மதக்கிறுக்கு
உலகில் மதங்கள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்மந்தமுடையவர்களாயும், தீர்க்கத் தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங் களாலேயே மூல புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரசாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்து போய் விடுமே என்கின்ற பயம் எல்லா மதஸ்தர்களிடமும் இருந்துதான் வருகின்றது. இந்தக் கருத்திலும், காரியத்திலும் உலகில் இன்னமதம் உயர்வு, இன்னமதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை.
சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக் கொண்டு ஆயிரம் ஆளுகளோ, அல்லது இரண்டாயிரம் ஆளுகளையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைகளையும் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு மதத்தைக் கற்பித்து அம்மிருகத்துக்கு சில “தெய்வீகத்தன்மை”யை கற்பித்து அது பல “அற்புதங்கள்” செய்ததாகக் கதைகள் கட்டிவிட்டு பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக சில வருஷத்திற்குள் லக்ஷக்கணக்கான மக்களை அம்மதத்தைப் பின்பற்றுபவர்களாகச் செய்து விடலாம். பிறகு அந்த மதத்தை எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் அவன் தண்டிக்கப் படவோ, வையப்படவோ, அடிக்கப்படவோ, கொலை செய்யப்படவோ ஆளாகும்படியும் செய்துவிடலாம்.
ஆதலால் மதங்களுக்கு ஜீவநாடியாய் இருந்துவருவது பணமும் பிரசாரமுமே அல்லாமல் அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் சொல்லிவிடமுடியாது.
“சமீபகாலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை ஒரு “பேய் பிடித்துக்கொண்டு” அந்த பெண்ணும் தலைவிரித்து ஆடத்தொடங்கினாள். அதற்காக ஒரு பேயோட்டியைக் கூப்பிட்டு அந்தப் பேயை ஓட்டச் சொன்னதில் அந்தப் பேயோட்டி இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் யார் என்று கண்டுபிடிப்பதில் 2-நாள் செலவழித்து கடைசியாக 5, 6 வருஷத்திற்கு முன்னால் அவ்வூர் கிணற்றில் விழுந்து செத்துப்போன ஒரு மராட்டியன் அடுத்த ஜன்மத்தில் நாயாய் பிறந்து இந்தப் பெண் வீட்டில் வெகு செல்லமாய் வளர்ந்து இந்தப் பெண்ணிடமும் மிக அன்பாய் இருந்து ஆறு மாதத்திற்கு முன் அதுவும் கிணற்றில் விழுந்து செத்து போனதால் அது பேயாகி அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டது என்று சொன்னான். இதை அந்த ஊர்க் காரர்கள் நம்பினார்கள் என்ற குறியை இந்தப் பெண் தெரிந்தவுடன் பேய் ஆடும்போது அடிக்கடி நாய்மாதிரி குலைப்பதும் சிற்சில சந்தர்ப்பங்களில் மராட்டி பேச்சுமாதிரி பேசுவதுமாய் இருந்தார். அதுமாத்திரமல்லாமல் தன்னைப் பிடித்திருக்கும் பிசாசு நாய்ப்பிசாசுதான் என்பதைக் காட்டுவதற்காக சில சமயங்களில் மலத்தைச் சாப்பிடவும் செய்வாள். மற்றும் வேறு பல நாய்களுக்கும் தின்பண்டம் போட்டு சதா 7, 8 நாய்களுடன் காமாதுர விளையாட்டும் விளையாடுவாள். இதைப் பார்த்த எல்லோருமே சிறிது கூடச் சந்தேகமில்லாமல் இந்தப் பெண்ணைப் பிடித்திருப்பது நாய்ப்பிசாசுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.”
மதங்களும் இதுபோலவேதான் தன்னை ஒரு மதக்காரன் என்று காட்டிக் கொள்ள வேண்டுமானால் மதக் குருக்கள் அல்லது மதகர்த்தர்கள் அல்லது மதப் பிரசாரக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, எப்படி நடந்தால் மதபக்தி உடையவன் என்று சொல்லுவார்களோ அந்தப்படி நடக்கத்தான் ஒவ்வொரு மதபக்தனும் ஆசைப் படுகிறான்.
மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும் சைன்சுக்கும், மதத்துக்கும் சம்மந்தம் பார்க்கக் கூடாதென்றும் பகுத்தறிவு வேறு, மதக் கோட்பாடுகள் வேறு என்றும் இந்தக் காலம் வேறு அந்தக் காலம் வேறு என்றும் பெரியார்கள் நியமனங்களுக்குக் காரணகாரியங்கள் தேடக்கூடாது என்றும் ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்றும் எல்லா மதக்காரர்களும் சொல்லி விடுவதால் உலகில் எந்த மூடனும் எதையும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியத்தின்மீதே மத ஆபாசமும், மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத்து வருகின்றது.
இந்த லட்சணத்தில் உள்ள மதங்களுக்கு ஆள் பிடிக்கவேண்டும் என்கின்ற ஆர்வத்தின் மீது மதமாற்றப் பிரசாரங்களும் நடந்து வருகின்றன என்றால் இது “புழுத்ததின் மீது நாய் விட்டையிட்டது” என்கிற பழ மொழிப்படி மனிதர்களை மேலும், மேலும் மூடர்களாக்குவதாகவே இருந்து வருகிறது. சாதாரணமாக இந்திய மக்களில் 100-க்கு 92 பேர்கள் தற்குறிகள், எழுதப்படிக்கத் தெரியாத மூடர்கள், இவர்களிலும் 100-க்கு 90 பேர்கள் நல்ல ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமல் வயிற்றுப்பிழைப்புக்கு எதையும் செய்யலாம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறவர்கள். இப்படிப்பட்ட இவர்களிடத்தில் எது சொன்னால் ஏராது? என்ன சொன்னாலும் நம்பும்சக்தி எழுத்து வாசனை அறியாத மூடர்களுக்கே அதிகம். ஆதலால் இப்படிப்பட்ட ஜனங்களிடம் மதப் பிரசாரம் செய்து மதமாற்றுதல் வேட்டை ஆடுவது என்பது யாவருக் கும் சுலபமான காரியமாகும்.
இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனை அற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத் தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மதமாற்றமும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்து வர்கள், முஸ்லீம்கள், புத்தர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் முதலிய கடவுள் மாறு பாடுள்ளவர்களும், மதக்கர்த்தாக்கள் மாறுபாடுள்ளவர்களும், மதக்கோட் பாடுகளின் அருத்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்துகொண்டு வெகுகாலமாகவே மதமாற்றப் பிரசாரம் செய்து கொண்டு தான் வருகிறார்கள்.
ஆனால் இந்த மதங்களில் மனித வாழ்க்கை தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கின்றதா என்று பார்த்தால் ஒன்றுமே காணமுடியாத நிலையில்தான் இருந்துவருகின்றன.
எல்லா மதத்துக்குமே-ஒரு கடவுள் உண்டு.
மேல்லோகமுண்டு.
மோட்ச நரகமுண்டு.
ஆத்மா உண்டு.
செத்தபிறகு இந்த ஆத்துமா அல்லது மனிதன் அவனவன் நன்மை தீமைக்கு ஏற்றவிதம் மோட்ச நரகம் அனுபவிப்பது என்கின்ற கொள்கைகளை வைத்து வித்தியாசமில்லாமல் நடந்து வருகின்றது.
பிரத்தியட்ச அனுபவத்தில் எல்லா மதத்திலும் “அயோக்கியர்கள்” “யோக்கியர்கள்” இருந்து வருகிறார்கள்.
எல்லா மதத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லா மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள். எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன. எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை, ஜபம், தபம் இருக்கின்றன. எல்லா மதக் கடவுள்களும் தொழுகை, பிரார்த்தனை, வணக்கம், பூசை ஆகியவைகளுக்கு பலன்கள் கொடுக்கின்றன.
எல்லா மதக் கடவுள்களும் கண்களுக்கு தோன்றாததும் மனத்திற்கு படாததும், ஆதி, அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவைகளுமாகவே இருக்கின்றன. எல்லா மதங்களும், கண்களுக்கும் மனதிற்கும் தோன்றக் கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்றும், ஆனால் கண்களுக்கும், மனதிற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு ஒரு கர்த்தா இல்லையென்றும் தான் சொல்லுகின்றன. ஒரு மதமாவது என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என்வேதமாவது தனது கோட்பாடுகள் எல்லாம், மக்கள் எல்லோ ரும் ஏற்று நடக்கக் கூடியதாய் இருக்கின்றது அல்லது நடக்கக் கூடியதாய் செய்ய சக்தி உள்ள தாய் இருக்கின்றது என்றோ சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும் பசி, தாகம், நித்திரை, புணர்ச்சி, இன்பம், துன்பம், ஒன்று போலவே இருக்கின்றன. எல்லோருடைய வேதம் கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலும் தான் உண்டாக் கப்பட்டதாய் சொல்லப் படுகின்றன. எல்லா மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு வித அடையாளம் இருக்கின்றன. இந்த நிலையில் மதப்பிரசாரத்தால், மதமாற்றத்தால் மனிதர் களுக்கு என்ன லாபம் என்பது விளங்கவில்லை.
சாதாரணமாக இந்தியர்களில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள். 1 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சுமார் 10 கோடி வைணவர்கள் இருக் கிறார்கள், 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.
மற்றும் கலப்பு மதம் உள்ளவர்கள் மதக் குறிப்பு இல்லாதவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக்கூடுமானாலும் இவர்கள் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார் 1000, 2000 வருஷங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமா னாலும் இவர்களின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்ன? என்பதை நன்றாய் பார்ப்போமேயானால் ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக் காரருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும், அறிவியலி லாகட்டும், சமூதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண் பெண் தன்மையிலா கட்டும், எல்லோரும் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.
ஆகையால் இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா? அல்லது மதம் மாற்று பிரசாரம் வேண்டுமா? என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டியது முக்கிய கடமையாகும். மதம் மாற்றுதல் மதப்பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப காலத்திற்கு முன்பு உலகிலும், குறிப்பாக இந்தியாவிலும், சிறப்பாக தென்னிந்தியாவிலும் நடந்த முட்டாள்தனமான-மூற்கத்தனமான பலாத்காரக் கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்து வெட்டுகளும், கொலை களும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்கு சரித்திரங்கள், புராணங்கள் பிரத்யபட்ச அனுபவங்கள், எத்தனையோ மலிந்து கிடக்கின்றன. இவை களையெல்லாம் உத்தேசித்தாவது இனிவரும் சுயமரியாதை அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புஸ்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும் பத்திரிகைகளில் எழுதினாலும் அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, மடமையற்று தோழோடு தோழ் புனைந்து தோழர்கள் போல் வாழமுடியும் என்பதோடு மத தத்துவங்களின் பலனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு தாழ்வு நிலை ஒழிந்து சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்றும் வற்புறுத்திக் கூறுகிறோம். இந்த அபிப்பிராயமானது மதங்கள் தெய்வத்தினாலும் தெய்வாம்சம் பெற்றவர்களாலும் உண்டாக்கப்பட்டது என்கின்ற நம்பிக்கையை உறுதியாயும் உண்மையாயும் உடையவர்களுக்கு விரோதமாய் இருக்காது என்றும் கருதுகிறோம். ஏனெனில் அப்படிப்பட்ட மதப்பிரசாரம் இல்லா விட்டால் மறைந்து போகும்-அழிந்துபோகும் என்று அவர்கள் (மதபக்தர் கள்) பயப்பட மாட்டார்கள்.
--------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 08.10.1933
0 comments:
Post a Comment