Search This Blog

17.4.11

அன்னா ஹசாரே பட்டினிப் போரின் அரசியல் பின்னணி! - கி.வீரமணி

ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சினையல்ல!
சமூகப் பிரச்சினை! சமூகத்தின் வேரைத் தேடிச் சென்று
வேரோடும், வேரடி மண்ணோடும் களைய வேண்டும்
உண்ணாவிரதம் என்பது அச்சுறுத்திப் பணிய வைக்கும் முறையே!

ஊழலை ஒழிக்கப் போவதாக உண்ணா விரதம் இருந்தவர்களின் பின்னணி குறித்தும், ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஊழல் ஒழிப்பு என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அதை ஒழிக்க சிலர் திடீரென்று அவதாரம் எடுத்து, மலிவான விளம்பரம் தேடு வதும், அதன் மூலம் இந்தியாவின் அடுத்த மகாத்மாக்களாகவும் தங்களை உயர்த்திக் கொண்டு, விளம்பர வெளிச்சத்தில் தினமும் குளித்துக் கொண் டிருக்கவும் ஆன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைக் காண வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது!

உண்ணாவிரதம் பற்றி தந்தை பெரியார்

தந்தை பெரியார் மிகப் பெரிய தொலை நோக்காளர்; புது உலகின் மகத்தான சிந்தனையாளர் என்று யுனெஸ்கோ மாமன்றம் அடையாளம் காட்டி விருது வழங்கியது எவ்வளவு பொருத்தமானது என்பதை இப்போது அல்லது இனிவரும் நாள்களில் உலகம் உணர்ந்து கொள்ளும். காந்தியார் பட்டினிப் போராட்டம் - உண்ணாவிரதம் - சாகும்வரை உண்ணாவிரதம் என்றெல்லாம் இறங்கிய அக்காலத்திலேயே பெரியார் ஒருவர்தான், இது பயமுறுத்திப் பணிய வைக்கும் விரும்பத்தகாத தவறான முறை (Coercive and Blackmailing) என்று துணிந்து கூறி அதனை வன்மையாகக் கண்டித்ததோடு, அம்முறை மூலம் வருங்காலத்தில் பொது ஒழுக்கக் கேடு வளர அடிகோலி வழிகாட்டியதாகும் என்று கூறியிருக் கிறார். பலரும் அய்யாமீது பாய்ந்தனர்; அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.

பட்டினிப் போர் தொடங்கிய திடீர் தலைவர்கள்!

திடீரென்று அன்னா ஹசாரே என்ற மராட்டிய சமூகப் போராளி - ஒருவர் ஊழலை ஒழிக்கத் தயாராகும் சட்டம் ஒன்றை விரைந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்; ஏற்கெனவே கொண்டு வந்து கிடப்பில் போடப்பட்டதை இப்போது விரைந்து - ஊழலில் யாரையும் விலக்கிடாமல் தண்டிக்கும் வண்ணம் சக்தி வாய்ந்த விதி முறைகளை உள்ளடக்கிய சட்டமாக அதன் வரைவு (Draft Bill) மசோதா அமைந்து, சட்டமாக வரும் குளிர்கால கூட்டத் தொடரில் விரைந்து நிறை வேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புது டில்லிக்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து பட்டினிப் போர் தொடங்கினார்.

பட்டினிப் போரின் அரசியல் பின்னணி!

ஊடகங்கள் அபார விளம்பரம் தந்தன. முக்கியமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடையிலே கவிழ்க்க விரும்பும் திட்டத்திற்கு ஒரு முன்னோடியாக - அல்லது இடையில் அது கவிழ்ந்து திடீர்த் தேர்தல் வந்தால், பி.ஜே.பி. போன்ற ஆட்சி வாய்ப்பு இழந்த கட்சிகளுக்கு இது தீனியாகப் பயன்படும் என்ற உள்நோக்கத்தோடு, கோழி திருடியவனும் கும்பலில் சேர்ந்து கூச்சல் போடுகிறான் எனும் கிராமியப் பழமொழிக்கேற்ப, ஊழலில் தினம் தினம் குளித்து எழுவது கர்நாடக பி.ஜே.பி. அரசு; பி.ஜே.பி. ஆதரவு டிரஸ்ட்டுக்கு அரசு பணத்தை அள்ளிக் கொடுத்த அக்கிர மத்திற்காக உச்சநீதிமன்றத்தால் குட்டுவாங்கப்பட்ட அரசு, ஏற்கெனவே அவர்கள் கட்சித் தலைவர் பங்காருகள் டெகல்கா படம் மூலம் ரூபாய் நோட்டு களை வாங்கி வைப்பதை படம் பிடித்துக் காட்டியதை யெல்லாம் மறைத்து விட்டு, ஊழல் ஒழிப்புக் கோரசில் தங்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.

4 நாள் உண்ணாவிரதத்துக்குச் செலவு ரூ.50 லட்சமா?

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் ஒரு பிரச்சினையைச் சரியாக எழுப்பியுள்ளார்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மட்டும் ரூ.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி செய்தவர்கள் யார்? யார்? இதற்காக ரூ.82 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 4 நாள் உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா?

4 நாள் உண்ணாவிரதத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ள அவர் எப்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு குறிப்பிட்ட தொகைதான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லலாம்? - என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார். இதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருக்கின்றனர் என்பதும், ஆர்.எஸ்.எஸ். சார்புடைய வர்கள் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறதே!

லஞ்சம் மட்டும்தான் ஊழலா?

அன்னா ஹசாரே என்பவர் நரேந்திரமோடியை வானளாவப் புகழ்கிறார். ஊழல் என்பது வெறும் லஞ்சம் மாத்திரம்தானா? உச்சநீதிமன்றத்தில் பொய் வழக்குகள் - புனை வழக்குகள் போடப்பட்டதற்கான கண்டனத்திற்கு ஆளானால் அது அப்பட்டியலில் வராதோ? நீரோ மன்னன் என்று மோடி உச்சநீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்படவில்லையா?

இந்த லட்சணத்தில் ஊழல் ஒழிப்புக்கு ஜெயலலிதா அம்மையாரும் கோஷ்டி கானத்தில் கலந்து குரல் கொடுப்பதுதான் வேடிக்கை!

அரசியல் கட்சி நடத்தும் எந்தத் தலைவரும் தேர்தல் நிதி வசூலிக்காமல் (பல வழிகளில்) தேர்தல்களில் ஈடுபடுவது - தத்தம் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவது நடைமுறை சாத்தியம்தானா? மனசாட்சியோடு பேசினால் ஊழல் என்பதை சுவாசிக்காமல் (இன்றைய தேர்தல் முறை - செலவு கணக்கு காட்டும் முறை) எவராவது - அவர் எக்கட்சி யினராயினும் - உண்டா? ஊழலின் ஊற்று இங்கேயே இருக்கிறதே!

ஊழல் ஒழிப்புத் தேவைதான்! அதற்கு இப்படி விளம்பர ஸ்டண்ட் அடிப்பது, அதைக் காட்டி அச்சுறுத்தி ஒரு பதவி பெறுவது, அடுத்த ஜூனியர் தேசப் பிதா(?)வாக அவதாரம் தரிப்பது என்பதெல்லாம் சரியானது தானா?

நியாயமாக அவர் பதவியேற்று இருக்கலாமா? அரசியல் சட்டப்படி நாடாளுமன்றத்தின் பணியை - நீதித்துறையின் பணியை, சட்ட முறைக்கு எதிராக தாங்களே ஒரு கும்பல் கூடி குறுக்கு வழியில் நவீன ஊழல் ஒழிப்பு நாயகர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வது தவறு அல்லவா?

இதனை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பிரபல பத்திரிகையாளர் பி.ஜி. வர்கீஸ் அவர்கள் நேற்று (16.4.2011) எழுதிய சிந்திக்கத் தூண்டும் கட்டுரையில் பல்வேறு கோணங்களில் நம் நாட்டு கிரிக்கெட் ஊழல் - சீரழிவு உட்பட பலவற்றைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்! (அதன் மொழியாக்கம் 2ஆம் பக்கம் காண்க.)

திருமதி ஷர்மிளா தாகூர் அவர்களும் இதே கருத்தினை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

உண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா?

இப்படி ஒருவர் திடீரென்று சாகும் வரை உண்ணாவிரதம் என்றவுடன் அரசு பணிந்து, அவர்கள் கேட்ட வரத்தை உடனே கொடுத்து விடுவது தவறான முன்மாதிரி அல்லவா? இது நாட்டை நாளைக்கு எங்கே இழுத்துச் செல்லும்?

தடி எடுத்து மிரட்டுபவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் என்ற நிலைக்கு அல்லவா கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்று கேட்டிருக்கிறார் - அப்பேட்டியில்.

தந்தை பெரியாரின் தீர்க்கதரிசனம் எவ் வளவு சரியானது என்பதை இன்று நடுநிலை யாளர்கள் பேசத் தொடங்கி, அவரது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதைக் காண முடிகிறது.

ஊழலின் ஊற்றுக் கண்கள் எவை, எவை?

ஊழல் ஒழிப்பு என்பது வெறும் சட்டப் பிரச் சினைதானா? அல்ல, அது ஒரு சமூகப் பிரச்சினை; வேரைத் தேடிச் சென்று வேரோடும் வேரடி மண்ணோடும் அதனைக் களைய முன்வர வேண்டும்.

(1) தேர்தல் முறைகளில் அடிப்படை மாற்றம் - பல விதிமுறைகளில் மாற்றம்.

(2) போலீஸ் - கிரிமினல் - சட்ட நடவடிக்கை களில் திருத்தம்.

(3) நீதித்துறையில் தாமதம் - ஏழைகளால் வழக்கு மன்றத்திற்கே போக முடியாத சூழ்நிலை - இவை எல்லாம் மாற்றப்படல் வேண்டும்.

(4) குடியரசுத் தலைவரின் சம்பளமே 10 ஆயிரம் என்ற விதி இப்போது காணாமற்போயிற்றே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் முதல், பலூன் போல ஊதிய உச்சவரம்பற்ற சம்பளம் (தனியார்துறை உட்பட) இவைகளில் துணிந்து கை வைத்து மாற்றம் செய்தால் ஒழிய ஊழலை ஒழித்துக் கட்டவே முடியாது!

இப்போது வரப் போகும் சட்டம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் தன்மையைப் போன்றது தான்.

பனிப்பாறையின் முனையைக் (Tip of the Ice berg) கண்டே எல்லாம் முடிந்து விடும் என்று கருதி ஏமாறக் கூடாது; பனிப் பாறைகளை உடைக்கும் சப்மெரின்களாக சட்டங்களும், சமுதாய விழிப்புணர்வுகளும் தேவை!

ஊழல்பற்றி பேசும் பலரில் எத்தனைப் பேர் தங்கள் உண்மை வருமானத்தின்படி வருமான வரி செலுத்தும் உத்தமர்கள் என்பதை அவர்களையே கேட்டுக் கொண்டால் மிஞ்சுபவர் எவர்? எத்தனை பேர்? ஓட்டுக்குப் பணம் வாங்கிட மறுப்பவர்கள் எத்தனை பேர்?

ஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடு, பகுத்தறிவுடன் நோய் நாடி நோய் முதல் நாடினால் ஒழிய அது ஒழியாது!

--------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம்


ஊழலின் ஊற்றுக் கண்கள் எவை, எவை?

ஊழல் ஒழிப்பு என்பது வெறும் சட்டப் பிரச்சினைதானா? அல்ல, அது ஒரு சமூகப் பிரச்சினை; வேரைத் தேடிச் சென்று வேரோடும் வேரடி மண்ணோடும் அதனைக் களைய முன்வர வேண்டும்.

(1) தேர்தல் முறைகளில் அடிப்படை மாற்றம் - பல விதிமுறைகளில் மாற்றம்.

(2) போலீஸ் - கிரிமினல் - சட்ட நடவடிக்கைகளில் திருத்தம்.

(3) நீதித்துறையில் தாமதம் - ஏழைகளால் வழக்கு மன்றத்திற்கே போக முடியாத சூழ்நிலை - இவை எல்லாம் மாற்றப்படல் வேண்டும்.

(4) குடியரசுத் தலைவரின் சம்பளமே 10 ஆயிரம் என்ற விதி இப்போது காணாமற்போயிற்றே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் முதல், பலூன் போல ஊதிய உச்சவரம்பற்ற சம்பளம் (தனியார்துறை உட்பட) இவைகளில் துணிந்து கை வைத்து மாற்றம் செய்தால் ஒழிய ஊழலை ஒழித்துக்கட்டவே முடியாது!

இப்போது வரப் போகும் சட்டம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் தன்மையைப் போன்றதுதான்.

பனிப்பாறையின் முனையைக் (Tip of the Ice berg) கண்டே எல்லாம் முடிந்து விடும் என்று கருதி ஏமாறக் கூடாது; பனிப் பாறைகளை உடைக்கும் சப்மெரின்களாக சட்டங்களும், சமுதாய விழிப்புணர்வுகளும் தேவை!

ஊழல்பற்றி பேசும் பலரில் எத்தனைப் பேர் தங்கள் உண்மை வருமானத்தின்படி வருமான வரி செலுத்தும் உத்தமர்கள் என்பதை அவர்களையே கேட்டுக் கொண்டால் மிஞ்சுபவர் எவர்? எத்தனைப் பேர்? ஓட்டுக்குப் பணம் வாங்கிட மறுப்பவர்கள் எத்தனை பேர்?

-------------------"விடுதலை” 17-4-2011

------------------------------------------------------------------------------------------------

உண்ணாவிரதம் என்னும் பிளாக் மெயில்!

அன்னா ஹசாரி ஒரு நல்ல மனிதர்; தான் ஏமாற்றப் பட்டதாகக் அவர் கருதுவதற்கு காரணமும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் முதன் முதலாக 44 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட மசோதாவுக்குப் பிறகு, பயன்தரும் லோக்பால் அமைப்பையோ அல்லது லஞ்ச ஊழலுக்கு எதிரான வேறு பயனுள்ள நடைமுறையையோ உருவாக்குவதில் நேர்ந்த எல்லையற்ற, மன்னிக்க முடியாத காலதாமதம் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வெறுப்படைந்தது போல அவரும் வெறுப்படைந்திருந்தார்.

காவல்துறை சீர்திருத்தங்கள், அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்ற நடைமுறையில் மத்திய புலனாய்வுத் துறையைத் தவறாகப் பயன்படுத்த இயலாத அளவுக்கு தானாகச் சுதந்திரமாகச் செயல்படுவதற்கும், எவர் மீதும் குற்றச்சாற்று பிறப்பிக்கவுமான அதிகாரத்தை அதற்கு அளித்தல் போன்று அல்லாமல், லோக்பால் அமைப்பை உருவாக் குவதற்கான அரசியல் உறுதி எந்த அரசியல் வாதிக்கும் இல்லாததால் அது இதுகாறும் உருவாக் கப்படாமலேயே உள்ளது. ஆட்சியில் இருக்கும் போது இத்தகைய சீர்திருத்தங்களைச் செய்வதை எந்தக் கட்சியுமே விரும்புவதில்லை. ஆனால், அவர்களே ஆட்சியை விட்டு வெளியே வந்துவிட்டால், சிங்கம் போல் கர்ஜனை செய்வர்.

என்றாலும், மற்றவர்களுடன் டில்லியில் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியதன் மூலம் அன்னா ஹசாரி தனது நோக்கத்தின் மீதான பொது மக்களின் மதிப்பைக் குறைத்துக் கொண்டார். ஜனநாயக முறையிலான தேர்தலின் மூலம் நீக்கப்பட இயன்ற பொது ஜன ஆதரவு பெற்ற நம் நாட்டு அரசை, (அந்நிய ஆட்சியை எதிர்த்து அல்ல) எதிர்த்து நடத்தப்பட்ட இந்தப் பட்டினிப் போராட்டத்தில் காந்தியின் பெயரை இழுத்தது முற்றிலும் பொருத்த மற்றதாக இருந்தது. சாகும்வரை பட்டினிப் போராட்டம் என்பது நிர்பந்தத்தை ஏற்படுத்தும், ஜனநாயக விரோதமான செயலாகவும், நாடாளு மன்ற ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்து வதாகவும், இழிவு படுத்துவதாகவும், உணர்வு பூர்வமாக பிளாக்மெயில் செய்யும் செயலாகவுமே கருதப்பட இயலும். ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் புகழ் பெற்ற குற்றவாளியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பப்பு யாதவ் பிகார் சிறைச்சாலையில், ஹசாரியின் கோரிக்கையை ஆதரித்து சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது பெரிய வேடிக்கையாகும். ஒரு புதிய மாநிலம் அமைப்பது, ஒரு அரசு ஊழியரைப் பணிநீக்கம் செய்வது, ஒரு திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்துவது என்பது போன்ற, பாராட்டப்படத்தக்க நோக்கமோ கொள்கையோ இல்லாத அனைத்து விதமான கோரிக் கைகளுக்காகவும், உரிய நடைமுறைகளைப் பின்பற்ற முயலாமல், சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத் தில் பல மக்களும் ஈடுபட்டுள்ளனர். உரிய நடை முறையில் நிவாரணம் பெறுவது என்பது சில நேரங்களில் மிகவும் சோதனை அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் விரைவில் புகழுடன் நிவாரணத் தையும் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் கைவிட்டு விடுவது, மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி, அராஜகத் துக்கும், ஆதரவு மற்றும் எதிர்ப்பு வன்முறைகளுக்கும் வழிவிடும். தெருக்களில் சமத்துவம் என்ற ராம் மனோகர் லோகியாவின் போராட்டத்தில் கும்பல்கள் நடத்திய வன்முறை நிகழ்வுகள் இந்த உண்மையை நினைவூட்டு கின்றன. ஜனநாயக முறைக்கு எதிரானது

ஹசாரியின் வெறுப்பு பரவலாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தனது கோரிக்கைகளை அளவுக்கு அதிகமாகவே வைத்துவிட்டார். தற்போதுள்ள லோக்பால் மசோதா அதிகப்படியான அளவுக்கு முன் எச்சரிக்கையைக் கொண்டதாக இருக்கிறது என்றாலும், அதற்கு மாற்றாகக் கூறப்படும் ஜன் லோக்பால் வரைவு மசோதா ஒன்றும் குறைகளே அற்றதாக இருப்பதல்ல. பட்டினிப் போராட்டம் தொடங்கப்படும் முன், லோக்பால் மசோதாவுக்கு உள்ள ஆட்சேபனைகளைப் பற்றி தெரிவிக்கலாம் என்று அரசால் கேட்கப்பட்டது. ஆக்கபூர்வமான விமர்சகர்கள் பயன் நிறைந்த முறையில் பங்கேற்றுச் செயல்பட்டிருக்க வேண்டிய இடமும், நேரமும் இதுதான். தான் விரும்பும் நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக ஹசாரி பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டார். அவர் விரும்பிய நடைமுறை என்ன தெரியுமா? சம எண்ணிக்கையிலான அரசு அலுவலர்களையும், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக உறுப்பினர்களையும் கொண்ட ஒரு வரைவுக் குழு உருவாக்கப் படவேண்டும். அதற்கு சம அதிகாரம் கொண்ட இரு தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையை அரசு (நாடாளுமன்றம் என்று மறைமுகமாகக் குறிப்பிடுவது) கட்டாயமாக ஏற்கவேண்டும். அரசு அல்லது அரசாட்சி என்பதைப் பற்றி சிறிதளவு கூட புரிதலற்ற, மரியாதை காட்டப் படாத, எவருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிராத, தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட தனிப்பட்டவர்கள் அறிவிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கை ஏற்க இயலாத, செயல்படுத்த முடியாத ஒன்றாகும். ஹசாரியின் போராட்டத்துக்கு தனது வழவழவென்ற ஆதரவை தனக்கே உரித்தான குறுக்கு புத்தியுடன் அளிக்க பா.ஜ.க. விரைந்து முன்வந்தது. கர்நாடக மாநிலத்தில் சுரங்கங்கள் மற்றும் நிலக் கொள்ளைக் கும்பலின் செயல்பாடுகளை விரைந்து நெருக்கமாக விசாரணை செய்த மரியாதைக், குரிய லோகாயுக்தா அமைப்பை செயலிழக்கச் செய்து, தந்திரம் செய்து, தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய அதே பா.ஜ.கட்சிதான் இப்போது ஹசாரிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது.

ஒரு நானூறு பேருடன் நான்கு நாட்கள் பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டதற்குப் பின், முன்பே அளிக்கப்பட்ட, ஆனால் தற்போதுதான் அரசு கெஜட்டில் அறிவிக்கப்பட்ட சமரசத் திட்டத்தை புத்திசாலித்தனமாக ஹசாரி ஏற்றுக் கொண்டார். 10 உறுப்பினர் கொண்ட ஒரு கூட்டு வரைவுக் குழுவை நியமிப்பது என்றும், அதில் அய்ந்து பேர்களை ஹசாரி நியமிப்பது என்றும், பிரணாப் முகர்ஜியை தலைவராகவும், நாகரிக சமூகத்தின் பிரதிநிதியாக சாந்தி பூஷனை இணைத் தலைவராகவும் நியமிப்பது என்றும் அரசு அளித்த திட்டத்தை ஹசாரி ஏற்றுக் கொண்டார். இக் குழுவினரிடையே கருத் தொற்றுமை ஏற்பட்டால், ஜூன் மாத இறுதியில் குழு தனது அறிக்கையை அளிக்கும்; மழைகால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அதனை சட்டமாக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும். நாடாளுமன்றம் இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலிப்பதையோ, திருத்தங்களை செய்வதையோ இது தடை செய்யாது. நாகரிக சமூகம் உதவிதான் செய்ய முடியுமே தவிர, அரசையும், நாடாளுமன்றத்தையும் மீறி அதனால் அதிகாரம் செய்ய முடியாது. கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், தனது போராட்டத்தை மீண்டும் தொடரப்போவதாக ஹசாரி அச்சுறுத்தியுள்ளார்.

பட்டினிப் போராட்டம் சரியான வன்முறையா?

ஆட்களைக் கடத்திச் சென்று பணயப் பணம் கேட்பதை நாம் வெறுக்கிறோம். ஆனால், சாகும் வரை பட்டினிப் போராட்டம் என்பதும் வேறு வழியில் செய்யப்படும் அதே கடத்தல் போன்ற வேலைதான் என்பதை நம்மில் எவரும் நின்று சிந்தித்துப் பார்ப்ப தில்லை. சரியான முடிவுகளை அடையவேண்டும் என்றால் சரியான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த மசோதாவைத் தயாரித்து சட்டமாக்கும் நடைமுறை தற்போது ஹசாரியால் உருவாக்கப்பட்டுள்ள பொது மக்களின் கருத்து என்னும் அழுத்தத்தையும் ஏற்றுக் கொண்டு தொடங்கும் என்று நம்புவோம். இதன் விளைவு ஆக்கபூர்வமானதாகவும், ஜனநாயக முறைப்படி யானதாகவும் இருக்கும்; இருக்க வேண்டும். தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நடைமுறையைச் சீரழிக்கும் சுயநலவாதிகளின் காரணமாக இந்த முயற்சி கைமீறிப் போய்விட அனுமதிக்கக்கூடாது. வேகமான சில அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாலும், பல்வேறுபட்ட கடவுள் மனிதர்களும் மற்றவர்களும் தலைமையையும் புகழையும் பெற தங்களின் பலத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாலும், இந்த எச்சரிக்கை தேவையானதே. தவறான வழிகளில் பணம் ஈட்டும் அரசியல்வாதிகளை விமர்சிப்பது சட்டப்படி சரியானதே. ஆனால் அனைத்து அரசியல்வாதிகளையும் இழிவுபடுத்துவது நியாயமல்ல. அரசியல்வாதிகள் இல்லாமல் அரசியல் என்பதோ, அரசியல் நடைமுறை என்பதோ கிடையாது. சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும். அரசியல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை நாம் ஏற்படுத்துவது அவசியமானதாகும். அதே போல் காவல்துறை மற்றும் நீதித்துறை நடைமுறைகளையும் சீர்திருத்தி, பொதுவாழ்க்கையில் தூய்மையை உறுதிப்படுத் தும் வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நிருவாக இயந்திரத்தை உருவாக்குவதும் அவசியமானதே. இந்த விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிரம்ப இருக்கின்றன. தனது செயல்பாடுகளின் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அரசு அறிந்திருப்ப தாகவே நம்புகிறோம்.

தாழ்த்தப்பட்ட அதிகாரிக்குச் செய்யப்பட்ட அவமானம்!

தேசத்தின் கவனம் முழுவதும் ஜந்திர் மந்திர் மீது குவிந்திருந்த போது, கேரள மாநிலத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு தாழ்த்தப்பட்ட அதிகாரியின் அலுவலகம், மேசை, நாற்காலி போன்ற தட்டுமுட்டுச் சாமான்கள், அவர் பயன்படுத்திய வாகனம் ஆகிய அனைத்தும் மாட்டு சாணம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு பாரம்பரிய முறையில் புனிதமாக ஆக்கப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய இழிவுகள் சட்ட விரோதமானவை; அரசமைப்புச் சட்ட விரோதமானவை. இதனைப் பற்றியும், இதனைப் போன்ற மிகப் பல தவறுகளைப் பற்றியும் நமது நாகரிக சமூகம் என்ன செய்ய உத்தேசித்துள்ளது? லஞ்சம் போன்ற மனிதத் தன்மைக்கு எதிரான ஜாதி ஒடுக்குமுறை வேரோடு அழிக்கப்பட வேண்டியதாகும். நாகரிக சமூகத்தின் உதவியுடன் அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய இன்னும் பல நூறு விஷயங்கள் உள்ளன.

இவ்வாறு கூறுவது லஞ்ச ஊழலில் இருந்து கவனத் தைத் திசை திருப்பும் முயற்சியல்ல. ஆனால், சமூகத்தில் சம நிலையையும், சமநிலைக் கண்ணோட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவதே யாகும். இந்தியா நாள்தோறும் மாறிக் கொண்டிருக் கிறது. நம் முன் உள்ள தடைகளை, இடையூறுகளை வென்று, தாண்டி நாம் முன்னேறுவோம்.

கிரிக்கெட் என்பது போரா?

கிரிக்கெட் போட்டிகள் பற்றி இந்தியா முழுவதிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் கடந்த வாரம் நிலவிய போது இத்தகைய ஒரு சமநிலைத் தன்மை இல்லாமல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த மனப்போக்கு நீண்ட தொரு காலமாகவே உணரப்பட்டு வந்துள்ளது என்றாலும், முதலில் மொகாலியில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியின் போதும், பின்னர் மும்பையில் நடந்த இலங்கையுடனான இறுதிப் போட்டியின் போதும், இது குறிப்பிடத்தக்க ஓர் உச்ச நிலையை எட்டியது. கட்டுப்பாடு அற்ற ஆர்வம் என்பது வேறு. ஆனால் போர், போர்க்களம் என்பது போன்ற பேச்சு, செய்தித் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்து செய்தி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத் துவம் அளிக்காமல் பல வார காலம் விலக்கி வைக்கப் பட்டிருந்தது முட்டாள் தனமானது. அந்த நிகழ்ச்சியின் போது போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானியை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பின் பின்னணியில் இருந்த நல்லெண்ணமும் தவறாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அது ஒன்றும் ஒரு உச்சி மாநாடு என்பதாகக் கருதப்பட வில்லை. என்றாலும் அத்தகையதொரு அடையாளம் அதில் இல்லாமல் போகவில்லை. பெருத்த ஆதரவு காட்டப்படாத நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மற்ற விளையாட்டுகளுக்கு நம் நாட்டில் காட்டப்படும் அலட்சியம், பாரபட்சம், புறக்கணிப்பு ஆகியவற்றை அடிக் கோடிட்டுக் காட்டுவதாக நமது கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக் கப்படும் பணம் அமைந்திருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளும், உடலைப் பேணும் கலாச்சாரமும், ஒரு நாட்டின் நாடி நரம்புகளைப் போன்றவை. நமது இளைஞர்கள், தங்களின் விளையாட்டு, உடற்பயிற்சித் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இன்றி வாடுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகும். விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறது என்றே கூற வேண்டும். உண்மையைக் கூறுவதானால், அனைத்து விளையாட்டு சங்கங்களையும் விளையாட்டுக்குத் தொடர்பற்ற அரசியல் வாதிகள் கைப்பற்றி, தங்களது அதிகார நிலையைப் பயன்படுத்தி புரவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கின்றனர்.

பாரத ரத்னா பட்டமா?

தனது விளையாட்டுத் திறமைக்காவும், அடக்க உணர்வுக்காகவும், விரும்பத்தகுந்த பண்பாட்டுக்காவும் சச்சின் டெண்டுல்கர் மக்களின் அன்பைப் பெற்றுள் ளார். ஆனால் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல்வதிகளும் கோருவதில் ஒரு இழிவின் சாயல் தெரிகிறது. அதுவும் நடக்கலாம். விளையாட்டு என்பது மற்ற எந்தத் துறையையும் விடக் குறைந்து போனது இல்லை. ஆனால் இது போன்ற ஆதரவுக் குரல்கள் தவிர்க்கப் படுவதுதான் நல்லது. அப்போதுதான் நாட்டின் மிகப் பெரிய விருதுகள் பற்றிய மதிப்பு புகழுக்கான போட்டிகளாலும், நவீன அழகுப் போட்டிகளாலும் குறைந்து போகாமல் இருக்கும்.

(நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்16-4-2011 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)


1 comments:

தமிழ் ஓவியா said...

எதிர்கால இந்தியாவுக்கு ஹசாரியின் போராட்டம் பெரும் தீங்கையே விளைவிக்கும்


தனது போராட்டத்தின் மூலம் எதை சாதிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரி நினைக்கிறாரோ, அதற்கு மாறாக எதிர் காலத்தில் இந்தியாவுக்கு பெரும் தீங்கையே அது விளைவிக்கும். லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடுவது என்பது தவறான தல்ல என்பதுடன் அதற்கு ஊக்கமும் அளிக்கப்படவேண்டும். ஆனால் ஹசாரி என்ன செய்ய முயற்சிக்கிறார் என்றால், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டில் குறுக்கிட்டு, சட்டம் இயற்றும் நடைமுறையை கட்டாயப்படுத்தி மேற்கொள்ள பிளாக்மெயில் செய்கிறார்.

இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் எப்படிக் கையாள்வது என்பதில் எண்ணற்ற பாதுகாப்புகளையும், நடைமுறைகளையும், அமைப்புகளையும் நம் நாட்டு அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக நிர்ணயித்துள்ளது. யாராவது லஞ்சம் வாங்கினார்கள், ஊழல் புரிந்தார்கள் என்று நீங்கள் கருதினால் காவல்துறையில் புகார் அளியுங்கள். பொதுநல மனு தாக்கல் செய்யுங்கள். அதை விடச் சிறந்தது அவரை மறுபடியும் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே. இந்தக் குறிப்பிட்ட போராட்டத்தின் இலக்கு சரத் பவார் என்றே தெரிகிறது. அவரது செயல்பாடுகளில் மக்கள் இந்த அளவுக்கு கோபம் அடைந்திருந்தால், அடுத்த முறை அவரைத் தேர்ந்தெடுக்காமல் போங்கள்.

ஒரு பெருந்தன்மையான இலக்கை எட்ட, அதற்கான நடைமுறையைத் தவிர்த்து விட்டு வேறு குறுக்கு வழிகளைக் கடைப்பிடிப்பது என்பது ஏற்கெனவே உள்ள பிரச்சினையை மேலும் பெரிதாக்குவதேயாகும். வன்முறை என்னும் விதைகளை அது விதைத்துவிடுகிறது. ஹசாரி விவகாரத்தில், இப்போது நடைபெற்ற இந்த விசாரணை - ஊடகத்தினாலும், கங்காரு நீதிமன்றத்தாலும் நடத்தப்பட்ட விசாரணையாகும். லோக்பால் மசோதா வில் எது சேர்க்கப்படவேண்டும், எது சேர்க் கப்படக்கூடாது என்று கூறுவதற்கு அன்னா ஹசாரியோ அல்லது அவரது ஆதரவாளர் களோ யார்? அதனை நாடாளுமன்றத்திற்கு விட்டுவிடுங்கள். அதற்காகத்தான் உறுப்பினர்களை நீங்கள் தேர்ந்து எடுத்து அனுப்புகிறீர்கள்.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் உள்ள பரபரப்பான இயக்கங்களை எடுத்துக்காட்டாகப் பலர் கூறினர். அனைவரும் ஒரு பெரிய உண்மையை மறந்து போய்விடுகின்றனர். அந்த அரசுகள் அனைத் துமே சர்வாதிகார அரசுகள் ஆகும். இது ஒன்றும் காந்திக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் போன்றது அல்ல. இங்கு நமக்கு எதிரி என்று யாரும் இல்லை. என்ன இருந்தாலும், நமது அரசு நம்முடைய அரசுதான். நாம்தான் அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம். நமக்குப் பிடிக்கவில்லை என்றால் அய்ந்து ஆண்டு களுக்கு ஒரு முறை அவர்களை உதைத்து வெளியே தள்ளி விடுகிறோம்.

சட்டம் இயற்றும் நடைமுறையை விரைவு படுத்துவதற்காக, அரச மைப்புச் சட்ட நடைமுறைகளை மீறிய செயல்பாடுகள் ஒரு ஆபத்தான முன் மாதிரியை உருவாக்கிவிடும். இன்று லஞ்ச ஊழலை அது எதிர்க்கிறது. எதிர் காலத்தில் வேறு ஒரு முக்கிய செயல்திட்டத்தை கட்டாயப்படுத்தி திணிக்க அது பயன்படுத்தப்படமாட்டாது என்பதை எவ்வாறு நாம் அறிவோம்? (இந்தியர்களில் பெரும்பான்மையானோர் கொண்டிருக்கும் பாபர் மசூதி இடிப்பு போன்ற செயல்திட் டங்களை நினைத்தாலே நடுக்கம் ஏற்படுகிறது).

நமது இந்தியா சுதந்திரம் பெற்ற அதே கால கட்டத்தில் சுதந்திரம் பெற்ற மற்ற அனைத்து நாடுகளிலும் ஜனநாயகம் தோற்றுப் போன நிலையில், 60 ஆண்டு காலமாக இந்தியாவில் ஜனநாயகம் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதுதான் இந்தியாவின் பெரிய பலமாகும். இந்திய ஜனநாயகத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்குவது நமது அரசமைப்புச் சட்டமும் மற்றும் அதன் அமைப்புகளின் பலமும்தான். இவைதான் அனைத்துப் பிரச்சினைகளைவிடவும் மேம்பட்டவை, அனைத்து மக்களையும்விட மேம்பட்டவை. அவை முற்றிலும் தூய்மையாக இல்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும், ஒவ்வொரு பிரச்சினையும் அதற்குரிய அதே நடைமுறையின் மூலம்தான் கையாளப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது இன்றியமையாத தாகும். அதுதான் ஜனநாயகம்.

அன்னா ஹசாரிக்கு ஒரு பிரச்சினை இருந்து, அதற்காக நீதிமன்றங்களை நாட அவர் விரும்பவில்லை என்றால், இறுதியாக அவருக்குள்ள வாக்குச் சீட்டு என்னும் பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டின் மூலம் அதனை அவர் கையாளட்டுமே!

(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா, 9.4.2011 தமிழில்: த.க. பாலகிருட்டிணன்