Search This Blog

1.4.11

ஏப்ரல் முதல் நாளை மட்டும் முட்டாள்தினம் என்பது படு முட்டாள்தனமே!


ஏப்ரல் முதல் தேதி என்றால் அதனை உலக முட்டாள்கள் தினம் (APril Fool) என்று அழைக்கப்படுவதுண்டு.

ஏதோ அந்த ஒரு நாளில் மட்டும்தான் மனிதன் முட்டாளாக ஆக்கப்படுவது போலவும், மற்ற நாட்களில் எல்லாம் அதி புத்திசாலியாக மனிதன் இருப்பது போலவும் ஒரு நினைப்பு பெரும்பாலோர்க்கு.

சுருக்கமாக சுருக்கென்று தைக்கும்படிச் சொல்ல வேண்டும் என் றால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் - அவர்தான் இந்த உலகத்தைப் படைத்தார் - உயிர்களை எல்லாம் உற்பத்தி செய்தார் - கல்லினுள் தேரைக்கும் அவர்தான் படியளக்கிறார் - அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று நம்புகிற ஆசாமி மெத்தப் படித்து இருந்தாலும், மேட்டுக் குடிமகன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும், உயர் அதிகார நாற்காலியிலே அட்டாணிக் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறேன் என்று சொல்பவராக இருந்தாலும், அறிவுக்கு உட்படாததை, வெறும் (மூட) நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் கண்களை மூடிக் கொண்டு நம்புகிறவர் எவராக இருந்தாலும் ஏப்ரல் முதல் தேதி மட்டுமல்ல, வாழும் அத்தனை நாட்களிலும் முட்டாள் பட்டத்தைச் சுமந்து செல்பவரேயாவார்!

மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறியதானாலும், அது மன்னிக்கப்பட முடியாத தாகும். தமிழர்களையும் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக் கக் கூடாதென்றே வேண்டிக் கொள்கிறேன் என்கிறார் பகுத்தறிவுப் பகல வன் தந்தை பெரியார் (விடுதலை 4-4-1968).

அறிவைக் கெடுக்கும் காரியத்தை நம்புபவர் யாராக இருந்தாலும், அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் முட்டாள்தானே!

சாணியைக் காட்டி சாமி என்கிறான் - அதற்குச் சலாம் போடுகிறான். கல்லைக் காட்டி கடவுள் என்கிறான் - கண்களை மூடிக்கொண்டு கும்பிடு தண்டம் போடுகிறான். மாட்டு மூத்திரத்தையும், மாட்டு மலத்தையும், பால், தயிர், வெண்ணெய், ஆகிய வற்றைக் கலந்து பார்ப்பனர் கொடுத்தால் பஞ்சகவ்யம் என்று கூறி தட்சணை கொடுத்துப் பயபக்தியோடு குடிக்கிறான் - அப்படியானால் அவன் முட்டாள் அல்லாமல் வேறு என்னவாம்? கடவுள் என்னும் ஆணிவேரை அவன் அறிவு மூலத்திலிருந்து அறவே பறித்து எறியும்வரை அவன் மூடன்தானே!

குபேரனிடம் ஏழுமலையான் கடன் வாங்கினான் - தன் கல்யாணத்திற்கு; அந்தக் கடனை அடைக்கவே பக்தர்கள் ஏழுமலையானுக்குக் காணிக்கை செலுத்துவதாகக் கூறினால், அதனையும் நம்பிக் கொண்டு போய்க் கொட்டு கிறார்களே!

இன்றைக்குக்கூட பார்ப்பனர்கள் அரசியலில் ஜெயலலிதா அம்மையாரை அரியணையில் ஏற்ற எத்தனை எத்தனையோ பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிக் கொண்டு இருக்கவில்லையா? அரசியல் முதல் ஆன்மிகம் வரை அடி முட்டாள் தனம் அன்றாடம் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஏப்ரல் முதல் நாளை மட்டும் முட்டாள்தினம் என்பது படு முட்டாள்தனமே!

--------------- மயிலாடன் அவர்கள் 1-4-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: