Search This Blog

21.4.11

ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்கிற பெரியாருடன் சேரலாமா?


திருவாரூரில் கேள்விகளுக்கு ஈ.வெ.ரா. பதில்

கேள்விகள்

1. சமதர்மம் விரும்பும் தாங்கள் தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கேட்பது அழகா? 2. காங்கிரசு மகாசபை பிராமணர்களுக்கு மாத்திரம்தான் சொந்தமா? 3. ஜவஹர்லாலை ஏன் கண்டிக்கிறீர்கள்? 4. பணக்காரர்களை நீங்கள் ஆதரிக்கலாமா? "ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்கிற ராமசாமியுடன் மற்றவர்கள் சேரலாமா?" என்று கேட்கப்பட்ட அச்சு நோட்டீசும் கொடுக்கப்பட்டது.

பதில்கள்

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது சமதர்மக் கொள்கையைச் சேர்ந்ததேயாகும். இன்றைய சீர்திருத்தம், அரசியல், சுதந்திரம் என்பவைகள் எல்லாம் அதிகாரம், பதவி, உத்தியோகம் ஆகியவைகளாகத்தான் இருக்கின்றன. எனக்குத் தெரிய 1900 முதலே இன்று வரை அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் பல மதம் பல ஜாதியாக மக்கள் பிரிந்திருக்கிறார்கள்.

அவர்களில் பலர் பிறவியினால் இழி மக்களாகக் கருதப்பட்டு அரசியலில் உத்தியோகம், பதவி அதிகாரம் ஆகியவைகளில் 100க்கு ஒருவர் இருவர் கூட இருப்பதற்கு இல்லாமல் விலக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாய் கல்வி செல்வம், நல்வாழ்வு ஆகியவைகள் அடைவதற்கில்லாமல் அநேக காலமாக மிருகங்களிலும் கேவலமாக அநேகர் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மற்ற மக்களோடு சரி சமத்துவமாக வரவேண்டுமென்றால் அவர்கள் உரிமைகளை தனிப்பட்ட முறையில் கவனிக்கவில்லையானால் வேறு வழி என்ன என்று நீங்களே சொல்லுங்கள். முன்னணியில் இருப்பவர்களுடன் அவர்கள் போட்டி போட வேண்டும் என்றால் இன்று அவர்களால் (தாழ்த்தப்பட்ட மக்களால்) எப்படி சாத்தியப்படும்? அவர்கள் கை கால்கள், வாய்கள், கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

அன்றியும் நமது தேசீய சபை என்னும் காங்கிரசுக்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும் தனித்தொகுதியும் புதிதான காரியமல்ல. 1906ல் சர்க்காரார் முஸ்லீம்களுக்கு அவர்கள் சமூக எண்ணிக்கைப்படி பிரதிநிதித்துவம் கொடுப்பதாக வாக்களித்து 1910ல் தனித்தொகுதி மூலமே கொடுக்கப்பட்டு 1916ல் காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் தீர்மானத்தின் மூலம் ஜன சமூக எண்ணிக்கைப்படி தனித்தொகுதி மூலம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு விட்டார்கள். மகமதிய தொகுதி மகதியரல்லாதார் தொகுதி என்று பிரித்து இன்று 26 வருஷ காலமாக நடைபெற்று வருகிறது. காந்தி காங்கிரசிலும் சி.ஆர்.தாசின் பாட்னா ஒப்பந்தம் மூலம் இது ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. அது போலவே கிறிஸ்தவ சமூகத்துக்கும் கொடுக்கப்பட்டாய் விட்டது.

ஆகவே அது முதல் இன்று 25 வருஷம் காலமாக கிறிஸ்தவர்களாலும் மகமதியர்களாலும் தேசீயத்துக்கு ஏற்பட்ட கெடுதி என்ன என்று கேட்கிறேன்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பதால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் அரசாங்கத்தாருடன் ஒத்துழைக்கிறார்கள் என்று சொல்லப்படுமானால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை விரும்பாத ஆதரிக்காத மிதவாதிகள் தோழர்கள் ÿனிவாச சாஸ்திரி, சாப்ரு, சிவசாமி அய்யர், சி.பி.ராமசாமி அய்யர் முதலியவர்கள் சர்க்காருடன் ஒத்துழைப்பதேன்? என்பதை யோசித்துப் பார்த்தால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கும் ஒத்துழையாமல் இருப்பதற்கும் காரணமானதல்ல என்பது விளங்கும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பொது ஜனங்களால் விரும்பப்பட வில்லையென்றாவது யாராலாவது சொல்ல முடியுமா?

முஸ்லீம் சமூகத்தில் 100க்கு 99 பேர்களும் அதை ஆதரிக்கிறார்கள்; கிறிஸ்தவர்களிலும் 100க்கு 99 பேர்கள் ஆதரிக்கிறார்கள்; தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களிலும் அது போலவே ஏன்? 100க்கு 100 பேர் ஆதரிக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை இந்திய ஜனசங்கையில் கிட்டத்தட்ட பகுதி ஆகலாம். மற்றும் இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்கள் 100க்கு 100பேரும் ஆதரித்துவிட்டார்கள். ஆதாரம் என்னவென்றால் 1920ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ பிரச்சினையின் மீதே தேர்தலில் நின்ற பார்ப்பனரல்லாதார்கள் பெருவாரியாக வெற்றி பெற்று விட்டார்கள். அந்தச் சமயத்தில் காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதார்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கையை ஒப்புக் கொண்டார்கள். காங்கிரஸ் பார்ப்பனர்களில் பலரும் ஒப்புக் கொண்டார்கள். அந்த உணர்ச்சி ஏற்பட்ட பிறகு தான் பார்ப்பனர்கள் தேர்தல்களில் மிகக் குறைந்தவர்களாக ஆகி வருகிறார்கள். ஆதலால் அதை ஏன் இவ்வளவு பிடிவாதமாக இப்போது எதிர்க்க வேண்டும்?

வகுப்புகள் இருப்பது தேசியத்துக்கும் சமதர்மத்துக்கும் குற்றமில்லையானால், பிரதிநிதித்துவம் மாத்திரம் எப்படி சமதர்மத்துக்கு விரோதமாகிவிடும்?

அன்றியும் பொது ஓட்டல்கள், கோவில்கள், குளங்கள் ஆகியவைகளில் இன்ன இன்ன வகுப்புக்கு பிரவேசம் இல்லை என்றும் இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன இடம் என்றும் போர்டு போடுவது சட்ட விரோதமில்லை என்றும் தேசீயத்திற்கும் சமதர்மத்திற்கும் விரோதமில்லை யென்றும் ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரதிநிதித்துவம் மாத்திரம் எப்படி சட்ட விரோதமாகிவிடும் சமபங்கு பிரதிநிதித்துவம் தான் கேட்கின்றோமே தவிர அதிகபாகம் கேட்கின்றோமா? ஆகவே சமபாகம் கேட்பது ஒருநாளும் சமதர்மத்துக்கு விரோதமாகிவிடாது. கொடுக்க மறுப்பதுதான் சமதர்மத்துக்கு விரோதமாகும் என்று சொல்லுவேன். அதுவும் என்றென்றைக்கும் கேட்கவில்லை.

அடுத்தபடியாக காங்கிரசு பிராமணர்களுக்கு மாத்திரம் சொந்தமா? என்று கேட்கிறீர்கள்.

இன்று அப்படித்தான் இருந்து வருகிறது. அதனால்தான் நான் காங்கிரசில் இருந்து விலகினேன்.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பிரசிடெண்டு முத்துரங்க முதலியார் என்று ஆதாரம் இருந்தாலும் அதிகாரம் செலுத்துவது சத்தியமூர்த்திதானே? அறிக்கை விடுவதும் ஆதிக்கம் செலுத்துவதும் ராஜகோபாலாச்சாரியார் தானே? வெளிநாட்டில் காந்தியாரிடமும் மற்ற காங்கிரஸ் தலைவர்களிடமும் செல்வாக்கும் இஷ்டம்போல் காரியம் சாதித்துக்கொள்ளும் சக்தியும் இருப்பது பார்ப்பனர்களுக்குத் தானே?

காங்கிரசுக்கு எதிராக எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் மதிக்கப்படுவது பார்ப்பனர்கள் தானே? மாளவியா எவ்வளவு எதிர்ப்பாய் நடந்துகொள்ளுகிறார். எந்தப் பார்ப்பனராவது காங்கிரஸ்காரராவது அவரை தேசத்துரோகி என்று அழைக்கிறார்களா? டாக்டர் ராஜன் காங்கிரசுக்கு எவ்வளவு பெரிய "துரோகம்" செய்தார். அவர் வீட்டுக்குத்தானே ஜவஹர்லால் போய்விட்டு வந்தார்? 100க்கு 3 பேர்களாக உள்ள பார்ப்பனர்கள் இன்று காங்கிரஸ் ஸ்தாபனத்திலும் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்திலும் காங்கிரசின் பேரால் நிறுத்தப்படும் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் 100க்கு 25,30 வீதம் ஏன் அமர்த்தப்படுகிறார்கள்? இவைகள் எல்லாம் காங்கிரஸ் பார்ப்பன ஸ்தாபனம் என்று சொல்லுவதற்கு போதுமானதாகாதா?

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை பார்ப்பனர் ஒப்புக் கொண்டால் வேறு ஆக்ஷேபிக்கிறவர்கள் யார்? முத்துரங்க முதலியார் தலைவர் தேர்தலும் அந்த கொள்கை மீதுதான் வெற்றியடைந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு பார்ப்பனர்களே எதிரிகளாய் இருப்பதாலும் அவர்களே எதிர்ப்பதாலும் காங்கிரசும் அவர்கள் இஷ்டத்தையே பொறுத்து இருப்பதாலும் நான் காங்கிரசை பார்ப்பனர் ஸ்தாபனம் என்று சொல்லுகிறேன்.

ஜவஹர்லாலைக் கண்டிப்பது பற்றி கேட்கின்றீர்கள். ஜவஹர்லாலை நான் மாத்திரம் கண்டிக்கவில்லை. "சுதேசமித்திரன்" பத்திராதிபர் கண்டித்து வைது ஜவஹர்லாலுக்கு புத்தியில்லை, யோசனை இல்லை, ஆணவக்காரர், உலக அனுபவம் போதாது, புஸ்தகப் பூச்சி, அனுபவ சாத்தியமான கொள்கையில்லாதவர், தற்பெருமைக்காரர், தலைவருக்கு தகுதி இல்லாதவர் என்றெல்லாம் "இந்து"ப் பத்திரிகையில் எழுதினார்.

சத்தியமூர்த்தியவர்களும் ஜவஹர்லால் கொள்கைக்கு ஆக அவருக்குத் தலைவர் ஸ்தானம் கொடுக்கவில்லை என்றும், அவரது தகப்பனார் பெருமைக்கும் அவரது தியாகத்துக்கும் கொடுக்கப்பட்டது என்றும் ஆனைமலையில் சொன்னார்.

மற்றும் அவர் நிதான புத்தியும் நேர்மைக் குணமும் இல்லாமல் சுயமரியாதைக்காரர்களை கேள்வி கேட்டதற்கு ஆக "பொய்யர்கள்" என்று சொன்னார். அவரைப்பற்றி மாளவியா முதல் பலர் கண்டித்து பேசியிருக்கிறார்கள். ஆதலால் ஜவஹர்லால் என் போன்றோர்களால் கண்டிக்கப்படுவது ஒரு அதிசயமான காரியமல்ல.

பணக்காரர்களை நான் ஆதரிப்பது சமதர்மத்துக்கு அடுக்குமா என்று கேட்கிறீர்கள்.

பணக்காரர்களை ஒழிக்கும் நிலையில் நான் இல்லை. ஏனென்றால் காங்கிரசானது பார்ப்பனர்களை காப்பதற்கு இருக்கிறது என்பதுடன் இரண்டாவதாக தங்கள் அடிமைகளான பணக்காரர்களை காப்பாற்றுவதற்கு ஆகவே இருக்கிறது.

ஜம்னாலால் பஜாஜ், பிர்லா, கோஸ்வாமி, சிவப்பிரகாஸ் குப்தா, ஜமால் மகமது, நாடிமுத்துபிள்ளை, சுப்பராயன், ராமலிங்கம் செட்டியார் போன்ற நூற்றுக்கணக்கான மக்களை ஆதரித்து அவர்களுக்கு பதவிகள் சம்பாதித்து கொடுக்க கூலிவேலை செய்யும்போது நான் எப்படி பணக்காரர்களை ஒழித்துவிட முடியும்? நான் விரட்டியடிக்கும் பணக்காரர்கள் எல்லாம் காங்கிரசை தஞ்சமடைகிறார்கள். அவர்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

ஆதலால் காங்கிரஸ் ஒழியாமல் பணக்காரர்கள் ஒழிக்கப்படமாட்டார்கள். நான் பணக்காரர்களை ஒழிக்க வேலை செய்தேனேயானால் பணக்காரர்களால் காங்கிரசுதான் லாபமடைகிறது.

ஆகவே பணக்காரர்கள் ஒழிக்கப்படுவதற்கு முன் பார்ப்பனீயம் ஒழிக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

கடசியாக, "ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்யும் ராமசாமி நாயக்கருடன் மற்றவர்கள் சேரலாமா" என்று ஒருவர் அச்சு நோட்டீஸ் வழங்கியிருக்கிறார். ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்வது ஒரு குற்றமாகுமா? என்று கேட்கிறேன். "ஏசு கிறிஸ்து கோவில்கள் கள்ளர் குகை" என்றார். ஏசுகிறிஸ்துவை நீங்கள் பாவி என்கிறீர்களா? முஸ்லீம்கள் அநேக விக்கிரகங்களை உடைத்திருக்கிறார்கள். கோவிலை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். இன்றும் விக்கிரகங்களை மாத்திரம் அல்லாமல் விக்கிரக வணக்கக் காரர்களை காபர்கள் என்று இழிவாய்ப் பேசுகிறார்கள். தோழர் காந்தியார் "கோவில்கள் குச்சுக்காரிகள் இல்லம்" "கோவில்களில் கடவுள் இல்லை" என்றார். காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் பழனியிலும் மதுரையிலும் கோவிலுக்குப் போய் இருந்தாலும் கடலூரில் "கோவில்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்க வேண்டும்" என்று சொன்னார். கோவில்களின் தர்மகர்த்தாக்களும், பூசாரித்தனம் செய்யும் பார்ப்பனர்களும் மடாதிபதிகளும் 100க்கு 99 பேர் "சாமி" சொத்துக்களை திருடுகிறார்கள். இவர்களை யெல்லாம் நீங்கள் அயோக்கியர்கள் என்று சொல்லுகிறீர்களா? இவர்கள் தலைமையில் இருந்து நீங்கள் விலகிவிட்டீர்களா? இப்படி இருக்கையில் உங்களுக்கு மாத்திரம் கோவில்களிடமும் விக்கிரகங்களிடமும் உண்மையான நம்பிக்கையோ மரியாதையோ இருக்கிறது என்று நான் எப்படி நம்பமுடியும்?

வாலிபர்கள்

தோழர்களே! உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டதாகக் கருதுகிறேன். இது உங்களை திருப்தி செய்திருக்குமா என்பது வேறு விஷயம். நீங்கள் திருப்தி அடைந்துதான் தீரவேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. வாலிபர்களாகிய நீங்கள் இம்மாதிரி போலி எழுச்சியில் உங்களை கெடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு காங்கிரசினிடம் பற்று இருப்பதுபற்றி நான் குறைகூறவில்லை. யோசிக்காமல் வெறும் உற்சாகத்தில் பயனற்ற வேலையில் இறங்கிவிட்டீர்களே என்றுதான் பரிதாபப்படுகிறேன். உங்களுக்கு காங்கிரசைப்பற்றி என்ன தெரியும்? அதன் சூழ்ச்சிகள், சுயநலக் கொள்கைகள் ஆகியவைகளைப்பற்றி ஏதாவது அறிந்திருக்கிறீர்களா? அல்லது அது இந்த 50 வருஷ காலமாய் நாட்டுக்கு செய்தது இன்னதென்று ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? உங்களது பொறுப்பற்ற வாலிப பருவத்தை நல்ல காரியத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அடக்கி ஆளவும் இந்த நாட்டில் போதுமான வசதி இல்லாததால் இம்மாதிரியான விவேகமற்ற காரியத்தில் இறங்கிவிட்டீர்கள். நீங்கள் கூடிய சீக்கிரம் மனம் திரும்புவீர்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உங்களிடத்தில் விவகாரம் பேசி உங்களை எல்லாம் நான் சீக்கிரத்தில் திருப்பப்போகிறேன்; உங்களைக் கொண்டே பயனுள்ள வேலை செய்யப்போகிறேன். நான் உங்களைப்போல் போலி உற்சாகத்தில் காங்கிரசில் விழவில்லையானாலும் நம்பி விழுந்து பிறகு மேடேறியவன். எனக்கு வேறு விஷயத்தில் போதிய ஞானமில்லா விட்டாலும் இந்த காங்கிரசின் வண்டவாளத்தை உணர்ந்திருப்பதில் நான் ஒரு நிபுணன் என்று சொல்லிக்கொள்வேன்.

இந்த 50 வருட காலமாக காங்கிரசினால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட தீமைகளை அடுக்கடுக்காய் எடுத்துச் சொல்லுவேன். இந்தியா ஒரு நாகரிக மக்களால் ஆளப்பட்டும் இன்னமும் காட்டுமிராண்டித் தன்மையில் இருப்பதற்குக் காரணம் காங்கிரசேயாகும். இந்த நாட்டில் இவ்வளவு தார தம்மியமுள்ள பணக்காரரும் ஏழையும் இருப்பதற்கு காங்கிரசே காரணம்.

இந்த நாட்டில் இவ்வளவு ஏராளமான சம்பளமும் உத்தியோகமும் இருப்பதற்கு காங்கிரசே காரணம்.

இந்த நாட்டில் பாடுபடாத ஒரு வகுப்பார் 100க்கு 100 பேர் படித்து, பாடுபடும் மக்கள் 100க்கு 95 பேர் தற்குறிகளாக இருப்பதற்கு காங்கிரசே காரணம்.

இந்த நாட்டில் விவசாயிகளுக்கும் கூலிக்காரர்களுக்கும் இவ்வளவு வரி உயர்வுக்கு காங்கிரசே காரணம்.

இந்த நாட்டில் தொழில்கள் முன்னேற்றம் அடையாமல் கர்னாடக நிலை பூஜிக்கப்படுவதற்கு காங்கிரசே காரணம்.

இப்படியே இன்னமும் அனேக கெடுதல்களுக்கு காங்கிரஸ் காரணம் என்று மெய்ப்பிக்க என்னால் முடியும். நீங்களல்ல, இன்னம் இந்த ஊரிலல்ல, ராஜகோபாலாச்சாரி அல்ல, இன்னும் வேறு யார் வந்து வாதாடுவதால் இருந்தாலும் இவைகளை ருஜணப்பிக்கத் தயாராய் இருக்கிறேன்.

ஆதலால் வாலிபர்கள் யாருக்காவது உண்மையில் தேசப்பற்றோ மனிதப்பற்றோ இருக்குமானால் காங்கிரசை ஒழியுங்கள். பிறகு இந்த அரசாங்க முறை தானாக மாய்ந்து ஒழிந்து ஏழை மக்களின் நன்மைக்கு ஏற்றபடி நடக்கக் கூடியதாகிவிடும். அதுவாகத் திருத்தப்பாடு அடையா விட்டாலும் 5 நிமிஷத்தில் நம்மால் செய்துவிட முடியும். இன்று இந்த அரசாங்க ஆசக்கொடுமைகள் என்பவற்றிற் கெல்லாம் காங்கிரசே ஆதரவளிக்கிறது.

நன்மைகள் எல்லாம் நம்மாலேயே அதாவது காங்கிரஸ் அல்லாதவர்களாலேயே ஏற்பட்டு வருகின்றன. இந்த 15 - வருஷகாலமாக காங்கிரசுக்கு எதிர் ஸ்தாபனம் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்த நாட்டு குடிகளின் நிலைமை என்ன ஆயிருக்கும் என்பதற்கு அதற்கு முந்திய அதாவது எதிர் ஸ்தாபனம் ஏற்படுவதற்கு முந்திய 20, 30 வருஷத்திய அனுபவத்தையும் புள்ளி விவரத்தையும் கூர்ந்து பாருங்கள். நான் வாய் உருட்டல் கூலியல்ல. புள்ளிவிவரத்தோடு பேசுகிறவன். ஆகையால் தோழர்களே உங்கள் உற்சாகத்தை நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் விரோதமாய் பயன்படுத்தாதீர்கள் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

----------- 10.01.1937 இல் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றியபோது "தேசீய வாலிபர்கள்" என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த துண்டறிக்கைக்கு அளித்த பதில்களும் சொற்பொழிவின் தொடர்ச்சியும். -- “குடி அரசு” - 24.01.1937

0 comments: