Search This Blog

25.4.11

ஒரு தோழரின் கடிதத்திற்கு பெரியார் ஈ.வெ.ரா பதில்

ஒரு தோழரின் கடிதத்திற்கு ஈ.வெ.ராமசாமி பதில்

தோழரின் கடிதம்:

அன்புடைய ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களுக்கு சேமம் சேமத்துக்கு எழுதுங்கள். வெகு நாளாகக் கடிதப் போக்குவரத்தில்லை. நானும் உங்களுக்குச் சில விஷயங்கள் பற்றிக் கடிதம் எழுத வேண்டும் என எண்ணி யெண்ணி முடியாது போயிற்று.

நான் சொல்ல விரும்பும் விஷயம் சிலவுண்டு. உங்கள் இயக்கம் உயர்வானது. அவ்வியக்கம் பலப்பட்டு எல்லா வகுப்பாருடைய உதவியும் பெறவேண்டுமானால் நீங்கள் தற்காலம் அனுஷ்டித்து வரும் முறை சரியல்லவென்பது எனது உண்மையான எண்ணம். உங்கள் இயக்கத்தில் எனக்கு ஆர்வமுண்டு. 10,15 வருஷ காலமாக இவ்வியக்கத்தின் கொள்கை காரணமாய் நான் இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு இயக்கத்திலும் நேர்முகமாய் கலந்து கொள்ளாது இருந்து வந்திருக்கிறேன், ஏனெனில் ஒவ்வொரு இயக்கத்திலும், சிற்சில நல்ல அம்சங்களிருக்கின்றன; பல கெட்ட அம்சங்களும் உண்டு.

சமதர்மக் கொள்கையை ருஷ்யாவில் கொண்டாடும் முறையில் இந்தியாவில் புகுத்துவது முடியாது. அவர்களது பழைய கொள்கைகளையே மாற்றிக் கொண்டு வரு கிறார்கள்.

நீங்கள் செய்து வரும் பிரச்சாரத்தில் தற்காலம் இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு இயக்கத்துடனும் சேர்ந்திருப்பது சரியல்ல. அப்பொழுது உங்கள் இயக்கம் நாளுக்கு நாள் பலஹீனப்படும்; விரோதிகளும், போலி சிநேகிதர்களும் ஏற்படுவார்கள்.

சமதர்மக் கொள்கைக்கு வேலை செய்ய முன் வருபவர்கள் யாதொரு விதமான வருமானத்தையும் எதிர்பார்த்தவர்களாயிருக்க முடியாது. ஏனெனில் இது ஏழைகளது இயக்கம்.

நமது நாட்டில் தோன்றியுள்ள காங்கிரஸ், ஜஸ்டிஸ், மற்றைய இயக்கங்கள் எல்லாம் முதலாளிகளுடையவும் நிலச்சுவான்தார்களுடையவும் இயக்கமாகும். இவ் வியக்கத்தில் ஜஸ்டிஸ் இயக்கம் ஜாதி வித்தியாசம் பாராதது என்று எண்ண முடியவில்லை. அதிலும் முதலியார், நாயக்கர் சண்டை இருக்கிறது. காங்கிரஸும் அப்படித் தான். நீங்கள் ஜஸ்டிஸ் கட்சி இயக்கத்தில் சென்னையில் சேர்ந்து பிராமணர், பிராமணர்அல்லாதார். பிரச்சினையைக் கிளப்பி பேசினீர்கள். உங்கள் கொள்கைக்கு அப்பிரச்சினையொன்றிருப்பதாக எண்ணியும் இருக்கக்கூடாது. அதைப்பற்றிப் பேசியுமிருக்கக் கூடாது. அவ்வாறு பேசியதிலிருந்து உங்கள் சமதர்மக் கொள்கையில் உங்களுக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட வில்லையென்றோ, அல்லது அதனை நீங்கள் அறியவில்லையென்றோ என்போலுள்ளவர்கள் நினைக்க வேண்டியேற்படுகிறது.

