Search This Blog

29.4.11

நூல்கள் நடுங்கும் நூல்களைத் தந்தவர்!


இந்தியா என்றாலே இந்து நாடாம். இந்துமதம் தந்த கீதை என்ற நூலுக்கு ஈடு இணை வேறு ஏதும் கிடையாதாம்! இதில் சொல்லப்படாத தத்துவங்களே கிடையாதாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர், பிரதமரிலிருந்து, இந்தியா சார்பில் அளிக்கும் நூல் இந்தக் கீதைதான். அதுபோல வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் வெள்ளிப் பேழையில் வைத்து வழங்கி மகிழ்வதும் இந்தக் கீதையைத்தான்!

நீதிமன்றங்களில் சாட்சி கூறுவோர் இந்தக் கீதையின் மீதுதான் சத்தியம் கூறிச் சொல்லுவார்கள்.

டயலிட்டிக் மெட்டீரியலிசம் பேசும் மார்க்சிஸ்டுகளே கீதையின் வாள் வீச்சிலிருந்து தப்பவில்லை என்றால், மற்றவர்-களைப்பற்றிச் சொல்லிக் காலத்தைக் கரியாக்குவானேன்?

கேரள முதலமைச்சராக இருந்தவர் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு ஈ.கே. நாயனார்.

1997இல் ரோம் சென்றார்; அப்பொழுது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்களின் தலைவரான போப்பைச் சந்தித்து இந்தக் கீதையைத்தான் பரிசாகக் கொடுத்தார்.

மார்க்சிஸ்ட்டாக இருக்கக் கூடிய ஒருவர் கீதையைப் பரிசாகக் கொடுக்கலாமா என்ற சர்ச்சை வெடித்தது.

கேரள முதல் அமைச்சரோ கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார்.
அதில் என்ன தப்பு இருக்கிறது என்று பதிலாகச் சொன்னார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடமே சொன்னார். நெல்லை மாலை மலர் ஏட்டில் (25.6.1997) வெளிவந்தது.

100 கோடிக்கும் அதிகமான கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கைக்-குரியவரான போப்பாண்டவரை நான் சந்தித்து அவருக்குப் பகவத் கீதையை வழங்கியதில் எவ்விதத் தவறும் இல்லை. எனக்கு மதங்களைப்பற்றி எவ்வித மாறுபட்ட கருத்து-களும் இருந்ததில்லை. நான் மதங்களை மதிக்கிறேன். அதன் அடிப்படையில்தான் நான் பகவத் கீதையைக் கொடுத்தேன்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள மதத்திற்கு உரியதுதான் பகவத் கீதை. இந்தியக் கலாச்சாரத்தை விளக்கும் புத்தகம் அது. எனவே, இந்தியனான நான் அங்குச் சென்ற-தால் போப்பாண்டவருக்கு பகவத் கீதையைக் கொடுத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று மாநில முதல் அமைச்சர் என்ற நிலையில் உள்ள ஒரு மார்க்சிஸ்ட்டே கூறினார் என்றால், இந்தியாவில் கீதை என்ற நூல் எவ்வளவு தூரம் ஆழமாக வேர்-விட்டுக் கிளைத்து நிற்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்-பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால்-கூட முடியாது (கீதை அத்தியாயம் 4; சுலோகம் 13) என்று கடவுள் கிருஷ்ணன் கூறியதாகக் கீதை கூறுகிறது.

இந்தப் பேதம் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்தது கர்மப் பலனை வலியுறுத்துவது.

மனித உரிமை கோரும் எவராலும் ஏற்க முடியாது என்றால் மார்க்சியம் மட்டும் ஏற்றுக் கொள்ளுமா?

ஆனாலும் இந்தியாவில் மார்க்சியவாதிகளையே நிலைகுலைய வைத்துள்ள நூல்தான் இந்தக் கீதை.

இராமாயணம், பாரதம், புராணங்களின் யோக்கிய-தை-பற்றி தந்தை பெரியார் ஏராளமான நூல்களை வெளியிட்டதுண்டு.

கீதையைப்பற்றியும் நூல் ஒன்று வெளியிட வேண்டும் என்ற விருப்பம் தந்தை பெரியாருக்கு இருந்தது.

இதுகுறித்து ஒரு சிறு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

நமது நாட்டில் நடைபெறுகிற முட்டாள்-தனங்-களிலும், பச்சை அயோக்கியத்தனங்களிலும் தலைசிறந்த, முதல்தரமான காரியங்களில் முதலாவது காரியம் என்னவென்றால், பகவத் கீதை எனும் ஒரு காட்டுமிராண்டி, அயோக்கியத்தனம் கொண்ட நூலை, விஷயத்தை, பிரச்சாரம் செய்வதும், பரப்புவதுமாகும்.

அதன் வண்டவாளத்தை வெளியிட ஆசைப்படுகிறேன்.
அது விஷயமான ஆராய்ச்சி உள்ளவர்கள், அதில் உள்ள மடமையையும் நமது சமுதாயத்திற்குக் கேடான விஷயங்களை உணர்ந்தவர்கள் அருள்கூர்ந்து விடுதலை பத்திரிகைக்கு எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

பிரசுரித்து, பிறகு புத்தகமாக்க ஆவலாயிருக்கிறேன் என்று கையொப்பமிட்டு விடுதலை (16.11.1973)யில் வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.

யாரும் முன் வரவில்லை. தந்தை பெரியார் அவர்-களின் அந்த ஆவலை, கடைசி விருப்பத்தை நிறை-வேற்றியவர் அவரின் நம்பிக்கைக்குரிய சீடராக இருந்த விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தான்.

1998இல் அந்தக் கடமையை நிறைவேற்றியவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி ஆவார்கள். இதுவரை, ஆறு பதிப்புகள் வெளிவந்து பல்லாயிரக்-கணக்கில் மக்கள் மத்தியில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

கீதையை உலகம் பூராவும் பார்ப்பனர்கள் பரப்பி வருவதால் கீதையின் மறுபக்கம் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் ஆங்கிலத்திலும் ‘‘BHAGAVAD GIDA MYTH OR MIRAGE’’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிவரும் பணிகளின் தடங்கள், களங்கள் பற்பல. அதில் மிகவும் முக்கியமானது கருத்துப் பிரச்சாரம் ஆகும்.

அதிலும் முக்கியமானது வெளியீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரமாகும்.
அந்த வகையில் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் பல படைப்புகள் மிகவும் ஆக்கப்பூர்வ-மானவை - பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவை.

கீதையை முதன்மைப்படுத்தி உலகம் பூராவும் கொண்டு செல்லுவோர், நாள்தோறும் மண்டபங்களில் கீதை உபந்நியாசங்கள் செய்வோர் ஏராளம் இருப்பினும் ஜீயர்கள், சங்கராச்சாரியார்களாக இருந்தாலும் தமிழர் தலைவரால் எழுதப்பட்ட இந்த நூலுக்கு ஒரு வரி மறுப்புக்கூட எவராலும் எழுதப்பட முடியவில்லை என்பது இதன் வலிமையைப் பறைசாற்றும்.

கருத்தைக் கருத்தால் சந்திக்க முடியாத கோழைகள் அரசிடம் காவடி எடுத்தார்கள் வீரமணி எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி, மனு கொடுத்தார்கள் _ புகார் செய்தார்கள்.

இந்து முன்னணி தலைவர் திருவாளர் இராம.கோபாலன் முதல் அமைச்சரைச் சந்தித்து, கீதை ஒன்றை நேரில் கொடுத்து, அதனை முதல் அமைச்சர் கலைஞர் படிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதல் அமைச்சர் கலைஞர் அவர்களோ தயாராக வைத்திருந்த - விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்-கள் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை அவரிடம் கொடுத்து இதனையும் படியுங்கள் என்றார்.

சங்கராச்சாரி - யார்?

இந்து மதத்தை, அதன் வருண தர்மத்தை, பார்ப்பனீயச் செல்வாக்கை அதன் நிலைகளிலிருந்து சற்றும் வீழ்ச்சி அடையாமல் தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பவை சங்கர மடங்கள்.
ஆதி சங்கரரால் நிறுவப்படாத மடம்தான் காஞ்சி சங்கர மடம் என்றாலும் பொய்யான ஆதாரங்களை, ஆவணங்-களைத் தயார் செய்து காஞ்சி மடமும் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் என்று கதை கட்டி விட்டார்கள்.

சங்கராச்சாரியார் என்பவர்கள் உத்தம புத்திரர்கள் என்பது போலவும், உலகத்திற்கே நல்லது காட்ட வந்த மகான்கள் போலவும், தங்களிடம் உள்ள விளம்பர சாதனங்களால் ஊதிப் பெருக்க வைத்துவிட்டனர்.

உண்மை என்னவென்றால் தீண்டாமை க்ஷேமகர-மானது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் சங்கர மடம் என்ற பெயரால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருப்பவர்கள். இவர்களின் உண்மை உருவத்தை உச்சிமுதல் உள்ளங்கால் வரை தோலுரித்துக் காட்டும் வண்ணம் சென்னையில் பத்து இடங்களில் பத்து ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

அதன் தொகுப்பே சங்கராச்சாரி _ யார்? என்ற நூலாகும்.
ஆதாரங்களின் தொகுப்பு இந்நூல். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய ஓய்வுபெற்ற சென்னை உயர்-நீதிமன்ற நீதிபதி திரு. பெ.வேணுகோபால் அவர்கள், பல்கலைக்கழகங்கள் இந்நூலுக்காக டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்புரை போல் எழுதி-யுள்ளார் (25.12.1986).

நியூயார்க் நகரில் உள்ள பார்ப்பனர்கள் கல்யாணப் பத்திரிகை அடித்தாலும்கூட காஞ்சி சங்கராச்சாரியார் திருவருளை முன்னிட்டு என்று குறிப்பிட்டே தீருவார்கள். கல்யாணப் பத்திரிகையில்கூட ஒரு குட்டிப் பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் அவர்கள்.

எனவே, தமிழில் வெளிவந்த இந்த நூல் ‘‘Saint or Sectarian’’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் பூராவும் பரப்பப்பட்டுள்ளது.

இந்நூலை ஆங்கிலத்தில் படித்த சிங்கப்பூரைச் சேர்ந்த டி.கோவிந்தசாமி என்பார் ‘‘After reading your book ‘‘Saint or Sectarian’’ I realised that I have been in a very DARK ROOM for years. Your book has opened my eyes’’ என்று எழுதினார் என்றால், தமிழர் தலைவர் எழுதிய நூல் எந்த அளவுத் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்பதை ஒருவாறு உணரலாம்.

காஞ்சி மடம் ஆதி சங்கரரால் உண்டாக்கப்பட்டதல்ல - நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு மனிதாபிமான-மற்றவர் தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் வருணாசிரம வெறியர் - சங்கர மடத்தில் நிறுவியுள்ள அத்தனை அறக்கட்டளைகளும் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் என்பனவற்றையெல்லாம் சங்கராச்சாரியார் எழுதி வெளியிட்ட நூல்களைக் கொண்டே எதிர்த்தாக்குதல் தொடுத்து, மடத்தை மக்கள் மத்தியில் மரியாதையற்றதாக்கிய மாபெரும் மனித குலத்துக்கான தொண்டறத்தினைச் செய்தவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

தோழர் பி.இராமமூர்த்திக்கு மறுப்பு

திராவிட இயக்கத்தினைக் கொச்சைப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்ல மார்க்சிஸ்டுகள் கூட என்பதை விவரிக்கும் ஆய்வுரை நூல்தான் காம்ரேட் பி.இராமமூர்த்தி எழுதிய விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் எனும் நூலுக்கு மறுப்புரையாகும்.

விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும் - உண்மை வரலாறு எனும் தலைப்பில் வெளிவந்த இந்நூல் 612 பக்கங்களைக் கொண்டதாகும்.

திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது - நீதிக்கட்சியைக் கீழிறக்கமாகப் பேசுவது தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டம் குறித்த உண்மையை மறைத்துத் தகடுதத்தம் செய்வது போன்றவைகளுக்கு மரண அடி கொடுக்கும் வண்ணம் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்கள் (1985) சென்னை பெரியார் திடலில் உரையாக ஆற்றி நூல் வடிவில் வெளிவந்ததுதான்.

காங்கிரஸ் பற்றி...

காங்கிரஸ் வரலாறு மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும் என்னும் நூல்தான் அது. சுயமரியாதைத் திருமணமும் தத்துவமும் வரலாறும் என்னும் நூல் அரிய ஆய்வுப் படைப்பாகும்.

சுயமரியாதைத் திருமணம் என்பது பார்ப்பனீய புரோகிதத்தைத் தூக்கி எறிந்து தமிழன் தலைமையில் தமிழில் கருத்துகளைக் கூறி நடத்தி வைக்கும் முறை தந்தை பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

சுயமரியாதைத் திருமண மேடையை தந்தை பெரியார் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பிரச்சார மேடையாக்கி வெற்றி மாலை சூடினார்.

ஒரு திருமண மேடையை அரசு பல சட்டங்களைக் கொண்டு வருவதற்கான கருவியாக மாற்றிய அதிசயத்தை, தந்தை பெரியார் சாதித்துக் காட்டினார்.

அதன் வரலாறு, தத்துவம் குறித்து தமிழர் தலைவரால் ஆக்கம் செய்யப்பட்டதுதான் இந்நூல், 230 பக்கங்களைக் கொண்டது.

விடுதலையில் தமிழர் தலைவர் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் கட்சிகளைக் கடந்து, மதச் சிந்தனைகளைத் தாண்டி, இன்னும் சொல்லப்போனால் பக்திக் குடுவைக்குள் சிக்கிக் கிடக்கும் மக்கள் மத்தியிலும் வசீகரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை இந்த வகையில் வெளிவரும் கட்டுரைகள்.

கடவுள் மறுப்பாளர் இவர்கள் என்று கண்களை மூடிக் கொண்டவர்களின் கண்களையும் திறக்கச் செய்த காரியத்தை இந்த வரிசை சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறது.

இதுவரை ஆறு தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் பல தொகுதிகள் வெளிவந்துகொண்டே இருக்கும்.

தந்தை பெரியார் கொள்கைகள் என்றால் வெறும் அழிக ஒழிக என்பவை மட்டுமல்ல; மாற்று நெறியைக் காட்டும் மாண்பினை உடையது என்பதை மக்கள் சமுதாயம் தெரிந்துகொள்ள, சிக்கெனப் பிடித்துக்கொள்ள வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் ஊன்றுகோலாக உதவுகின்றது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல _ சிறந்த எழுத்தாளர், படைப்பாளர் என்பதற்கு பனிப்பாறையின் ஒரு சிறு முனையாக இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்-பட்டுள்ளது. நூல்களின் ஆதிக்கம் அழிய இந்நூல்-கள் போர்வாளாகப் பயன்படும். விரிக்கின் பெருகும் என்ற அச்சத்தில் சுருக்க முறையில் தரப்-பட்டுள்ளது. வேறு சந்தர்ப்பத்தில் அவை விரியும். வாழ்க தமிழர் தலைவர்!

---------------------- கலி. பூங்குன்றன்அவர்கள் டிசம்பர் 01-15_2010 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

0 comments: