண்டினைத் தாக்கல் செய்தார்.

மகர சங்கராந்தியன்று பொன்னம்பல மேடு பகுதியில் வானத்தில் தெரியும் மகர ஜோதி ஒரு நட்சத்திரம். அது இயற்கையாகத் தோன்றக்கூடியதே! மனிதர்களால் ஏற்றப்படுவதல்ல. ஆனால், மகரஜோதி வானத்தில் தோன்றும் அதே நேரத்தில், பொன்னம்பல மேட்டில் சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அப்பொழுது மகர தீபம் பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படுகின்றது - அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான். இதைத்தான் பக்தர்கள் மகரஜோதி என்று கும்பிட்டு வருகிறார்கள். காலம் காலமாக இது நிகழ்கிறது. அந்த மகரஜோதி தெய்வீகமானது என்று நாங்கள் (தேவசம் போர்டு) கூறியதில்லை. மகரஜோதி பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகரஜோதி ஏற்றப்படுவதைத் தடை செய்ய முடியாது என்று திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளரால் அதிகார பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் வெளிப்படையாகக் கூறப்பட்டுவிட்டது.

இந்த மோசடியை கேரள மாநிலப் பகுத்தறிவாளர்கள் 1982 ஆம் ஆண்டிலேயே நேரில் சென்று ஆய்வு செய்து அம்பலப்படுத்திவிட்டனர்.

பிளிட்ஸ் ஏடு (16.1.1982) அதனை வெளியிட்டிருந்தது. இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா இதழும் (பிப்ரவரி 15-1987) மகரஜோதி என்பது வருமானத்துக்காகச் செய்யப்பட்ட வியாபார யுக்தி என்று தெரிவித்திருந்தது.

இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த ஜோசப் எடமருகு மகரஜோதி மோசடி குறித்து கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நாயனாரிடம் விவாதித்தார். உண்மைதான் என்றாலும், அதில் தலையிட முடியாது என்று முதலமைச்சர் ஈ.கே. நாயனார் கூறினார்.

இப்பொழுதுள்ள முதலமைச்சர் அச்சுதமேனனும் அதே பதிலைத்தான் தெரிவித்தார். அதுகுறித்து விசாரணை நடத்த முடியாது; அது மக்களின் மத சம்பந்தப்பட்ட நம்பிக்கை என்று தட்டிக் கழித்துவிட்டார்.

நீதிமன்றம் தலையிட்டதன் பெயரில்தான் திருவாங்கூர் தேவசம் போர்டு நீதிமன்றத்தில் அரசு சார்பில் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்த மனுவில்கூட அரசு என்ன சொல்லுகிறது? பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகரஜோதி ஏற்றப்படுவதை தடை செய்ய முடியாது என்றுதான் அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? மோசடிதான் - அது மதம் சார்ந்த - கடவுள் சார்ந்த நம்பிக்கை என்பதால், அதனைத் தடை செய்ய முடியாது என்று அரசு சொல்லலாமா?

மோசடியில் என்ன நம்பிக்கை சார்ந்தது - நம்பிக்கை சாராதது? சட்டத்தின் முன் அதற்கு இடம் உண்டா?

நீதிமன்றம் அரசு சொல்லும் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு, சபரிமலை மகரஜோதியைத் தடை செய்யவில்லையென்றால், இது மாதிரியான மோசடிகள் மேலும் மேலும் பெருகிட வாய்ப்பு செய்து கொடுத்தது ஆகாதா?

கேரள மாநிலத்துக்கு வருமானம் வருகிறது என்றால், எந்த மோசடியையும் அனுமதிக்கலாமா?

மோசடியான இந்த மகரஜோதியைத் தரிசிப்பதாகக் கூறிக் கூடிய பக்தர்களின் நெரிசலால் 2010 ஜனவரி 14 அன்று 102 பேர் பலியானார்களே - அதற்குமுன் 1999 ஆம் ஆண்டிலும் இதேபோல, பக்தர்கள் பலியானார்களே - இவற்றிற்கு யார் பொறுப்பு?

அய்யப்பன் காப்பாற்றினானா என்பதைவிட ஒரு மோசடியான காரியத்தை அரசு ஊழியர்களே பொன்னம்பலமேட்டில் செயற்கையாக தீபத்தை ஏற்றுவதால் ஏற்படும் விபரீதம்தானே இது?

மோசடி செய்யும் அந்த அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா? இதற்குத் துணை போகும் தேவசம் போர்டு குற்றவாளியல்லவா?

பொதுமக்கள் தவறு செய்தால் சட்டம் அவர்களைத் தண்டிக்கலாம்; அரசே தவறு செய்தால் அவர்களை நீதிமன்றம் தண்டிக்க வேண்டாமா?

மதம் சார்ந்த, பக்தி சார்ந்த விடயம் என்பதால் நீதிமன்றம் சட்டத்தைக் கடந்து சிந்திக்கக் கூடாது - இன்னும் சொல்லப்போனால், ஓர் அரசே மக்களை ஏமாற்றும் மோசடியைத் திட்டமிட்டுப் பல்லாண்டு காலமாகச் செய்துவரும்போது கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள நீதிமன்றம் நிச்சயம் கடமைப்பட்டுள்ளது.

நீதிபதிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இருந்தால், அது தனிப்பட்ட ரகத்தைச் சார்ந்தது. வீட்டின் பூஜையறை எல்லைக்குள் சம்பந்தப்பட்டது. அதனை ஒரு பொது இடத்தில், நேர்மையான சட்டத்தின் இருப்பில் பிரதிபலிக்கக் கூடாது.

இதில் இன்னொன்று முக்கியமாகக் - கவனிக்கத்தக்கது - மகரஜோதி என்பது இயற்கையான நட்சத்திரம்; மகர தீபம் என்பதுதான் செயற்கையானது என்று தேவசம் போர்டு கூறுகிறதே - மகரஜோதிதான் இயற்கையானதாயிற்றே - அதுதான் வானத்தில் தோன்றுமே, அப்படியிருக்கும்போது எதற்காக செயற்கையான தீப ஏற்பாடு? இயற்கையான மகரஜோதி என்னும் நட்சத்திரம் பகலில் தெரியுமா? ஒரு மோசடியை மறைக்க இன்னொரு மோசடியா?

நீதிமன்றம் சட்டத்தின்படி துலாக்கோலை நேர்மை யாகப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

---------------”விடுதலை” தலையங்கம் 28-4-2011

0 comments: