Search This Blog

21.4.11

புட்டபர்த்தி சாயிபாபா ஜீவ சமாதியா?


ஜீவ சமாதியா?

புட்டபர்த்தி சாயிபாபா அபாயக் கட்டத்தில் இருக்கிறார். உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து விட்டன; கல்லீரல் செயல்படவில்லை என்றெல்லாம் நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே சாயிபாபாவின் திரண்ட சொத்துகள் காரணமாக உள்ளுக்குள் ஏகப்பட்ட புகைச்சல்களும், வல்லடிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன.

சாயிபாபாவின் அண்ணன் மகன் ரத்னாகருக்கு ஒரு தொலைக்காட்சி சொந்தமாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி தனக்குச் சாதகமாகத் தகவல்களை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்.

ரமணரிஷியின் சகோதரன் மகனுக்குச் சொத்துகளை எழுதி வைக்கவில்லையா? சந்நியாசிக்குக் குடும்பம் ஏது? உறவு ஏது? என்ற கேள்விக்கு நீதிமன்றத்தில் ரமண ரிஷி என்ன சொன்னார்? நான் சந்நியாசம் எப்பொழுது வாங்கினேன்? ஒரு போதும் சந்நியாசம் வாங்கவேயில்லை என்று சத்தியம் செய்தாரா இல்லையா?

பகவான்களுக்கெல்லாம் தட்டாமல் சகோதரன் மகன் இருப்பார்கள் போல் இருக்கிறது. இப்பொழுது புட்டபர்த்தியிலும் சகோதரன் மகன்தான் பிரச்சினை.

சாயிபாபா ஜீவ சமாதி அடையப் போகிறார் என்ற தகவலை தமது தொலைக்காட்சி மூலம் அவர் பரப்பி வருகிறார். ஜீவசமாதி என்றால் உயிரோடு புதைப்பதாகும். உண்மையைச் சொல்லப் போனால் ஒரு வகையான கொலைதான் இது. இதற்கு ஜீவ சமாதி என்று மதமேல் பூச்சுக் கொடுக்கப்படுகிறது - அவ்வளவுதான்.

பகவான் சாயிபாபாவுக்கு நோய் வரலாமா? இப்படியெல்லாம் நோயின் தொல்லைக்கு ஆளாகி அவதிப்படுகிறாரே - செயற்கைச் சுவாசம் கொடுக்கப்படுகிறதே - அப்படியென்றால் இவர்மீது ஏற்றிக் கூறப்படும் தெய்வீக சக்தி என்பதெல்லாம் உண்மைதானா என்று எங்கே பக்தர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஒரு கதையைக் கிளப்பி விட்டுள்ளனர்.

புட்டபர்த்திக்கு வெளியே எனுமாலப்பள்ளி பைபாஸ் சாலையில் குடியிருக்கும் ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் இருந்த சாயிபாபா சிலையில் சென்ட் வாசனை வீசுவதாக ஒரு கதையைக் கட்டி விட்டுள்ளனர். அது மெழுகால் ஆன சிலையாம் வெயில் காலத்தில் உருகுவது ஒன்றும் அதிசயம் இல்லை என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி சாயிபாபா மகிமைமிகுந்தவர் என்று நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

சாயிபாபா படத்திலிருந்து திருநீறு கொட்டுகிறது என்பதுதான் அந்தப் புரூடா. நாளடைவில் அது பொய்யென்று பக்தர்களே உணரும் நிலை ஏற்பட்டது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவர் தந்திரக் கலையில் வல்லுநர் அதைப் பயன்படுத்தி லிங்கம் கக்குவது, கையிலிருந்து திருநீறு கொண்டு வருவது போன்றவற்றைச் செய்து காட்டி மக்களை மயக்கினார் என்பதுதான் உண்மை. இதன அம்பலப்படுத்த வேண்டும் என்று பிரபல தந்திரக் கலை நிபுணர் பி.சி. சர்க்கார் ஒரு திட்டம் போட்டார். சாயிபாபாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம் எழுதினார். சாயிபாபா அவருக்கு நேரம் ஒதுக்கித் தரவில்லை. பி.சி. சர்க்கார் என்ன செய்தார்? அசாம் வியாபாரி என்று சொல்லி சாயிபாபாவைச் சந்திக்க நேரமும் பெற்று விட்டார். சாயிபாபா கை அசைப்பில் சந்தனத்தை வரவழைத்துக் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சார்க்காரும் அவ்வாறே கையிலிருந்து சாயிபாபாவுக்கு ஒரு ரச குல்லாவை வரவழைத்துக் கொடுத்தார். சாயிபாபா கூச்சல் போட்டார். நான்தான் பிசி சர்க்கார்! (இம்பிரிண்ட் 1983 ஜூன்) என்று கம்பீரமாகக் கூறி வெளியேறினார். இதுதான் நடந்தது.

சாயிபாபா நோய் வந்து மரணப் படுக்கையில் கிடப்பதைத் திசை திருப்பும் நோக்கத்தோடுதான் சாயிபாபா சிலையிலிருந்து வாசனை மணக்கிறது என்று புரளியைக் கிளப்பி வருகின்றனர்.

பக்தியின் பரிதாப நிலையை என்னவென்று சொல்ல!

சாயிபாபா நலம் பெற்று நீண்ட நாள் வாழட்டும் - நமக்கு ஒன்றும் அதில் கருத்து மாறுபாடு இல்லை. அதே நேரத்தில் பக்தியின் பித்தலாட்டம் அடிபட்டுப் போக விடக் கூடாது என்பதற்காக பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை அம்பலப்படுத்துவது நமது கடமையாகும்.

------------------”விடுதலை” தலையங்கம் 21-4-2011

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

அன்பிற்குரிய தோழருக்கு வணக்கங்கள்!
பத்தாண்டுகளுக்கு முன்னதாக அவாள்களின் இதழே சாய் பாபாவை தோலுரித்து விட்டது ... இருப்பினும் இன்னமும் மக்களுக்கு ஏமாந்து மாளவில்லை ...

Nalliah said...

சத்யசாயிபாபா பற்றி அறிந்து கொள்ள

http://www.youtube.com/watch?v=oNVJyycAZYw&NR=1

http://www.dailymotion.com/swf/x4y3iy

http://www.dailymotion.com/swf/x4y4n1

http://www.dailymotion.com/swf/x4y5vb

Selva said...

சரி, உந்த அற்புதங்கள் எல்லாம் செய்வதாலேயோ, காட்டுவதலேயோ மனித ஜாதிக்கு என்ன பலன்? துன்பம் நீங்குமா, உணவு, உடை கிடைக்குமா? களவு ஒழியுமா? அல்லது சண்டைகள் இல்லாமல் போகுமா? சில படங்களில் இருந்து தேன் வடிவதாகவும் சொல்லுவர். அது ஒரு drum கணக்கில் சொரிந்ததென்றால் அதை விற்று என்றாலும் பணம் ஆக்கலாம். ஒரு துளியை வைத்து என்ன பிரஜோசனம்? முட்டாள்தனமாக ஏன்தான் இருக்கிறார்கள்?