நான் இவ்விதம் எழுதுவதால் என் பேரில் வருத்த மடைய மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. இப்பொழுது காங்கிரஸ் அசெம்பிளித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டது. இவர்கள் சாதிக்கப் போவதொன்றுமில்லை. யாருக்குச் சவுகரியம் ஏற்பட வேண்டுமோ அவர்கட்கு ஏற்படப் போவதில்லை என்பது எனது முடிவு. ஏன் அது முதலாளிகளால் கறுப்பு முதலாளிகளால் வெள்ளை முதலாளிகளுக்கு விரோதமாய் ஏற்பட்ட இயக்கமாய் விட்டது. அதனைத் திருத்தியமைக்க மாட்டாமல் மகாத் மாவும் அவ்வியக்கத்தைவிட்டு கிராம புனருத்தாரணத் திட்டத்திற்கு ஆயத்தம் செய்கிறார். இவ்வியக்கத்தைக் கவனிக்கையில் உள்நாட்டு முதலாளிகளின் சவுகரியத் திற்காக ஏழைகள் உழைக்க வேண்டிய காலமும் வரும் எனத் தெரிகிறது. இவர்களினின்றும் தப்பிக்க வேண்டி மறுபடியும் ஏழைகள் போராட வேண்டிவரும்.

ஆகவே சமதர்மக் கொள்கையென்று அறியக் கூடாத முறையில் எல்லா இயக்கத்தவர்களும் நமக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் ஒரு திட்டம் செய்து வேலை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான வேலையை தமிழ் ஜில்லாக்களில் ஆரம்பிப்பது அவசியம். நீங்கள் செய்து கொண்டுவரும் முறையில் மாறுதல் செய்ய வேண்டியது அவசிய மென்பதையாவது உணர்கிறீர்களா? நான் சொல்வது தவறுதல் எனக் கண் டால் அதையாவது தெரிவியுங்கள்.
பிறபின்.

இதை அனுசரித்து இன்னும் சிலரிடமிருந்தும் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லோருமே பார்ப்பன நண்பர்கள் ஆதலால் அவற்றிற்கெல்லாம் இதோ பதில் பயன்படுமென்று எண்ணு கிறேன்.

ஈ.வெ.ரா. பதில்

அன்புள்ள தோழர் அவர்களுக்கு, வணக்கம்.

தங்கள் 24.11.1934ஆம் தேதி கடிதம் கிடைத்தது. அதைக் கவனித்துப் பார்த்தேன். அதில் எனது இயக்கத்தைப் பற்றி புகழ்ந்திருப்பது குறித்து மகிழ்கிறேன். ஆனால் அதில் நான் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்ததும் பிராமணர் அல்லாதார் என்கின்ற பிரச்சினையைக் கிளப்பினதும் தங்களுடைய சம்மதத்தைப் பெறவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் தாங்கள் சமதர்மத்தை மனப்பூர்வமாய் ஆதரிப்பவர்கள் என்றும் அதிலிருந்து தெரிகிறது.

நான் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினையை இன்று நேற்று அல்லாமல் இந்த 10 வருஷ காலமாகவே கிளப்பி விட்டு அதற்காக வேலை செய்து வருவது தாங்கள் அறிந்ததாகும்.

இந்த நாட்டில் பாமர மக்களுக்காகவோ ஏழை மக்களுக்காகவோ ஒருவன் வேலை செய்ய வேண்டுமானால், அவன் உண்மையான தொண்டனாய் இருப்பானானால், அவனுக்கு முதலில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரச்சினைதான் முன் நிற்கும். ஏனெனில் அப்பிரச்சினையைக் கிளப்பி விட்டு அதன் மீது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி உண்டாக்கச் செய்து விட்டால்தான் அத்தொண்டினது வேலை சிறிதாவது பயன்படக் கூடியதாகும்.

மற்றும் பாமர மக்களின் குறைவு என்ன? அவர்களது தேவை என்ன? என்பதை ஒருவன் ஜாதி மத செல்வ அபிமானம் இல்லாமல் பார்ப்பானேயானால் அவனுடைய நேர்மையான நாட்டம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். ஒரு சமயம் நான் பார்ப்பனரல்லாதாராய் இருக்கின்றேன் என்பதினால் எனக்கு இந்த அபிப்பிராயம் தோன்றிற்றோ என்பது சம்சயத்துக்கு இடமுண்டாகக் கூடியதாய் இருந்தாலும் இருக்கலாம்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இன்றைய தினம் பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆட்களைப் பொறுத்ததோ அல்லது பார்ப்பனர் அல்லாதார் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆட்களையும் பொறுத் ததோ அல்ல என்பதையும், ஆனால் அது இன்று ஒரு பார்ப்பனன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளுகின்றவன் அவன் உணர்ச்சியில், ஒழுக்கத்தில் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் அதற்காக கவலைப்படாமல் தனக்கு என்ன என்ன உரிமை எதிர்ப்பார்க்கிறான் - என்ன என்ன உரிமை அனுபவிக்கிறான் என்பதையும், அதே மாதிரியாகவே தன்னை ஒரு பார்ப்பனரல்லாதான் என்று கருதிக் கொண்டிருப்பவனோ சொல்லப்படுகின்றவனோ ஆன ஒருவன், தனக்கு என்ன உரிமை உண்டு என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதோடு, வாழ்க்கையில் என்ன உரிமை அனுபவிக்கிறான் என்பதையும் மற்றும் பார்ப்பனன் என்று தன்னை சொல்லிக் கொள்பவனால் அல்லாதவனுக்கு என்ன என்ன உரிமை - நிலைமை உண்டு என்று எழுதி வைத்த ஆதாரத்தையும், அமலில் இருக்கும் அனுபவத்தையும் பொறுத்ததே ஒழிய வேறில்லை என்பதை தங்கள் ஞாபகத்துக்குக் கொண்டுவர நான் பணிவாய் ஆசைப்படுகின்றேன்.

ஆதலால் நான் பார்ப்பனர் - அல்லாதார் பிரச்சினையில் எனது காலத்தைச் செலவழிப்பது குற்றம் என்று என்னால் கருதமுடியவில்லை.

ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாய் இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனைத் தனக்குச் சமமாகவும், மற்றொரு மனி தனுக்குத்தான் சமமானவனென்றும் கருதும்படியான ஒரு உணர்ச்சியைக் கொள்ளவில்லையானால் அல்லது கொள்ளும்படி செய்யவில்லையானால் சமதர்மத்தைப்பற்றி பேசும் பேச்சு எதற்கு என்பதும், அதற்காகப் பாடுபடுவது எதற்கு என்பதும் என் சிறிய புத்திக்கு விளங்கவில்லை.

ஜஸ்டிஸ் கட்சியிலிருப்பவர்கள் அயோக்கியர்களாக இருக்கலாம். காங்கிரசில் இருப்பவர்கள் யோக்கியர் களாக இருக்கலாம்.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகள் மனித சமுகத்தின் சமுதாய வாழ்க்கையைப் பொருத்தவரையிலும் சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனரல்லா தார் உரிமை என்பதை ஆதரிக்கின்றது என்பதும், அந்தப்படி ஆதரிக்கவில்லை என்றாலும் எதிர்க்கவில்லை என்பதும் எனது அபிப்பிராயம்.

அதுபோலவே காங்கிரஸைப் பற்றியும், அதன் கொள்கைகள் மனித சமுகத்தைப் பொருத்தவரையிலும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே முதலாளிகளு டையவும், நிலச்சுவான்களுடையவும் நன்மைக்கு ஏற்பட்டது என்பதோடு பார்ப்பனியத்துக்கும் (அதாவது நான் எந்தப் பார்ப்பனியம் என்று மேலே சொன்னேனோ அதற்கும்) முழு ஆதரவும் பலத்தையும் கொடுத்து வருகின்றது - அதற்கு ஆகவே பெரிதும் பாடுபடுகின்றது என்பதும் எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

மேலும் தாங்கள் குறிப்பிட்டதுபோல் நான் சமதர்மக் கொள்கையை அறியாதவனாக இருந்தாலும் இருக்கலாம் அல்லது அறிந்திருந்தாலும் அதில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும் இருக்கலாம்.

ஆனால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயங்களில் உள்ள குறைகளும் ஏற்பட வேண்டிய மாறுதலும் என்ன என்று நான் கருதிக் கொண்டிருக்கின்றேனோ அவற்றில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு அவ்வெண்ணம் நாளுக்கு நாள் பலப்பட்டும் வருகின்றது.

நிற்க, மற்றொரு விஷயம். ஏழை பணக்காரன் என்பதில் தாங்கள் கொண்டுள்ள கருத்துக்கும் நான் கொண்டுள்ள கருத்துக்கும் வித்தியாசமிருக்கும்போல் தோன்றுகின்றது. இந்தியாவில் ஏழை பணக்காரத்தன்மை ஜாதியைப் பொருத்தே அநேகமாய் 100-க்கு 95 பங்காய் இருந்து வருகின்றது.

பணக்காரன் ஏழை என்பது இந்தியாவில் பெரிதும் பிறவியினால் ஏற்பட்ட ஜாதியினாலேயே ஏற்பட்டிருக்கிறது.

பணக்காரன் ஏழை என்பதற்கு நான் கொண்டிருக்கும் அருத்தம் பாடுபடாமல் சரீரத்தால் உழைக்காமல் வாழ்கின்றவன் பணக்காரன் என்றும் அதாவது சரீரத்தினால் உழைப்பது பாவம் அல்லது தோஷம் என்ற எந்த எந்த ஜாதியானுக்கு உரிமை இருக்கின்றதோ அவனெல்லாம் செல்வவான் கூட்டத்தில் சேர்ந்தவன் என்றும், எவனெவன் உழைக்கக் கட்டுப்பட்டவன் என்றும் மற்றவனுக்கு உழைத்துப் போடவேண்டியவன் என்றும் உரிமையோடும்! இருக்கிறானோ அவனையும் எவனெவன் உழைத்துக் கஷ்டப்பட்டும் போதிய சுகமில்லாமல் இருக்கிறானோ அவனையும் ஏழை என்றும் நான் கருதிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த விஷயத்தை வாக்கு சாமர்த்தியத்தாலும் அல்லது இதைவிட முக்கியமானது வேறு ஒரு காரியம் என்று காட்டுவதாலும் எதிர்க்கலாம் என்றாலும் இதை மாற்ற வேண்டியதே பிரதானம் என்றும், சமதர்மத்தில் இதுவும் ஒரு கடுகளவாவது சேர்ந்ததாய் இருக்கலாம் என்றும் நான் கருதுகின்றேன்.

அதோடு ருஷியாவில் இருக்கிற மாதிரியான சமதர்மக் கொள்கையை இங்கும் புகுத்தவேண்டும் என்பது எனது கருத்தல்ல என்பதோடு அது சரியா-தப்பா என்பதைப் பற்றியும் நான் இப்போது வாதம் செய்யவும் விரும்பவில்லை.

ஆதலால் நமது பிரச்சினைகளில் ருஷியாவை மறந்துவிட்டு நம் கண்ணெதிரில் நமது அனுபவத்தில் உள்ள விஷயங்களையும் நமது புத்திக்கு சரி என்று தோன்றும் விஷயங்களையும் பற்றியே பேசுவோம் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள முதலியார், நாயக்கர் சண்டை ஜாதியைப் பொருத்தல்ல. ஆனால், உத்தியோகங்களுக்குப் பெரிய சம்பளமும் கவுரவமும் இருப்பதால் அதைப் பெறு வதற்கான முயற்சிகள் நாயக்கர், முதலியார், செட்டியாராக இருந்து வருகின்றதே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களைப் பார்த்து அவர்களைப் பின்பற்றுகின்றது என்கின்ற முறையில் ஏதாவது சிறிது உயர்வு, தாழ்வு கொண்டாடும் உணர்ச்சி இருந்தாலும் இருக்கலாம் என்றாலும் அதை வெளிப்படையாய்க் கவனிக்க வேண்டிய அளவு நான் காணமுடியவில்லை. ஆதலால் அதைப்பற்றி நான் கஷ்டப்படவில்லை. ஏனெனல் உத்தியோக சம்பளம் குறைந்து அதற்கு சரியான பொறுப்பும் நிர்ணயமும் ஏற்படும்போது இந்தச் சண்டைகள் மறைந்துவிடும் என்பது உறுதி மற்ற பெயர்களுடன் இருக்கும் அரசியல் கட்சிகளும் மறைந்துவிடும். ஆனால் பிறவிப் பெருமைக்காகவும் உரிமைக்காகவும் இருந்துவரும் சண்டைகள் அப்பெருமையும் உரிமையும் ஒழிந்தாலல்லாது ஒரு நாளும் மறைந்துவிடாது என்றே கருதுகின்றேன்.

அசம்பிளி தேர்தல் விஷயத்தைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான் என்றாலும் இந்த வெற்றி காந்தியாருக்கு மிக மிக ஆனந்தமாய் விட்டது.

நிற்க, காங்கிரஸின் போக்கையோ கொள்கையையோ திருத்தி அமைக்கமாட்டாமல் மகாத்மாவும் அதை விட்டுவிலகி விட்டார் என்றும் அவர் கிராமப்புனருத்தாரண வேலைக்குப் போயிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர் கள். அவர் காங்கிரஸ்சிலிருந்தாலும் சரி கிராமப்புனருத் தாரணத்தில் இருந்தாலும் சரி அவர் ஜீவன் உள்ளவரையில் பார்ப்பனர்களுக்கோ மற்றும் வெள்ளை அல்லது கருப்பு முதலாளிகளுக்கோ இரும்புக்கூடு போன்ற காவலாளியாய் இருப்பாரே ஒழிய மற்றபடி அவரால் ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படப் போவதில்லை. அவரது கிராமப் புனருத்தாரணம் என்பது வருணாசிரமப் புனருத்தாரணம் தான் என்பதைத் தயவு செய்து ஞாபகத்தில் வைத்து பலனைக் கவனித்து வரும்படி கோருகிறேன்.

கிராமப் புனருத்தாரணத்தின் பேரால் அவர் செய்யப்போவதாய் வெளிப்படுத்தி இருக்கும் திட்டங்கள் ஏழை மக்களுக்கும் இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன பலனைக் கொடுக்கக்கூடும் என்பது எனக்கு விளங்குவது போலவே தங்களுக்கும் விளங்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

முடிவாக தாங்கள் குறிப்பிட்டபடி நான் செய்து கொண்டு வரும்வேலை முறையில் மாறுதல் செய்யவேண் டும் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். லட்சியத்தில் மாறுதலில்லாமல் வேலை முறையில் அடிக்கடி மாறுதல் செய்ய வேண்டியதும் செய்து வருவதும் குற்றமாகாது. லட்சியம்கூட சில சமயங்களில் திருத்தவேண்டிய அவசியத்துக்கு உட்பட்டு விடுகின்றதும் உண்டு. ஆனாலும் இப்போதைக்கு லட்சியத்தை மாற்றவேண்டிய அவசியமிருப்பதாகத் தோன்றவில்லை. முறைகளில் தாங்கள் எழுதியபடியே கூடிய சீக்கிரம் மற்ற தோழர்கள் பலரையும் கலந்து ஏதாவது மாறுதல் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

எப்படி இருந்தாலும் காயம் அசைவில் இருக்கும்வரை ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டுமல்லவா? அந்த வேலையானது மற்றொருவருக்கு அடிமைப்பட்டதாகவோ அல்லது மற்றொருவருடைய அபிப்பிராயத்துக்கு அடிமைப் பட்டதாகவோ இல்லாமல் கூடியவரை தன் தன் புத்திக்கு சரியென்று தோன்றிய லட்சியத்துடன் நடந்து செல்ல வேண்டியதைத்தான் நான் சுயமரியாதையோடு கூடிய வாழ்வு என்று கருதி இருக்கிறேன். ஆதலால் நான் எனது உண்மை அபிப்பிராயங்களை தங்களுக்குத் தெரிவித்திருக் கின்றேன் என்ற அளவிலாவது தாங்கள் நம்பிக்கை வைப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

-------------- பகுத்தறிவு - 9-12-1934

0 comments: