Search This Blog

27.4.11

இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும்...


ஒன்றுக்கொன்று பொருத்தம்


இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமிபாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டார்கள். சுப்ரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள். இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணியன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன்றான்; சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தது. அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக்கொண்டிருப்பதுமாக இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரிய புராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரிபக்தர்கள் கதையும் அனேகமாக ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பெரிய புராண நாயன்மார்களில் குயவர் வகுப்பு என்பதற்காக ஒரு நாயன்மாரை திருநீலகண்ட நாயனார் என்று உற்பத்தி செய்தது போலவே பக்த லீலாமிர்தத்திலும் குயவர் வகுப்புக்காக கோராகும்பார் என்பதாக ஒரு பக்தரை கற்பித்து இருக்கின்றார்கள். பெரிய புராணத்தில் பறையர் வகுப்பு என்பதற்காக நந்தனார் என்பதாக ஒரு நாயனாரை சிருஷ்டித்தது போலவே பக்த லீலாமிர்தத்திலும் பறையர் வகுப்புக்காக சொக்க மேளா என்கின்ற ஒரு பக்தரை சிருஷ்டித்து இருக்கின்றார்கள். இப்படியே மற்றும் பல நாயனார்களும், ஹரி பக்தர்களும் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சம்பந்தமான கதைகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, திரு நிலகண்ட நாயனார் தன் பெண் ஜாதியோடு கோபித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் திரேக சம்மந்தமில்லாமலிருந்ததை சரி செய்ய சிவபெருமான் சிவயோகியாக வந்து இருவரையும் சேர்த்து வைத்ததாக கதை உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பக்த லீலாமிர்தத்தில் கோராகும்பாரும் தன் மனைவியுடன் கோபித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தேக சம்பந்தமில்லாமல் இருந்ததைச் சேர்த்து வைப்பதற்காகவே விஷ்ணு பெருமான் தோன்றி இருவர்களையும் சேர்த்து வைத்ததாகவே கதை கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பெரிய புராணத்திலும் நந்தனாருடைய கதையிலும் நந்தனாரைக் கோவிலுக்குள் விடும்படி பரமசிவன் இரவில் வேதியர் கனவில் வந்து சொன்னதாகக் கற்கப்பட்டிருக்கின்றது. பக்த லீலாமிர்தத்தில் சொக்கமேளர் (சொக்கமாலா என்றும் சொல்வதுண்டு) என்னும் பறையர் ஒருவரை விஷ்ணு இரவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போனதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இப்படி அனேக கதைகள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் போட்டிபோட்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் பார்ப்பனர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் உயர்வுகள் கற்பிக்கப்பட்டிருப்பதிலும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இரண்டிலும் ஜாதி வித்தியாசத்தை உறுதிப்படுத்தி பிறகு அந்தக் குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில் மாத்திரம் மிக்க கடினமான நிபந்தனை மீது மன்னிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

ஆகவே இவைகள் சிவனும், விஷ்ணும் ஆகிய இரு கடவுள்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு செய்தார்களா? அல்லது இரண்டு சமயத்தின் பேராலும், ஜாதிகளை நிலை நிறுத்தவும், மதப்பிரசாரத்திற்கும், வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடும் ஆசாமிகளால் கற்பிக்கப்பட்டதா என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் நாம் சொன்னால் அது மிகுந்த "தோஷமாக ஏற்பட்டு, பெரிய பாவத்திற்காளாக வேண்டியதாய்ப் போய்விடும்."

---------- ----------- சித்திரபுத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை -”பகுத்தறிவு” - சனவரி 1937

0 comments: