Search This Blog

6.4.11

பெரியார் ஏன் மதம் மாறவில்லை?




பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னிலைக்கு வர இந்துமதக் கட்டுக் கோப்பிலிருந்து அடியுடன் விலகுவதே வழி!


09.02.1959 அன்று திங்கள் மாலை அரிஷ் நகரில் (கான்பூர்) ரிபப்ளிக்கன் குடியரசுக் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஊழியர்கள் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் அக்கட்சியின் ஊழியர்கள் வேண்டுகோளுக்கிணங்க கலந்து கொண்டு அறிவுரையாற்றினார்கள். பல தோழர்கள் தாங்கள் இம்மாகாணத்தில் ஜாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டுமென்று கேட்டு அதன்படி நடக்கத் தயாராக இருக்கிறோம் என்று உறுதி கூறினார்கள்.

அந்தக்கூட்டத்தில் கேட்கப்பட்ட சந்தேகங்கள், கேள்விகள் இவற்றைத் திரு. தீனா நாத் மோதி அவர்கள் இந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார். தந்தை பெரியார் அவர்கள் ஆங்கிலத்திலேயே விடையிறுத்து, கழகக் கொள்கைகளையும், இலட்சியங்களையும் ஜாதி ஒழிய நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டு மிகவும் தெளிவாக விளக்கினார்கள். அந்த விளக்கங்களைக் கேட்ட கான்பூர் நகரத் தோழர்கள் மிகவும் திருப்தி அடைந்து, "தந்தை பெரியார் அவர்கள் வழியில் நின்று ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்" என்று உறுதிமொழி தந்தார்கள். இடைஇடையே உணர்ச்சிப் பெருக்கினால் 'தந்தை பெரியார் வாழ்க!' 'ரிபப்ளிக்கன் கட்சி வாழ்க' 'திராவிடர் கழகம் வாழ்க!' என்றெல்லாம் முழங்கினார்கள்.

கேள்வி: ஜாதியை ஒழிக்க நீங்கள் என்ன வழி சொல்லுகிறீர்கள்?

விடை: பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம்.

ஒன்று - சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது;

மற்றொன்று - சட்டத்தைப் பற்றி இலட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது;

இவற்றில் நீங்கள் எந்த வழியைப் பின்பற்றத் தயாராக இருக்கிறீர்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால் என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம்.

நீங்கள் நம்முடைய கீழ் ஜாதித் தன்மை ஒழிய வேண்டுமானால் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும். 1. எந்த இந்துக் கோயில்களுக்கும் நீங்கள் - பிற்படுத்தப்பட்ட கீழ்ஜாதி மக்கள் யாரும் போகக் கூடாது. 2. இந்துமதக் கடவுள்களைக் கும்பிடக் கூடாது. 3. இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது. 4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும், சின்னத்தையும் அணியக் கூடாது. 5. உச்சிக் குடுமியைச் "சோட்டி" யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது. 6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக் கூடாது. 7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது. 8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது. 9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச்சாலைகளுக்குப் போகக்கூடாது.

கேள்வி: இந்து மதத்தை மதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டீர்களே! அதுசரி, ஆனால் கலியாணம் முதலிய சடங்குகளுக்கு எப்படிப் பார்ப்பானை அழைக்காமல் இருப்பது? உங்கள் பக்கத்தில் எவ்வாறு நடத்துகிறீர்கள்?

பதில்: எங்கள் பக்கத்தில் நாங்கள் எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும், சடங்குகளுக்கும் 'பார்ப்பானை' அழைப்பதே இல்லை; திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பெரும்பாலும் என்னை அழைப்பார்கள். அல்லது எங்கள் கட்சித் தோழர்களை அழைப்பார்கள். அல்லது அந்த வகுப்புப் பெரியவர்களை அழைப்பார்கள். அவர் தலைமை தாங்கி மணமக்களின் சம்மதம் கொண்ட உறுதி மொழியைப் படிப்பார்கள். மாலை மாற்றிக்கொள்ளுவார்கள். சில இடங்களில் தாலியும் அணிவிப்பது உண்டு. அதுபோல நீங்களும் செய்யலாம்; அல்லது உங்கள் குடும்பங்களில் உள்ள வயதான பெரியவர்களை வைத்து நடத்தலாமே!

கேள்வி: ரிபப்ளிக்கன் கட்சியாகிய குடியரசு எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா? எங்களுக்கு உதவி செய்ய முடியுமா?

பதில்: எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ எங்கள் மாகாணத்திலுள்ள எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்குச் சட்ட மன்றமும், பார்லிமெண்டையும் (நாடாளுமன்றத்தையும்) கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே அதற்கு எதிராக இக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை!
கேள்வி: நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படியான பிரசாரம் செய்தால் வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்: ஆகா! தாராளமாக! எனக்கு அதில் நம்பிக்கை உண்டு. 10 வருடங்காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாத பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு. அந்த உணர்ச்சியை மக்கள் இடையே அடைய முடியும்.

கேள்வி: ஜாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறீர்களே! இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்க முடியும்?

பதில்: நல்ல கேள்வி. அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகிறது! அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி. அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆகிவிடும்.

இரண்டாவது இன்றைய அரசமைப்புச் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசமைப்புச் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.

சிலர் சொல்லுவார்கள் ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்குப் போனால் இதை எடுத்துச் சொல்லலாம் என்று சொல்லக் கூடும். அதற்கு அங்குப் போக வேண்டும் என்பது அவசியம் இல்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்லுகிறது!

கேள்வி: நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே. கைப்பற்ற முடியாதா?

பதில்: அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

கேள்வி : நாமும் எலக்ஷனுக்கு நிற்கலாமே. வயதுவந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறதே!

பதில் : எலக்ஷனில் (தேர்தலில்) நின்று ஜெயித்து (வெற்றி பெற்று)
மெஜாரிட்டியாகி (பெரும்பான்மையாகி) அரசாங்கத்தைப் பிடிப்பது என்பது நம்மால் ஆகாத காரியம்! ஏனென்றால் பெரும்பாலான ஓட்டர்கள் (வாக்காளர்கள்) முட்டாள்கள். எதற்காக ஓட்டுபோடுவது என்பது தெரியாதவர்கள். பெரும்பாலான அபேட்சகர்களும் (வேட்பாளர்களும்) பணம் செலவு செய்யாமல் எலக்ஷனில் நின்று ஜெயிக்க (வெல்ல) முடியாது; ஒரு இடத்திற்கு நின்று போட்டி போட்டு ஜெயிக்க வேண்டுமென்றால் 10000, 20000, 30000 ரூபாய் சில சமயத்தில் லட்ச ரூபாய்கூட செலவு செய்ய வேண்டும். நீங்களோ ஒற்றைக் காசும் கையில் இல்லாத (Pennyless People) மக்கள் எப்படிச் செலவு செய்ய முடியம்? பார்லிமெண்ட்டுக்குப் (நாடாளுமன்றத்திற்குப்) போக வேண்டும், மெஜாரிட்டி (பெரும்பான்மை) அடைய வேண்டும் என்றால் தலைக்கு 300 பேர் (500 இல்) தேவை. அதுக்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகும். இந்த வசதி இன்றைக்குக் காங்கிரஸ் கட்சிக்குத்தான் இருக்கிறது, பெரிய முதலாளிகள், டாடா, பிர்லா, டால்மியா, முந்திரா போன்றவர்களிடம் சென்று கோடிகோடியாகப் பணம் வசூலித்துப் பணத்தைத் தண்ணீர் பட்டபாடாகச் செலவு செய்து வெற்றியடைகிறார்கள்.

அவர்களும் கேட்டவுடன் சர்க்கார் (ஆளுகிற) கட்சியாக இருப்பதை அனுசரித்து, தங்களது சுயநலத்தை எண்ணி, வாரி வாரி கொடுக்கிறார்கள். அதுபோல நம்மால் ஆகுமா?

அப்படியே மீறி, காங்கிரசைத் தோற்கடித்துக் (கேரளத்தில் மலையாளிகள் ராஜ்யம்) கம்யூனிஸ்ட்காரர்கள் ஆளுகிறார்கள். அது பெயரளவுக்குத்தானே கம்யூனிஸ்ட் ஆட்சி? மீதி எல்லாம் டெல்லி அரசாங்கம் உத்தரவிடுவது படிதான் நடக்கிறது? ஒரு உதாரணம் அந்தக் கேரள முதன் மந்திரி ஒரு கலப்புமணச் சங்கத்தில் பேசும்போது சொன்னார், "நான் எனது ஆட்சியால் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுவேன். தீவிரமாகப் பாடுபட்டுச் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக. உடனே "இந்து" பத்திரிகையில் ஒரு "பார்ப்பனர்" ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற பகுதியில் எழுதினாரே! "அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மூலாதார உரிமை, அதை ஒழிக்க இந்த அரசாங்கத்தால் முடியாது. தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் நம்பூரிதிபாத் பேசலாமே ஒழிய ஆட்சியையோ, அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது" என்று கேட்டார். நம்பூதிரியார் பதில் சொல்லவே இல்லையே!

கேள்வி: அதுபோல பல மாகாணங்களிலும் எதிர்த்து நாம் அரசாங்கம் அமைக்க முடியாதா?

பதில்: நான் ஒன்று உதாரணத்திற்குச் சொல்லுகிறேன். சென்ற 1952 ஆம் வருட எலக்க்ஷனில் எங்கள் நாட்டில் நான் முயற்சி செய்து காங்கிரசைத் தோற்கடித்தேன். காங்கிரஸ் மைனாரிட்டியாக (சிறுபான்மையாக) ஆயிற்று. காங்கிரஸ் அல்லாதவர்கள் (மொத்தம் 500 பேரில்) சுமார் 300 பேர் இருந்தும் இவர்களால் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியவில்லையே!

திரு.இராஜகோபாலாச்சாரி முதன் மந்திரியாக வந்தார் நாமினேஷன் (நியமனம்) மூலம். அப்போது அவருக்கு 200 மெம்பர்கள் (உறுப்பினர்கள்) தான் இருந்தார்கள். வந்தவுடன் எதிரிகளில் சிலரை விலைக்கு வாங்கித் தன் ஆட்சியை மெஜாரிட்டியாக ஆக்கிக்கொண்டார். எப்படி எதிர்க் கட்சியிலிருந்து பலரை விலைக்கு வாங்கிக் கொண்டார்? தனக்கு நிலைமை வசதியானது. தன் இஷ்டப்படி மனுதர்ம முறைப்படி காரியம் செய்ய ஆரம்பித்து, பதவிகளையும், உத்தியோகங்களையும் பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததும் அன்றி அவனவன் ஜாதித் தொழிலைத்தான் செய்ய வேண்டுமென்ற வருணாசிரம தர்ம கல்வித் திட்டம் ஒன்றையும் புகுத்தினார். நான் 30 நாள் தவணை கொடுத்து, நீங்கள் அதை ஒழிக்காவிட்டால் பலாத்காரத்தில் இறங்குவோம் என்று தெரிவித்த பிறகுதான் பதவியைவிட்டுப் போனார்; சட்டசபையால் அவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை. பிறகு காமராசர் அந்த இடத்துக்கு வந்து ஜாதிக் கல்வித் திட்டத்தை ஒழித்தார். அதனால்தான் அவர் காங்கிரசுக்காரராக இருந்தபோதிலும் அவரை ஆதரிக்கிறோம்.

கேள்வி: எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆகவேண்டும்?

பதில்: அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம் ஜாதியை ஒழிக்க விரும்பாத, ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது மத்திய அரசாங்கத்தோடு இருக்க விரும்பவிரும்பவில்லை. தனியே பிரிந்து செல்லுகிறோம். எங்கள் தமிழ்நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால் நாங்கள் ஜாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது இந்திய ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம் என்பதற்காகத்தான் 'சுதந்திரத் தமிழ்நாடு' கிளர்ச்சி நடைபெற இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினை அல்ல? நமக்கு வேண்டாத அரசாங்கத்தை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும் உன்னுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப்போகிறோம்.

கேள்வி: ஏன் இந்தியா முழுவதும் அப்படி உணர்ச்சியை உண்டாக்க முடியாதா?

பதில்: அதெப்படி? தமிழ்நாட்டில் அந்த உணர்ச்சி பலமாக இருக்கிறது; இந்தியா முழுவதும் பரவ வேண்டுமானால் அது கஷ்டமான ஒன்று. மேலும் சர்க்காரும் (அரசும்) பலமான முறையில் நம்மை அடக்குகிறார்கள். நான் போனமாதம் பெங்களுரில் ஒரு மாநாட்டிற்கு இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது நான் இதைத்தான் அங்கே சொன்னேன். நீங்கள் இங்கு ஆட்சியிலிருந்தே விலகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகக் குறிப்பிட்டேன். அங்குக் கூடியிருந்த பாதிப் பேர் அதைக் கைதட்டி வரவேற்றார்கள். பாதிப்பேர் அந்த உணர்ச்சியைப் பெறவில்லை.

கேள்வி: நீங்கள் கேட்கும் சுதந்திரத் தமிழ்நாட்டில் சிலோசனையும் (இலங்கையையும்) சேர்த்தா கேட்கிறார்கள்?

பதில்: இல்லை! நான் அப்படிச் சொல்லவில்லை. சுதந்திரத் தமிழ்நாடு இலட்சியத்திற்குப் பாடுபடும் 'நாம் தமிழர்' இயக்கத்தில் ஆரம்பத்தில் சொன்னார்கள். நாங்கள் அவர்களிடமே அதை எதிர்த்துச் சொன்னேன். அது வேறு ஒரு சர்க்கார். அதுபற்றி நமக்குக் கவலையில்லை என்பதாகச் சொன்னேன். அதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கிய
வேறுபாடுகளில் ஒன்றாகும்.

கேள்வி: நீங்கள் புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லுகிறீர்களே?

பதில்: ஆம்; நேற்றே பொதுக் கூட்டத்தில் சொன்னேன். இன்னொரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் அம்பேத்கர் அவர்களைச் சந்தித்த போது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டி "போடு கையெழுத்தை, நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன், "நீங்கள் சேருங்கள் நான் மாறாமல் இருந்து, இந்து என்பவனாகவே இருந்தால் தான் இந்துமத வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும்" என்றேன். இப்போது செய்கிற வேலையைத் தொடர்ந்து செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்தமார்க்கத்தில் சேர்ந்துவிட்டால் இப்போது கடவுள்கள் உருவச்சிலைகளை உடைத்துக் கிளர்ச்சி செய்ததுபோல் செய்ய முடியாததாகிவிடும் என்றேன்.

கேள்வி: ஒரு மனிதனுக்கு மதம் தேவையில்லையா?

பதில்: தேவை இல்லை, புத்த மார்க்கம் ஒரு கொள்கையே தவிர ஒரு மதம் கிடையாது.

கேள்வி : புத்த மதம் அகிம்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறதே! அதுபற்றித் தங்கள் கருத்து என்ன?

பதில்: அது புத்திக்கு முக்கியம் தந்த ஒரு மார்க்கம், அவ்வளவுதான். அகிம்சை என்பது புத்த மார்க்கத்தின் கொள்கையல்ல (Principle) அது புத்தருடைய அபிப்பிராயமாய் இருக்கலாம் என்பதுதான் எனது கருத்து. ஆகவே, நாம் நமது புத்திக்கு ஏற்ப நடக்கலாம்; அதுதான் புத்த மார்க்கம் என்பது.

கேள்வி: நீங்கள் ஏன் கருப்புடை அணிகிறீர்கள்?

பதில்: நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும், தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கருப்புடை அணிகிறோம்.

எங்கள் கொடியின் நடுவில் வட்டச் சிவப்பு இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டகிறது.


---------------- 09.02.1959- அன்று கான்பூர்அரிஷ்நகரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு - “விடுதலை” 16.02.1959

0 comments: