Search This Blog

26.4.11

கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேயை கூண்டில் ஏற்றுவோம்!

களம் காண்போம் - வா, கழகத் தோழனே!

ஒரு கொடுங்கோலனைக் கூண்டில் ஏற்றுவோம்!

கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சே கூண்டில் ஏறும் காலம் வந்துவிட்டது; ஆம், வந்தே விட்டது!

பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலி கொண்ட பாதகன் பாரோர் பரிகசிக்கும் வகையில் பன்னாட்டு நீதி மன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது - ஆம்; நெருங்கியே விட்டது.

என்ன கொடுமை!

கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர். இதனைத் தெரிவித்திருப்பது சிறீலங்கா அரசின் கச்சேரி ((Local Govt., Office) என்ற அமைப்பாகும்.

இவர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்களே சிறீலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதாக அய்.நாவின் ஒச்சா அமைப்பின் கணிப்புக் கூறுகிறது.

எஞ்சிய 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் எங்கே போனார்கள்?
மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், விசரர் சூசை அடிகளார், சேவியர் குலூஸ் அடிகளார் ஆகியோர் இந்த விவரத்தை மகிந்த ராஜபக்சே அமைத்த குழுவின் முன் தெரிவித்துள்ளனரே!

உண்மை இவ்வாறு இருக்கும்போது, இலங்கை இராணுவம் அறிவித்த மூன்று பாதுகாப்பு வளையங்களுக்குள் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 70 ஆயிரம் மட்டுமே என்று குறைத்துக் கூறியதன் மர்மம் என்ன?

படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் - எண்ணிக்கையை மறைப்பதற்குத்தானே!


இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற தமிழர்களையாவது காப்பாற்றினார்களா? கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால் கொலைகார ஹிட்லர்கள் சிட்டுக் குருவிகளை போல சுட்டுத் தீர்த்தனரே!

ஆயிரம் கோயபல்சுகளும் இந்தக் கொடிய ராஜபக்சேவுக்கு ஈடாக முடியுமா?
விடுதலைப்புலிகளிடம் சிக்கிய மக்களை, ஒருவரைக்கூடக் கொல்லாமல் (with Zero Civiian casuality) அனைவரையும் மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டதாக நாக் கூசாமல் கூறியதை என்ன சொல்ல!

அய்.நா. அமைத்த மூவர் கொண்ட வல்லுநர் குழு - ராஜபக்சே கூறியது பொய்! பொய்!! பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பட்டவர்த்தனமாக அறிவித்துவிட்டதே!


இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்ச்சுகி தாருஸ்மான் தலைமையில் அமெரிக்காவின் சட்ட வல்லுநர் ஸ்டீவன் ரெட்னர், தென் ஆப்பிரிக்க அறிஞர் யாஷ்மின் சூக்கா ஆகிய இருவர் அடங்கிய குழு தனது அறிக்கையை அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் அளித்துவிட்டது (13.4.2011)

இந்த அறிக்கையை சிங்கள அரசு நிராகரிக்கிறதாம் - இந்த அறிக்கைக்கு எதிராக சிங்கள மக்களைக் கிளர்ந்தெழச் செய்யும் கீழ்த்தரமான வேலையில் இறங்கி விட்டார் ராஜபக்சே!.


குருதியை உறையச் செய்யும் குரூரமான செயல்களை அய்.நா. வல்லுநர் குழு அறிக்கை பட்டியலிட்டு விட்டது. போர்க் குற்றங்களைக் கண்டிப்பாகச் செய்தது சிங்கள இராணுவம் என்பதற்கு ஏராளமான தகவல்களை வாரிக் கொட்டியுள்ளது.

கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன - அய்.நா.வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு வழங்கப்படும் மய்யங்கள்கூட இராணுவத்தின் தாக்குதலுக்குத் தப்பவில்லை - மருத்துவமனைகளும் குறி பார்த்துத் தகர்க்கப்பட்டன.

சிங்கள இராணுவத்தின் வெறியாட்டம் வெளி உலகத்தில் வெளிச்சத்துக்கு வரக்கூடாது என்பதற்காக ஊடகக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சமாதான வெண் கொடியை ஏந்திச் சென்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வளவையும் செய்துவிட்டு, டைம்ஸ் ஏடு கணிக்கும் ஆற்றல் - வாய்ந்த உலகத்தில் உள்ள நூறு பேர்களுள் தாமும் ஒருவர் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று சூழ்ச்சி செய்து, அய்.நா. மன்றத்து முயற்சியின் கண்களில் மண்ணை அள்ளிப் போடலாம் என்று திட்டமிட்டார் - அந்தோ! பரிதாபம், அது கருவிலேயே சிதைந்துவிட்டது.


இப்பொழுது ராஜபக்சேயின் ஒரே நம்பிக்கை - இந்தியா, சீனா, ருசியா, பாகிஸ்தான் நாடுகள் நம்மை எப்படியும் கைவிடாது என்பதுதான்.

அய்ரோப்பிய ஒன்றிய 17 நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி, இலங்கை அதிபர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்டு வதைபடும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் அடிநாதம் (26.5.2009).

இந்த மனிதநேயத் தீர்மானத்தை முன்னின்று தோற்கடித்ததில் முதல் இடம் இந்தியாவுக்குத்தான்.


இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே என்பவர் அய்.நாவில் என்ன பேசினார் தெரியுமா?


இந்தக் கூட்டமே அவசியமற்றது; உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, அதனைத் தண்டிக்க, கண்டிக்க முயற்சிக்கக் கூடாது என்று பேசினாரே!

சீனா, ருசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கொடுங்கோலன் ராஜபக்சேயின் பாசிசப் போக்கிற்குப் பச்சைக் கொடி காட்டி, வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் தங்களுக்கான இடங்களை முன்பதிவு செய்து விட்டனர். இதைவிட கேவலம் - இலங்கை அரசு கொண்டு வந்த ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுதான்.

பான் கீ முன் அமைத்த வல்லுநர் குழு இதுபற்றிக் கூறியுள்ள கருத்து மிக மிக முக்கியமானது.

2009 மே 26 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (எண் ஹ/ழசுஊ/8-11/டு.ஐ (சுநஎ2) மாற்றியமைக்கப்பட வேண்டும்; இதற்காக அய்.நா.வின் மனித உரிமைக் குழு கூட்டப்பட வேண்டும் என்று இந்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை மட்டுமல்ல; உலக நாடுகள் முன் மனித உரிமை, மனிதநேயம் ஆகிய பண்புகள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை - அய்.நா.வின் வல்லுநர் குழு அறிக்கையின்படி, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதற்கான மக்கள் கருத்தை உருவாக்குவோம்! அதில் ஒரு முக்கிய செயல்பாடுதான் நாளை மறுநாள் (28.4.2011) தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் அரங்கேற்ற இருக்கும் ஆர்ப்பாட்டம் ஆகும்.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார். மற்ற மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஆர்ப்பாட்டச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதில் இந்தியா நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ராஜபக்சேயை காப்பாற்றும் கேவலமான காரியத்தில் இந்தியா ஈடுபடுமேயானால், அதைவிட அநாகரிகம், மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் கேவலம் வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

இந்தியாவின் எந்தக் குரலுக்கும் அதற்குப்பின் எந்தவித மரியாதையும் கிடைக்காது - கிடைக்கவே கிடைக்காது.

தமிழர்களின் எதிரி இந்தியா என்ற எண்ணம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் உறுதியாக - கல்வெட்டாக செதுக்கப்பட்டு விடும்.

காங்கிரஸ் என்பதன் கடைசிப் பூண்டும் தமிழ்நாட்டில் அற்றுப்போய் விடும்.

கழகத் தோழர்களே! தமிழ் மண்ணின் எரிமலைக் குமுறலை வெளிப்படுத்தும்

நாள் - ஏப்ரல் 28.

கிளர்ந்திடுவீர் - தமிழர்களை இணைத்திடுவீர்!

கழகம் கொடுக்கும் குரல் அய்.நா. மன்றத்தின் கதவினையும் கனமாகத் தட்டட்டும்!
களம் காண்போம் வா, கழகத் தோழனே!

-----------------மின்சாரம் அவர்கள் 26-4-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

அப்படி வாயா, அந்துமணிப் பட்டரே!


தினமலரின் தனபாலுக்கு எப்பொழுதுமே டவுட்தான். அதனால்தான் அதற்கு டவுட் தனபாலு என்று பெயரோ!

நேற்றைய இ(தி)னமலரில் ஒரு டவுட்டாம். தமிழக முதல்வர் கருணாநிதி: சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குற்ற நடவடிக்கைகள் எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கக்கூடியதுதான்.

டவுட் தனபாலு: இதாங்க நேரங்கிறது . . . குற்றங்கள் எல்லாக் காலத்திலேயும் நடக்கிறதான்னு ஒரு முதல்வர் சொன்னா குத்தம் கிடையாது. . . போர்க்களத்துல பொது மக்கள் பலியாகிறது சகஜம் தான்னு அந்தம்மா சொல்லிட்டா பெருங்குத்தம் . . . அப்படித் தானே.. . ? (தினமலர்: 25-4-2011)

அப்படி வாயா அந்துமணி பட்டரே!

அடேயப்பா, எப்படிப்பட்ட அண்டார்டிகா கண்டுபிடிப்பு - வெண்ணெய்யையும் சுண்ணாம்பையும் ஒண்ணுன்னு அடம் பிடிக்கும் அபாரக் கண்டுபிடிப்பு!

அட, அகங்காரம் பிடித்த ஆரியக் குஞ்சே...

இலங்கையில் நடைபெற்றது ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடைபெற்ற சண்டையல்ல - போர் அல்ல; அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை! குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் - உரிமைகள் மறுக்கப்படுகிறோம். எங்கள் மொழி ஒதுக்கப்படுகிறது - எங்கள் இனம் ஒழித்துக் கட்டப்படுகிறது என்பதற்காக நடத்தப்படும் தேசிய இன உரிமைப் போராட்டம்!

மக்கள் நல அரசாக இலங்கை அரசு இருந்திருந்தால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்திருக்கும். மாறாக தமிழ் இனம் என்ற ஒன்று இருப்பதால்தானே கூக்குரல் போடுகிறார்கள், அணி திரள்கிறார்கள் - அந்த இனத்தையே முற்றாக அழித்துவிட்டால். விடுதலைப் புலிகளாவது-வெங்காயமாவது! தமிழாவது - தகர டப்பாவாவது! அதற்குப் பின் இலங்கைத் தீவு என்றால் அங்கு ஒரே இனம் - சிங்கள இனம்தானே! என்ற வெறியில் சொந்த நாட்டு மக்களையே பீரங்கிகள் வைத்து பிணமாக்கிய கொடியவர்களின் குரூரச் செயல்கள் அங்கே நடந்தது. சொந்த நாட்டு மக்களையே விமானங்கள் மூலம் மரணக் குழிக்குள் தள்ளிய மனிதாபி மானமற்ற வக்கிரம் அது. அதைப் போய் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமிடையே நடக்கும் போர் என்று ஜெயலலிதா கருதுவதும், போர் என்றால் பொதுமக்கள் பலியாவது சகஜம்தான் என்று கூறுவதும் சரியானதுதானா - சகஜமானது என்ற பொருளுக்குப் பொருத்தமானதுதானா?

கணவனும் மனைவியும் வீட்டுக்குள் போட்டுக் கொள்வதும் சண்டைதான்- பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் நடந்ததும் சண்டைதான் என்று இந்தச் சாம்பார் பன்னாடைக் கூட்டம் பகருமோ!

தமிழர்கள் என்ற சொல்லைக் கேட்டாலே ஸ்ரீரங்கத்து அம்மையாரிலிருந்து தினமலர் பூணூல் வரை ஒரே மாதிரியான நமைச்சல் - எரிச்சல்! நன்னா புரிஞ்சுப் போச்சு!
--"விடுதலை” 26-4-2011

தமிழ் ஓவியா said...

ராஜபக்சேவின் தில்லுமுல்லு!


இலங்கைத் தீவின் அதிபர் மகிந்த ராஜபக்சேவைப் போல ஒரு தில்லுமுல்லுக்காரரை உலகத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் பொய், பொய், பொய்யிலே புழுத்த புழுதான்.

ஈழத்திலே கடைசிக் கட்ட போரிலே பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னதைவிட உலக மகாப் பொய் வேறு ஒன்று இருக்க முடியாது.

கடைசிக் கட்டத்தில் அங்கே என்ன நடந்தது என்பதை ஊடகங்கள் கண்ணுக்கு எதிரே கொண்டு வந்து நிறுத்தவில்லையா?

முள் வேலிக்குள் எந்தத் தமிழரும் இல்லை - எல்லாம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்குக் குடியேற்றப்பட்டு விட்டனர் என்று அப்பட்டமாகப் பொய் பேசவில்லையா?
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான், கெட்டிக்காரன் புளுகே எட்டே நாள் என்பதுதான் உச்ச கட்டம். வேண்டுமானால் ராஜபக்சே பொய்யின் திலகம் என்று உலகம் தெளிந்து கொள்வதற்கு மேலும் கூடுதல் நாட்கள் தேவைப்பட்டு இருக்கலாம்.
இப்பொழுது எல்லாத் திசைகளும் இந்தக் குரூர மனிதன்மீது தனது அம்புகளைத் தொடுக்க ஆரம்பித்து விட்டன.

தொடக்கத்தில் தன் கடமையைச் செய்யத் தவறிய அய்.நா. மன்றமும் - இதற்குமேல் ராஜபக்சேவைக் காப்பாற்றிட முடியாது - அவ்வாறு செய்தால் தன் விரலைத்தானே சுட்டுக் கொள்ள நேரிடும் என்ற நிலையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்திடச் சொன்னது.

அந்த அறிக்கை வெளிவந்துவிட்டது. உலக நீதிமன்றத்தில் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட உள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே வழக்கமான தந்திரம் ஒன்றில் ஈடுபட்டார்.
டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கும் உலகின் சக்தி மிகுந்த 100 முக்கியமான மனிதர்களின் பட்டியலில் ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சி செய்தார். நான்காவது இடம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டார்.

அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 2,38,908. எதிராகப் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 44,428.

இந்த நூறு பேர் பட்டியலில் இவ்வளவு அதிகமான எதிர் வாக்குகளைப் பெற்ற ஒரே ஆசாமி ராஜபக்சே தான். இந்த நிலையில், இதனைச் சரி செய்வதற்காக தமது அலுவலகத்திலேயே குழு ஒன்றை உருவாக்கி, அவர்கள் வழியாக ஆன்லைன் மூலம் வாக்கு களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்துவிட்டார். இதன் காரணமாக 6ஆம் வரிசையில் இடம் பெற்ற இந்த இடி அமீன் 4ஆம் இடத்திற்கு முன்னேறினார்.

இதில் ஏதோ மோசடி நடந்துள்ளது என்று சந்தேகப்பட்ட டைம்ஸ் ஏடு நிருவாகம் தமது தொழில் நுட்பக் குழு மூலம் ராஜபக்சே தரப்பின் மோசடியைக் கண்டுபிடித்தது.

இறுதிப் பட்டியலில் இருந்து ராஜபக்சேயின் பெயர் தூக்கி எறியப்பட்டு விட்டது.

அதிர்ச்சிக்கு ஆளான இந்த ஆசாமி சக அமைச்சர்களையும், அலுவலகக் குழுவினரையும் கடுமையாகச் சாடினார் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன.

இந்த மனிதரை எந்தவகையிலாவது காப்பாற்றிட முயலுவோர் - தனி நபராக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, அவர்கள் உலக மக்கள் மத்தியிலே மிகவும் கேவலமாக அம்பலமாகி விடுவார்கள் என்பதில் அய்யமில்லை.

ராஜபக்சே என்னும் இந்தக் குரூரமான பாசிஸ்ட் தண்டிக்கப்படவில்லையானால் உலகில் நீதி பற்றியும், நியாயம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும், மனிதநேயம் பற்றியும் பேசுவது என்பதே அர்த்த மற்றதாகி விடும்.

சமாதானம் பேசிட வெள்ளைக் கொடி பிடித்து வந்தவர்களையே குரூரமாக கொன்ற கூட்டத்தின் தலைவரை உலகம் தண்டித்தது என்ற செயல் பாட்டின்மூலம் உலகம் தன் பெருமதிப்பைக் காப்பாற்றிக் கொண்டது என்று நாளைய உலகம் எழுதிட வேண்டாமா?

நாளை (28ஆம் தேதி) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. போர்க் குற்றவாளி ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.
கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே! உணர்ச் சியோடு வெற்றிகரமாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவீர்! நடத்துவீர்!!

-----------"விடுதலை” 27-4-2011

தமிழ் ஓவியா said...

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

தமிழீழம் மலர்வது உறுதி!
ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி கைது செய்யும் வரை ஓய மாட்டோம்!

சென்னை, ஏப்.28- ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு.
தமிழ் ஈழம் விரைவில் மலரப் போவது உறுதி இலங்கை அதிபர் ராஜபக்சேவை
பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வரை தமிழர்கள்
ஓய மாட்டோம். இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது. எதிர்ப்பு தெரிவிக்க
வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர்
கி. வீரமணி கூறினார்.

போர்க் குற்றவாளி ராஜபக்சேவை உலக குற்றவாளிக் கூண்டில் ஏற்றக் கோரியும்
ஈழத் தமிழர் மீட்சியை வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை
முன்பு இன்று (28.4.2011) காலை 11 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பல அமைப்பினர்

இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை,
விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இன உணர்வுள்ள அமைப்புகளைச்
சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஒலி முழக்கங்கள்!

போர்க் குற்றவாளி ராஜபக்சேவை கூண்டில் ஏற்றித் தண்டிக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி ஒலி முழக்கங் களை மு.அ. கிரிதரன், பிரின்ஸ் என்னரெசு, கோ.வீ.
ராகவன் ஆகியோர் முழங்கினர். அதைக் கூடியிருந்த தோழர்கள் பின்பற்றி
ஆவேசமாக முழங்கினர். ஆர்ப்பாட் டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்றுப்
பேசினார்.

சுப. வீரபாண்டியன்

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.
வீரபாண்டியன் தமதுரையில் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் இன அழிப்பு வேலையை செய்ததற்காக சிங்கள இலங்கை அரசை - ராஜபக்சேவை
குற்றவாளி என்று உலக நாடுகள் அய்.நா. மன்றத்தின் மூலமாக முதல் அறிக்கையை
வெளியிட்டிருக்கின்றன.

அதற்கு ராஜபக்சே எதிர்ப்பு தெரிவித்து என்ன சொன்னார்? இலங்கை அரசை போர்
குற்றவாளி என்று அறிவித்ததற்காக மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி
அய்.நா.வுக்கு எதிர்ப்பைக் காட்டுவோம் என்று சொல்லியிருக்கின்றார்.
இந்தியாவுக்கு அவமானம்
இரண்டாவது தமிழக மக்களுக்கு வழங்கும் உதவி பாதிக்கும். மூன்றாவது
எங்கள் அரசுக்கு இந்தியா உதவு வதாக அறிவித்திருப்பது எங்களுக்கு
மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.

இந்தியா உதவி செய்யும் என்று ராஜபக்சே கூறியிருப்பதை இந்தியா நிறுத்திக்
கொள்ள வேண்டும். இப்படி ராஜபக்சே கூறியிருப்பது தமிழர்களுக்கும்
இந்தியாவுக்குப் பெருத்த அவமானமாகும். உலகம் முழுவதிலும் இருக்கின்ற
தமிழர்கள் இலங்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.

ஒரு பத்திரிகை எழுதுகிறது. ஈழத் தமிழர்களுக்காக தி.மு.க. தீர்மானம்தான்
நிறைவேற்றியிருக்கிறது. அம்மையார் ஈழத் தமிழர்களுக்காக அறிக்கையே
கொடுத்திருக்கின்றாரே என்று எழுதியிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான
உணர்வு கொண்ட பத்திரிகையும், அதன் ஆசிரியரும் எழுதுகிறார். தி.மு.க.
நிறைவேற்றிய தீர்மானத்தை இரண்டாம் தரமாக கருதி அந்த பத்திரிகையில்
எழுதுகிறார்கள் என்றால் பார்ப்பனர்களின் கெட்ட எண்ணத்தை நீங்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.

ராஜபக்சேவை சிறைக் கைதியாக ஆக்கும் வரை ஒன்றுபட்டு நாம் குரல் கொடுக்க
வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஆற்றிய சிறப்புரை வருமாறு:

சுப. வீரபாண்டியன் சொன்னதை வழிமொழிகிறேன்

இங்கே நமது சகோதரர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சொன்ன கருத்துக்கள்
அத்தனையையும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே வழிமொழிய
கடமைப்பட்டிருக்கின்றேன். இலங்கை புரிந்த இனப் படுகொலையை கடந்த 10
மாதங்களாக விசாரித்து இலங்கை அரசு ராஜபக்சே அரசு குற்றவாளி என்பதை
அய்.நா. மன்றம் அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் அறிக்கையை
வெளியிட்டிருக்கின்றது. சிங்கள இன வெறியர்கள் தமிழின அழிப்பு வேலையை
அங்கு நடைபெற்ற போருக்கு முன்பும் சரி, போருக்குப் பின்பும் சரி இன்றும்
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

உலக நாடுகள் கண் முன்பு இலங்கை போர் குற்றவாளி

உலக நாடுகளின் கண்கள் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளிதான் என்பதை
அய்.நா. மன்றம் அறிவித்திருக்கிறது. எனவே, இலங்கை அதிபர் ராஜபக்சேவை
உலகத்தின் முன்பு போர் குற்றவாளி என்று நிறுத்தக் கூடிய கால கட்டம்
வந்துவிட்டது.

எம் இனம் அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையை சிங்கள அரசு
தர மறுக்கிறது. ஆட்டிக்குட்டி ஓநாயிடம் பாதுகாப்பாக உள்ளது என்று சிங்கள
அரசு சொல்கிறது.

தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு

ஈழத் தமிழருடைய பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழம்தான். தனி ஈழம் மலரும்
வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும். தனி ஈழம் வந்தாக வேண்டும்.
நம்மிடையே அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம்
ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்கள்
எந்தவித சுருதி பேதமும் இல்லாமல் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம்

இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக தமிழ் நாடு முழுக்க அனைத்து மாவட்ட
தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது.

இந்திய அரசு ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் துணைபோகக் கூடாது. கடந்த கால
செயல்களுக்கு கழுவாய்த் தேட வேண்டும். இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க
வேண்டும்.

மலரப் போவது தமிழ் ஈழம்தான்

இந்தியா தமிழர்களுக்கு விரோதமான செயல்களுக்கு துணை நிற்கக் கூடாது.

ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையில் இந்திய அரசின் வெளியுறவுத்துறை
கவலையோடு கவனம் செலுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுடைய உரிமையை மத்திய அரசு
மனிதநேயத்துடன் பார்க்க வேண்டும். அடுத்து மலரப் போவது தமிழ் ஈழம்தான்.
தமிழ் ஈழ மாநாட்டை அடுத்து நடத்தலாம் என்று இருக்கின்றோம். மத்திய அரசு
மனிதநேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராகத்தான்
இருக்கிறோம் என்று காட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.

ராஜபக்சேவை கைது செய்யும் வரை

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, உலக குற்ற வாளிக் கூண்டில் ஏற்றி கைது
செய்யும் வரை போராட்டம் ஓயாது. இது போன்ற போராட்டங்கள் தொடரும்.
பிறவியிலேயே ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் இன்றைக்கு ஏதோ
ஆதரவாளர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.

அத்தகையவர்கள் தமிழ் இனத்துக்கு துரோகிகள்.

தமிழ் ஈழம் வருகிற வரை தமிழர்களுடைய போராட்டம் தொடரும்! தொடரும்!!
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.

தென் சென்னை மாவட்ட தி.க.தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு,
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர்
மயிலை கிருஷ்ணன், பேராசிரியர் மங்கள முருகேசன், சாமியார் தஞ்சை முருகன்
போன்ற முக்கியப் பிரமுகர்களும் மற்றும் ஏராளமான தோழர்களும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

------------------”விடுதலை” 28-4-2011