Search This Blog

14.4.11

அண்ணல் அம்பேத்கர் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை ....


அண்ணல் அம்பேத்கர் வாழ்க!

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1891).
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிறீநாராயண குரு, மகாத்மா ஜோதி பாபூலே - சாகுமகராஜ் ஆகிய தலைவர்கள் சமூக நீதி வரலாற்றின் பெருந்தூண்கள் ஆவார்கள்.

இவர்களில் மெத்தப் படித்த பெருஞ்சிறப்பு அம்பேத்கர் அவர்களுக்கு உண்டு, ஆயினும் இந்த அய்ந்து தலைவர்களின் அடிநாதம் பார்ப்பன எதிர்ப்பில் கட்டப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது. அதற்கு அடிப்படைக் காரணங்களும் உண்டு.

தந்தை பெரியார் அவர்களுக்கும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கும் இருந்த கருத்தொற்றுமை - ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையொத்ததே!

அண்ணல் அம்பேத்கர்பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பைத் தெரிந்துகொண்டால் இதன் முழு உண்மை புலப்படும்.

உண்மையிலேயே இந்தியப் பொது வாழ்வில் முயற்சி செய்து வெற்றி பெற்ற ஒரேதலைவர் அம்பேத்கர்.

மதம் ஒழிந்தால் ஒழிய சமுதாயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாதெனச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

சமுதாயம் முன்னேற வேண்டுமானால் இந்து மதமே ஒழிய வேண்டும் என்றவர் டாக்டர் அம்பேத்கர்.

பொது வாழ்க்கையில் எவரையும்விட தைரியசாலி டாக்டர் அம்பேத்கர்.

எவரும் எதிர்பாராத முறையில் - அளவில் காந்தியை எதிர்த்தவர் டாக்டர் அம்பேத்கர்.

ராமாயணம், மகாபாரதத்தைக் கொளுத்தச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

காந்தியை மகாத்மா என்று அழைக்காதவர் டாக்டர் அம்பேத்கர்.

கீதை முட்டாளின் உளறல் என்றவர் டாக்டர் அம்பேத்கர் (விடுதலை 14.4.1972) என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் புகழும் வார்த்தைகளாக இவற்றைக் கொள்ளாமல் அந்தத் தலைவரை அளவிட்டுக் கணிக்கும் கணிதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.


இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு பல லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்தமார்க்கம் தழுவியதும், லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் காந்தியார் அவர்களை எதிர்கொண்டு, கருத்துகளை எடுத்து வைத்ததும் சாதாரணமானவையல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் போற்றப்பட்டாலும், அந்தச் சட்டத்தின்மீது திருப்தி கொண்டவரல்லர் அவர். அதனைக் கொளுத்துவதில் முதல் ஆளாக நானே இருப்பேன் என்று மாநிலங்களவையிலேயே வெளிப்படையாக முழங்கிய தலைவர் அவர் (3.9.1953).

அம்பேத்கர் அவர்கள் 1953 செப்டம்பர் 3இல் கூறியதை 1957 நவம்பர் 26-இல் செய்து காட்டியவர் தந்தை பெரியார்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் வருணாசிரமம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற காந்தியாரின் கருத்தை எதிர்த்த தீரர்கள் இந்த இரு பெரும் தலைவர்களே.


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையை இந்த இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.

வேறு எந்தக் காலத்தையும்விட இந்தக் காலத்திற்குத் தேவையான வழிகாட்டும் கருத்தாகும் இது. இந்திய வெள்ளையர்களான ஆரியப் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட் டோரையும் பிற்படுத்தப்பட்டோரையும் மோத விட்டுப் பிரித்தாளுவதில் மிகவும் கெட்டிக்காரர்கள்.

இன்றைக்கும் இந்த இரு பிரிவினருக்கும் பொதுவான இடஒதுக்கீட்டுப் பிரச்சினைகள் உண்டு.

தாழ்த்தப்பட்டோருக்கு 15 விழுக்காடு, மலை வாழ் மக்களுக்கு 7.5 விழுக்காடு இடங்கள் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளில் சட்ட ரீதியாக உண்டு என்றாலும் நடைமுறையில் இந்த விழுக்காட்டில் இடங்கள் கிடைக்கின்றனவா என்ற கேள்விக்கு, விடை கிடைக்க வில்லை என்பதுதான் அழுத்தமான பதிலாகும்.

மத்திய அரசுத் துறைகளில் உள்ள ஏ,பி,சி,டி என்ற பிரிவு உத்தியோகங்களை எடுத்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கக் கூடிய இடங்கள் வெறும் 16.8 விழுக்காடுதான். பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ வெறும் 5.4 விழுக்காடுதான். பி பிரிவில் முறையே 19.7; 4.2 விழுக்காடுகள்தான்.

அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர் மதிப்புக் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாத கல்வியாகும்.

நீதித்துறையிலோ பட்டை நாமம் ஆகும். இந்தக் கொடுமைகள் நீக்கப்பட வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் ஒற்றுமை மிகவும் தேவையாகும்.

இந்த மூன்று பிரிவினரிடையே ஒருவர் விகிதாசாரத்தை இன்னொருவர் எடுத்துக் கொள்வதில்லை; இந்த நிலையில் இவர்களின் ஒற்றுமைக்குத் தடை விதிப்போர் யார்? போதிய புரிதல் இல்லாமையே முக்கிய காரணம் என்றாலும் சிலர் தலைவர்களாக நீடிப்பதற்கு இந்தப் பிரித்தாளும் தந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது என்றார் தந்தை பெரியார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இரு கரங்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அண்ணல் அம்பேத்கர்.

அண்ணலின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று இந்த ஒற்றுமைக்கான உறுதிமொழியை எடுப்போமாக! அதை எந்த நாளும் காப்போமாக!

வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!!

-------------"விடுதலை” தலையங்கம் 14-4-2011

0 comments: